சங்க இலக்கியக் காட்சிகள் 35- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

கரத்தை விடுத்தான், மனத்தை எடுத்தான்!

இளமைப்பருவத்தில் ஏற்படுகின்ற எண்ணக் கிளர்ச்சியிலே கண்கள் கலப்பதும் காதல் சுரப்பதும் இருபாலாருக்கும் இயற்கையானதே. அவ்வாறு கருத்தொருமித்த காதலர்கள் ஒருவரையெருவர் எண்ணியெண்ணி ஏங்கித் தவித்தலும், இருவரும் தனிமையில் சந்திக்கத் துடித்தலும், சந்தித்தபோது ஆசையோடு அணைத்தலும், உடல்கள் கலத்தலும், உறவில் களித்தலும்ää பின்னர் அந்த இன்பத்தை நினைத்தலும்தான் குறிஞ்சித்திணைக்குரிய அகப்பொருள்களாகும். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சித்திணையின் உரிப்பொருள் என்று தொல்காப்பியம் சொல்கிறது.அத்தகைய குறிஞ்சி நிலத்திலே வாழ்கின்ற கட்டான உடல்கொண்ட இளைஞன் அவன். காண்போரைக் கவர்ந்திழுக்கும் பேரழகன். அதே ஊரில் வாளிப்பான உடலும், கவர்ச்சியான முகமும் கொண்ட ஒரு பெண்ணிலே அவனுக்குக் காதல் பிறக்கிறது. அவள் வேறு யாருமல்ல. சின்ன வயதில் அவனோடு சிறுவீடுகட்டி விளையாடியவள்தான். ஆனால் இப்போது பருவ மங்கை. அவள் மீது கொண்ட ஆசைமிகுதியால் அவளின் வீடுதேடி அவன் செல்கிறான். அவளை வெளியே காணவில்லை. “வீட்டில் யாரும் இல்லையோ” என்று குரல் கொடுக்கிறான். “யாராவது இருந்தால்ää தாகமாக இருக்கிறது குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்கிறான்

வீட்டினுள்ளேயிருந்த அவளின் தாய்க்கு அவனது குரல் கேட்டவிடுகிறது. உடனே அவள் மகளைக் கூப்பிட்டு யாரோ தண்ணீர் கேட்கிறார்கள். நீ சென்று அந்தப் பொற்கலசத்திலே தண்ணீர் மொண்டு அவனுக்குக் கொடுத்துவிட்டுவா என்று சொல்கிறாள். அவளும் அவ்வாறே பொன்னால் செய்த கலசத்திலே தண்ணீர் எடுத்துக்கொண்டு, வீட்டுக்குள்ளிருந்து வாசலுக்கு வருகிறாள். கலசத்திலேயிருக்கும் தண்ணீர் சிந்திவிடாதபடி ஆடாமல்ää அசையாமல் அன்னம்போல அவள் நடந்து வருகிறாள். அவளின் அழகிலே அவன் ஒருகணம் சொக்கிப் போகின்றான். வாசலுக்கு வந்த அவள்மீது வைத்தகண்களை இமைக்காமல் அபபடியே பார்த்துக்கொண்டிரக்கிறான். அவளின் அழகையெல்லாம் அப்படியே மனதினால் விழுங்குகின்றான். அவன் சின்ன வயதில் தன்னோடு பழகியவன்தான் என்று அவள் அடையாளம் கண்டுகொள்கிறாள். அதனால்ää அவனைப்பார்த்துப் புன்முறுவல் செய்கிறாள். பின்னர் அவனருகேசென்று தண்ணீர்க்கலசத்தை அவனிடம் நீட்டுகிறாள். அவனோ சட்டென்று அவளின் கையைப் பிடித்துத் தன்னருகே இழுக்கிறான். உடனேää அவள் “ஐயோ! ஆம்மா இங்கே ஓடிவா. இவன்செய்யும் வேலையைப்பார்” என்று கத்திவிடுகிறாள். அவனது பிடியிலிருந்து தன் கையை இழுக்கிறாள். அவனும் வருடிக்கொடுத்தபடி தன்பிடியைத் தளர்த்துகிறான். கண்கள் நான்கிலும் காந்தசக்தி மின்னுகின்றது. உள்ளேயிருந்த தாய் என்னவோ, ஏதோ என்று அலறியடித்துக்கொண்டு ஓடிவருகிறாள். அவனைக் காட்டிக்கொடுத்தால் அவனைச் சிக்கலில் மாட்டிக்கொள்வான் என்று அந்தக் காதல் உள்ளம் தயங்குகிறது. உடனேää “ஒன்றுமில்லையம்மா! துண்ணீர் குடிக்கும்போது விக்கல் எடுத்தான் அததான்…” என்று மழுப்புகிறாள். அவளின் தாயோ அவன் விக்கல்தான் எடுத்தான் என்று நம்பி அவனின் முதுகைத் தடவிவிடகிறாள். அப்போது அவன் கடைக்கண்ணால் கேலியாகப் பார்க்கிறான். அவனிடமிருந்து தன் கரத்தை விடுவித்தவள்ää மனத்தை அவனிடம் இழந்துவிடுகிறாள். இந்தக்காட்சியை எடுத்துச் சொல்லும் பாடல் ஒன்று கலித்தொகையிலே உள்ளது.

 “சுடர்த் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலிற் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லீரே!
உண்ணுநீர் வெட்டேன்’ என வந்தார்க்கு, அன்னை
அடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்!
உண்ணுநீர் ஊட்டி வா என்றாள், என யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளைமுன்னை பற்றி நலியத் தெருமந்திட்டு
அன்னாய்! இவன் ஒரவன் செய்தது காண்! என்றேனா
அன்னை அலறிப் படர்தரத், தன்னை யான்,
‘உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி, நகைக் கூட்டம்
செய்தான் அக்கள்வன் மகன்.”

(கலித்தொகை. குறிஞ்சித்திணை. பாடல் 15. பாடியவர்: கபிலர்)


(கன்னிப் பெண் ஒருத்தியைக் காதலிக்கும் ஒருவன் அவளைப் பார்ப்பதற்காக அவளது வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்பதையும், அவளது கையைப் பிடிப்பதையும், அவளது மனதைக் கவர்வதையும், அவள் தாயிடம் பொய்கூறி மழுப்புவதையும் அவள் ஒரு கதை போலத் தன் தோழியிடம் கூறுவதாக அமைந்தது இந்தப்பாடல்)

இதன் நேரடிக் கருத்து:

ஒளிபொருந்திய வளையலை அணிந்திருப்பவளே கேள்! சிறுவயதில் நாம் வீதியிலே வீடுகட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது அந்த மணல் வீடுகளைத் தன் காலால் சிதைத்து, நாம் தலையில் சூடியிருந்த கோதையைப் பிய்த்து, நாம் விளையாடிக்கொண்டிருந்த பந்தை பறித்துக்கொண்டு ஓடி நம்மையெல்லாம் நோகப் பண்ணினானே, அவன், ஒரு நாள்  நானும் அன்னையும் வீட்டில் இருந்தபோது அங்கே வந்து தாகத்திற்குத் தண்ணீர் கேட்டானடி. அதைக்கேட்ட என்தாய் வாசலில் யாரோ தண்ணீர் கேட்கிறார்கள் பொன்தகட்டால் செய்யப்பட்ட கலசத்திலே தண்ணீர் நிரப்பி அவருக்குக் கொடுத்து வா என்று சொன்னாள். வந்திருப்பது அவன்தான் என்று அறியாமல் தண்ணீர் கொண்டு சென்றேன். அவளோ எனது கையைப்பிடித்து இழுத்தான். நான் நடுங்கிக்கொண்டே, ‘அம்மா இவன் செய்யும் வேலையை வந்து பார்’ என்று கத்தினேன்.  அன்னை அலறிக்கொண்டு ஓடிவந்தாள். ( அவன் செய்ததைச் சொன்னால் அவனை அடித்து அவமதித்துத் துரத்திவிடுவார்களே, அதனால்) “அம்மா தண்ணீர் குடித்தபோது அவன் விக்கல் எடுத்தான் அதுதான்…” என்று மழுப்பி உண்மையை மறைத்தேன். நடந்ததை அறியாத அன்னை அவனது முதுகைத் தடவிக்கொடுத்தாள். அப்போது, என்னை கடைக்கண்ணால் கொல்வது போலப்பார்த்துப் பின் நகைத்தானடி அந்தக் கள்வன்மகன்!

No comments: