பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 1 =எஸ்.எல்.வி. மூர்த்தி

.
அறிமுகம் : உலகம் பிறந்தது எப்படி?


நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயது இருக்கும் என்றாலும் மனித குலத்தின் (Homo sapiens) வயது என்று பார்த்தால் ஐந்து லட்சம் வருடங்கள். இரண்டு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலம் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் (ஆன்த்ரோபாலஜிஸ்ட்ஸ்) மதிப்பிடுகிறார்கள்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி, புல்லாகிப் பூண்டாகி, புழுவாய், மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி, பாம்பாகி, கல்லாய், மனிதராய் வந்தது என்று மணிவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். புல்லுக்கு முன்பாகவே உலகம் தோன்றியிருக்கவேண்டும். நம் உலகம் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி. உலகமும், பிரபஞ்சமும் எங்கே, எப்போது, எப்படிப் பிறந்தன?

கி.மு. 1700 – 1100 காலகட்டத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் ரிக் வேதம் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறது தெரியுமா?

படைப்பு எப்படி, எப்போது, எங்கே வந்தது என்று யாரால் சொல்லமுடியும்?
கடவுள்களே சிருஷ்டிக்கு அப்புறம்தானே உருவானார்கள்?
சிருஷ்டி எப்போது, எப்படித் தொடங்கியது என்று யாருக்குத் தெரியும்?
யாரால் நிச்சயமாகச் சொல்லமுடியும்?

கடவுள் இதைச் செய்தாரா, செய்யவில்லையா?
வானில் இருக்கும் அவருக்கு இதற்கு ஒருவேளை விடை தெரியலாம்,
அல்லது அவருக்கும் விடை தெரியாமலிருக்கலாம்.

( को अद्धा वेद क इह प्र वोचत् कुत आजाता कुत इयंविसृष्टिः
अर्वाग् देवा अस्य विसर्जनेनाथा को वेद यतआबभूव
इयं विसृष्टिर्यत आबभूव यदि वा दधे यदि वा न
यो अस्याध्यक्षः परमे व्योमन् सो अङ्ग वेद यदि वा नवेद )

இப்படிப் புதிர்போடும் ரிக்வேதம், இன்னொரு ஸ்லோகத்தில் தன் பதிலைச் சூசகமாகச் சொல்கிறது.

तम आसीत् तमसा गूळमग्रेऽप्रकेतं सलिलं सर्वमाइदम्
तुच्येनाभ्वपिहितं यदासीत् तपसस्तन्महिनाजायतैकम्

ஆரம்பத்தில், எங்கும் காரிருள். இன்று நம் கண்ணுக்குத் தெரியும் எல்லாமே, யாருக்கும் தெரியாத நிலை. தெரியாத இந்த உலகத்தை, எல்லாம் வல்ல அவன் சக்தி மட்டுமே நிறைத்திருந்தது. அந்த சக்தியின் வெப்பத்தில் உலகம் பிறந்தது.

ரிக்வேதம் அறிவுஜீவிகளின் ஊடகம். வேதங்கள் சொல்லும் கருத்தைப் புராணக் கதைகள் ஜனரஞ்சகமாகச் சொல்கின்றன. எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும், எப்போது, எங்கே, எப்படிப் பிரபஞ்சம் பிறந்தது? என்னும் சிருஷ்டியின் ரகசியம் தேடும் கேள்விக்குப் பதில் சொல்லும் கதைகள் இருக்கின்றன. இந்தக் கதைகளின் அணுகுமுறைகள் மூன்றுவகை:

1. பிரபஞ்சம் ஒரு பெரிய முட்டையிலிருந்து வந்தது.
2. சில ஆண் – பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிறந்தது.
3. முழுமுதற்கடவுள் தன் கைப்பட உருவாக்கியது.

முதலில், முட்டைக்குள்ளிருந்து பிரபஞ்சம் வந்ததாகச் சொல்லும் கதைகளைப் பார்ப்போம். இந்துமத இதிகாசங்களில் தொடங்குவோம். சிவபெருமான் முழுமுதற் கடவுள். அழிப்பதும், மறுபடி படைப்பைத் தொடங்குவதும் அவர் தொழில். மரம், பறவை, மிருகம், மனிதர் என்று எந்தவொரு ஜீவராசிக்கும் தன் இனத்தைப் பெருக்க இரு பாலினங்கள் தேவைப்படும். இதை உணர்த்தும் வகையில் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக இருக்கிறார். வலப்பக்கம் சிவன், இடப் பக்கம் பெண்மையின் பிரதிநிதித்துவமாக சக்தி!

சிவன் தவிர யாருமே இல்லை, ஒன்றுமே இல்லை. வானம் இல்லை, கடல்கள் இல்லை, மரங்கள் இல்லை, செடிகள் இல்லை, மீன்கள் இல்லை, பறவைகள் இல்லை, மிருகங்கள் இல்லை. மனிதர்கள் இல்லை, எந்த உயிரினமும் இல்லை. தகிக்கும் நெருப்பாய் அவர் மட்டுமே இருக்கிறார்.

சிவன் தன் உடுக்கையை அசைக்கிறார். மெல்லத் தொடங்கும் ‘ஓம்’ என்னும் ஒலி ஆரோஹணமாகி வெட்டவெளியை ரீங்காரமிட்டு நிறைக்கிறது. பிரணவ ஒலி – ஆதிபகவன் உருவாக்கும் முதல் சப்தம்.

சிவபெருமானின் லீலாவிநோதம், சிருஷ்டி தொடங்குகிறது. தன் சடாமுடிக் கங்கையைக் கவிழ்த்ததும், ஓடையாகத் தொடங்கும் வெள்ளம், ஊழிப் பிரளயமாகிறது. சிவபெருமான் ஒரு பெரிய தங்க முட்டையைத் தண்ணீரில் மிதக்கவிடுகிறார். அந்த முட்டை இரண்டாக வெடிக்கிறது. அதற்குள்ளிருந்து படைப்புக் கடவுளான பிரம்மா வெளியே வருகிறார்.

பிரம்மா தன் கடமையைத் தொடங்குகிறார். சொர்க்கலோகம், வானம், சூரியர், சந்திரர், நட்சத்திரங்கள் படைக்கிறார். அடுத்ததாகப் பூவுலகம், நம் உலகம் பிறக்கிறது. மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள், நதிகள், ஏரிகள்! ஆனால், உலகம் ஏன் இப்படி ஆண்டவன் இல்லாத ஆலயம்போல், குழந்தை இல்லாத வீடுபோல் வெறிச்சோடிக் கிடக்கிறது? மரம், செடி, கொடி, மீன், பறவை, மிருகம் , மனிதன் என்னும் எந்த ஜீவராசியுமே உலகத்தில் இல்லையே? பிறகு உயிர்த் துடிப்பு எப்படி இருக்கமுடியும்?

உயிர்த் துடிப்பு கொண்டுவரும் அனிமேஷன் வேலையில் பிரம்மா இறங்குகிறார். தன் உடலை, ஆண், பெண் என்று இரு பாகங்களாகப் பிரித்துக்கொள்கிறார். தலை, வாய், வயிறு, கால், கை என்று தன் உடலின் ஒவ்வொரு அவயவங்களிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஜீவராசியை உருவாக்குகிறார். முதலில் புல், அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள் ஜனனமாகின்றன. கடைசியாக ஒரு ஆண், ஒரு பெண். இவர்கள் அனைவருக்கும், பார்க்கும், கேட்கும், நுகரும், உணரும், நடமாடும் சக்திகள் தருகிறார்.

உலகம் பிறந்துவிட்டது! விண்ணைத் தொடும் மலைகள், ஓங்கார ஒலியோடு பாயும் நீர்வீழ்ச்சிகள், அமைதியாக ஓடும் நதிகள், சலசலக்கும் நீரோடைகள், காற்றோடு கைகோத்து விளையாடும் கடல், ஆழ்கடலுக்குள் மறைந்துகிடக்கும் முத்து, பவளங்களை நாளும் தேடும் மீன்கள், திமிங்கிலங்கள், ராஜநடை சிங்கங்கள், சீறும் சிறுத்தைகள், மருள்விழி மான்கள், நம் சகோதரக் குரங்குகள், தோகை விரித்தாடும் மயில்கள், இன்னிசைக் குயில்கள், வண்ணக் கிளிகள் – பார்க்கும் இடமெல்லாம் அழகு.

0

ஃபின்லாந்து நாட்டின் காப்பியச் செய்யுள் கலேவாலா (Kalevala) சொல்லும் கதை இது.

பிரபஞ்சம் பிறப்பதற்கு முன்னால், வெட்ட வெளியும், காற்றும் மட்டுமே இருந்தன. நம் ஊரில் காற்றின் தெய்வம் வாயு பகவான். இதேபோல், ஃபின்லாந்தில், காற்றின் தெய்வம் இல்மட்டார் (Ilmatar) என்னும் கன்னிப் பெண் தேவதை. நீண்ட கூந்தல் கொண்ட அந்த அழகுக் கடவுள் தன் நேரத்தை எப்படிச் செலவிடுவாள் தெரியுமா? வர்ணஜாலம் செய்யும் வானவில்களை எண்ணுவாள், அல்லது, தன் நீண்ட கூந்தலைத் தவழ்ந்து வரும் காற்று தழுவவிட்டு ரசிப்பாள்.

ஒரு நாள், கிழக்குக் காற்று இல்மட்டாரின் கூந்தலைத் தொட்டு விளையாடியது. அவள் காதில் , கொஞ்சுமொழி பேசியது. இல்மட்டார் உடலெல்லாம் இதுவரை அனுபவித்தேயிராத புளகாங்கிதச் சிலிர்சிலிர்ப்பு. அவள் சலனம் கிழக்குக் காற்றுக்குப் புரிந்தது. சில்மிஷங்கள் தொடங்கினான். உடல்கள் தழுவின. உணர்ச்சிகள் எகிறின. வாயுவின் வாரிசு இல்மட்டார் வயிற்றில் வளரத் தொடங்கியது.

கருவை உருவாக்கிய காற்று காணாமல் போனான். எல்லாத் தாய்களையும்போல், வயிறு நிறையச் சுமையும், நெஞ்சு நிறைய ஆசைகளுமாக இல்மட்டார் காத்திருந்தாள். எழுநூறு ஆண்டுகள் ஓடின. இல்மட்டாரின் தலைக்கு மேலாக ஒரு தெய்வீகக் கழுகு பறந்தது. அவள் தலையைப் பலமுறை சுற்றிச் சுற்றி வந்தது. அந்தக் கழுகும் அவளைப் போலவே ஒரு கர்ப்பிணி. தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த ஆறு முட்டைகளை எங்கே பத்திரமாக இறக்கிவைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தது. இல்மட்டாரைப் பார்த்தவுடன், தன் குஞ்சுகளை அவள் தாயாகப் பாதுகாப்பாள் என்னும் நம்பிக்கை கழுகுக்கு வந்தது. ஆறு முட்டைகளையும் இல்மட்டார் காலடியில் போட்டுவிட்டு, எங்கோ பறந்து மறைந்தது.

நிறைகர்ப்பிணி இல்மட்டார் மெள்ள எழுந்தாள். ஏழு முட்டைகளும் அவள் காலடியிலிருந்து நழுவி, பத்திரமாய்க் கடலுக்குள் விழுந்தன. கழுகு ஆறு முட்டைகள்தானே போட்டது என்று கேட்கிறீர்களா? ஏழாவது முட்டை, அவள் வயிற்றில் இருந்த குழந்தை!

இல்மட்டார் குனிந்து பார்த்தாள். தான் பார்க்கும் காட்சிகளை அவளால் நம்பவே முடியவில்லை. கடலில் விழுந்த ஏழு முட்டைகளும் வெடித்தன. சொர்க்கலோகம், பூவுலகம் என ஏழு வகை உலகங்கள்* பிறந்தன. முட்டைகளின் வெள்ளைக் கரு சூரியனாகவும், மஞ்சள் கரு சந்திரனாகவும், முட்டைத் தோடுகள் நட்சத்திரங்களாகவும் உருவெடுத்தன. ஆமாம், பிரபஞ்சம் இப்படித்தான் பிறந்தது.

(*ஆச்சரியமாக, இந்துப் புராணங்களும், ஏழு உலகங்கள் இருப்பதாகச் சொல்கின்றன. அவை – பிரம்மா வாழும் சத்யலோகம், கடவுள்களின் தபாலோகம், பிரம்மாவின் வாரிசுகள் தங்கும் ஜனலோகம், ரிஷிகள் உறையும் மகர்லோகம், தேவர்களின் சுவர்க்கலோகம், பூமிக்கும் வானத்துக்கும் இடைப்பட்ட புவர்லோகம். மனிதர், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் இனங்களின் பூலோகம்).

0

சீனப் புராணம் என்ன சொல்கிறது? ஆரம்பத்தில் வெற்றிடம் தவிர ஒன்றுமே இல்லை. யின் (yin), யாங் (yang) என்னும் மாறுபட்ட இரண்டு சக்திகள் எங்கிருந்தோ வந்தன. இவற்றை ஆண், பெண் சக்திகள் என்று வைத்துக்கொள்ளலாம். 18,000 ஆண்டுகளுக்குப் பின், இந்த இரண்டு சக்திகளும், ஒரு தெய்வீக முட்டையில் ஐக்கியமாயின. அந்த முட்டை வெடித்தது. அதற்குள்ளிருந்து பாங்கு (Phan Ku) என்னும் பிறவி வந்தான். பிரம்மாண்ட உருவம், உடல் முழுக்க முடி, தலையில் கொம்பு. அவன் கையில் கோடரி.

பாங்கு தன் கோடரியால் முட்டையை வெட்டினான். யின், யாங் ஆகிய இருவரும் தனித்தனியே எழுந்தார்கள். மந்திரக் கோல்போல், தன் கோடரியைக் காற்றில் வீசினான். உலகம் பிறந்தது. இன்னொரு வீச்சு – வானம் வந்தது. தன் கைகளால் வானத்தைத் தூக்கி உயரே நிறுத்தினான்.

இன்னொரு 18,000 ஆண்டுகள் ஓடின. பாங்கு மரணமடைந்தான். அவன் மூச்சு காற்றும், மேகங்களுமாக மாறியது. அவன் குரல் இடியாக வடிவெடுத்தது. அவன் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், உடல் மயிர் நட்சத்திரங்கள். அவன் தலை மலைகள். ரத்தம் நதிகள். பாங்குவின் வியர்வை மழையானது. அவன் உடையில் ஒட்டியிருந்த தெள்ளுப் பூச்சிகள் (fleas) மீன், மிருகம், பறவை எனப் பல வடிவெடுத்தன. ஆண், பெண் என்னும் மனிதப் பிறவிகளை மட்டும் பாங்கு படைக்கவில்லை. இந்தப் படைப்பைச் செய்த கடவுள் தன் உடலில் பாதியைப் பெண்ணாகவும், மீதியைப் பாம்பாகவும் கொண்ட, நூவா (Nuwa) என்னும் தேவதை. -

பிரபஞ்சத்தின் ரிஷிமூலம் முட்டை என்று சொல்லும் இந்துமத மற்றும் ஃபின்லாந்து, சீன நாடுகளின் புராணக் கதைகளைப் பார்த்தோம். யுனிவர்ஸ் என்னும் ஆங்கில வார்த்தையின் பொருள் அண்டம் என்று அகராதி சொல்கிறது. தமிழ் அகராதியைப் புரட்டுங்கள். அண்டம் என்றால் இரண்டு அர்த்தங்கள் – பிரபஞ்சம், முட்டை. இந்த இரட்டை அர்த்தம் நிச்சயமாகத் தற்செயல் இணைவாக இருக்கமுடியாது. அறிவியல் மேதைகளைவிட தமிழ் அறிஞர்களுக்குப் பிரபஞ்ச சிருஷ்டி ரகசியம் இன்னும் தெளிவாகத் தெரிந்திருக்குமோ?

நன்றி www.tamilpaper.net

No comments: