திரும்பிப்பார்க்கின்றேன் - பேராசிரியர் நுஃமான் - முருகபூபதி

.
இலக்கியத்திலும்  மொழியியலிலும்  பன்முக  ஆளுமை  கொண்டிருக்கும்   பேராசிரியர்  நுஃமான்
இலக்கியத்தொடர்பாடலுக்கும்  ஆய்வுத்தேடலுக்கும்   பாதை செப்பனிட்டுக்கொடுத்தவர்
  
                                    
இலங்கையின்  மூத்த  கவிஞரும்  விமர்சகருமான  நுஃமான் அவர்களுக்கு  70  வயது  என்பதை  அறிந்து  முதலில்  எனது நல்வாழ்த்துக்களை   அவருக்குத்  தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை  எழுதத்தொடங்குகின்றேன்.
நுஃமான்   தொழில்  ரீதியில்  பணியாற்றிய  கல்வித் துறையில்  எவ்வாறு  படிப்படியாக  உயர்ந்து  இன்று  தகைமைசார்  பேராசிரியராக  விளங்குகிறாரோ  அவ்வாறே  தாம்  சார்ந்த  இலக்கியத்துறையிலும்   படிப்படியாக  உயர்ந்து  பலருக்கும் முன்மாதிரியாகியிருப்பவர்.
அவர்  கவிஞர்,  விமர்சகர்,  ஆய்வாளர்,  மொழியியல்  அறிஞர், பேராசான்,   பதிப்பாளர்  முதலான  பன்முகம்  கொண்டவர்.
இலக்கியப்பிரவேசத்தில்  அவர்  ஆரம்பத்தில்  சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்   என்பதை   அறியமுடிகிறது.  பின்னாளில் ஆளுமையுள்ள  விமர்சகராகத்  தோற்றம்  பெற்ற  பலர்  ஆரம்பத்தில் சிறுகதைகள்தான்   எழுதியிருக்கின்றனர்  என்பது  தகவல்.   அந்த வரிசையில்  கைலாசபதி -  தொ.மு.சி ரகுநாதன்  ஆகியோரையும் குறிப்பிடலாம்.
 நுஃமான்  பிறந்த  ஆண்டு  1944  என்பது  மாத்திரமே  தெரிந்த நிலையில்  அவரது  வாழ்க்கைப்பின்புலம்  பற்றிய  எதுவித தகவலும் இற்றைவரையில்  எனக்குத் தெரியாது.  அவரை  முதன்  முதலில் கொழும்பில்   இலக்கியசந்திப்புகளிலும் -  பின்னர்  அவர்  ஆசிரியராக பணியாற்றிய  கொழும்பு  அல்.ஹிதாயா  வித்தியாலயத்திலும் சந்தித்தேன்.
எனது  நினைவுக்கு  எட்டியவரையில்  1972  காலப்பகுதியில்  அவரை ஒரு  பாடசாலை  ஆசிரியராகவும்,  அதேசமயம்  இலக்கிய விமர்சகராகவும்  பார்த்தேன்.   அவரை  கவிஞன்  என்ற   கவிதைக்காக கிழக்கிலங்கையில்  (1969 -1970)  வெளியான   இதழின்  இணை ஆசிரியராகவும்  மகாகவி  உருத்திரமூர்த்தியின்  சில  நூல்களை பதிப்பித்த  பதிப்பாளராகவும்  தெரிந்துகொண்டிருந்தேன்.




நுஃமான்  - கொழும்பு  கொள்ளுப்பிட்டியில்  காலிவீதியில்  ஒரு  சீன உணவகத்தின்  பின்னால்  அமைந்திருந்த  ஒரு  வீட்டில்  தங்கியிருந்து ,  ஆசிரியப்பணியையும்  இலக்கியப்பணிகளையும் மேற்கொண்டிருந்த  1972  காலப்பகுதியிலேயே    எனக்கு   நண்பரானவர்.
இந்த   நட்பு  எந்த  விக்கினமும்  இல்லாமல்  கடந்த  நான்கு தசாப்தங்களுக்கும்   மேலாக  ஆரோக்கியமாக  தொடர்வது அதிசயம்தான்.   ஆனால்,  அதுதான்  உண்மை.  அவ்வாறு  நாற்பது ஆண்டுகளுக்கும்   மேலாக  ஒருவர்  மீது  ஒருவர்  அன்பு  பாராட்டி இந்தப்பதிவு   எழுதும்  வரையிலும்  கூட  உறவு  பேணப்படுவது இலக்கிய  உலகில்  அபூர்வம்தான்.
அவரது   எழுத்துக்கள் - அவை   கட்டுரையாக,  கவிதையாக, விமர்சனமாக,   மொழியியல்  ஆராய்ச்சியாக  இருப்பினும்  கூட அவரது   ஆக்கத்தின்  முடிவிலிருந்து  மற்றுமொருவர் தம்கண்ணோட்டத்தில்  எழுதும்  நிகழ்வுகள்  பலவற்றை பார்த்துள்ளேன்.
இலக்கியத்தொடர்பாடலுக்கும்  ஆய்வுத்தேடலுக்கும்   அவர்  பாதை செப்பனிட்டுக்கொடுத்துவிடும்   இயல்பு  அவரது  ஆக்கங்கள் பலவற்றுக்கு    நேர்ந்துள்ளது.


1974   காலப்பகுதியில்  அவர்  எனது  அழைப்பை   ஏற்று  எமது நீர்கொழும்புக்கு  வந்து   எமது  இலக்கியவட்டத்தினால்  நடத்தப்பட்ட  இலக்கியக்கருத்தரங்கில்  ஈழத்து  இலக்கியத்தில்  கவிதை  என்ற தலைப்பில்   உரையாற்றினார்.
தனது  உரையைத்  தொடக்கும்பொழுதே  " கவிதைக்கு  வயது  அதிகம். ஆனால் ,  அதுபற்றி  பேசும்  எனக்கோ   வயது   மிகமிகக்குறைவு "  என்றார்.
அந்த  நிகழ்வு  எமது  ஊரில்  முக்கியமான  தடம்  பதித்தது.
அன்று   அக்கருத்தரங்கில்  கலந்துகொண்டவர்கள்:   ஈழத்தின்  மூத்த படைப்பாளி ,  நாவலாசிரியர்  இளங்கீரன்,  நாடக  இயக்குநர்  சுஹேர் ஹமீட்,   பூரணி  ஆசிரியர்  மகாலிங்கம்,  சிங்கள  திரையுலக கதாசிரியர்  ஆரியரத்ன   விதான.
அன்றிலிருந்து   நான்  அவுஸ்திரேலியாவுக்கு  புலம்பெயர்ந்த  1987 வரையில்    நுஃமான்  அவர்களின்  பணிகளை  அருகிருந்தும்  1987 இற்குப்பின்னர்   தொலைவிலிருந்தும்  அவதானித்துவருகின்றேன்.
இலங்கையில்   யாழ்ப்பாணத்தில்  1974  இல்   முதல்  முதல் பல்கலைக்கழக  வளாகம்  தோன்றியபொழுது  அதன்  முதல் தலைவராக   பணியேற்ற  பேராசிரியர்  கைலாசபதி  இலங்கையில் மிக   முக்கியமான  ஆளுமை.
அவர்   தான்  மாத்திரம்  இயங்காமல் தன்னைச்சுற்றியிருப்பவர்களையும்  இயங்கவைக்கும்  ஆற்றல் மிக்கவர்.   அவர்  தினகரன்  நாளிதழில்  ஆசிரியராக பணியாற்றியகாலத்திலும்   அவ்வாறே   இயங்கியவர்.


யாழ்ப்பாணம்   பல்கலைக்கழக  வளாகம்  தோன்றியது   பெரிய  வரப்பிரசாதம்தான்.    அதனால்  இலங்கையின்  வடபுலத்தில்  கல்வி மேலும்   மேன்மையடைந்தது.  ஈழத்து  இலக்கிய  வளர்ச்சிக்கு  மேலும்  உரமூட்டியது.
கைலாசபதி  தன்னோடு  அங்கு  பணியாற்ற அழைத்துச்சென்றவர்களில்    சிவத்தம்பி,    நுஃமான்,   சித்திரலேகா, நிர்மலா , மௌனகுரு,  மு.நித்தியானந்தன்,  ஏ.ஜே. கனகரட்னா,   முதலான  சிலர்  ஈழத்து  இலக்கிய விமர்சனத்துறையில்   நெறிப்படுத்தப்பட்ட    போக்கை   உருவாக்கியவர்கள்.
இவர்களின்   இலக்கிய   சுவாசம்தான்  யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ்   நாவல்  இலக்கியத்திற்கு  நூறு  வயது  நிறைவுற்றபொழுது இரண்டு  நாட்கள்  மிகவும்  தரமான   நாவல்  இலக்கிய ஆய்வரங்கினை  அங்கு  சாத்தியமாக்கியது.   கைலாசபதி தமிழ்நாட்டிலிருந்து  மூத்த  படைப்பாளி   அசோகமித்திரனை   அதற்கு அழைத்திருந்தார்.
அவர்  நாடு  திரும்பும்  வரையில்  அவரது  நலன்களை அக்கறையெடுத்து  கவனித்துக்கொண்டவர்  நுஃமான்.
முதல்  தமிழ்  நாவல்  தமிழகத்தில்  தோன்றியிருந்தாலும்  தமிழ் நாவல்   இலக்கியத்திற்கு  நூற்றாண்டு  வந்துவிட்டது  என்று  முதலில் தமிழ்   உலகிற்கு  பிரகடனப்படுத்தியது  யாழ். பல்கலைக்கழகம்தான்.
இதனை  தமிழ்நாட்டில்  1990  இல்  நான்  சந்தித்த  இலக்கிய விமர்சகர்   சிட்டி  சுந்தரராஜன்  பகிரங்கமாகவே   ஓர் இலக்கியச்சந்திப்பில்   ஒப்புக்கொண்டார்.  அதன்  பிறகே  அவரும் சிவபாதசுந்தரத்துடன்   இணைந்து  நாவல்  இலக்கியம்  பற்றிய  நூலை எழுதினார்.
யாழ்ப்பாணம்   பல்கலைக்கழகத்தில்  நடந்த  நாவல்   ஆய்வரங்கில் நுஃமான்  சமர்ப்பித்த  கட்டுரை   மிகவும்  முக்கியமானது.  நாவல், சிறுகதைப் படைபாளிகளுக்கு   பயனுள்ளதாக  இருந்தது.  அதன் தலைப்பு   எனது  நினைவிலிருந்து  தப்பிவிட்டது.
அந்தப்பயணத்தில்   அவர்  தான்  தங்கியிருந்த  வீட்டிலேயே என்னையும்   தங்கவைத்து,  பல்கலைக்கழக  உணவு   விடுதியில் உபசரித்தார்.   அவரிடமிருக்கும்  உபசரிக்கும்  பண்பு  சிலிர்ப்பூட்டும். 1972  இல்  கொள்ளுப்பிட்டியில்  அவரை சந்திக்கச்செல்லும்போதெல்லாம்  என்னை  அந்தக் காலி  வீதியை கடந்து    அழைத்துசென்று  ஒரு  சிறிய  சிற்றுண்டிச்சாலையில் உபசரித்தவாறே   இலக்கியம்  பேசுவார்.  நான்  இலங்கை   செல்லும் சந்தர்ப்பங்களில்  கண்டிக்குச்சென்றால்  எனக்கு  மிகவும்  பிடித்தமான ஒரு  சிங்கள  உணவு  விடுதிக்கு  அழைத்துச்சென்றுவிடுவார்.   அங்கே    மண்சட்டியில்  உணவு    பரிமாறப்பட்டிருக்கும்.   புகலிடத்தில் அத்தகைய    காட்சிகள்  காண்பது  அரிது.
இவையெல்லாம்  பசுமையான  வசந்த  காலங்கள்.  அவர்  எந்த  ஊர் மக்களுக்காக   வடபுலத்தில்  பணியாற்றச்சென்றாரோ  அவ்வூரிலிருந்து   விடுதலைப்புலிகளினால்  அவர்  உட்பட ஆயிரக்கணக்கான  இஸ்லாமிய  மக்கள்  வெளியேற்றப்பட்டபொழுது அவுஸ்திரேலியாவிலிருந்து    மனதிற்குள்  அழுதிருக்கின்றேன்.


" நுஃமான்   மாமா  இல்லாத   தமிழ்  ஈழம்  எமக்கு  வேண்டாம் "  என்று  கவிஞர்  சேரன்   பதிவுசெய்திருப்பதிலிருந்து  அவரது  உயர்ந்த பண்புகளை   எம்மவர்கள்  இனம்காணவும்  முடியும்.
அவரை   முன்பின்  தெரியாதவர்கள்  நேரில்  பார்த்தால்  அவரை  ஒரு தமிழராகவே    அடையாளம்  காண்பார்கள்.
ஒரு   சுவாரஸ்யமான  சம்பவத்தை  இங்கு  பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
கிழக்கிலங்கையில்   கல்முனையில்,   அவரும்  கவிஞர்  சண்முகம் சிவலிங்கம்   மற்றும்  எழுத்தாளர்  சடாட்சரன் -  மருதூர்க்கொத்தன்-  மருதூர்க்கனி   உட்பட  சில  படைப்பாளிகள்  இணைந்து  கல்முனை எழுத்தாளர்   சங்கம்  என்ற  அமைப்பை   உருவாக்கியிருந்தபொழுது ஒரு   இலக்கியக்கூட்டத்திற்காக  ஒலிபரப்பு  ஒலிவாங்கி  (Lou ad Speaker - Mike)  சாதனங்கள்   வாடகைக்கு   விடும்  கடையொன்றுக்கு  நுஃமான்  சென்றிருக்கிறார்.  உடன்  சென்றவர் தமிழரான  கவிஞர்  சடாட்சரன்.  அந்தக்கடைக்காரர்  - நுஃமானை ஏறிட்டுப்பார்த்துவிட்டு,  " சேர்... நீங்கள்  கேட்பதனால்தான்  தருகின்றேன்.  ஆனால்,  இந்த  காக்காமாருக்கு  நான்  வாடகைக்கு கொடுப்பதில்லை "  என்றாராம்.
அருகே  நின்ற  சடாட்சரனுக்கு  மிகவும்  சங்கடமாகிப்போய்விட்டதாம்.   இன முரண்பாட்டின்  அந்த  உளவியல் குணாம்சத்தை    நுஃமான்,   நுட்பமாகச்சொன்னது  கொழும்பில்.
இந்த  நகைச்சுவையான    சுவாரஸ்யத்தை  நுஃமான் 1975 இல் வெள்ளவத்தை   இராமகிருஷ்ண  மண்டபத்தில்  நடந்த  எழுத்தாளர் சாந்தனின்   ஒரே   ஊரிலே... சிறுகதைத்தொகுதி  வெளியீட்டு விழாவில்    பேசும்பொழுது   குறிப்பிட்டார்.
என்னால்    மறக்கமுடியாத     நகைச்சுவைச்சம்பவம்   அது.
நுஃமானுடனான  உரையாடல்களில்  இதுபோன்ற  பல  சம்பவங்கள் வெளிப்படும்.
அவர்   சிறந்த  மொழியியல்  அறிஞர்  என்பதை  1984  இல்  முதல் பதிப்பாக  வெளியான    பாரதியின்  மொழிச்சிந்தனைகள்    ஒரு மொழியியல்   நோக்கு   என்ற   அவரது  பல்கலைக்கழக  ஆய்வேடு   அன்றே   பெரிதும்   பேசப்பட்டது.
பின்னாளில்   அவர்  எழுதியுள்ள  ஆரம்ப  இடை  நிலை  வகுப்புகளில் தமிழ்   மொழி  கற்பித்தல்  ஒரு  மொழியியல்   நோக்கு, அடிப்படைத்தமிழ்  இலக்கணம்   என்பனவும்  குறிப்பிடத்தகுந்தவை.
பாரதியின்  மொழிச்சிந்தனைகள்  நூலுக்கு  அணிந்துரை   எழுதியுள்ள அன்றைய  கலைப்பீடாதிபதி   பேராசிரியர் கா. இந்திரபாலா , " இந்த வெளியீடு   எமது  கலைப்பீடத்தில்  உள்ள  பலரை   இத்தொடரில் ஆய்வுகளை  வெளியிடுவதற்கு  ஊக்குவிக்கும்  என  நம்புகின்றேன்." என்று  குறிப்பிட்டுள்ளார்.
1982   இல்  பாரதி  நூற்றாண்டு  விழா   நாடெங்கும் கொண்டாடப்பட்டவேளையில் - அதனையொட்டி  அவர்  கொழும்பு கட்டுப்பெத்தை   பல்கலைக்கழகத்தின்  தமிழ்ச்சங்க  வெளியீடான நுட்பம்  மலரில்  நுஃமான்  எழுதியிருந்த  மொழி  வளர்ச்சி -  பாரதியின்   கருத்துக்கள்  என்ற  கட்டுரையின்  விரிவாக்கமாகவே குறிப்பிட்ட   ஆய்வேட்டை   எழுதியிருந்தார்.
அதன்   முன்னுரையில்   நுஃமான்    குறிப்பிட்டுள்ள    கருத்து முக்கியமானது.
".....இந்த   மதிப்பீடு  முடிந்த  முடிபானது  அல்ல.  ஒரு  முதல்  முயற்சி மட்டுமேயாகும்.  இப்பொருள்  பற்றி  மேலும்  பலர்  சிந்திக்கவும் ஆராயவும்   இது  தூண்டுகோலாக  அமையும்  என  நம்புகின்றேன்."
நுஃமான் - கல்விப்பொதுத்தராதர  (உயர்தர)  மாணவருக்குரிய  புதிய தமிழ்   இலக்கணப்பாடத்திட்டத்திற்கு  அமைவாகவும் பல்கலைக்கழகங்களிலும்   கல்லூரிகளிலும்  தமிழை  ஒரு பாடமாகப்பயிலும்   மாணவர்களுக்கும்  அவர்களின்  ஆசிரியர்களுக்கும்   பயன்படும்  வகையில்  மிகுந்த  தேடலுடனும் ஆய்வுக்கண்ணோட்டத்துடனும்    எழுதிய   நூல்   அடிப்படைத்தமிழ் இலக்கணம்.
அதிலும்   தமது  முன்னுரையின்  இறுதிப்பகுதியில் -  மொழியியல் சிந்தனைகளைத்தழுவி  அமைந்த  ஒரு  பாட  நூல்  என்ற  வகையில் இந்நூல்   ஒரு   முதல்   முயற்சியே    என்றுதான்   பதிவுசெய்கின்றார்.
மொழியியல்   துறையில்  மட்டுமன்றி  படைப்பிலக்கியத்துறையிலும் அவர்   இவ்வாறு  விமர்சன  முறைமைத் தேடல்களுக்கு வழிவகுத்திருக்கிறார்.
தி.ஜானகிராமன்   தமிழ்   நாவல்  இலக்கியத்தில் சிகரங்களைத்தொட்டவர்.    இன்று   தமிழகத்தில்   மிகச்சிறந்த 150 நாவல்கள்  வரிசையிலும்  அவரது  நாவல்கள்  முதலிடத்தில் நிற்கின்றன.
1969 அல்லது  1970  என்று   நினைக்கின்றேன்.
தி.ஜானகி ராமனின்   அம்மா  வந்தாள்  வெளியாகியிருந்த  காலப்பகுதி. அம்மா   வந்தாள்  கதையை    திரைப்படமாக்கும் முயற்சியில்   பாலு  மகேந்திராவும்  ஈடுபட்டு  பின்னர்  அது  முடியாத காரியம்   என  பின்வாங்கியிருந்தார்.
இந்நாவல்  Appu's Mother என்ற  பெயரில்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு  Illustrated Weekly    இதழில்    தொடராக   வெளியானது.
நுஃமான் , அம்மா வந்தாளை  படித்துவிட்டு  மல்லிகையில்  இந்நாவல் தொடர்பாக    மாப்பசானும்   ஜானகிராமனும்   என்ற விமர்சனக்கட்டுரையை    எழுதியிருந்தார்.
அதற்கு   எதிர்வினையாக  அல்ல -  நுஃமான்  தமது  கட்டுரையில் மறைமுகமாகக்   கிளப்பும்   சில  பொதுப்பிரச்சினைகளைப்பற்றி  சில குறிப்புகளை   எழுதத்தலைப்பட்டு    வாசகர்களுக்கு   மாத்திரம்  அல்ல தனக்கும்    தெளிவைத்தேடிக்கொள்ள    முயன்றார்  மாக்சீய   இலக்கிய விமர்சகர்   ஏ.ஜே. கனகரட்னா.
 கனகரட்னா   அக்கட்டுரையின்  இறுதியில்  இவ்வாறுதான் முடித்திருக்கிறார்:  ஏனைய   வாசகர்களை வேறு  வேறு கோணங்களிலிருந்து   இப்பிரச்சினையை   நோக்கத்தூண்டுமேயாயின் அதுவே  போதும்.
1973 இல்  கொழும்பிலிருந்து  வெளியான   பூரணி  காலாண்டிதழ் மு.தளையசிங்கத்தின்   எண்ணங்களை  பிரதிபலித்தன.  அவருடன் புங்குடுதீவில்   இணைந்து  சமூகப்பணிகள்  தொடர்ந்த   மகாலிங்கம் இணையாசிரியராக   இயங்கிய  இதழ்  பூரணி.   
பூரணி    குழுவினர்  கைலாசபதியின்  இலக்கிய  கோட்பாடுகளில் முரண்பட்டிருந்தார்கள்.   மு.தளையசிங்கம்  தமது  ஏழாண்டு  இலக்கிய   வளர்ச்சி  நூலில்  கைலாசபதி   பற்றி   தமது   எண்ணங்களை   பதிவு செய்திருந்தபோதிலும்,  அதற்கும்  மேலே  ஒரு படி   சென்று   கைலாசபதியை    விமர்சிக்கவேண்டும்   என்ற   எண்ணம் பூரணி.   குழுவினருக்கு    தோன்றியிருக்கவேண்டும்.
அதனால்   இக்குழுவில்  இருந்த  இமையவன்  என்ற ஜீவகாருண்யனது   கைலாசபதி   பற்றிய    கடும்   விமர்சனம் அடங்கிய   கட்டுரையையும்   வெங்கட் சாமிநாதன்  ஏற்கனவே  நடை சிற்றிதழில்   எழுதிய  கைலாசபதியின்  தமிழ்  நாவல்  இலக்கியம் பற்றிய   நூலுக்கான  நீண்ட  விமர்சனமான  மார்க்சின் கல்லறையிலிருந்து  ஒரு  குரல்   என்ற   கட்டுரையையும்  மீள் பிரசுரம்   செய்தது.
தமது   கருத்துக்களுக்கு  முன்வைக்கப்படும்  எதிர்வினைகளுக்கு கைலாசபதி   பதில்  எதிர்வினைகளை  சமர்ப்பிப்பதில்லை.   அவரது மாணவர்களே  அவருக்காக    எழுதும்  மரபும்   இருந்தது.
 வெங்கட்சாமிநாதனின்   நீண்ட  கட்டுரைக்கு  எதிர்வினையை நுஃமான்தான்   எழுதினார்.  ஆனால்  பூரணியில்  இல்லை.   முற்போக்கு இலக்கிய  முகாம்  சார்ந்த  டொமினிக் ஜீவாவின்  மல்லிகையில். நுஃமானின்    நீண்ட   பதில்    அத்தியாயங்களாகவே    சில    இதழ்களில்   தொடர்ந்தது.
குறிப்பிட்ட   தொடர்  மு.தளையசிங்கத்தின்  தம்பி மு.பொன்னம்பலத்தை  அதற்கு  எதிர்வினையாற்றத்தூண்டியது. மு.பொ.வின்   கட்டுரை  மல்லிகையில்தான்  வெளியானது.
இந்தபத்தியின்   தொடக்கத்தில்  குறிப்பிட்டவாறு  நுஃமான்  ஈடுபட்ட துறைகளில்    அவரது  பன்முகப்பட்ட  சிந்தனைகளின் சர்வதேசியப்பார்வையையும்    ஆய்வுக்கண்ணோட்டத்தில்    தேடல் மனப்பாங்கையும்   நாம்  இனம் காண  முடியும்  என்பதற்காகவே மேற்குறித்த  தகவல்களை   பதிவுசெய்தேன்.
    இலங்கையில்  நிகழ்ந்த  கலவரங்களின்  பின்னணியில்  அவர் எழுதிய   புத்தரின் படுகொலை   என்ற  கவிதை   தமிழ்   உலகடங்கிலும்  மீண்டும்   மீண்டும்  பதிவாகியிருக்கிறது.
அவரது  மேலும்   சில   நூல்கள்:    மழை நாட்கள் வரும் , அழியா நிழல்கள் , இருபதாம்  நூற்றாண்டு  ஈழத்தமிழ்   இலக்கியம் (இணை ஆசிரியர்)   தாத்தாமாரும்   பேரர்களும், திறனாய்வுக் கட்டுரைகள்
பதினொரு  ஈழத்துக்  கவிஞர்கள் , பலஸ்தீனக் கவிதைகள்
மொழியியல்  துறையில்  அவர்  பெற்ற  முனைவர்  பட்டம் கல்விக்கும்   இலக்கியத்திற்கும்   நல்வரவு.
மூத்த   படைப்பாளி  சுந்தரராமசாமி  இலக்கிய  உலகில்  ஒரு வசிட்டர்.   அவரிடத்தில்  அங்கீகாரம்  பெறுவது  அரிது  என்பார்கள். ஆனால்,  அவர்  இலங்கையில்  அங்கீகரித்த  ஆளுமைகளில்  நுஃமான்  முக்கியமானவர்.
பின்னாட்களில்  நுஃமானின்  அங்கீகாரத்திற்காக  தவம்  இருந்தவர்கள் பலர்.
1970 காலப்பகுதியில்   இலங்கை  அரசியலில்  ஏற்பட்ட   மாற்றம் ஈழத்து   இலக்கியத்திலும்  சில  தாக்கங்களை   உருவாக்கியது. முற்று  முழுதாக  அந்த  மாற்றங்களை  இலங்கை  முற்போக்கு எழுத்தாளர்கள்   ஏற்காதுவிட்டாலும்,  அதற்கு  முன்னர் பதவியிலிருந்த   ஐக்கிய  தேசியக்கட்சியின்  தேர்தல்  தோல்வியினால்         வலதுசாரிப்போக்கிற்கும்   இலங்கையில் அமெரிக்க  -  பிரித்தானிய    வல்லரசுகள்  சார்ந்த    நிலைப்பாடுகளிலும் சரிவுகள்   நிகழ்ந்தன.
இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்  மீண்டும் வீறுகொண்டெழுந்தது.   1972   இல்  அமையப்பெற்ற  புதிய  அரசியல் சாசனம்   தமிழ்  மக்களை  இரண்டாம் தரப்பிரஜைகளாக்கியதையடுத்து அதனால்  எதிர்காலத்தில்   நிகழக்கூடிய   ஆபத்துக்களை தீர்க்கதரிசனமாக   உணர்ந்த   சங்கம்,    இனங்களின்  புரிந்துணர்வை   வலியுறுத்தி  கொழும்பில்  இரண்டு  நாட்கள்  தேசிய ஒருமைப்பாட்டு  மாநாட்டையும்   நடத்தியது.
நுஃமான்   மாக்சீய  சிந்தனைகொண்டவர்  என்பதனால்  அன்றைய இடது   சாரிகளும்   அங்கம்    வகித்த   மக்கள்   ஐக்கிய   முன்னணி அரசை    விமர்சனப்பார்வையுடன்    அவதானித்தார்.   அதே  சமயம் முற்போக்கு   எழுத்தாளர்  சங்கத்தின்  பணிகளிலும்  இணைந்திருந்தார்.    அவருடன்    கவிஞர்கள்    முருகையன் முதலானோரும்    இணைந்திருந்தாலும் ,  நுஃமானின்  கல்முனை இலக்கிய    நண்பர்    சண்முகம்   சிவலிங்கம்    சற்று   அந்நியப்பட்டிருந்து ,  மாநாட்டின்  இரண்டாம்  நாள்  கவியரங்கில் தமது   கவிதையில்  அரசையும்  முற்போக்கு  எழுத்தாளர்களையும் விமர்சித்தார்.
முருகையனுக்கும்  நுஃமானுக்கும்  இடையில்   புதுக்கவிதை தொடர்பாக    கருத்து முரண்பாடுகள்  நீடித்தபோதும்  இவர்கள் மூவருக்கும்  இடையில்   நீடித்த   நட்புக்கு   எதுவித   பங்கமும் நேரவில்லை.
அவ்வேளையில்   இம்மூன்று  பிரதான  கவிஞர்களும்  எமக்கு ஆதர்சமாகவும்    முன்மாதிரியாகவும்    விளங்கினார்கள்.    இன்று அதுபோன்ற    ஆரோக்கியம்  வற்றிக்கொண்டிருப்பது  காலத்தின் சோகம்.
நுஃமான்,  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின்  துணை   அங்கமான எழுத்தாளர்   கூட்டுறவுப்பதிப்பகத்தின்  வெளியீடான  அன்றைய காலகட்டத்து   இளம்   கவிஞர்   மேமன்   கவியின்  யுகராகங்கள் நூலுக்கு    முன்னுரையும்    எழுதினார்.  அத்துடன்  குறிப்பிட்ட  நூலுடன்  கூட்டுறவுப்பதிப்பகத்தின்  மேலும்  இரண்டு  நூல்களினதும் அறிமுக  விழா  யாழ்ப்பாணம்  வீரசிங்கம்  மண்டபத்தில் நடந்தபொழுது   அதற்கு   ஆதரவும்    வழங்கினார்.
இலங்கையின்   வட பிரதேசத்தில்  தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு  பல ஆலயங்கள்   கதவடைப்பு  செய்ததை   எதிர்த்து  அங்கு  சிறுபான்மை வெகுஜன   அமைப்பு  ஆலயப்பிரவேசப் போராட்டங்களை முன்னெடுத்து    வெற்றியும்    கண்டது.    இந்தப்போராட்டங்களில் இலங்கை  கம்யூனிஸ்ட்  கட்சியின்  வலதும்  இடதும்  சார்ந்த தோழர்கள்  முன்னணி  வகித்தனர்.
நுஃமான்  மல்லிகை  1970  ஜூன்  இதழில்  விடிவை நோக்கி  என்ற தலைப்பில்  எட்டுப்பக்கங்களில்  நீண்ட  கவிதை   எழுதியிருந்தார்.
ஆலயக்குருக்களுக்கும்    ஆலய  அறங்காவலர்களான மேல்சாதியினருக்கும்    எதிராக  ஆலயத்திற்கு  வெளியே   நின்று தாழ்த்தப்பட்ட   மக்கள்  நடத்தும்  ஆர்ப்பாட்டம்தான் அந்தக்கவிதையில்   கவித்துவமுடன்  சித்திரிக்கப்பட்டிருந்தது.
அந்தக்கவிதை -  கடவுள்  இருந்த  இடத்திலும்  இருள்  மூடியது  என  முடிந்திருந்தது.
பின்னாட்களில்  1980  இற்குப்பிறகு   அவர்  எழுதிய  புத்தரின் படுகொலை   கவிதை,    விடிவை  நோக்கி  நெடுங்கவிதையிலிருந்து வேறுபட்டிருந்தாலும்   சில  வரிகளைக்கொண்டிருந்தாலும் இரண்டிலும்    நுஃமான்    வெளிப்படுத்திய  படிமங்கள் குறிப்பிடத்தகுந்தவை - அழுத்தமானவை.
மல்லிகையில்  நுஃமானின்  சிறுகதையும்  வெளியாகியிருக்கிறது என்பது   ஆச்சரியமான  தகவல்தான்.  அவர்  மல்லிகையில்  நிறைய எழுதியிருந்தாலும்    மல்லிகை ஜீவாவின் அனைத்துக்கருத்துக்களுடனும்   ஒத்துப்போகின்றவர்தான்   நுஃமான் என்ற   முடிவுக்கும்   எவரும்   வந்துவிட  முடியாது.
அருள். சுப்பிரமணியம்   என்ற   திருகோணமலையைச்சேர்ந்த எழுத்தாளர்,  தமிழ்நாட்டில்  ஆனந்த  விகடன்  நாவல்  போட்டியில் மர்ம  நாவலுக்கான   முதல்   பரிசினைப்பெற்றார்.   ஆனால்,  அவரது நாவல்   ஏற்கனவே  வீரகேசரி  பிரசுரமாக  வெளியானது.   அதனை அவர்  மறைத்து  ஆனந்தவிகடன்  போட்டிக்கு  அனுப்பி வெற்றிபெற்றதும்   சென்னை  சென்று  குறித்த  பரிசை பெற்றுக்கொண்டும்   திரும்பிவிட்டார்.    அதன்பின்னர்   ஆனந்த விகடன்    நிருவாகம்    அதனைக்கண்டு  பிடித்தது.
இந்தச்சம்பவம்  ஈழத்து  இலக்கிய  உலகிற்கு  பெருத்த அவமானமாகிப்போனது.
ஆனால் , மல்லிகை  ஆசிரியர்  டொமினிக் ஜீவா   அருள் சுப்பிரமணியத்தை  நியாயப்படுத்தி  அறிக்கை  விடும்பொழுது  தமிழ் நாவல்களுக்குத்தானே    பரிசு...தமிழக    நாவல்களுக்கு  மாத்திரம் அல்லவே   என்று   சிறுபிள்ளை   வாதம்    முன்மொழிந்தபொழுது நுஃமான்தான்   அதற்கு    எதிராக   கண்டனக்குரல்   எழுப்பினார்.
அருள். சுப்பிரமணியம் , அந்தப்போட்டிக்கு  ஏற்கனவே  எழுதி வெளியான   நாவலை    அனுப்பியது   முற்றிலும்  தவறு  என்று இடித்துரைத்தார்.  நுஃமான்   சொன்ன  கருத்துக்கள்  இன்றளவும் போட்டிகளுக்கு  தமது  படைப்புகளை  அனுப்புபவர்களுக்கு முன்மாதிரியாகவே   ஆழமாக    பதிவாகியுள்ளது.
நுஃமான்  தெரிவித்த  கருத்துக்களினால்  மல்லிகை  ஜீவா  சற்று கலங்கியிருந்தாலும்   பின்னாட்களில்   ஜீவாவுக்கு  80 வயது பிறந்ததும்   மல்லிகையினதும்  ஜீவாவினதும்  மகத்தான  சேவைகள் பற்றி    விதந்து   ஞானம்  இதழில்  சிறந்த  கட்டுரையை   பதிவுசெய்தார்   நுஃமான்.  அதனைப்படித்து  புளகாங்கிதம்  அடைந்த ஜீவா  தமது   மகிழ்ச்சியை  தமது  மல்லிகையில்   தெரிவிக்கவும் தவறவில்லை.
கனடா   இலக்கியத்தோட்டம்  வெங்கட்  சாமிநாதனுக்கு  இயல்விருது வழங்கியபொழுது  அது  சரியான  தெரிவு  இல்லை  என்று உரத்துச்சொன்னவரும்  நுஃமான்தான்.  நுஃமானின்  சிறப்பியல்பு சமரசமற்ற    அவரது  இலக்கியச்சிந்தனைதான்.    தனக்கு சரியெனப்பட்டதை   முகஸ்துதிக்காக  மறைக்காமல் வெளிப்படுத்துவார்.
வெற்றுப்புகழாரங்களுக்கு  மயங்காத   அவரது  நல்லியல்புகள்தான் என்னையும்   மற்றும்  பலரையும்  அவர்பால்  ஈர்க்கச்செய்கிறது என்றும்    நம்புகின்றேன்.  நுஃமானுக்கு  விளக்கு  விருது   வழங்கப்பட்ட   சமயம்  அவர்  விருதுகள் -  பட்டங்கள்  குறித்து  பேசிய  உரை  இலக்கியப்பரப்பில்  விதந்து  போற்றப்பட்டது.  அந்த உரை  பல    இணையத்தளங்களிலும்   மீள்   பதிவுசெய்யப்பட்டன.
2011 ஆம் ஆண்டு தொடகத்தில்  அவருடான  சந்திப்பும்  குறிப்பிடத்தக்கது.   நாம்   கொழும்பில்  நான்கு  நாட்கள்  நடத்திய சர்வதேச   தமிழ்   எழுத்தாளர்    மாநாட்டில்  ஒழுங்குசெய்த மொழிபெயர்ப்பு   அரங்கிற்கு  அவர்  தலைமையேற்றார்.   மாநாடு நிறைவுற்றதும்    பேராதனைப்பல்கலைக்கழகத்தில்  தமிழ்த்துறை மாணவர்களுக்கும்   மாநாட்டில்    கலந்துகொண்ட வெளிநாட்டுப்பிரதிநிதிகளுக்கும்    இடையிலான    சந்திப்பு கலந்துரையாடலை    பல்கலைக்கழக    சிரேஷ்ட  விரிவுரையளரும் இலக்கிய    ஆய்வாளருமான     பேராசிரியர்  துரை . மனோகரன் ஒழுங்குசெய்திருந்தார்.    நுஃமானும்    அதில்   கலந்துகொண்டு உரையாற்றினார்.   
அவர்   தமது  வாழ்நாளில்  மாணவர்களுடன்  அதிக  நேரத்தை செலவிட்டவர்.
அவரது   ஆற்றலையும்   ஆய்வறிவுலகத்தேடலையும்  இலங்கையில் சாதாரண  பாடசாலைகளும்  யாழ். பல்கலைக்கழகம் , பேராதனைப்பல்கலைக்கழகங்கள்  மாத்திரமன்றி   தஞ்சை பல்கலைக்கழகம்  -  மலேசியா  பல்கலைக்கழகங்களும்  கடந்த காலங்களில்    பெற்றுக்கொண்டன.   தமிழ்  இலக்கியத்துறைகளிலும் நுஃமானின்   பங்களிப்பு   விரிவான  ஆய்வுக்குரியது.
நுஃமான்  பன்முக  ஆளுமையாளர்.   அவர்  தமது  ஆளுமையை வெளிப்படுத்திய   ஆக்கங்கள்   நிகழ்வுகள்   பலவுண்டு. அவரிடமிருந்து  நாம்   மேலும்  எதிர்ப்பார்க்கின்றோம்.  இலக்கிய விமர்சனத்துறையில்    இடைவெளிகள்  தோன்றிக்கொண்டிருக்கின்றன.
அவற்றை   நிரப்பவேண்டிய  பணிகளும்  இலக்கியத்துறையினர் குறித்த    அர்த்தமுள்ள   மதிப்பீடுகளும்    தேவைப்பட்ட  காலகட்டத்தில்    நாம்   வாழ்கின்றோம்.   நுஃமானிடம்  நாம்  தொடர்ந்து    எதிர்பார்ப்பதும்    அவற்றைத்தான்.
மலர்ந்துள்ள  புத்தாண்டில்  அவருக்கு   எனது   வாழ்த்துக்கள்.
letchumananm@gmail.com
----()---