இலங்கைச் செய்திகள்


தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 29வது நினைவுதினம் அனுஷ்டிப்பு-

யுவதியை கொலை செய்த வைத்தியருக்கு மரணத்தண்டனை

 தீக்குளித்த நபர் பலி  

வடமராட்சி பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களினால் மக்கள் அச்சம்

தமிழ் மக்கள் மீது எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது

 மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 8 ஆவது ஆண்டு நிறைவு விழா

தடம்புரண்டது ரயில்: மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு


========================================================================

தமிழர்களுக்கும் இலங்கையே தாய்நாடு: வேறுநாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல
* மொனராகலை விபுலானந்த வித்தியாலயத்தில் ஜனாதிபதி தமிழில் உரை
இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு. நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடைRajapaksha delhiயாது. தமிழ் மக்களுக்கு எந்த நாடுகளும் தாயகம் அல்ல. எனவே அவர்களை எவரும் பொறுப்பேற்கவும் மாட்டார்களென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு, தெற்கு - தமிழ், சிங்களம் என்ற பேதம் எம்மிடமில்லை. நாம் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம் என தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டையும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தையும் காட்டிக் கொடுக்காது கட்டிக் காத்து நாட்டை முன்னேற்றுவோம் என்றும் கேட்டுக் கொண்டார். மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் மகா வித்தியால யத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடம் நேற்று ஜனாதிபதியினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவிகளின் பல்வேறு கலை கலாசார அம்சங்களுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்தோதய விஞ்ஞான தொழில்நுட்ப வித்தியாலயத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் வித்தியாலயத்திற்கு வருகை தந்து இங்கு மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் மஹிந்தோதய ஆய்வு கூடங்களைத் திறந்து வைத்துவிட்டு இங்கு தமிழ் பாடசாலையிலும் அதேபோன்ற மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தைத் திறந்து வைப்பது எமக்கு மகிழ்ச்சி.

வடக்கைப் போன்றே தென்பகுதியிலும் தமிழ் பாடசாலைகளை முன்னேற்றுவது எமது நோக்கமாகும். பிள்ளைகளே! நீங்களே இந்த நாட்டின் எதிர்காலம். இந்த நாட்டின் சிறந்த செல்வங்கள். நீங்கள் அனைவரும் சிறப்பாக முன்னேற வேண்டும். படித்தால் மட்டும் போதாது சிறந்த குண நலன்களைக் கொண்டிருப்பது முக்கியம்.

இந்த வாரத்தில் மாத்திரம் நாம் பல மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களைத் திறந்து வைத்துள்ளோம். இது பெற்றோர்களுக்கல்ல. எமது எதிர்கால சந்ததியர்களான பிள்ளைகளுக்கானது. இந்த நாட்டில் மட்டுமின்றி உலகை வெல்லக்கூடிய மாணவர்களாக உங்களை காண்பதே எமது எதிர்பார்ப்பு.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதம் எம்மிடம் கிடையாது. நாம் அனைவரும் இலங்கையில் பிறந்தவர்கள். தமிழ் மக்களே நீங்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் தானே? வெளிநாட்டில் பிறக்கவில்லையே! இதுதான் நம் எல்லோருக்குமான நாடு. எமக்கு வேறு நாடு கிடையாது.

வேறு நாடுகள் தமிழ் மக்களைப் பாரமெடுக்கப் போவதுமில்லை. அதனை மனதிற்கொண்டு நாம் பிறந்த இந்த தாய்த் திருநாட்டை நாம் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது.

இதனை கருத்திற் கொண்டே அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதை நாம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். பிள்ளைகள் ஒழுங்காக கல்வியைக் கற்று முன்னேற அவர்களை தயார்படுத்துவது பெற்றோர்கள் ஆசிரியர்களே.

இந்த விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயம் சிறந்த முன்னேற்றமடைந்து இங்கிருந்து பல டாக்டர்கள். பொறியியலாளர்கள் ஏனைய துறை நிபுணர்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தோடு மொழி பயிற்சிக் கூடமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளை இங்கு கற்கக் கூடிய வசதிகளுண்டு. இவற்றை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்தகைய வசதிகள் தற்போது கிராமப்புறங்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பம் இனி கிராமிய பிள்ளைகளுக்கும் சொந்தமாகிறது. 68 ற்கு மேற்பட்ட கணனிகள் இப்பாடசாலைக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

நன்றாகக் கற்று இதன் மூலம் முழுமையான பிரயோசனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் இங்குள்ள மாணவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

பெற்றோர்களே இது நம் அனைவரதும் தாய்நாடு. இதனை நாம் அனைவரும் இணைந்து பாதுகாப்போம். இந்த நாட்டை முன்னேற்றுவோம்.

அரசாங்கம் எம்மிடம் இருப்பதாலேயே இவை அத்தனையையும் எம்மால் மேற்கொள்ள முடிகிறது. மாகாண சபைகள்.

பிரதேச சபைகள் என அனைத்தும் எம் வசமே உள்ளன. இதன் மூலம் இந்த மாகாணத்தை முன்னேற்றச் செய்து அதன் மூலம் நாட்டையும் முன்னேற்றி உலகை வெற்றிகொள்ள எம்மால் முடியும்.

நான்கு வருடங்களுக்கு முன்பு இன்றுள்ள சுதந்திரம் இருக்கவில்லை. அதனை மக்கள் மறக்கமாட்டார்கள். சில இடங்களுக்கு எம்மால் போக முடியாமலும் மக்கள் எம்மை நெருங்க முடியாமலும் இருந்த காலம் இந்த நாட்டில் இருந்தது. நாம் அதனை மாற்றியுள்ளோம். நன்றி தேனீ 
அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 29வது நினைவுதினம் அனுஷ்டிப்பு-
03/09/2014  இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில்tharmalingam1 தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2014) அனுஷ்டிக்கப்பட்டது. 29வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினரும், தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவருமான திரு.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இன்றுகாலை 7மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு நினைவுக் கூட்டமும் இடம்பெற்றது.
இதன்போது தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களுள் ஒருவரான பேராசிரியர் சி.க..சிற்றம்பலம் அவர்கள் பிரதான நினைவுரையினை ஆற்றினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி, லண்டனிலிருந்து வருகைதந்திருந்த அரசியல் பிரமுகர் சிறீ கெங்காதரன், வலி வடக்கு; பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு. குமாரவேல், வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. பிரகாஸ், வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி.நாகரஞ்சனி ஐங்கரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வை.பாலச்சந்திரன், வலி.தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் கணேசவேல், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் பரமேஸ்வரலிங்கம், அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், அமரர் தர்மலிங்கம் அவர்களின் ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும், இந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு கல்லூரியின் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு இரங்கல் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, கல்லூரியின் பீடாதிபதி திரு.அமிர்தலிங்கம், லயன் வைத்தியக் கலாநிதி தியாகராஜா, திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இங்கு உரையாற்றிய பீடாதிபதி திரு.அமிர்தலிங்கம் அவர்கள், கல்வி வளர்ச்சிக்காக இக் கல்லூரியினை அமைப்பதற்கு 230 பரப்புக் காணியை தனது தந்தையாரின் பெயரில் திரு. சித்தார்த்தன் அவர்கள் வழங்கியிருந்தார் என்பதை நினைவுபடுத்தியதுடன், கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கல்வியியற் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியரும், பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அமரர் வீ. தர்மலிங்கம் அவர்களது நினைவாக இன்று நண்பகல் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.   நன்றி தேனீ 


யுவதியை கொலை செய்த வைத்தியருக்கு மரணத்தண்டனை

03/09/2014   யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த சமிலா திசாநாயக்க என்ற யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு  வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த குற்றத்திற்காகவே குறித்த வைத்தியர் 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
குறித்த குற்றவாளிக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், 27-11-2007 அன்று நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது சந்தேக நபரான வைத்தியர் வைத்தியசாலையின் சிற்றூழியரால் அடையாளம் காட்டப்பட்டார்.
5-12-2007 அன்று இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது சாட்சியமளித்த வைத்தியசாலை சிற்றூழியரான திருமதி பியற்றிஸ் 12-11-2007 அன்று வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் சந்தேக நபரான வைத்தியர் கார்ட்போட் மட்டையொன்றை இழுத்து வருவதை  கண்டதாகவும் அதில் பெண் ஒருவர் படுத்திருந்ததை கண்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக தாதி ஒருவரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
இதேவேளை, நீதிமன்றிற்கு  வருகை தந்திருந்த சமிலா திசாநாயக்காவின் பெற்றோர்கள், ஊடகங்களுக்கு இந்த தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,  ஏழு வருடங்களின் பின்னர்  தமக்கு நீதி கிடைத்திருக்கிறது. 
இதற்காக ஆஜரான சட்டத்தரணிகளுக்கும், சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கும் , பல்வேறு வகையிலும் உதவியவர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம் என்றனர்.
நன்றி வீரகேசரி தீக்குளித்த நபர் பலி  

03/09/2014 கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகளுக்கு  எதிர்ப்பு தெரிவித்து நேற்று தீக்குளித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சைகள் பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.
நன்றி வீரகேசரி


வடமராட்சி பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களினால் மக்கள் அச்சம்

02/09/2014   வடமராட்சி பிரதேசத்தில் தொடரும் திருட்டுச் சம்பவங்களினால் குடியிருப்பாளர்கள் மத்தியில் பலத்த அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை தம்பசிட்டியில் உள்ள ஆசிரியை 

ஒருவர் வீட்டில் அவரும் குடும்பத்தினரும் வெளியிடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த வேளை ஓடு பிரிக்கப்பட்டு ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான லப்டொப், கமரா, பிரிண்டர் ஆகிய கணனிப் பொருட்கள் திருப்பட்டுள்ளன.
சுற்றுலா முடிந்து சில தினங்களில் வீடு திரும்பி வந்த போது இந்த திருட்டு இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை அல்வாய்பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நுழைந்த இனந்தெரியாத திருடர்கள் வீட்டில் உள்ளோரைத் தாக்கி விட்டு 8 பவுண் நகை 30 ஆயிரம் ருபா ரொக்கப் பணம் கையடக்கத் தொலைபேசி என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதேதினத்தன்று வியாபாரி மூலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த அண்ணன், தம்பி ஆகிய இருவரும் அல்வாய் - மாலிச்சந்தி பிள்ளையார் கோவிலடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த திருடன் ஒருவன் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளான். இது தொடர்பாக அண்ணன், தம்பி இருவரும் நெல்லியடிப் பொலிஸாருக்கு அறிவித்து வேறொரு மோட்டார் சைக்களில் திருடனை துரத்திச் சென்றுள்ளனர். மக்களும் பொலிஸாரும் இணைந்து கொடிகாமம் வீதியில் உள்ள முள்ளிவெளியில் மோட்டார் சைக்கிளுடன் திருடனை மடக்கிப் பிடித்தனர். இத்திருட்டை மேற்கொண்டவர் 
புதுக்குடியிருப்பு வாசி என்றும் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு கொண்டவர் என நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பருத்தித்துறை - ஓராங்கட்டை சந்தியில் உள்ள இளைப்பாறிய அதிபர் ஒருவரின் வீட்டுக்கு பட்டப்பகல் வேளை நுழைந்த திருடர்கள் கள்ளச் சாவியினால் வீட்டைத் திறந்து சோதனையிட்டு அலுமாரியில் இருந்த பொருட்களை சிதறடித்து அதற்குள் இருந்த 85 ஆயிரம் ரூபா ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
திருமண வைபவம் ஒன்றுக்குச் சென்றிருந்த குறிப்பிட்ட வீட்டுக் காரர்கள் திரும்பி வந்து பார்த்த போது இச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த வாரம் திக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் வேலையை முடித்துக் கொண்டு சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞரை மறித்து 50 ரூபா ரீலோட் தருமாறு பயமுறுத்திக் கேட்கவே இளைஞன் கை தொலைபேசியை வெளியில் எடுத்த போது அந்த இரு இளைஞர்களும் கைத்தொலைபேசியை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவங்கள் குறித்து பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளன. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  நன்றி வீரகேசரி
தமிழ் மக்கள் மீது எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது

04/09/2014   இலங்கைக்குள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் அடியோடு அழிக்கப்பட்டாலும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு வேகமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என தெரிவிக்கும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தமிழ் மக்கள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் தவறான பாதையை தெரிவு செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அவுஸ்ரேலியாவில் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாக இந்திய பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இலங்கைக்குள் இல்லை. யுத்த காலக்கட்டத்தில் இலங்கை பல அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்த போதும் தற்போது தேசிய அளவில் இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகள் எவையும் இல்லை. எனினும் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டிருப்பது இலங்கையில் மட்டுமே சர்வதேச அளவில் இவர்களின் செயற்பாடுகள் இன்னமும் நடைபெற்று வருகின்றது. யுத்த காலக்கட்டத்தில் சர்வதேசத்தில் இருந்து இயங்கிய விடுதலைப்புலிகளின் அமைப்புகளும் அதன்பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்களும் இன்று மேற்கத்தேய மற்றும் மத்திய நாடுகளில் இருந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். அவர்களின் செயற்பாடுகள் இலங்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.
எனினும் இலங்கையை சர்வதேச பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க நாம் நாட்டில் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளோம். அத்தோடு சர்வதேச பாதுகாப்பு செயற்பாடுகளுடனும் நாம் நல்ல முறையில் செயற்படுகின்றோம். ஆயினும், புலம்பெயர் அமைப்புகள் மக்களுடன் தொடர்புகளை வைத்து மீண்டும் நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தும் முயற்சிகளை கையாள்கின்றனர். எது எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பட்ட இன்னல்களை இன்னமும் மறக்கவில்லை. எனவே, அவர்கள் இப்போது பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் செயற்படுகின்றனர். இனியொருபோதும் அவர்கள் பயங்கரவாதத்தினை ஆதரிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. மக்கள் மீதுள்ள நம்பிக்கையிலேயே நாம் தைரியமாக செயற்படுகின்றோம் எனவும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி


மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 8 ஆவது ஆண்டு நிறைவு விழா


04/09/2014 தலைநகர் செட்டியார் தெருவில் அமைந்துள்ள மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் எட்டாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆந் திகதி 

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஆரம்பமாகும்  என மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உப தலைவரும், பிரசாரச் செயலாளருமான  ஏ.எஸ். ஞானம் தெரிவித்துள்ளார்.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் கே. சிவசுப்பிரமணியம்  (ஜே.பி). தலைமையில் நடைபெறும் இவ் விழாவில் மன்றத்தின் தலைமை போஷகரும், தேவி ஜுவலர்ஸ் அதிபருமான என். சீனிவாசன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
விழாவில் மலையகக் கலை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்சிகள் இடம்பெறவுள்ளதோடு, பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பெரும் மாணவர்களுக்கு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் மூலம் புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. மேலும், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு உதவிகளும் இடம்பெறும்.
அத்தோடு, பல்வேறுதுறைகளில் சாதனை புரிந்துள்ள மலையகத்தைச் சேர்ந்த பலர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் பிரசாரச் செயலாளர் ஞானம் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி

தடம்புரண்டது ரயில்: மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு


04/09/2014 கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற பொடி மெனிக்கே  ரயில் கலபொட மற்றும் ஹிங்குருஓயா இடையிலான பகுதியில் தடம்புரண்டதால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
ரயில் போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரிNo comments: