சங்க இலக்கியக் காட்சிகள் 22- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

இந்த மாலைப்பொழுது, இல்லையா அந்த நாட்டில்?
அது ஓர் அழகான சிற்றூர். அந்த ஊருக்குச் செல்வதற்கு ஒரு குறுகலான வழியுள்ளது. மலையடிவாரத்தினூடாகச் செல்லுகின்ற அந்த வழியின் இருபுறமும் சிறியபாறைகளும், பெரிய கற்களும் நிறைந்து கிடக்கின்றன. அத்தோடு வழிநெடுக முல்லைக்கொடிகள் தாவிப்படர்ந்து செழித்துப் பரவியுள்ளன. அத்தகைய நெருக்கமான, நீண்ட வழியினால் தங்கள் ஊருக்கு ஏதாவது அபாயமோ, இடரோ ஏற்படுமோ இல்லையோ என்பதையெல்லாம் அந்த ஊர் மக்கள் பொருட்படுத்தவில்லை. அதனால், அழகு நிறைந்த அந்த மக்கள் அந்த வழியை அடைக்காமல் விட்டிருக்கிறார்கள்

அந்தச் சிற்றூரின் வீதியொன்றிலே இருமரங்கும் பூமரங்கள் பூத்துக் குலுங்கி நிற்கின்றன. அவற்றிலிருந்து தினமும் வாடிக் காய்ந்து விழுகின்ற மலர்களின் மகரந்தங்கள் மேலும் மேலும் விழுந்து வீதியிலே உக்கிக் கிடக்கின்றன. எருவைப்போலக் அவை காட்சியளிக்கின்றன. அந்த வீதியின் ஓரத்திலே மிகப்பெரிய ஆலமரம் ஒன்று நிற்கின்றது. அந்த ஆலமரத்திலே கடவுள் உறைவதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றார்கள்.பிரிந்து சென்ற தமது காதலர்கள் திரும்பிவந்த மகிழ்ச்சியிலே பெண்கள் அந்த ஆலமரத்தின் அடியிலே கடவுளுக்குப் பலிச்சோறிட்டுப்ää படையல் வைத்து வழிபடுகிறார்கள். தமது காதலர்கள் திரும்பிவரும் செய்தியைக் கரைந்து கூறிய காகத்திற்கு நன்றி சொல்லி உணவூட்டுவதற்காகவும் அதனைச் செய்கிறார்கள். ஆலமரத்தின் அடியிலே கடவுளுக்குப் படைத்த படையலைக் காகங்கள் உண்ணுகின்றன. பின்னர், துன்பத்தைக் கொடுக்கின்ற மாலைவேளையிலே ஆலமரக்கிளையை விட்டுப் பறந்துசென்று இன்பமாக இருப்பதற்காகத் தமது சுற்றத்தவர்கள் இருக்குமிடத்திற்குச் சென்று சேருகின்றன.

அந்த ஆலமரத்தின் விழுதுகளோ நிலத்தைத் தொடுவதுபோல நீண்டு தொங்குகின்றன. பகலிலே மேயச் சென்ற பசுக்கள் மாலைவேளையிலே தம் இருப்பிடம் திரும்பும்போது அந்த விழுதுகள் அவற்றின் முதுகினை வருடித் தடவிவிடுகின்றன.

இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் தலைவிக்குப் பிரிந்த சென்ற தனது தலைவன் இன்னும் திரும்பி வரவில்லையே என்ற ஏக்கம் வருகின்றது. அதனால் தனது தோழியிடம் தன் மனக்கிலேசத்தைக் கூறுகிறாள்.

பிரிந்திருப்பவர்களை வருத்துவதற்காகத் தனது படையோடு வந்திருக்கும்  இந்த மாலைப் பொழுது என்பது, நம்மைவிட்டுவிட்டு, அரியபொருள் தேடி நம்மைப் பிரிந்து சென்றுள்ள நமது காதலர் இருக்கின்ற நாட்டில் வருவதில்லையோ? அவருக்குத் துன்பம் தருவதில்லையோ? தந்தால் அவர் தாமதிக்காமல் ஓடி என்னிடம் வந்துவிடுவாரே! என்று கூறுகின்றாள்.

இத்தகைய காட்சியை அளித்து நம்மை நெகிழவைக்கும் பாடல் வருமாறு:

முல்லை தாய கல்லதர்ச் சிறு நெறி
அடையா திருந்த அங்குடிச் சீறூர்த்
தாதெரு மறுகின் ஆபுறந் தீண்டும்
நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து
உகுபலி அருந்திய தொகுவிரற் காக்கை
புன்கண் அந்திக் கிளைவயின் செறியப்
படையொடு வந்த பையுள் மாலை
இல்லைகொள் வாழி, தோழி! நத்துறந்து
அரும்பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்துறை காதலர் சென்ற நாட்டே!

(நற்றிணை பாடல் இல: 343. பாலைத்திணை. பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்)

இதன் நேரடிக் கருத்து:

தோழியே நீ வாழ்க! கற்களினிடையே அமைந்திருக்கும் சிறுவழியிலே முல்லைக்கொடி தாவிப்படர்ந்திருக்கிறது. அந்தவழியை அடைக்காமல் இருக்கும் அழகான குடிமக்களைக் கொண்டது அந்தச் சிற்றூர். பூவின் மகரந்தங்கள் மேலும் மேலும் விழுந்து உக்கி எருவைப்போலக் கிடக்கின்ற வீதியிலே, கடவுள் உறையும் ஓர் ஆலமரம் பசுக்களின் முதுகைத் தீண்டும் விதமாக நீண்ட விழுதுகளை விட்டுள்ளது. அந்த ஆலமரத்தின் அடியிலே கடவுளுக்குப் படைத்த படையலைத் தின்ற காகம் துன்பத்தைக் கொடுக்கின்ற மாலைவேளையிலே ஆலமரக்கிளையை விட்டுப் பறந்து சென்று தனது சுற்றத்தவர்கள் இருக்குமிடத்திற்குச் சென்று சேரும். பிரிந்திருப்பவர்களை வருத்துவதற்காகத் தன்படையோட வந்திருக்கும்  இந்த மாலைப் பொழுது என்பது நம்மைவிட்டுவிட்டு, அரியபொருள்தேடி நம்மைப் பிரிந்து சென்றுள்ள நமது காதலர் இருக்கின்ற நாட்டில் வருவதில்லையோ? (என்று தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்த பாடல் இது)

No comments: