யேசுவுக்கு முன் பிறந்தது நத்தார் எனும் ஒளித்திருநாள் (சூரியசங்கிராந்தி)

.


உலகம் முழுவதும் யேசு கிறீஸ்துவின் பிறந்தநாள் மார்கழி 24இரவு சாதி மத இனவேறுபாடின்றி கொண்டாடப்படுவதை காண்கிறோம். இதற்கு யேசுவின் பிறந்ததினம் மட்டும்தான் காரணமா? மற்றைய மதங்களில், ஐதீகங்களில், கலாசாரங்களில் யேசு பிறப்பதற்கு முன்னால் இந்நாட்களில் ஏதாவது விசேடமாகக் கொண்டாடப்பட்டதா? மதங்கள் பல கலாசார, ஐதீக, வேற்று நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்புக் கொண்டதாகவே உள்ளன. உ.ம். அரசையே துறந்த புத்தரின் பௌத்தம் அரசுகளின் ஆதிக்கத்தின் கீழ்தான் ஆக்கிரமிப்பெற்றது விரிவுபடுத்தப்பட்டது. 

மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை என்று மார்கழிக்குளிரை பெண்ணுக்கு வர்ணித்தான் கவிஞன். ஆனால் பொதுவாக மார்கழி பீடைமாதம் என்கிறது இந்துமத சாத்திரமுறைகளும், நோடன்மித்துக்களும், ஐரோப்பிய வாழ்க்கை அனுபவமும். இதற்கு வாழ்வியலுடன் தொடர்புள்ள காலநிலையே காரணமாகிறது. ஐரோப்பிய, வடதுருவநாடுகளின் அதன் மித்துக்கதைகள் மார்கழியை நோய்கள், சாக்கள், நிறைந்த துர்மாதமாகவே காண்கிறன. சாதாரணமாக ஐரோப்பாவில் இம்மாதம் இருள், குளிர், நோய்கள், சலிப்பு, பிடிப்பின்மை, தற்கொலைகள் நிறைந்தமாதமாகவே இன்றும் இருந்து வருகிறது. அத்துடன் சூரியனைக்காணாத துருவநாடுகளில் சோர்வும் அசதித்தன்மையும் விருப்பற்ற, வெறுப்புடைய நாட்களாகக் கழிவதையே காணமுடிகிறது. 

முக்கியமாக வடதுருவத்து நோர்வே போன்ற ஸ்கன்டிநேவிய நாடுகளில் யேசுவின் பிறப்பிற்கு முன்னரே மார்கழி 22முதல் 25வரையான நாட்கள் விமர்சையாக முக்கிய நாட்களாகக் கொண்டாடப்பட்டு வந்தன. அன்று இந்நாடுகள் விவசாயம், கடல்தொழில் கடற்கொள்ளையே வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் நிர்ணயித்தது. இந்த நிலம்சார் வாழ்வாதாரத்தைக் கொண்டவர்கள் ஒருவிதமாகவும், கடல்சார் வாழ்வாதாரத்தைக் கொண்டவர்கள் இன்னொரு விதமாகவும் மார்கழி 24 இரவைக் கொண்டாடுவார்கள்.

இந்த மார்கழி 24 இரவில் அப்படி என்ன அதிசயம் உள்ளது? இருள்சூழ்ந்த பீடை மாதம், கறுப்புசக்திகள் (பேய் பிசாசு சூனியம் ..)வீரியம் கொள்ளும் மாதம், விவசாயமே கடற்தொழிலே குற்றியபோகம், குளிர், நோய், நொடி அதிகரித்திருக்கும் மாதத்தில் என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது? மார்கழி 24 இரவு பூமியானது ஒளியை நோக்கித் திருப்புவதாக அவர்கள் கணித்தார்கள். இந்நாளில் இருந்து பூமியில் ஒளி அதிகரித்துக் கொண்டே வரும். இதை வின்ரர் சூல் வர்வ் (குளிர்காலச்சூரிய சங்கிராந்தி) என்று நோர்வேயிய மொழியில் கூறுவார்கள். இதே போலவே ஆனி (யூன் 23) இல் இருந்து சூரியஒளி மங்கத்தொடங்கும். இதை "சந்தான்ஸ்"(நடுக்கோடை ஈவ்) என்பர். சுருங்கச் சொல்லின் அதி இருள்கூடிய நாள் மார்கழி 23 இரவாகவும். அதிஒளி கூடிய நாள் ஆனி 23 ஆகவும் இருப்பதை விஞ்ஞானம் இன்று ஒத்துக்கொள்கிறது.

அதியிருள் கூடிய நாளான மார்கழியில் 22-24 தொழில்கள் நிறுத்தப்பட்டு, பாண் கேக்போன்ற பதனிகள் செய்வதும் நிறுத்தப்பட்டு, கிராமத்தவர்கள் ஊர்தலைவரின் தலைமையின் ஒன்று கூடி வீடுவீடாக பாடல்களைப் பாடிச் சென்று வீட்டுகளை கறுப்புச்சக்திகளில் இருந்து காத்துக் காவல்படுத்துவார்கள். அதன்பின் கதவுகளில் சக எனும் அடையானத்தை இட்டுவிட்டு காவல்படுத்தவிட்டு அந்தவீட்டிலிருந்தோ, வீட்டாருடனோ வெள்ளிக்காசை எடுத்துவருவார்கள். இது ஊரில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது கரோல் போவதையும் வீடு வீடாக அரசி மரக்கறி சேர்த்து கோவிலில் அன்னதானம் கொடுப்பதை நினைவுபடுத்தலாம். இப்படி ஊர் ஊராக பாடிச்சென்று வீடுகளை கறுப்புச்சக்திகளிடம் இருந்து காத்தபின் எடுத்துவரும் வெள்ளிக்காசுகளை ஊருக்கு வெளியே உள்ள பாழும் கிணற்றில் வீசி எறிந்துவிட்டு திருப்பிக்பார்க்காது வந்து குறிப்பிட்ட விழா ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் ஒன்று கூடுவார்கள். மரணச்சடங்கில் பிணத்துக்குக் கொள்ளிவைத்தபின் திரும்பிப்பார்க்காது போவதை இங்கே நினைவு கூரலாம். இது எமது நாட்டில் திருவெம்பாவையையும் நினைவுபடுத்தியது. மார்கழிக்குளிரில் திருவெம்பாவை பாடிக்கொண்டு இளைஞர்கள் மக்களை எழுப்பிக் கொண்டு போவது போன்ற நிகழ்வு நினைவுக்கு வரும். ஆதிமனிதனின் சிந்தனைகள் ஏறக்குறைய ஒரேமாதிரியாகவே இருந்திருக்கின்றன. கிறீஸ்தவம் நோர்வேயுள்; நுளைவதற்கு முன்னர் மக்கள் இயற்கையையே வணங்கினார்கள். தமக்கு மீறிய சக்திகளைக் கடவுளாகத் தொழுதார்கள். ஒருமனிதனையோ ஆவியையோ கடவுளாக எண்ணவில்லை. சூரியன், இடி, மின்னல், வாயு, நீர், தீ போன்றவற்றை கடவுள் தன்மை கொண்டதாகக் கருதி வணங்கினார்கள் என்கிறது வடமித்துக்கள்.

இதன்பின் தீவளர்க்கப்படும், உணவுகள் சமைக்கப்படும், சூரியனை வரவேற்று, துதித்து,சமைத்த உணவுகளைப் படைத்து பிறக்கும் வருடத்தில் விளைச்சல் அதிகரிக்க வேண்டிப் பிரார்த்தித்த பின் படைத்த உணவுகள் பரிமாறப்படும். அதன் பின்னரே குடியும் கூத்தும் கும்மாளமுமாக தொடங்கும்;. எமது நாட்டில் உளவர்திருநாளாம் தைப்பொங்கலை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இது நிலம்சார் மக்களின் குளிர்கால சூரியசங்கிராந்தியாக கொண்டாடப்பட்டு வந்தது. பொங்கலுக்கும் எமது விழாக்களுக்கும் வாழைமரம்போல் இங்கே கிறிஸ்மஸ்மரம் என்று நோர்வேயிய பெயரில் கிறான் திரே(யூலதிறே) என்று அழைக்கப்படும் மரம் முக்கியத்துவம் பெறும். காரணம் இந்தமரமானது நோர்வே, ஐரோப்பாவில் அதிகமாவே வளரும் என்பதற்காக அல்ல இந்தமரமானது கடும்குளிரிலும், பனியிலும் இலைகளை உதிர்காது பச்சைப்பசேர் என்று கறுப்புச்சக்திகளை எதிர்த்து நிற்கிறது என்று கருதினார்கள். இம்மரத்துக்கு பேய்கள், பிசாசுகள், பில்லி சூனியங்களை விரட்டும் தன்மை உள்ளது என்று நம்பினார்கள். இம்மரத்தை இன்றும் வீட்டுகளில் வைத்து சோடித்து, அழகுபடுத்தி அன்றுபோல் இன்றும் கொண்டாடுகிறார்கள்  இம்மரத்தில் இருந்த ஒரு நறுமணம் வந்து கொண்டிருக்கும். இந்தவாசனையும் கறுப்புச்சக்திகளை, சூனியத்தை விரட்டும் தன்மை கொண்டது என்று கருதினார்கள். அன்று இம்மரத்தை நடுவில்வைத்து ஊரே சேர்ந்து சுற்றி நின்று ஆடிப்பாடிக் கொண்டாடும். இன்றும் இம்மரத்தினை நடுவீட்டுள் வைத்து அதன் கீழ்தான் பரிசுப்பொருட்களை வைத்து நத்தாரன்று பரிசுப்பொருட்களை திறந்து பார்த்து மகிழ்வது வளக்கமாக இருக்கிறது. இது கலாசாரப்படிமமாக இன்றும் விளங்குகிறது. யேசுவின் பிறப்பிக்கு முன்னரே கிறிஸ்தவம் நோர்வேயினுள் நுளைவதற்கு முன்னரும் இந்தநாட்கள் கொண்டாடப்பட்டு வந்தது என்பதற்கான போதியளவு ஆதாரங்கள் உண்டு (மர்க்கடாகம் ஒக் கம்ல சிக்கர்- சிறப்பு நாட்களும் பழைய ஐதீகமும்)

கடல்சார் வாழ்வியலைக் கொண்டவர்கள் இந்த ஒளிதிரும்பும் சூரியச்சங்கிராந்தியை வேறுவிதமாகக் கொண்டாடுவார்கள். விஞ்ஞானம் இன்றுபோல் வளர்ச்சியடையாக காலத்தில் கூட நட்சத்திரங்களின் திசையை வைத்து நாட்களைக் கணிப்பார்கள். உலகில் எந்தப்பகுதியில் இருந்தாலும், கடலில் எங்கு நின்றாலும் சரியாக மார்கழி 24ல் தம்குடும்பத்துடன் ஒன்றிணைவதற்காக வந்துவிடுவார்கள். மனைவி- மனைவியர், சிறுபிள்ளைகளின் கணவன்;, தந்தை, சகோதரங்களின் வருகைக்காக் காத்திருப்பார்கள். நோர்வே போன்ற நாடுகள் வீக்கிங்களை (கடற்கொள்ளையர்) கொண்டநாடுகள் ஆகும். இவர்கள் தாம் கொள்ளையிட்ட பொருள் பண்டங்களுடன் வந்திறங்குவார்கள். முழுக்கும்பமுமே குதூகலிக்கும். இன்றும் நோர்வேயியர்கள் எங்கிருந்தாலும் அன்றுபோல் இன்றும் பரிசுப்பொருட்களுடன் தமது சொந்த ஊருக்குப் போவார்கள். 5குரோன் பொருளை 50குரோன் கொடுத்து வாங்கியனுப்புவார்கள். இந்தநாள் பெரும்பான்மையினர் தத்தம் குடும்பங்களுடனேயே தேவாலயங்களுக்குச் செல்லாது கொண்டாடுவது இவர்களின் கலாசாரமரபைக்காட்டி நிற்கிறது. நோர்வேயில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் பெற்றோரின் அனுமதியின்றி தேவாலயங்களில் பதியப்படுகிறது. சிலர் அதை அப்படியே விட்டுவிடுகிறார்கள் காரணம் தாழ்ப்பதற்கு இடம்தேவை என்பதால். ஆனால் இங்கே கிறீஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள் மிக மிகக் குறைவே. இந்த நத்தார் என்பது நோர்வேயியர்களால் ஒரு கலாசாரவிழாவாகவே பார்க்கப்படுகிறது. 

சரியாக மார்கழி 22ம்திகதி பூமி ஒளியைநோக்கித் திரும்பும் 24ம்திகதி இரவே முழுமையாகத் திரும்பியிருக்கும் இந்த நாளன்று கடல்தொழில் செய்வோர், கடற்கொள்ளையர் கடற்கரைக்குச் சென்று  தமது கப்பலில் மேல் குதிரைகளை நிறுத்தி அவற்றை வெட்டி இரத்தத்தால் தம்வள்ளங்களைக் கழுவி தீயசக்திகளை கலைப்பார்கள். கறுப்பு தீயசக்திகளுக்கு குதிரையைப்பலியிடுவதால் கறுப்புத்தீய சக்திகள் திருப்தியடைந்து வீரியம்குன்றி சாந்தியடைந்து அடங்குவதுடன் குதிரையின் இரத்தத்தால் கழுவும்போது வள்ளம் துப்பரவாகிறது என்று நம்பினார்கள். இதை நோவேயிய மொழியில் "புலூத்" என்பார்கள். பழையதீயவற்றை அகற்றி புதிதாக வரும் சூரியனை வரவேற்றுக் கொண்டாடுவார்கள். எதிகொள்ளும் வருடம் நன்மைகள் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்று பிரார்த்திப்பார்கள். 

வள்ளத்தில் குதிரைகளை வெட்டிக் கிரியைகள் முடிந்ததும் அண்டிய பக்கங்களில் தீ வளர்க்கப்பட்டு வெட்டிய குதிரை இறைச்சி உணவுக்காய் தயாராகும். ஊரில் வேள்விக்குப் பின் வெட்டிய ஆடுகளைப் பங்குபோடுவதை நினைவு படுத்திக் கொள்ளலாம். அதேபோல் சாமிக்குப்படைத்த உணவை பகிர்ந்துண்பதையும் எண்ணிப்பார்த்துக் கொள்ளலாம். பெண்கள் சமையலுக்கான அடுக்குகளையும், சமையலையும் பார்த்துக் கொள்வார்கள். ஆண்கள் வள்ளங்களில் மதுவும் போதையுமாக இருப்பார்கள். இக்காலங்களில் தான் காதலும் கைகோர்க்கும் காலமாக இருக்கும்;. பலஆண்டுகள் மாதங்கள் கழித்து வீட்டுக்கு வரும் ஆண்களுக்கு உணவைத்தவிர மற்றைய உணவுகளும் அக்கம் பக்கங்களில் இரகசியமாகத் தயாராகும். இது இயற்கையின் நியதியே. 

காதல், திருமண ஒழுங்குகள், என்பன இவ்விழாநாளின் தொடர்ச்சியாகவும் இருக்கும். எமது நாட்டவரின் பண்பாடுபோலவே பெண்கள் அனேகமாக தாயுடன், வீட்டில் இருந்தே தொழில்புரிவார்கள். தோட்டத்தொழியின் குடும்பமே கூடி உறவினர் நண்பர்கள் கூடி உழைப்பார்கள். இக்காலங்களில் அதிகமாக பெண்கள் தனித்து வீட்டுவேலைகளைக் கவனிப்பதால் வெளித்தொடர்புகள் குறைவாகவே இருந்தது. இந்த ஒளிதிரும்புநாட்களில் ஊரில் மக்கள் நடமாட்டமும், தொடர்புகளும், உறவுகளின் வருகையும் அதிகரித்திருக்கும். இக்காலத்தில் கூடுதலாக எத்தொழிலும் செய்வதற்கு உசிதமான காலநிலை இருக்காது. 

இக்காலங்களில் திருமணமாகா குமர்பிள்ளைகள் உள்ளவீடுகளின் கூரையில் இருந்து நீண்டநூல் தொங்கவிடப்பட்டிருக்கும். அதன் அர்த்தம் இந்தவீட்டில் ஒரு குமரிப்பெண் இருக்கிறாள் அவள் திருமணமகாகக் காத்திருக்கிறாள் என்பதாகும். அவ்வளியால் போகும் இளைஞர்கள் அவள் யார்? குடும்பம் எப்படியானது? பெண் எப்படிப்பட்டவள்? என்பதை ஊரில் விசாரித்து அறிவார்கள். இக்காலத்தில்தான் எல்லோரும் ஊருக்கு வந்த கூடியிருப்பார்களே. போதிய அளவு நேரகாலமும் இருக்குமே. கடலில், வெளியிடங்களின் வேலை செய்து ஊர்வந்தவர்களுக்கு ஊரில் உள்ளவர்களை அதிகம் தெரியாது இருப்பதற்கு இடமுண்டல்லவா. ஊரில் விசாரித்து பெண்ணைப் பிடித்துக்கொண்டால் அந்த இளைஞன் அந்நூலை வெளியே நின்று இழுப்பான். அதை அவளும் பெற்றோரும் அறிந்து கொண்டபின் அவனை உள்ளே அழைந்த்து விசாரித்து குலம் கோத்திரம் பிடித்துக் கொண்டால் குடும்பங்கள் கூடி திருமணத்துக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பார்கள். இதை தமிழர்கள் நாம்; பேசிச் செய்யும் திருமணங்களுக்கு ஒப்பிடலாம். 

மனிதர்களின் வாழ்க்கைமுறைகள், ஐதீகங்கள், மரபுகள், பண்பாட்டுப் பழக்க வளக்குகள் என்பன ஏறக்குறைய எங்கும் ஒரேமாதிரியாகவே இருக்கின்றன. வளங்கள், பொருளாதாரம், காலநிலைகளுக்கேற்ப மாற்றங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கி றது. இயற்கையுடன் மனிதன் அன்று ஒன்றியே வாழ்திருக்கிறான் என்ன உண்மை புலனாகிறது. இன்று இயற்கையை விட்டு மனிதன் வெகுதொலைவில் தொலைந்து போய்விட்டான். 

கிறிஸ்தவம் நோர்வேய் போன்ற நாடுகளில் உள்நுளையும்போது பல எதிர்ப்புக்களை எதிர்கொண்டது. சிலபழக்கவளங்கங்களை முற்றாக முறிக்கமுடியாதநிலை ஏற்பட்டதால் அவற்றை கிறிஸ்தவத்தின் ஒருபகுதியாக ஏற்று மக்களை மதம் முழுமையாக விழுங்கிக்கொண்டது. உ.ம்: பொட்டு, தாலி என்பன இந்து மதத்தின் சின்னங்களாக இருந்தபோதும் கத்தோலிக்கர்கள் இதைப் பயன்படுத்துவார்கள். காரணம் மக்களின் ஆழமான பழக்கவளங்கங்களை மறுத்து மதமாற்றம் செய்வது கடினமானது என்பதால். இந்த ஆக்கிரமிப்பானது அரசர்களினூடாவே உள்நுளைந்தது. இதன் முதன்மையானவர் அரசனான ஊலாவ் தென் கெல்லிய (புனித ஊலாவ்) ஆவார். இவருடைய கிறிஸ்தவதேவாலயம் இன்றும் நடுநோர்வேயான துரொண்கெய்மில் உள்ளது. இவர் கிறீஸ்த்தவத்தை நோர்வேயினுள் கொண்டுவரும் போது புனிதப்போரைப் பிரகடனப்படுத்தினார். ஒருகையில் சிலுவையும் மறுகையில் வாழுமாக புனிதப்போர் தொடர்ந்தது. இதை இந்தியாவில் முகலாயர்கள் ஒருகையில் குரானும் மறுகையில் வாழுடனும் வீடுவீடாக வந்து மதம்மாற்றி கொலைசெய்ததை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். கிறிஸ்தவத்துக்காக உயிர் விடுபவன் நேரடிமோட்சத்தைப் பெறுகிறான் என்றும் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களாக மாறாதவர்களுக்கு பாடசாலை செல்லும் உரிமை மறுக்கப்பட்டது. தொழிலுரிமை நிராகரிக்கப்பட்டது. கத்தோலிக்கர்களாக இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களைக் கொன்றவர்கள் நாயகர்களாக கொண்டாடப்பட்டார்கள்.

அன்பையும் மனிதநேயத்தையும் காதலையும் வலியுறுத்திய யேசுபெருமானின் பெயரில் இரத்தாறுகள் ஓடியன. புனிதம் என்ற பெயரில் சித்திரவதைகள், கொலைகள் கூத்தாடின. கலாசார பண்பாட்டு விழுமியங்கள் முழுமையாக விழுங்கப்பட்டன. அரசுகள் கூட மதத்தின் கால்களில் மண்டியிட்டுக் கிடந்தன. புனிதப்போர் என்பது இன்று இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியதாக கருதப்படுவது மிகத்தவறானது. 

இஸ்லாமியர்கள் புனிதப்போர் (ஜீகாத்) என்று போர்கொடி தூக்கியபோது அமெரிக்க யோய் புஸ் கூறியது நினைவுக்கு வருகிறது "அமெரிக்காவை கடவுள் காப்பாற்றுவாராக இந்தசிலுவைப்போர் தொடரும் என்றார். இஸ்லாமியர்கள் ஐரோப்பா நோக்கி படையெடுத்து துர்கியா ஊடாக ஸ்பெயின்வரை ஊடுருவியபோது சிலுவைப்போரால் விரட்டியடிக்கப்பட்டார்கள். இங்கே விரல்காட்டி விமர்சிப்பதற்கு யாரும் புனிதர்களும் அல்ல மதங்கள் எதுவும் புனிதத்துவம் கொண்;டதும் அல்ல. அனைத்து மதங்களின் பெயராலும் மனிதம் நசுக்கப்பட்டே வந்திருக்கிறது. அன்றைய இயற்கை நம்பிக்கைகளை விட எந்தமதமும் புதிதாக எதையும் கூறிவிடவில்லை. இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் இயற்கையை இயன்றவரை காப்போம். இயற்கை எம்மியற்க்கை ஆகட்டும்.


நோர்வே நக்கீரா 24.12.2014

No comments: