கனியும் கனிந்தால் கனியும் - கானா பிரபா

.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை சூரியன் எஃப் எம் செய்தியறிக்கையைக் கேட்ட போது ஒரு தகவல் கிட்டியது. இந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கையின் வட பகுதியில் மாத்திரம் 11 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவு பழவகைகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இந்த உற்பத்தி முந்திய ஆண்டுகளை விட அதிகம் என்றும் விவசாயத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. இவ்வாறான உற்பத்திப் பெருக்கம் ஏற்றுமதிச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வல்லது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

எங்களூரைப் பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்பார்கள். அதாவது மழையை நம்பியே பயிர்ச்செய்கை செய்ய வேண்டிய நிலை. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களை அண்டி ஏரிகளோ, ஆறுகளோ இல்லை.
ஆனாலும் இயற்கை இன்னொரு பக்கத்தால் அனுகூலம் விளைவித்திருக்கிறது. வடபகுதியில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற செம்பாட்டு மண் சார்ந்த நிலப்பரப்பு அதிகம். இதனால் புகையிலை போன்ற சீவனோபாய உற்பத்திகள் மட்டுமன்றி மா. பலா, வாழை உள்ளிட்ட பழ மரங்கள் செழித்தோங்கிக் கனி தரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. கிராமப்பகுதிகளான எங்களூரில் இருந்து யாழ்ப்பாண நகரப்பகுதி சொல்லும் போது, செம்பாட்டுக் கால் என்று கிண்டலடிக்கும் மரபு இருக்கின்றது.

ஒரு காலத்தில் எங்களூரில் சந்திக்குச் சந்தி பழக்கன்று விற்பனைக் கூடங்கள் இருக்கும். தாங்களே நட்டு விளைவித்த மரக்கன்றுகளை அங்கு விற்பனை செய்வர். 
எங்களின் உறவினர் முத்துலிங்க மாமாவின் முழு நேரத் தொழிலே பழமரங்களை உருவாக்கி விற்பனை செய்வது தான். எங்கள் வீட்டுக்குப் பக்கத்துக் காணி முழுதும் பாத்தி கட்டி பல்வேறு விதமான மாங்கன்றுகள் வரிசையாக அணி வகுத்து நிற்கும். பொலித்தீன் பைகளில் நிரையாக அடுக்கிவைக்கப்பட்ட மாங்கன்றுகளை நிதமும் பராமரித்துப் பசுமைப் புரட்சியைச் சத்தமில்லாமல் செய்துவந்தார். "ஒட்டுமா" என்பது ஈழத்தின் கிராமங்களில் பரவலாகப் புழங்கும் சொலவாடை.
எங்கள் முத்துலிங்கமாமா பரிசோதனை முயற்சியாக இவ்வாறு ஒரு மரத்தில் இன்னொரு பழவகையை உண்டாக்கி வளர்க்கும் ஒட்டு மாங்கன்றுகள் பலவற்றை உருவாக்கிச் சத்தமில்லாமல் சாதனை படைத்தவர்.  இது மட்டுமன்றி தோடை மரங்கள் (ஆரஞ்சு என்று இந்தியாவில் அழைப்பர்) உண்டாக்குவது, நாரத்தங்காய் மரத்தோடு எலுமிச்சை மரத்தைக் கலந்து உண்டாக்குவது போன்ற பல ஒட்டு வேலைகளைச் செய்து வெற்றிகரமாக ஒரே மரத்தில் இரண்டு காய்களை உருவாக்கி வளர்ப்பதில் அவர் விண்ணர்.
ஒட்டுமாங்காய் ருசி அதிகம் என்பார்கள். ஈழத்தின் எழுத்தாளர் சாந்தன் தமிழ் சிங்களக் காதலைப் பின்னணியாகக் கொண்டு சிரித்திரன் வெளியீடாக "ஒட்டுமா" என்ற நாவலையும் முன்னர் வெளிட்டவர்.
அந்த நூலை நூலகம் தளத்தில் படிக்க இங்கே அழுத்தவும் "ஒட்டுமா"


பரமலிங்கம் மாமாவின் வழியாகத் தான் எங்களுக்குத் முந்திரிகைப் பழம் (திராட்சை) என்ற ஒரு பழவகையே அப்போது தெரிந்தது. எண்பதுகளில் தன்னுடைய காணியில் அவர் முந்திரிகைத் தோட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். நீண்ட தூண்களை உருவாக்கி அவற்றில் முள்ளுப் படுக்கையைப் போட்டுத் திராட்சைச் செடியை அதில் படர விட்டிருப்பார். பரந்து விரிந்த அந்தக் காணிக்குள் போனால் ஏதோ திராட்சை மரக்கொடியால் கட்டிய வீடு போல இருக்கும். பழைய தகரப்போத்தல்களை இறுகக் கட்டி ஒரு இடத்தில் கட்டிவிட்டு அதில் ஒரு கயிற்றைப் பிணைத்து விட்டு
படர்ந்த அந்தக் கொடி மரங்களுக்குக் கீழே ஒரமாக இருந்து கயிற்றின் மறுமுனையை அவ்வப்போது இழுப்பார். திராட்சைப் பழங்களைக் கவர்ந்து போக வரும் பறவைகள் அந்தச் சத்தம் கேட்டு விருக்கெனச் சிறகை விரித்து ஓடும். அந்தக் காணிக்குள் இருந்த தென்னம் பொந்துக்குள் ஒரு கிளி தன் குஞ்சை வளர்த்தது, அதை எட்டி நின்று பார்த்தது எல்லாம் நினைவுக்கு வருகுது. 
பரமலிங்கம் மாமாவின் காணியில் விளையும் முந்திரிகைப் பழங்கள் உள்ளூர்ச் சந்தைகளில் அப்போது விலை போகும். மா, பலா, வாழை மரங்கள் ஊரில் பெரும்பாலானோர் வீடுகளில் இருப்பதால் இவர் விற்கும் கொழுத்துத் திரண்ட கருப்பு முந்திரிகைப் (திராட்சை) பழங்களுக்குத் தான் மவுசு அதிகம்.
எங்கள் வீட்டில் மாமரங்களும், பலா மரங்களும் வீட்டின் முகப்புக் காணியிலும், பின் வளவில் வாழைத்தோட்டமுமாக இன்னமும் நிமிர்ந்து நிற்கின்றன.

 
 படத்தில்: எங்கள் வீட்டின் முகப்பில் உள்ள பலாமரம்

ஈழத்தில் தமிழ்ப் போராளி இயக்கங்கள் எண்பதுகளில் வீரியத்துடன் ஒரே களத்தில் இயங்கிய வேளை தென்னை மரத் தும்பினால் உருவாக்கிய தும்புத்தடி போன்றவற்றை வீடு வீடாக விற்றுப் பணம் சேர்த்தனர். அத்தோடு ஒரு படி மேல் போய் "அர்ச்சுனா" பழரசம் என்று போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறு வகைகளையும் விற்பனை செய்ய ஆரம்பித்தனர். ஈழத்தின் பொருளாதாரம் அங்கு விளையும் உற்பத்திகளைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே இந்த முயற்சிகள் அமைந்திருந்தன. பழரசம்  மற்றும் ஜாம் என்று சொல்லக்கூடிய பழக்களி போன்ற உற்பத்திகளைச் செய்து வந்த தொழிற்சாலை ஒன்று அப்போது வெற்றிகரமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்தது.   பெயர் மறந்து விட்டது.

"தோலகட்டி நெல்லி ரசம்" என்பது உலகளாவிய தமிழர்கள் இன்றும் தத்தமது நாடுகளில் உள்ள இலங்கை மளிகைக் கடைகளில் தேடிவாங்கி அருந்தும் பானம். இந்தத் தோலகட்டி நெல்லிரசத்தின் வரலாற்றைத் தேடியபோது தோலகட்டி வண.தோமஸ் அடிகளாரின் 50 வது ஞாபகார்த்த தினம் இந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி கொண்டாடப்பட்ட போது அவர் குறித்த சிறப்புக் கட்டுரையில் http://marikumar.blogspot.com.au/2014/01/50.html  பதிவாகி இருக்கின்றது.
வண.தோமஸ் அடிகளார்  மாபெரும் இறை பணிக்கு ஆறு இளைஞர்களை தேர்ந்தெடுத்து வசாவிளான் பகுதியிலுள்ள ''தோலகட்டி'' என்ற சிற்றூரில் இந்த தியான யோக துறவற சபையை 2.2.1928 இல் நிறுவினார்.

பல்வேறு கஷ்டங்கள் துன்பங்கள் அவரை அழுத்திக்கொண்டிருந்தன. சபையைத் தொடர்ந்து நடத்துவதற்கு தம்மோடு இணைந்திருப்பவர்களைப் பராமரிப்பதற்கும் அனைவரும் தங்குவதற்றும் இடவசதிகளை ஏற்படுத்துவதற்கு பணம், பொருள், ஆள்பலம் தேவையாக இருந்தது. இவர் ஏற்படுத்தியது ஒரு புதிய ஆன்மிக புரட்சியின் வாழ்வாக அமைந்ததால் பலரும் இதை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இவருடைய முயற்சிக்கு எதிர்ப்பையே காட்டினர்.

இவரின் வாழ்வு அதிக ஒறுத்தல் உபவாசமும் அமைதி, மௌனம் மிக்க வாழ்வாக இருந்தது. பல துன்பங்களினூடாக வாழ்ந்து வந்த வேளையில் இத்தகைய வாழ்வை அறிந்து பல அழைத்தல்கள் இந்தியாவிலிருந்து வரத்தொடங்கின. அதன் பின் சிறிது சிறிதாக தோலகட்டி ஆச்சிரமமானது தேவைகளுக்கேற்ப வளர்ச்சி காணத்தொடங்கியது. அவர்கள் தாங்களே உழைத்து வாழவேண்டிய நிலையிலிருந்தனர்.

எனவே இறைவனின் பராமரிப்பில் நெல்லிரசம் தயாரிக்கும் முறையைக்கண்டுபிடித்து அதை செய்தனர். அத்துடன் முந்திரிகை, மாதுளை, நாவல், தோடை, அன்னாசி, எலுமிச்சை போன்ற பழவகைகளிலிருந்தும் நன்னாரி போன்ற வேர் வகைகளிலிருந்தும் இனிய பானங்கள் தயாரித்தனர்.

அந்தப்பகுதிகளில் முதல் முதலாக திராட்சைப் பயிர்களைப் பயிரிட்டு நல்ல விளைச்சலைக் காட்டினர். அதன் வழியாக வசாவிளான், அச்சுவேலி, இளவாலை, உரும்பிராய் பகுதிகளில் மக்கள் திராட்சை பயிரிடத் தொடங்கினர். மேலும் எல்லா வகையான பழ மரங்கள் , கிழங்கு வகைகள், காய்கறி வகைகள் உள்ளிட்ட பலதும் பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலைப்பெற்றனர்.

எங்களூர்க் கடையில் அடுக்கி வைக்கப்பட்ட வாழை, பலா
என்னோடு உயர் வகுப்பில் படித்த நண்பன் ஒருவன் யாழ்ப்பாணத்தில் நவாலி என்ற ஊரில் இருக்கிறான். அவன் தன்னுடைய பகுதி நேரத் தொழிலாகத் தகரத்தில் அடைத்த பழவகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் கூடம் ஒன்றை உருவாக்கி வெற்றிகரமாகப் பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றான்.
 அவுஸ்திரேலியாவிற்கு இறக்குமதியாக  பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில்  இருந்து தகரத்தில் அடைத்த உலர் மாம்பழத் துண்டுகள். பலாச்சுளைகள் எல்லாம் விற்பனைக்கு வரும். இவற்றின் சுவையை விட இலங்கையின் சீதோஷ்ண நிலையிலும், மண்ணிலும் வளரும் பழவகைகள் ஒப்பீட்டளவில் சுவை அதிகம் என்பது என் அபிப்பிராயம்.  
படத்தில்: எங்களூரின் பெரிய சந்தையாக விளங்கும் மருதனார் மடச் சந்தையில் பழக்கடை ஆச்சி

மீண்டும் முதல் பந்திக்கு வருகின்றேன்.  பணப்பயிராகக் கருதப்பட்ட புகையிலை யாழ்ப்பாணத்தில் உற்பத்தில் செய்யப்பட்டு ஒரு காலத்தில் தென்னிலங்கை எல்லாம் பரவலாக எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்களும் தன்னிறைவு கண்டனர். அதன் பின் நீடித்த யுத்தத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வடபகுதிக்கும் இலங்கையின் மற்றைய பகுதிகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டே இருந்து வந்தது. 
இப்போது மீண்டும் போக்குவரத்து நிலமைகள் சீராகவும், வழித்தடங்களில் பயண நேரம் மிகக் குறுகியதாகவும் அமைந்திருக்கின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையின் வடபகுதிப் பழச்செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை எடுத்துச் செல்லும் வழி வகைகளை ஆராய்தல் வேண்டும். அதோடு வெளிநாட்டில் வாழும் நம்மவர்களும் அந்தந்த நாடுகளில் இருந்து பழவகைகளைப் பேணிப் பாதுகாத்துச் சந்தைப்படுத்தும் முறைமை சார்ந்த அறிவைப் பெற்றும், அங்குள்ள தொழில்நுட்பம், இயந்திர சாதனங்களின் உதவியோடும் வடபகுதியில் பெரும் எடுப்பிலான முதலீடுகளைச் செய்தால் இலங்கையின் பிற பாகங்களில் மட்டுமல்ல, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புக்கும் பெரும் உதவியாக அமையும். இது இலங்கையில் இருக்கும் எமது உறவுகளுக்கான வாழ்வியல் ஆதாரமாக நீடித்து நிலைக்க வழிகோலும்

No comments: