நி.ச.வே மாநில முதல்வர் விருது வழங்கி கௌரவிப்பு

.

ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தில் இருபத்தைந்து வருடங்கள் ஆசிரியப் பணியை நிறைவுசெய்யும் திருமதி நிர்மலா தயாளன் அவர்கட்கும், அதன் முன்னாள் தலைவரும், பரீட்சைக் குழு உறுப்பினருமான திரு குணரட்ணம் பாஸ்கரன் அவர்கட்கும் NSW Federation of Community Languages Schools வழங்கிய சமூகசேவைக்கான அதி உயர் விருதினை நி.ச.வே மாநில முதல்வர் Honorable Mike Baird அவர்கள் வழங்கினார்கள்.

இவ்வருடம் சமூக மொழிப் பாடசாலைகளில் நீண்டகாலம் தன்னலமற்ற சேவையாற்றும் தொண்டர்களை விருது வழங்கிக் கௌரவிப்பதற்காக பல்லினப் பாடசாலைகள் கூட்டமைப்பு பரிந்துரைகளைக் கோரியிருந்தது.  ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் அதி கூடிய சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்யும் திருமதி நிர்மலா தயாளன் அவர்களையும், நீண்ட காலம் நிர்வாகப் பணியிலிலும், அதன் பின்னர் பள்ளியின் ஏனைய செயற்பாடுகளிலும் பணிபுரியும் திரு கே.ஜி.பாஸ்கரன் அவர்களையும் இவ்விருதுக்கெனப் பரிந்துரைத்தது.  பரிந்துரைகளின் அடிப்படையில் இவ்விருவருக்கும் Excellence Award for Significant Contribution to the Tamil Language Education என்ற விருது வழங்கப்பட்டது. இவ்விருது மொத்தமாக வெவ்வேறு மொழிப் பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆறு பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது. மேலும் எழுவருக்கு Appreciation Award வழங்கப்பட்டது.
திருமதி நிர்மலா தயாளன் அவர்கள் இருபத்தைந்து வருடங்களாக ஹோம்புஸ் தமிழ்ப் பள்ளியில் அரம்ப வகுப்புகளில் கற்பித்து வருகிறார். சிறந்த ஐயப்ப பக்தரான திருமதி தயாளன், தமிழ் கற்பித்தலை ஒரு தவம் போல மேற்கொண்டு வருகிறார். சிறுவர்களை உற்சாகப்படுத்தி அதன் மூலம் கற்பிக்கும் வித்தை தெரிந்த அவர் கலை விழாக்களில் சிறந்த பாடல்களைத் தெரிவு செய்து தனது குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதில் வல்லவராக விளங்குகிறார்.
ஐந்து வருடங்கள் ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலையத்தின் ஒரே ஒரு உப அதிபராகவும் பணியாற்றிய திருமதி நிர்மலா தயாளன் இந்த விருதுக்குரியவராக பரிந்துரைக்கப்பட்டதும், விருது வழங்கப்பட்டதும் மிகபொருத்தமானதே.
KG பாஸ்கரன் இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்க் கல்வியுடன் தொடர்புடையவர். ஏழு வருடங்கள் நி.ச.வே தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் தலைவராகவும் கடைமை புரிந்த திரு பாஸ்கரன் அவர்கள் தனது பிள்ளைகள் தமிழ்க் கல்வி நிலையத்திலிருந்து விலகிய பின்னரும் கூட கல்வி நிலையத்தோடு நெருங்கிய ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். கலை விழாக்களில் மேடை நிர்வாகம் செய்வதிலும், ஒவ்வொரு அரையாண்டு இறுதியில் குழந்தைகளுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்வதிலும், கடந்த இரு வருடங்களாக ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலையப் பரீட்சைச் சபையில் உறுப்பினராகவும், பாடசாலையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் தேர்தல் அதிகாரியாகவும் கடமை புரிந்து அளப்பரிய தொண்டு ஆற்றிவருகிறார். அவர் பணியில் குறிப்பிடத்தக்கதொரு விடயம் உயர்வகுப்புகளில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டுவருவதற்கான அவரது பங்களிப்பு. அமரர் இளங்கோ வேந்தனாரின் முன் முயற்சியில் அமரர் சுந்தர் ஈஸ்வரன், திரு விஜயரட்ணம் மற்றும் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான தூதுக்குழுவில் ஒருவராக இனணைந்து அன்றைய கல்வி அமைச்சரைச் சந்தித்து HSC பரீட்சையில் தமிழும் ஒரு பாடமாக ஆவதற்கு வேண்டிய முயற்சிகளை எடுப்பதற்கு உழைத்தவர் திரு பாஸ்கரன் அவர்கள்.
சிட்னி சைவ மன்றத்திலும் முக்கிய பொறுப்புகளை வகித்த திரு பாஸ்கரன் அவர்கள் வேண்டுவார்க்கு வேண்டிய வேளையில் தொண்டு ஊழியம் செய்வதில் வல்லவராகவும், எளிதில் அணுகக் கூடிய தகமையாளராகவும் விளங்குகிறார். இத்தைகய தொண்டன் நி.ச.வே மாநில சமூக மொழிப் பாடசாலைகள் கூட்டமைப்பினால் தன்னலமற்ற மிகச்சிறந்த தொண்டூழியத்திற்கான விருதினைப் பெறுவதற்கு தெரிவுசெய்யப்பட்டமை சரியான நேரத்தில் செய்யப்பட்ட மிகச்சரியான முடிவு என்றே கூறவேண்டும்.
நி.ச.வே சமூக மொழிப் பாடசாலைகள் கூட்டமைப்பின் வருடாந்த இராப்போசன விருந்து கடந்த யூன் மாதம் 30ஆம் திகதி சைப்பிரஸ் கிளப் மண்டபத்தில் நடைபெற்ற போது நி.ச.வே மாநில பிரதமர் கௌரவ Mike Baird அவர்கள் சமூக மொழிப் பாடசாலைகள் கூட்டமைப்பின் வேண்டுகோளின் படி இவ்விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.
இருவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
திரு.திருநந்தகுமார்

அதிபர், ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம்

5 comments:

Anonymous said...

good job

Anonymous said...

Great Thanks Ravi President Tamil Study Centre, Homebush

Anonymous said...

It looks like K.G getting ready for the temple election.......

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துகள்

Ramesh Nadarajah said...

Great achievement . Congrats to both.

Ramesh Nadarajah
Sydney