பொங்கல் வாழ்த்து— என்னினிய தமிழ் அன்பர்களுக்கு!

       .
               ---------பல்மருத்துவ கலாநிதி  இளமுருகனார் பாரதி.

     ஐந்துபத்தோ ஆயிரமோ விலைமதிப் பில்லா
        அரும்பெருஞ்சீர் விழுமியங்கள் நெஞ்சிற் சுமந்து
     வெந்துசாம்பல் ஆகினாலும் தமிழை மறவோம்
    விரும்பிமகிழ் “தனித்துவம்”விட மாட்டோ மென்று
     வந்தவிந்த நாட்டிற்குக் கொண்டு வந்தோம்
        வாழையடி வாழையாகக் காப்போம் என்றோம்
     இந்தநல்ல உறுதிமொழி எல்லாம் இன்று
         இழையறுந்த பட்டம்போற்; சுழலு தம்மா!

     உளிதேய்ந்து உளிப்பிடியாய்ப் போன கதை
        உங்களுக்குத் தெரிந்திருக்கும்  பொங்க லன்று
     வழிபிறக்கும் தமிழ்வளர்ப்போம் எமது சந்ததி
        வளர்த்துவந்த  வண்டமிழை மறவோம் என்று
     களிகூர்ந்து  மனதாரச் சபதம் எடுப்பீர்!
        கடமையென மனசாட்சி கணமும் உறுத்தக்
     கருத்திருத்திப் பிள்ளைகளைக் கன்னித் தமிழ்
        காதலொடு கற்றுயர வழிச மைப்பீர்!

    இல்லமெலாம் எழில்பொங்க இனிமை பொங்க
        இதயங்கள் அனுதினமும் அன்பிற் பொங்க
    நல்லுளங்கள் வாழ்த்திடவெம் நலங்கள் பொங்க
        நனிசிறந்து வாழ்வுயர மகிழ்ச்சி பொங்க
    நெல்வழங்கும் உழவர்வளம் நிரம்பிப் பொங்க
       நினைந்திறைவன் தாழ்தொழுது வாழ்த்து கின்றேன்!
    எல்லையில்லா உயிர்களுக்கு ஒளியைப் பொங்கும்
       எழுகதிரோன் அருள்பொங்கப் பொங்குவோமே!

           “ வாழ்க வளமுடன்”

                 

No comments: