சொல்லவேண்டிய கதைகள் - முருகபூபதி

.
துண்டு  கொடுக்கும்  துன்பியல்   நாடகம்
  
                                                 
காலம்   காலமாகவே    எங்கள்   தமிழ்  சமூகத்தில்  கலை - இலக்கிய மற்றும்   தமிழர்   சார்ந்த    நிகழ்ச்சிகளில்   குறிப்பாக    விழாக்கள் கூட்டங்களில்   ஒரு    துன்பியல்   நாடகம்    அரங்கேறிவருகிறது.
இலக்கியப்பிரவேசம்   செய்த காலம்    முதலாய்    தொடர்ச்சியாக இந்தத்துன்பியலை   என்னைப்போன்று   சகித்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

குறிப்பாக    தமிழர்    சம்பந்தப்பட்ட    நிகழ்ச்சிகள்   உரியநேரத்தில் தொடங்காது.   ஆனால்  -  தமிழர்    தங்கள்    திருமண    நிகழ்வுகளில் மாத்திரம்    சுபமுகூர்த்தம்   தப்பிவிடலாகாது    என்பதில்  மிகவும் கவனமாகவும்   எச்சரிக்கையாகவும்   இருப்பார்கள்.    சோதிடர் சொல்லும்   திருமண  நாள்   சுபமுகூர்த்தம்   குறித்துவிட்டால் எப்பாடுபட்டாவது    மணமகன்   மணமகளை  உரியநேரத்திற்கு முன்பாகவே  அலங்கரித்து   மணவறைக்கு   அழைத்து வந்துவிடுவார்கள்.




இந்த   வீடியோக்காரர்கள்    இருக்கிறார்களே....அவர்களின்    லூட்டி தாங்க   முடியாது.  அதிகாலையே   எழுந்து   குளித்து  தோய்ந்து அலங்கரிக்கப்பட்ட    மணமகளையும்     மணமகனையும்   பல்வேறு கோணங்களில்    பதிவுசெய்வதிலும்   தமது வித்துவங்களைக்காட்டுவதிலும்    மணமக்களை களைத்துவிடச்செய்துவிடுவார்கள்.    அதனாலும்    ஏற்படும்    கால தாமதங்களினால்   மணமக்கள்    திருமண    மண்டபத்திற்கு    வந்து சேர்வதற்கு    தாமதமாகிவிடும்.
அய்யர்   தனது   கைக்கடிகாரத்தை    அடிக்கடி    பார்த்து அவசரப்படுத்திக்கொண்டிருப்பார்.    அவருக்கு   அந்த    முகூர்த்தம் தப்பிவிட்டால்    அந்தப்பாவமும்    தம்மைச்சூழ்ந்துவிடுமே    என்ற   பயம்.
எம்மவர்கள்    நல்ல   புத்திசாலிகள்.         முகூர்த்த நேரம்  ஓடுவதற்கு    முன்னர்    கூறைச்சேலையை    மணமகள்    கையில்   கொடுத்து   தாலி கட்டச்செய்துவிடுவார்கள்.    அதன்   பிறகு    மணமகளை   உள்ளே அனுப்பி    சாவகாசமாக    கூறையுடுத்தி    அழைத்து    வந்து   இதர சடங்குகளை    தொடருவார்கள்.     அதற்குள்     சாப்பாட்டுப்பந்தி ஆரம்பமாகிவிடும்.

உங்களில்    பலர்    இந்தக்கண்கொள்ளாக்காட்சியை   கண்டு களித்திருப்பீர்கள்.
தமிழர்    திருமணங்களில்தான்   அப்படியென்றால்   தமிழர் சம்பந்தப்பட்ட    இலக்கியக்கூட்டங்கள்   ,  நூல் வெளியீடுகள், விழாக்கள்    மற்றும்   பொதுக்கூட்டங்களில்    அந்தக்காட்சியை    வேறு ஒரு    கோணத்தில்     பார்த்து    ரசிப்பீர்கள்.    அல்லது    சினம் கொள்வீர்கள்.    அல்லது    சகித்துக்கொண்டு    மனதிற்குள்   நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை    திட்டுவீர்கள்.

இங்கு   நான்    சொல்லவேண்டிய  கதை    இந்த   துண்டுகொடுக்கும் துன்பியல்    பற்றித்தான்.
உரியநேரத்திற்கு    நிகழ்ச்சி    ஆரம்பிக்காது.   பின்னர்   நேரத்தை மிச்சம்பிடிக்க    ஒரு    தந்திரோபாயத்தை   பின்பற்றுவார்கள்.
ஏற்கனவே    பேச்சாளருக்கு    எத்தனை    நிமிடங்கள்   பேச   வேண்டும் எனச்சொல்லியிருப்பார்கள்.   அவரும்   இராப்பகலாக   யோசித்து குறிப்பிட்ட    நேரத்துக்குள்    பேசத்தக்கதாக           குறிப்புகளுடன்    வருவார்.    சபையைப்பார்த்ததும்  அவருக்குத்தெரிந்தவர்கள்    இருந்தால்   அவரைத்திருப்திப்படுத்துவதற்கு   மேலும்  சில    வார்த்தைகளை   அந்தக்கணம்   யோசித்து    உதிர்ப்பார்.    தனக்குப்பிடிக்காதவர்கள்  இருந்தால்    அவரை    சூடேற்றுவதற்காக    இடக்கர்    அடக்கராக    அங்கதம்   பேசுவார்.    அதனால்     பேச்சு    திசை   மாறும்.   நேரமும்  கடக்கும்.


இவ்வாறு    ஒவ்வொரு    பேச்சாளரும்    நேரத்தை   எடுத்துவிடும்பொழுது    நிகழ்ச்சிக்குத்   தலைமை   ஏற்பவரும் நிகழ்ச்சியை    ஒழுங்கு  செய்தவர்களும்  துண்டு   எழுதிக்கொடுக்கும் காரியத்தில்    இறங்குவார்கள்.    அப்படித்தான்  துண்டு   எழுதி பேச்சாளரிடம்   கொடுத்தாலும்   பேச்சாளர்  அதனை  அசட்டை செய்துவிட்டு   தனது  வித்துவத்தை  தொடருவார்.
நிகழ்ச்சியை    நடத்தும்  தலைவரிடம்   நேரக்கட்டுப்பாடுகளை கவனியுங்கள்   எனச்சொன்னாலும்   ஓம்   என்று    ஏற்றுக்கொண்டு தனது   உரைகளை   நீட்டி முழக்குவார்.
நிகழ்ச்சி   ஏற்பாட்டளார்கள்    நெளியவேண்டியதுதான்.
அவுஸ்திரேலியா   மெல்பனில்  சில   வருடங்களுக்கு    முன்னர்   தமிழ் ஆய்வு   ஆர்வலர்   மருத்துவக்கலாநிதி  பொன். சத்தியநாதன் அவர்கள்  ஒரு தமிழ்  மாநாடு   நடத்தினார்.     தமிழ்நாடு,  சிங்கப்பூர், ஆபிரிக்கா,    மலேசியா   முதலான   நாடுகளிலிருந்தெல்லாம் பேராளர்கள்  வந்து  பேசினார்கள்.    சிட்னியிலிருந்தும்  தமிழ் அன்பர்கள்    வந்தனர்.   அவர்களில்   கவிஞர்    அம்பியும்  வந்து மாநாட்டில்    உரையாற்றினார்.
ஏற்கனவே  மாநாட்டின்  மாலை   அமர்வு   சற்று தாமதமாகத்தொடங்கியிருந்தது.    நேரக்கட்டுப்பாடு தேவையாகவிருந்தது.


அம்பி   தனது  உரையை    ஆரம்பித்து   தொடரவும்   அவருக்கு   ஒரு துண்டு    அனுப்பப்பட்டது.    அதில்   நேரம்    போகிறது   என்று எழுதப்பட்டிருந்தது.
அம்பி  அதனைப்பார்த்துவிட்டு  அமைதியாக   நேரம்   போகும்தானே... என்றார்.    சபையில்   அட்டகாசமான   சிரிப்பொலியும்   கரவொலியும் எழுந்தது.
நான் 2001 இல்  ஒழுங்கு  செய்திருந்த   எழுத்தாளர்    விழாவில்  சிட்னியிலிருந்து   வருகை தந்து   பேசிய   பேராசிரியர்    பொன். பூலோகசிங்கம்    அவர்களுக்கும்   அவ்வாறு    துண்டு வழங்கப்பட்டபொழுது     அது  அவருக்கு  கடுப்பேற்றிவிட்டது.
தான்   பல  நாட்களாக  மினக்கெட்டு   ஒரு   ஆய்வுக்கட்டுரையை எழுதிக்கொண்டு   வருகின்றேன்.   அத்துடன்     உரியநேரத்துக்கும் மண்டபத்திற்கு     வந்துவிட்டேன்.   நான்  எனது   பேச்சை   முடிக்கும் முன்னர்    துண்டு  அனுப்புவது   என்னை  அவமதிக்கும்   செயல் என்றார்.
ஒருவகையில்  அவரது   வாதமும்   சரிதான்.
சமீபத்தில்   நான்   சம்பந்தப்பட்ட  கலை இலக்கியம்   2014 விழாவிலும்   உரியநேரத்தில்  நிகழ்ச்சி    தொடங்கவில்லை.

பலர்   ஆடி  அமாவாசை   நாளில்   நாம்  நிகழ்ச்சி   நடத்துவதாக குறைப்பட்டார்கள்.    முஸ்லிம்    சகோதரர்கள்   தங்களுக்கு  நோன்பு காலம்  என்றார்கள்.
ஆடி அமாவாசை  விரதமிருப்பவர்கள்   கோயிலுக்குச்சென்று பிரார்த்தனை    முடித்துக்கொண்டு  அங்கு   தரப்படும் அன்னதானத்திலும்   விரதப்பசி   போக்கியபின்னர்  வரட்டும்  என்று காத்திருந்து    தாமதமாகவே   நிகழ்ச்சிகளை   தொடங்கினோம்.
எதிர்காலத்தில்   நாம்    ஆங்கிலக் கலண்டர்  பார்த்து    நிகழ்ச்சிக்கு   நாள் குறிக்க  முடியாது.   பஞ்சாங்கம்   பார்த்துத்தான்  இலக்கியக்கூட்டத்துக்கும்   நாள்   தெரிவு  செய்யவேண்டும்  என்பதை புத்திக்கொள்முதலாக்கிக்கொண்டோம்.
நிகழ்ச்சி   தாமதமாகத்தொடங்கப்பட்டதனால்   துண்டு   எழுதும் படலத்தில்  ஈடுபட்டேன்.    மண்டப  வாசலில்   நூல்களின் விற்பனைக்குப்பொறுப்பாக       இருந்தமையினால்    அந்த   மேசையில் இருந்த   காகிதங்களும்   பேனையும்   துண்டுகளில்   குறும்செய்தி அனுப்புவதற்கு   பயன்பட்டது.
மேடைக்குச்சென்று   பேச்சாளரிடமோ   நிகழ்ச்சிக்குத்தலைமை தாங்குபவரிடமோ   துண்டை     எடுத்துச்சென்று   கொடுப்பதற்கு    சிலர் தயங்கினார்கள்.    சங்கடப்பட்டார்கள்.     எனினும்    ஒரு   அன்பர்  அதற்கு முன்வந்தார்.

தொடர்ந்தும்    அந்த   அன்பரையே   துண்டு    கொடுப்பதற்கு   நான் அனுப்பத்தொடங்கியதும்    அவர்  சிரிப்பு   கலந்த     எரிச்சலுடன் - என்ன.. எனக்கு   இந்த விழாவில்    இந்தவேலையையே    தந்துவிட்டீர்களே ... என்றார்.
  வருங்காலத்தில்   நிகழ்ச்சிகள்    நடத்தும்பொழுது   அந்த  பொறுப்பான (?) வேலைக்கும்   ஒருவரை    உத்தியோகபூர்வமாக   நாம் நியமிக்கவேண்டும்    என்று   செயற்குழுவிடம்  சொன்னேன்.

தமிழர்களின்  விழாக்களில்  பொன்னாடை - சால்வைத்துண்டு போர்த்தல்     மரபாகிவிட்டமைபோன்று     மேடையிலிருக்கும் மேசைக்கு    துண்டு    கொடுத்தனுப்பும்    துன்பியல்   மரபும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.
சரி... பிரச்சினையை   சொல்லிவிட்டேன்.    அப்படியென்றால்   தீர்வுதான்   என்ன?
தீர்வு   இருக்கிறது.

நிகழ்ச்சிகளை  உரியநேரத்தில்  தொடங்கவேண்டும்.   தொடங்கும் முன்னர்  பேசவிருப்பவர்களை   மண்டபத்தின்  ஒரு  மூலைப்பகுதிக்கு அழைத்து   நேரக்கட்டுப்பாடு   பற்றிய  தெளிவுகளை  வலியுறுத்தல் வேண்டும்.    குறுகிய  நேர   பயிலரங்காக   அந்த   ஆலோசனைகள் பகிரப்படல்  வேண்டும்.


அவ்வாறு   நேரக்கட்டுப்பாட்டை   உதாசீனம்   செய்பவர்களை  அடுத்த நிகழ்ச்சிகளில்    பேசுவதற்கு  சந்தர்ப்பம்  கொடுக்காமல் தவிர்க்கவேண்டும்.
மற்றுமொரு   முக்கியமான   சிந்தனையும்  எமது  தமிழர்களுக்கு இருக்கவேண்டும்.
தங்களுக்குத்தரப்படும்  அழைப்பிதழில்   என்ன  நேரத்தில்  நிகழ்ச்சி தொடங்குகிறது   எனக்குறிக்கப்பட்டிருக்கும்.    எனவே   நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு   ஐந்து   நிமிடங்களுக்கு  முன்பே  மண்டபத்திற்கு சென்றுவிடல்   வேண்டும்.
அவ்வாறு   அனைவரும்  சென்றும்   நிகழ்ச்சி    உரியநேரத்தில் ஆரம்பிக்கவில்லையென்றால்    ஏற்பாட்டாளர்கள்   என்ன   சமாதானம் சொன்னாலும்    அவர்களிடம்   தமது   கண்டனங்களை    அழுத்தமாகவே சொல்லவேண்டும்.
அது    அவர்களுக்கு    எச்சரிக்கையாக    இருக்கும்.
நிகழ்ச்சிகளை    உரியநேரத்தில்   தொடங்கும்    மரபை பின்பற்றுவோமேயானல்    தாமதங்கள்   தவிர்க்கப்படும்.    துண்டு கொடுக்கும்    துன்பியல்  நாடகங்கள்   மீண்டும்    மீண்டும் அரங்கேறுவதையும்     தவிர்த்துக்கொள்ள முடியும்.
ஆனால்   இதுவெல்லாம்  சாத்தியமா?
எங்கட  ஆட்களின்   நிகழ்ச்சிதானே   நிச்சயமாகத் தாமதமாகத்தானே தொடங்கும்   என்ற    அனுபவத்தில்    பெற்றுக்கொண்ட பழக்கதோஷமும்     எமது     தமிழ்    சமூகத்தில்  மற்றுமொரு துன்பியல்தான்.     இதுபற்றியும்தான்    சற்று    யோசிப்போமே....
   (நன்றி:   யாழ்ப்பாணம்    ஜீவநதி    ஓகஸ்ட் 2014)

 ---0---


No comments: