தமிழ் சினிமா - பிசாசு

.
ஓநாயும் ஆட்டுகுட்டியும் என்ற தரமான படத்தின் தோல்வியிலிருந்து மிஷ்கின் மீண்டும் எழுந்திருக்கும் படம் தான் பிசாசு. பாலா, மிஷ்கின் இரண்டு பகுத்தறிவு வாதிகளின் கூட்டணியில் உருவாகியிருக்கும் பேய் படம் இது. மிஷ்கின் அவர் படத்தில் எந்த நடிகர் நடித்தால் என்ன, நம் கண்ணில் தெரிவது மிஷ்கின் என்ற இயக்குனரின் சாயல் தான்.


பேய் என்றாலே பயம், பயம், பயம் மட்டுமே தான் நம்மிடம் இருக்கிறது. அந்த பயத்தை தாண்டி சென்றால் அந்த பேய்க்கும் ஒரு அழகு உண்டு என்பதை மிக அழுத்தமாகவும், நேர்மையாகவும் காட்டியுள்ளார் மிஷ்கின்.

கதை விவாதம்
படம் தொடங்கியதுமே கதாநாயகி பிரயாகா மரணம், அவளை மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்ற முயற்சிக்கிறார் கதாநாயகன் நாகா. மருத்துவமனையில் நாகாவின் கையில் பிரயாகா உயிர் பிரிகிறது. இதிலிருந்து நாகா மிகவும் மனவேதனை அடைந்து குழப்பத்திலேயே வாழ்கிறார்.

உடலால் இறந்து உயிரால் வாழவேண்டும் என்று தவிக்கும் பிரயாகா, நாகா வீட்டில் குடியேறுகிறார். அங்கு அவர் செய்யும் சில விசித்திர விளையாட்டு நாகாவை மிகவும் சிரமப்படுத்த, வழக்கம் போல் பேய் ஓட்டுதல், மந்திரம் என மாந்திரகத்தை தேடி போகிறார் ஹீரோ.
ஆனால், எதற்கும் அஞ்சாமல் நாகாவின் காலை சுற்றி வரும் பேய், ஏன் இது நம்மை சுற்றி வருகிறது என அறிய நாகா பிரயாகாவை இடித்து சென்ற கார் ஓட்டுனரை தேடி செல்ல அங்கு தான் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதன் பிறகு நாகா எடுக்கும் முடிவு என்ன? பிரயாகா என்ன ஆனார்? என்பதை திகில் கலந்து மனித உணர்வுடன் கூறியுள்ளார் மிஷ்கின்.
மிஷ்கின் பற்றிய விவாதம்
எப்போதும் நடிகர்கள், நடிகைகள் பற்றி தானே பேசுவோம், அது ஏன் மிஷ்கின் பற்றிய விவாதம் என்றால் இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்துலும் மிஷ்கினின் ஆவி உள்ளது. அதனால் தான்.
மிஷ்கினின் வழக்கமான ஸ்லோ மோஷன் காட்சிகள், தலை குணிந்த ஹீரோ, அலட்சிய போலிஸ் என அனைவரும் வந்து போகிறார்கள். ஆனால், இது எல்லாவற்றையும் விட அவர் எடுத்த கதைக்களம் தான் சுவாரசியம்.
சிம்பாளிக் ஷாட் பல இடங்களில் வந்து போகிறது. முதல் காட்சியிலேயே மரணபடுக்கையில் இருக்கும் பிரயாகா ஒரு காலில் செருப்பில் இருப்பது, படத்தில் முக்கியமாக இருக்கும் கலர் பற்றிய அங்கங்கு காட்டப்பட்ட காட்சிகள், குறிப்பாக கிளைமேக்ஸில் ஹீரோ தேடி செல்லும் திருடன் வீட்டில் ஒரு பெண் பச்சை குடத்தில் தண்ணீர் சிந்துகிறார். ஆனால், அவர் தலையில் சிவப்பு கலர் பூ இருக்கிறது. இவை அனைத்து படம் பார்த்தாலே புரியும் சிம்பள்.
ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்திம் மஞ்சள் கலர் சேலை கட்டவில்லை, என்று நினைக்கும் நேரத்தில் திடீரென்று ஹீரோவை பார்த்து முறைக்கும் ஒரு பாட்டி மஞ்சள் கலர் சேலை கட்டியிருக்கு, என்ன மிஷ்கின் சார்? இருந்தாலும் சென்ற படத்தை பாராட்டிய ரசிகர்கள் பார்க்க மறந்து விட்டார்கள். ஆனால், இந்த படத்தை பார்த்து கண்டிப்பாக பாராட்டுவார்கள். வெல்கம் பேக் மிஷ்கின்.
கிளாப்ஸ்
ரவிராயின் ஒளிப்பதிவு இருளையும் அழகாக பயமுறுத்தி காட்டியுள்ளது, இதற்கெல்லாம் மேலாக படத்தின் மிக முக்கியமான கிளாப்ஸ் அள்ளுவது அறிமுக இசையமைப்பாளர் அரொல் கரோலி தான். எழுத்தாளர் தமிழச்சி பாண்டியன் எழுதிய ஒரு பாடல் அவரது இசையில் மெய் மறக்க செய்கிறது.
பின்னணி இசையிலும் கலக்குகிறார். மேலும் பிரயாகாவின் தந்தையாக வரும் ராதாரவி, தமிழ் சினிமாவின் பொக்கிஷம், தன் அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். கதாநாயகனும் அவர் பங்கிற்கு பயந்துள்ளார் சாரி நடித்துள்ளார்.
பல இடங்களில் பயத்தை கொண்டு வந்து நம்மை மீண்டும் அமைதி நிலைக்கு கொண்டு வந்தது. குறிப்பாக அந்த பேய் ஓட்டும் காட்சி, ஹீரோ வீட்டில் திருட வருபவனை பயமுறுத்தும் காட்சி.
பல்ப்ஸ்
மிஷ்கினின் வழக்கமான சண்டைக்காட்சி. கதாநாயகியை பறக்க மட்டுமே வைத்துள்ளார். இன்னும் அவரை பயன்படுத்திருக்கலாமோ என தோன்றுவது. இத்தனை சிம்பாளிக் விஷயங்கள் அனைவருக்கும் புரியுமா? மற்ற படி வேறு ஏதும் இல்லை.
மொத்தத்தில் இந்த பிசாசு முதல் பாதியில் நம்மை கதிகலங்க வைத்து, பிற்பாதியில் காதலிக்க வைக்கிறது.
நன்றி  cineulagam

No comments: