மகேந்திரன் பிறந்தநாள்: ஜூலை 25 - யதார்த்த சினிமாவின் ஆசான்

.

“இன்றைய நமது சினிமா, காட்சிகளையும், ஒலியையும் உயிரோட்டமாகக் கொண்ட ஒரு மீடியா என்பதே சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருக்கிறது என்று கருதுகிறேன். வசனமே இல்லாமல்கூட ஒரு படத்தை ரசனைக்கு உரியதாகப் படைக்க முடியும். ஆனால், அத்தகைய முயற்சியில் ஈடுபடும் ஒரு கலைஞனுக்குக் கற்பனைத் திறன் அதிகமாகத் தேவைப்படுகிறது” - மகேந்திரன்.
தமிழ் சினிமாவில் சாதனை படைத்த படைப்பாளிகளில் மகேந்திரன் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்கள் எப்போதாவது ஒருமுறை வருவதுண்டு. அவற்றில் 1970-கள் வரை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை: ஏழை படும் பாடு (1950), அவன் அமரன் (1958), பாதை தெரியுது பார் (1960), கலைக்கோவில் (1964), உன்னைப் போல் ஒருவன் (1965), ஆலயம் (1967), புன்னகை (1971) எனச் சில. 1978-ல் முள்ளும் மலரும் என்ற மிகச் சிறந்த படைப்பின் மூலம், யதார்த்தப் படங்களுக்கு ஒரு சிறந்த பாதையை அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். இன்று பிறந்தநாள் காணும் அவரை யதார்த்த சினிமாவின் ஆசான் என்று வாழ்த்துவது தகும்.
டைரக்டர் எரி வான் ஸ்ட்ரோஹிம் 1920-களில் (படம்: தி கிரீடு, 1923) தொடங்கிவைத்த பாணி, ஒரு கற்பனைக் கதையை, யதார்த்தப் பாணியில் படமாக்குவது. ஏறத்தாழ 55 வருடங்களுக்குப் பிறகு, அதைத் தமிழ் சினிமாவில் கடைப்பிடித்து, தொடர்ந்து 12 படங்களை அதே பாணியில் தந்தவர் மகேந்திரன்.
மகேந்திரன் 1977வரை கதை-திரைக்கதை-வசனகர்த்தாவாகப் பல படங்களில் பணியாற்றியவர். தங்கப்பதக்கம் (1974), வாழ்ந்து காட்டுகிறேன் (1975), வாழ்வு என் பக்கம் (1976) போன்ற வெற்றிப் படங்கள் இதற்கு உதாரணங்கள். பெயர் பெற்ற வசனகர்த்தாவான அவர் இயக்கிய முதல் படத்தில் வசனங்களே குறைவு என்பதே அவர் எப்படிப்பட்ட படம் எடுக்க ஆசைப்பட்டார் என்பதை விளக்குகிறது.


அவர் இயக்கிய 12 படங்களில் (முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை அழகு, ஊர் பஞ்சாயத்து மற்றும் சாசனம்) பல தேசிய அளவில் பாராட்டப்பட்டவை. முள்ளும் மலரும் (1978), உதிரிப் பூக்கள் (1979), மற்றும் நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980) ஆகியவை 30 வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில், யதார்த்தப் படங்களுக்கான வழிகாட்டிகளாக இருந்துவருகின்றன. இந்த மூன்று படைப்புகளுடன், ஜானி (1980), நண்டு (1981), சாசனம் (2006) ஆகியவை என்னுள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
முள்ளும் மலரும்
சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதைத் தமிழ் சினிமா மறந்து, பாடல்களிலும், பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவதிலும் திளைத்தது. 47 வருடங்கள் இப்படிக் கடந்த பின், குறைவான வசனங்களுடன், காட்சிப் படைப்பின் மூலமும், பின்னணி இசை மூலமும் கதையை நகர்த்தி, மாபெரும் புரட்சியைச் செய்தது இப்படம். தேசிய விருதுகளுக்கு இப்படம் அனுப்பப்படாவிட்டாலும், இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டு, பெரும் பெயரைப் பெற்றது.
உதிரிப் பூக்கள்
யதார்த்தமும் அழகியலும் கலந்த இப்படம், நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் 100 சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. சாடிஸ்டான ஒருவனை முன்னிறுத்தி, கடைசிவரை அவனின் கதாபாத்திரத் தன்மையை மாற்றாமல், அதற்கான தண்டனையை அவன் பெறுவது ஒரு புதுமை. மிகக் குறைந்த வசனங்களுடன், பின்னணி இசை மூலம் ஒரு சிக்கலான மனநிலை சம்பந்தப்பட்ட படத்தைத் தந்தது மகேந்திரனின் சிறப்பான இயக்கத்துக்குச் சான்று. இப்படமும் தேசிய விருதுகளுக்கு அனுப்பப்படவில்லை. ஆனால், இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டுப் பெயர் பெற்றது.
நெஞ்சத்தைக் கிள்ளாதே
தேசிய விருதுக்கு அனுப்பப்பட்ட மகேந்திரனின் முதல் படம், மூன்று விருதுகளைப் பெற்று வந்தது. காட்சிப் படைப்பும், ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ஒரு படைப்பை உன்னத இடத்துக்குக் கொண்டுசெல்ல முடியும் என்று மகேந்திரன் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். தன்னம்பிக்கை உள்ள பெண்ணின் காதலைக் கவிதையாகச் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். வணிக வெற்றியுடன், பல விருதுகளைக் குழுவினருக்குப் பெற்றுத் தந்த இப்படம், உயர்ந்த தரத்திற்காக என்றென்றும் பேசப்படும்.
ஜானி
இரட்டை வேடங்கள் உள்ள இப்படத்தில் இரண்டையுமே நல்ல கதாபாத்திரங்களாகப் படைத்து, அதில் ரஜினிகாந்தின் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தார் மகேந்திரன். தேவியின் பண்பட்ட நடிப்பிலும், காட்சி அமைப்பிலும், அற்புதமான ஒளிப்பதிவிலும், இசையிலும் மிளிர்ந்த இந்தப் படம், அழகான வெகுஜனக் கவிதை.
நண்டு
வடக்கத்தியக் கலாச்சாரத்தையும், இந்தி மொழியையும் (இரண்டு முழுமையான இந்தி பாடல்களைப் படத்தில் வைத்து) தைரியமாகவும் அதே சமயம் சரியாகவும் உபயோகப்படுத்திய படம். நோய்வாய்ப்பட்ட ஒருவன் தனக்கான ஆதரவையும் காதலையும் தமிழ்நாட்டில் பெறுகிறான். சொந்த ஊரில் இது அவனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மகேந்திரன் அழுத்தமாகச் சொல்லியிருப்பார்.
சாசனம்
செட்டிநாடு என்கிற சமூகத்தின் பழக்கவழக்கங்களையும், வாழ்க்கையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த படம். குறைந்த செலவில், நிறைவாக எடுக்கப்பட்ட இப்படம், சரியான நேரத்தில் வெளிவந்திருந்தால், பல சாதனைகளைச் செய்திருக்கும்.
இவருக்கு, இதுவரை, தேசிய அளவில் பத்ம விருது அங்கீகாரம் தராதது வருத்தம் தருகிறது. பிறமொழிகளில் இவரை விடவும் குறைவான சாதனைகள் புரிந்தவர்கள் பத்ம விருதுகளைப் பெறும்போது, தமிழ் சினிமாவின் தரம் உயர அதிகம் பங்களிப்பு செய்த இவருக்கு அத்தகைய அங்கீகாரம் விரைவில் கிடைக்க இந்த நேரத்தில் பிரார்த்திக்கிறேன்.
அவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக, சினிமா துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள, அவரின் புத்தகமான ‘சினிமாவும் நானும்’ என்ற புத்தகத்தையும் குறிப்பிடலாம். சினிமா துறையில் நுழைய விரும்புபவர்களும், அதில் உள்ளவர்களும், கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.
இந்தப் புத்தகத்தில், “மறக்க முடியாத பெருமைக்குரிய படங்கள் என்பவை, வெற்றியும் கண்டு, காலத்தால் அழியாதவையாக மக்கள் மனத்தில் நிலைத்து நிற்கும். அத்தகைய பெருமைக்குரிய படங்கள் நமது மண்ணின் பெருமையையும் கலாச்சாரத்தையும், நம் மக்களின் நிஜமான வாழ்வையும் பிரதிபலிப்பவையாக இருக்கும். அவை நமது மண் சார்ந்த இதர கலைகளின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்” என்று மகேந்திரன் சொல்லியிருக்கிறார்.
இந்த ஆசானின் படைப்பாற்றலைத் தமிழ் சினிமா மீண்டும் ஒரு திரைப்படம் மூலம் காணப் போகிறது என்ற செய்தி மகிழ்ச்சி தருகிறது.
படங்கள் உதவி: ஞானம்
தொடர்புக்கு: கோ.தனஞ்ஜெயன் (dhanajayang@gmail.com)

NANTRI tamil.thehindu

No comments: