உலகச் செய்திகள்

.
ஆஸியில் மீண்டும் அணிதிரள புலிகள் முயற்சி

கிழக்கு உக்ரைனில் உடனடிப் போர் நிறுத்தம்: ரஷியா வலியுறுத்தல்

நவி பிள்ளை ஓய்வு - ஷெயிட் அல் ஹூசைனின் பணிகள் ஆரம்பம்

ஆப்கானில் அரசாங்க கட்டடத்தின் மீது தலிபான் போராளிகள் தாக்குதல் - 13 பாதுகாப்பு படையினர்; 19 போராளிகள் பலி

எபோலாவுக்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
==================================================================
ஆஸியில் மீண்டும் அணிதிரள புலிகள் முயற்சி
01/09/2014 தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின்னர் வலுவிழந்து போன தமிழீழ விடுதலை புலிகள், அவுஸ்திரேலியாவில் மீண்டும் அணிதிரள முயற்சிக்கின்றார்களா?

ஆறு இலங்கையரை, ஆந்திராவிலுள்ள பிரகாசம் கடற்கரை வழியாக அவுஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற நால்வர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து 5 வருடங்களாக பதுங்கியிருந்த தமிழீழ விடுதலை புலிகள் புத்துயிர் பெற முயற்சிக்கின்றனர் என்ற சந்தேகம் புலனாய்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மனித கடத்தல் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து புலனாய்வாளர்கள் வந்தனர்.



இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடிவரவாளர்கள் அநேகமாக முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் அதிகாரம் மிகுதியாகக் காணப்பட்ட முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களை சேர்ந்த 24-28 வயதானவர்களாக காணப்பட்டனர்.

நல்ல திடகாத்திரமான இவர்கள் வேலையற்றவர்களாக இருந்தனர். இதனால் இவர்கள் விரக்தியடைந்திருந்தனர்.

இந்த நிலையில் இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக சேர்த்துக்கொள்வது வசதியாக உள்ளது. இவர்கள் வேலை தேடி மட்டும் அவுஸ்திரேலியா செல்லவில்லை.

இதனை நியாயப்படுத்தும் வகையிலேயே பிரகாசம் கரை வழியாக அவுஸ்திரேலியாக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஒருவர் நுழைந்துள்ளார்.

'நாம் இலங்கையில் இரண்டாம் தர பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றோம். எமக்கு அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைப்பதில்லை. நாம் பெருமளவு இலஞ்சம் கொடுத்து உப ஒப்பந்தங்களை எடுத்து செல்வதால் சொற்பளவான இலாபமே கிடைக்கின்றது' என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தலில் ஈடுபடுவோர் செய்மதி தொலைபேசியை பயன்படுத்தி ஆழ்கடலிலுள்ள தமது ஆட்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் அயர்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம், கனடா போன்ற நாடுகளுக்கும் இலங்கை தமிழர்களை கடத்துகின்றனர்.

தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் நெருக்குவாரம் அதிகரித்த பின்னர் பிரகாசம் கடற்கரையை இவர்கள் பயன்படுத்துவதாக தெரிகின்றது. 60 பேர் வரையில் பிரகாசம் கடற்கரையை பயன்படுத்தி தாம் விரும்பிய இடங்களுக்கு சென்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இலங்கையில் பிறந்த ஆட்கடத்தல் மன்னனான சண்முகலிங்கத்தை போதைபொருள்- பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தினால் முழுவிபரமும் தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 நன்றி தேனீ

கிழக்கு உக்ரைனில் உடனடிப் போர் நிறுத்தம்: ரஷியா வலியுறுத்தல்
கிழக்கு உக்ரைன் பகுதியினரின் நலன்களைக் காக்கும் வகையில் தனி நாடு அமைக்கும் கோரிக்கைக்கு ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆதரவு
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படையினருக்கும் Putinநடைபெற்று வரும் சண்டையை நிறுத்த முயற்சி எடுக்க வேண்டும் என ரஷியா வலியுறுத்தியுள்ளது.

ரஷியா, உக்ரைன் இடையே அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் திங்கள்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் கிளர்ச்சியாளர்கள் சார்பாக ஆந்த்ரேய் பர்கின் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள சர்வதேச உறவுகள் கல்வி மையத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே பேசிய ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் பேசும்போது, உடனடிப் போர் நிறுத்தத்தை வலியுறுத்தினார்.

அவர் பேசியதன் விவரம்:

உக்ரைன் விவகாரத்தில் ரஷியா தலையிடாது. அங்கு ரஷிய ராணுவம் ஈடுபடுத்தப்பட மாட்டாது. இந்தக் கடும் நெருக்கடியான சூழலுக்கு அமைதியான தீர்வு ஏற்பட வேண்டும். உடனடியாக, நிபந்தனையற்ற போர் நிறுத்தம் அறிவிக்கப்பட அனைத்துத் தரப்பினரும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, ரஷிய மொழி பேசுபவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியினரின் நலன்களைக் காக்கும் வகையில் தனி நாடு அமைக்கும் கோரிக்கைக்கு ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தனது ஆதரவைத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

"சுதந்திரத்துக்கு அங்கீகாரம்':கிழக்கு உக்ரைன் பகுதியை சுதந்திரம் பெற்றதாக அங்கீகாரம் பெறுவதே தங்களின் முக்கிய குறிக்கோள் என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பைச் சேர்ந்த ஆந்த்ரேய் பர்கின் கூறியுள்ளார். மேலும், தாற்காலிகப் போர் நிறுத்தத்துக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் இரு தரப்பினராலும் சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்களை திருப்பி அனுப்புவது குறித்துப் பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உக்ரைன் ராணுவம் பின்வாங்க உத்தரவு: கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான லுஹான்ஸ்க்கில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள உக்ரைன் ராணுவத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

 ரஷிய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் தலைமையில் கடுமையான தாக்குதல் அப்பகுதியில் நடத்தப்பட்டு வருவதால், உக்ரைன் ராணுவத்தினர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் குறைந்தபட்சம் 1,600 ரஷிய வீரர்களும், மூத்த அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர் என அவர் கூறினார்.

கடந்த சில வாரங்களாக, பின்னடைவு கண்டு வந்த கிளர்ச்சியாளர்கள், தென் கிழக்கில் உள்ள அழ்ஸாவ் கடற்கரைப் பகுதியைக் கைப்பற்றத் தீவிரமாக முயன்று வருகின்றனர். ரஷியாவின் பிடியில் உள்ள கிரைமியாவுடன் தங்கள் வசமுள்ள நிலப்பகுதியை இணைத்துக் கொள்ள கிளர்ச்சியாளர்கள் திட்டமிடுகின்றனர் எனக் கருதப்படுகிறது. நன்றி தேனீ









நவி பிள்ளை ஓய்வு - ஷெயிட் அல் ஹூசைனின் பணிகள் ஆரம்பம்
navi.ret
01/09/2014 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி தேனீ







ஆப்கானில் அரசாங்க கட்டடத்தின் மீது தலிபான் போராளிகள் தாக்குதல் - 13 பாதுகாப்பு படையினர்; 19 போராளிகள் பலி

04/09/2014  ஆப்கானிஸ்தானிலுள்ள அரசாங்க கட்டடமொன்றின் மீது தலிபான் போராளிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 13 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் 19 போராளிகளும் பலியானதுடன் 60 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட டிரக் வண்டியை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய போராளிகள், பின்னர் இயந்திர துப்பாக்கிகள், கிரனைட் குண்டுகள் என்பவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். 
காஸ்னி மாகாணத்திலுள்ள புலனாய்வு முகவர் நிலைய கட்டடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 19 போராளிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக தலிபான் போராளிகள் உரிமை கோரியுள்ளனர். எரிபொருள் நிரப்பப்பட்ட டிரக் வண்டியை அந்தக் கட்டடத்தின் நுழைவாயிலில் மோதி போராளிகள் வெடிக்க வைத்ததில் அந்தக் கட்டத்தின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியுள்ளனர்.
இதனையடுத்து போராளிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே இடம்பெற்ற 3 மணி நேர துப்பாக்கிச் சமரின் போது தாக்குதலை நடத்திய அனைத்துப் போராளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காஸ்னி பிராந்திய பிரதி பொலிஸ் தலைவர் அஸதுல்லாஹ் என்ஸபி தெரிவித்தார்.
பலியான பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தை சேர்ந்த இருவர், 
3 பொலிஸ் உத்தியோகத்தர், 8 அதிரடி படையினர் உள்ளடங்குகின்றனர்.
டிரக் குண்டு வெடிப்பால் அந்த பிரதேசத்திலிருந்த பல வீடுகளதும் கடைகளதும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலர் பொது மக்கள் எனவும் அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆப்கானில் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி வரும் எதிர் ஜனாதிபதி வேட்பாளர்களான அஷ்ரப் கானியும் அல்துல்லாஹ் அப்துல்லாஹூம் தாமே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதாக உரிமை கோரி வருகின்றனர்.
அந்நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தல் காரணமாக அந்நாட்டில் அமைதியின்மை தோன்றியுள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










எபோலாவுக்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
04/09/2014 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் தாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவன தலைவர் மார்க்ரெட் ஷான் கூறியதாவது:– ஆப்பிரிக்க நாடுகளை எபோலா நோய் தாக்கி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போது நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்து 500 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கினியா, சியாரா லியோன், லைபீரியா பகுதிகளில் இந்த நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நோய் கட்டுப்பாட்டு நிபுணர்களை கொண்ட ஆலோசனை கூட்டம் விரைவில் ஜெனீவாவில் நடைபெற உள்ளது. இதில் முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எபோலா நோய் தாக்கம் நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தது. ஆனாலும் நிலைமை தற்போது திருப்தியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். நன்றி தேனீ 








No comments: