மரணத்தின் வாசனை ~ மலேசிய விமானம்

.
கணவன் கடிந்து கொண்டான் மனைவியை 
எத்தனை தடவை சொன்னேன்,
அந்த கறுப்புப் பை கவனம் என்று  
மனைவி கவலைப்பட்டாள்,
அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே...
காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் 
அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள்
இன்னும் 10 நாட்கள்  கடற்கரையில்
உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ...
இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு
தொலைபேசி செய்தியில் மூழ்கிப்  போனான்
நாளைய நாள் கண் முன்னே நடமாடியது,
அலுவலகத்தில் முக்கிய மூன்று  சந்திப்பு,
நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும்
அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ...     
முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார்,
நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் 
மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்,
பேரக் குழந்தைகளை கவனிப்பதே  அவள் வேலை
அடுத்த வாரம்  அவளை முருகனிடம் அழைத்துப் போகவேணும்,
உடைந்த மூக்குத்தியும் மாற்றவேணும் ...
  
பாதிரியார் வந்தவரைய்  பார்த்து முறுவலித்தார்,
கையில் இருந்த பைபிளில் தொலைந்து போனார் 
26 அநாதை சிறுவர்கள்,  யார் யார்க்கு என்ன தேசமோ  
கவலையானார், இது பெரும் பொறுப்பு தான்   
நல்லபடியாக எல்லாம் அமைய வேணும்
யேசுவே, கண் கலங்க மனதுக்குள் மன்றாடினார்...
சிறுவன் கணணி விளையாட்டில் சாப்பிட மறுத்தான்,
அன்னை சலித்துக்கொண்டாள் 
அப்பாவிடம் சொல்லி உன்னை என்ன செய்கிறேன்,
பார் சிறுவனுக்கு பயம் காட்டினாள்
அப்பா சிறுவனிடம் பாசமாக கெஞ்சினார்,
முதலில் சாப்பாடு அதன் பிறகு தான் விளையாட்டு ...
உயரமாய் தெரிந்தவர்
சிறுநீர் கழிக்க வரிசையில் போய் நின்றார்,
சாப்பாடு சுவையாய்  இல்லை நொந்து கொண்டார்
எதிரே இருந்த இளம் பெண்ணை பார்த்து ஆனந்தமானார்,
என்ன அழகு இவள் 24 இருப்பாளா ?
பள்ளி நாட்களில் பழகிய ஒருத்தி,
இவளை போலதான் இருப்பாள்,
பழைய நினைவோடு சிறுநீர் கழித்தார் ...
யாரோ ஒருத்தி தலைக்கு மேல் இருந்த
பெட்டியை தட்டி தடவி இறக்கிக்கொண்டு இருந்தாள் 
அதை இங்கு தான் வைத்தேனா,
இல்லை பெரிய பெட்டியில் போட்டேனா,
தலையை சொரிந்தாள்,
போன மாதம் வாங்கிய புகைப்பட கருவி,
கொஞ்சம் கவலையானாள்,
எங்கும் போகாது காலையில் தேடுவோம் நினைத்துக்கொண்டாள்...
கைக் குழந்தை சிணுங்கிற்று,
அம்மா புட்டியில் பாலை ஊற்றி வாயில் திணித்தாள் 
குழந்தை அமிர்தம் கண்டது,
அன்னையை பார்த்து கண்ணை சிமிட்டியது,
பால் வெளியே வழிந்தது
அன்னை குழந்தை முகத்தை கொஞ்சினால், தடவினாள் ,
கனவுகளோடு சஞ்சரித்து  தூங்கிப் போனார்கள்.. 
அழகிய அந்த பெண்
கள்ளம்  கபடம் இல்லாமல் சிரித்தாள்,  
ஓடி ஓடி உபசரித்தாள், சுத்தம் செய்தாள் 
குழந்தைகளுக்கு பரிசு தந்தாள்,
முதியவருக்கு போர்வை தந்தாள்,
விளக்கை அணைத்து வணக்கம் சொன்னாள்,
இன்னும் ஏதும் வேணுமா என்று திரும்ப கேட்டாள்,
அயர்ச்சியோடு பணிவிடை செய்தாள் ..
ஒருவன் வக்கீல், ஒருவன் நோயாளி,
ஒருவன் ஆசிரியன், ஒருவன் படைப்பாளி...
ஒருத்தி மணப் பெண், ஒருத்தி கர்ப்பிணி,
ஒருத்தி சினிமா பிரபலம், ஒருத்தி மூதாட்டி ...
அவர் அவர் வாழ்க்கை, இயந்திரமாய் 
கரையும் பொழுதுகள், எல்லோரும் நல்லவரே ...
எங்கோ ஒரு தேசம், இருள் சூழ்ந்த நேரம்,  
தூரத்தில் இரைச்சல், இவன் தான் முதலில் அவதானித்தான் 
சிறிதாய் வெளிச்சம், அதுவாய் இருக்குமோ,
பரபரப்பானான், செய்தி அனுப்பினான்
அங்கே தாடியோடு இருந்தவன் சுருட்டை பற்ற வைத்தான்,
உள்ளே இழுத்து வெளியே புகையை விட்டான்
உனக்கு பாடம் நான் போதிப்பேன் இன்று,
மனதுக்குள் கருவிக்கொண்டான், 
எழுந்து சென்று கட்டளை இட்டான்,
இயந்திரங்கள் முடுக்கப்பட்டன, 
300 கனவுகளை  சுமந்து வந்த மலேசிய பட்சி நான் ..
சின்னத் திரையில் தெளிவாய் முடக்கப்பட்டேன்     
உஷ்ணம் உணரப்பட ஒளிக் கீற்றுகள் சீரிப்பாய
மரணத்தின் வாசனை மண்ணை தொட்டது,          
அனர்த்தம் நிகழ்ந்தது, அனைத்தும் அதிர்ந்தது
அவள், அவன், பெரியவர், பாதிரி, குழந்தை, காதலன் ....
எல்லோருக்கும் ஒரே புள்ளியில் அஸ்தமனம்,
நான் புள்ளியாய் சிறு புள்ளியாய் பஸ்மம் ஆகிறேன்
மீண்டும் ஒருமுறை செய்தியாய் மாறுகிறேன்..
"Missile downed Malaysia Airlines"  CNN, BBC அலறுகிறது!!
NANTRI yarl.com 

No comments: