குழந்தை இலக்கியத்தை குழந்தைகளே படைக்கிற காலமிது.

.
        - நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -



         வந்தவாசி.ஆக.31.அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற விழியன் எழுதிய குழந்தை இலக்கிய நூல் வெளியீட்டு விழாவில், குழந்தை இலக்கியம் என்ற பெயரில் பெரியவர்கள் எழுதிய காலம் மாறி, இன்றைக்கு  குழந்தை இலக்கியத்தை குழந்தைகளே படைக்கிற காலம் மலர்ந்து வருகிறது கவிஞர் அ.வெண்ணிலா பேசினார்.
      இவ்விழாவிற்கு தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார்.மு.ஜீவா அனைவரையும் வரவேற்றார்.  
    
       விழியன் எழுதிய 'உச்சி முகர்'  குழந்தை இலக்கிய நூலை கவிஞர் அ.வெண்ணிலா வெளியிட, டாக்டர் கு.சந்திரமோகன் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் படிகளை அரிவையர் சங்க முன்னாள் தலைவர் த.அருணாரெத்தினம், நல்வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் வெ.அரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலை அறிமுகம் செய்து கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

      குழந்தை இலக்கிய நூலை வெளியிட்ட கவிஞர் அ.வெண்ணிலா  பேசும்போது, தமிழில் குழந்தை இலக்கியம் என்பது வளர்ந்தவர்களால் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்ட அறநெறிக் கதைகளாகவே இருந்தன. பெரியவர்கள் குழந்தைகளுக்குத் தாங்கள் சொல்ல விரும்பிய கருத்துக்களையும், குழந்தைகள் தங்களுக்கு என்னவாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையுமே குழந்தைகளுக்கான படைப்புகள் என்ற எண்ணத்தோடு எழுதினர். அக்கதைகளில் நீதி இருந்தது, கதையும் இருந்தது. ஆனால், குழந்தைகளின் மன உலகம் இல்லை.

      இன்றைக்கு தமிழ்ச்சூழலில் மாற்றங்கள் மெல்ல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குழந்தை வளர்ப்பின் மீதான ஆர்வமும் அக்கறையும் கூடியதன் விளைவாக, படைப்பிலக்கியத்திலும் குழந்தைகளின் எதார்த்தமான குரல் பதிவாகத் தொடங்கியுள்ளது. குழந்தையின் சுதந்திரமான கேள்விக்கு பதிலளிக்கும் நல்ல பெற்றோர்கள் பெருகிவரும் இந்நிலையில் அது சார்ந்த எதார்த்தமான குழந்தை இலக்கிய நூல்களும் அழகான நூல்களாக தமிழில் வெளிவருகின்றன. விழியனின் இந்நூல் குழந்தை இலக்கிய நூல்களில் புதிய பதிவாகவும், எதார்த்தமான வாழ்வியல் உண்மையோடும் குழந்தைகளை நம்மோடு நெருக்கமாய் இணைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

        நூலாசிரியர் விழியன் ஏற்புரையில், என் குழந்தைக்கு ஒரு நல்ல பெற்றோராக நான் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதைப் போல, மற்ற பெற்றோர்களும் இருக்க வேண்டும் என்று நான் விரும்பியதன் வெளிப்பாடே, எனது குழந்தை இலக்கிய நூல் முயற்சிகள் என்றார்.

     நிறைவாக,  மா.குமரன் நன்றி கூறினார்.

படக் குறிப்பு ;
   
                 வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் விழியன் எழுதிய 'உச்சி முகர்' குழந்தை  இலக்கிய நூலை கவிஞர் அ.வெண்ணிலா வெளியிட, டாக்டர் கு.சந்திரமோகன் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம். அருகில், தொழிலதிபர் இரா.சிவக்குமார், கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர் உள்ளனர்.

No comments: