.
"நான்" படத்தின் மூலம் நாயகரான இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சலீம். இந்த படமும், முதல் படம் மாதிரியே முத்தான படமாகவும், நான் பட தொடர்ச்சி போன்று முத்தாய்ப்பாகவும் வெளிவந்திருப்பதும் தான் விஜய் ஆன்டனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.
நான் படத்தில் சலீம்எனும் மருத்துவம் படிக்கும் மாணவராக வந்து வித்தியாசமும், விறுவிறுப்புமாக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆன்டனி, இதில் டாக்டர் சலீம்மாக வந்து தனியார் மருத்துவத்தின் மனிதாபிமானமற்ற குற்றங்களையும், அரசியல்வாதிகளின் வாரிகள் செய்யும் அராஜகங்களையும், அதற்கு உடந்தையக இருக்கும் உயர் அதிகாரிகளையும் அரசியலமைப்பு சட்டங்களையும் தோலுரித்துக்காட்டி திகிலூட்டியிருக்கிறார்! பேஷ்,பேஷ்!!
கதைப்படி, ஒரு தனியார் மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் விஜய் ஆன்டனி, மிகவும் இரக்க சுபாவி! ஒருநாள் இரவு., காத்திருக்கும் காதலியை மறந்து, கற்பழிக்கப்பட்ட நிலையில், 'காஸ்ட்லீ' காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்படும் அபலை பெண்ணை அள்ளி வந்து சிகிச்சை தருகிறார் டாக்டர் சலீம் எனும் விஜய்! இதனால் வருங்கால மனைவி நிஷாவுடன் நடக்க இருக்கும் திருமணம் நின்று போவது மட்டுமின்றி, பணம், பணம் என்று அலையும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தும் பணிநீக்கம் செய்யப்படுகிறார் ஹீரோ. இதில், வெக்ஸாகும் விஜய் ஆன்டனி, எடுக்கும் அவதாரம் தான் சலீம் படம் மொத்தமும்!
விஜய் ஆன்டனி, நான் படத்தை காட்டிலும் நடிப்பில் நன்கு முன்னேறி இருக்கிறார். டாக்டர் சலீமாக அறுவை சிகிச்சை நிபுணராக அசத்தும் காட்சிகளிலும் சரி, ஏழைப் பெண்ணின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு காரணமான அமைச்சரின் வாரிசுகளையும், அவரது சகாக்களையும் பிடித்து வைத்துக் கொண்டு அசால்டாக காவல்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் சவால் விடும் இடங்களிலும் சரி, விஜய் ஆன்டனி வெளுத்து வாங்கியிருக்கிறார். இவைகளைக் காட்டிலும் லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டுடன் வந்தாலும் கூட அலட்டும், மிரட்டும் காதலி அக்ஷாவிடம் கனிவும், பணிவும் காட்டும் இடங்களிலும் கூட அமர்க்களமாக நடித்து ஸ்கோர் அள்ளியிருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல!
புதுமுக நாயகி அக்ஷா, 'பிடிவாத' நிஷா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். சற்றே சதை போட்ட த்ரிஷா மாதிரி இருந்து கொண்டு மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கிறார் அம்மணி.
சாஃப்ட்டான டாக்டராக, சலீமின் நண்பராக வரும் சாமிநாதனில் தொடங்கி, ஹோம் மினிஸ்டராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் வரை சகலரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் அமைச்சர் தவபுண்ணியமாக வரும் ஆர்.என்.ஆர்.வாவ்சொல்ல வைக்கும் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
விஜய் ஆன்டனியின் நடிப்பு மாதிரியே இசையும் சலீம் படத்திற்கு பெரும் பலம்!
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு, புதியவர் நிர்மல் குமாரின் போரடிக்காத புதுமையான எழுத்து, இயக்கம் எல்லாமும் சேர்ந்து விஜய் ஆன்டனியின் சலீம்முக்கு ரசிகர்களை சலாம்போட வைத்துள்ளது!
மொத்தத்தில் சலீம்முக்கு நாமும் போடுவோம் ஒரு ராயல் சலாம்!!
நன்றி தினமலர் சினிமா
No comments:
Post a Comment