வாலி நீ போட்ட வேலி - எம்.ஜெயராமசர்மா ..... மெல்பேண்

.


 வாலி  நீ போட்ட வேலி
    ( எம்.ஜெயராமசர்மா ..... மெல்பேண் )

கண்ணதாசன் பாடல் கேட்டு
கையைக்கட்டி நின்ற வாலி
கட்டவிழ்த்து வந்து நின்று
கவிதைமழை பொழிந்து நின்றார்

வாலி பாடி நின்றபோது
போலிஅல்ல என்று சொல்லி
தோழ் கொடுத்து நின்றவரே
 தோழமையில் கண்ண தாசன்

கண்ண தாசன் பாடலோடு
கைகுலுக்கி வாலி பாடல்
வண்ணமாக வந்த போதும்
வைரமாக நின்ற தங்கே

பக்தியோடு பாடி நின்றார்
பருவத்தார்க்கும் பாடி நின்றார்
நித்தமே நினிவில் நிற்க
தத்துவமும் பாடி வைத்தார்

வெற்றிலை போட்ட வாலி
வெற்றிகள் பலதைப் பெற்றார்
நெற்றியில் பொட்டு இன்றி
நின்றதே இல்லை நாளும்

மெட்டுக்காய் எழுதி நின்றார்
துட்டுக்காய் எழுதி நின்றார்
பொட்டுவைத்த நெற்றி ஓடு
பொறிபறக்க எழுதி நின்றார்

முருகன் பாடல் பாடிநின்று
முயன்றுவந்த வாலி நாளும்
அருமையான பாடல் தந்து
அமர்ந்துகொண்டார் உள்ளம் எல்லாம்

தெருவெலாம் வாலி பாடல்
தித்திப்பாய் ஒலிக்கும் போது
பெரு மனதோடு மக்கள்
பேணியே ஏற்று நின்றார்

வாலிநீ போட்ட வேலி
வரலாற்றில் நிற்கும் ஐயா
போலிநீ இல்லை ஐயா
பொங்கிடும் தமிழின் ஊற்று
ஊழியுன் பாட்டு நிற்கும்
உலகுளோர் மனதில் நிற்பாய்
வாலிபக் கவிஞ்ஞரே நீ
வையத்தில் என்றும் வாழ்வாய் !

No comments: