ராஜேந்திர சோழனோடு சிலமணித்துளிகள்

.
நினைவு தெரிந்து, முதன்முதலில் கங்கைகொண்ட சோழபுரம் பற்றி கேள்விப்பட்டது அத்தை சொல்லிதான். தஞ்சாவூர் கோவிலைவிடவும், அவரை ஈர்த்தது, கங்கை கொண்ட சோழபுரம்தான். அவருக்கு மட்டுமில்லை, மாமா, ஆயா என்று  பெரும்பாலும் , கங்கைகொண்ட சோழபுரம் ‍ கோவில் மட்டுமில்லை, ஊரும் அழகு என்றே சொல்வார்கள்.  'அமைதியான இடம், தஞ்சாவூரை விட பெரிய கோவில், ரொம்ப அழகான கோவில்' என்பதே அபிப்ராயம். அவர்களை பொருத்தவரை, பொதுவான எண்ணம்.
 'ராஜேந்திர  சோழன் ' பெரிதும் பேசப்படவில்லை என்பதே!
அதுவும் உண்மைதான்....தஞ்சை பெரியகோவிலை பற்றியும், ராஜ ராஜ சோழனைப்பற்றியும்தான், நாங்கள் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம். ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் பற்றியெல்லாம் வரலாறு பாடத்தில் வந்தாலும் ஒரு சிறு பத்தி அளவுக்குத்தான். அதில், அவர்களது பிறபெயர்கள், போர்கள் பற்றிதான். ராஜேந்திர சோழனின் இன்னொரு பெயர்  'கடாரம் வென்றான்' என்று மட்டும் தெரியும். ஏனென்றால், ஒருவேளை தேர்வில், 'கடாரம் வென்றான் பற்றி குறிப்பு வரைக'  என்று வரலாம் என்பதால்!


'இந்திய சின்னங்கள்' பற்றிய பட்டியலில் பப்பு, 'பிக் டெம்பிள்' பற்றி தெரிந்துக்கொண்டிருந்தாள். அதை நேரில் பார்க்க கேட்டுக்கொண்டிருந்தாள். கடந்த டிசம்பர் விடுமுறையை அதற்காக பயன்படுத்திக்கொண்டோம். எப்படியோ, 'கங்கை கொண்ட சோழபுரம்' என்பது கடற்கரையோரத்தில் அமைந்த ஊர் மற்றும் கோவில் என்பதாகவே மனதில் சிறுவயதிலிருந்து பதிந்துவிட்ட சித்திரம்.  ஏனென்று தெரியவில்லை, கடலலைகளை பின்னணியாக   கோவிலாகவே கங்கைகொண்ட சோழபுரத்து கோவில் எனக்குள் பதிந்திருந்தது. ஒருவேளை, கடல்கடந்து போன சோழ அரசன் என்பதால், பஸ் பிடித்து போவதுபோல், அங்கிருந்து கப்பல் பிடித்து போயிருப்பான் என்று உருவகப்படுத்துக்கொண்டேனோ என்னவோ! அங்கு போனபிறகுதான் தெரிந்தது, கடலுக்கும் கோவிலுக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்று.

நாங்கள் போன சமயம், உச்சிவேளை. கோவில் சாத்தியிருந்தார்கள். என்னசெய்யவென்று தெரியாமல், ஜெயங்கொண்டம் சென்றோம்  உணவுக்காக. 'ஏசி ஹோட்டல்ல கூட அப்படி இருக்காது...இங்கே அவ்ளோ நல்லா இருக்கும்' என்று வழிசொன்னார் ஒருவர். 'அலமேலு மெஸ்'சை தவறவிடாதீர்கள், ஜெயங்கொண்டத்தில். முக்கியமாக, மீன் வருவல் மற்றும் குழம்பு!

திரும்பிசென்றது, கங்கைகொண்ட சோழபுரத்துக்கோவிலுக்கு எதிரில் இருந்த ராஜேந்திர சோழன் அருங்காட்சியகத்துக்கு. அங்கு இருந்த பொருட்களெல்லாம் பெரும்பாலும், மாளிகைமேடு மற்றும் கங்கைகொண்டசோழபுரத்து கோவில் மற்றும் சில கோவில்களிலிருந்து சேகரித்தவை. என்னை மிகவும் ஈர்த்தது ஓலைச்சுவடியில் இருந்த திருக்குறள்தான்.  'ஓலைச்சுவடியிலே எப்படி எழுதுவாங்க? காஞ்சுபோயிட்டா எழுத்தெல்லாம் எப்படி தெரியும்?' என்று ஆயாவை அடிக்கடி கேட்டிருக்கிறேன். வடலூர் வீட்டை சுற்றி 20 ‍‍-25 பனமரங்கள் இருக்கும். வெயில்காலமானால், தினமும் காலை ஆகாரம் நுங்குதான்.  நுங்கு வெட்டிய பின்னர் கூடவே வெட்டிப்போடும் பனைஓலைகளை எடுத்து கிழித்து, ஓலைகள் அது பங்குக்கு என் கையை கொஞ்சம் கீறி 'இதுலே எழுத முடியுமா'  என்று ஆணியால் எங்கள் பெயரை எழுத முயற்சி செய்ததெல்லாம் வரலாறு! (அப்புறம்தான் தெரிந்தது, அதற்கு தனி பனைஓலைகளாம். அந்த மரம் இது போல இருக்காதாம். )


அந்த திருக்குறள் சுவடிகள், 'ராஜேந்திர சோழன் அரண்மனையிலிருந்து 'என்றார் அருங்காட்சியகத்திலிருந்தவர். எனக்கோ, படத்தில், திருவள்ளுவர் கையில் இருக்கும் 'ஒரிஜினல்'  சுவடிகளே அவைதான் என்று தோன்றியது. பப்புவுக்கு திருக்குறள் பற்றியெல்லாம் என்னைப்போல எந்த பந்தபாச பிணைப்புகளும் இல்லை. ஏதோ சிறுவயதில் ஒன்றிரண்டு திருக்குறள்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தாள். அதைத்தாண்டி, 'அகர முதல்' மட்டும்தான் திருக்குறள் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள்.

அவளை ஈர்த்தவை, பாடம்பண்ணப்பட்ட‌ சங்குகள், செப்புக்காசுகள், கத்தி கப்படா வகையறாக்களே! பெரிம்மாவை ஈர்த்தவை, வரைபடங்களும், அவர்கள் சட்டமிட்டு மாட்டியிருக்கும் பட்டியல்கள் கொண்ட படங்கள்.  யாருமே  எட்டிப்பார்க்காத அந்த அருங்காட்சியகத்துக்கு, இப்படி ஒரு கூட்டம் அதுவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான‌ ஆர்வத்தோடு, வந்ததிருந்து சலசலப்பை எழுப்பிக்கொண்டிருப்பதை பார்த்ததும், அந்த அதிகாரிக்கும் உற்சாகம் பீறிட்டிருக்க‌வேண்டும்.  ஆர்வமேலிட்ட அவர் , பப்புவுக்கு கொஞ்சம், எனக்கு கொஞ்சம், பெரிம்மாவுக்கு கொஞ்சம் என்று தானாகவே செய்திகளை பகிர்ந்துக்கொண்டார். அந்த இடத்தில், ஆயிரம் ரூபாவுக்கு புத்தகங்கள் வாங்கியது நாங்களாகத்தான் இருக்கும்.  அவர் பரிந்துரைத்தன் பேரில், அடுத்த நிறுத்தம் "மாளிகை மேடு".
சந்துபொந்துகளில், செல்லும்போது இங்குதானா ராஜேந்திரசோழன் படைகளோடு வசித்திருப்பான் என்று தோன்றியபோது நாங்கள் வந்து நின்ற இடம் ஒரு பொட்டல்காடு. தொல்லியல்துறையின் அறிவிப்பு பலகை இல்லையென்றால், அது மாளிகை இருந்த இடம் என்று நம்புவது கடினமே! 
 
அங்கும், யாருமே பாதுகாக்காத ஒரு அருங்காட்சியகம் ஒரு கூரையின் கீழ் இருந்தது. சிலைகள். பூட்டியிருந்தாலும் திறக்கவேண்டிய அவசியம் இல்லை.
அதை முடித்துவிட்டு, இடப்புறம் திரும்பினால், மாளிகை மேட்டுக்கு வழி. செங்கற்களால் ஆன அடித்தளம் மற்றும் சில பாறைக்கற்கள். ஆடுகள் அந்த பக்கம் மேய்ந்துக்கொண்டிருக்க, இந்த பக்கம் நாங்கள். 'இதுதான் பேலஸா' என்று நம்பமுடியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் பப்பு. பார்பி மற்றும் டிஸ்னியில் மாடமாளிகளை போலிருக்கும் என்றெண்ணியிருப்பாள் போலும்.

'ஒருகாலத்துல' என்று சொன்னால் கற்பனை குதிரையை தட்டிவிடக்கூடிய  நிலையை எட்டியிக்கிறாள் அவள். 'ஓ அந்த காலத்துல இப்படி இருந்துருக்கும்...ராஜா இருந்தப்போ எப்படி இருந்துருக்கும்..இங்கே என்ன இருந்திருக்கும் என்ன செஞ்சிருப்பாங்க‌' என்று மேலும் கதைகளை எடுத்துவிடுவாள். அதற்கு,  சென்னையின் ஆலம்பறை கோட்டைக்கும், தில்லியின் பழைய கோட்டைக்கும், கோவாவின் சப்போரா கோட்டைக்கும், கன்னியாகுமரியின் வட்டக்கோட்டைக்கும் அங்கிருந்தபடியே நன்றிகளை உரித்தாக்கினேன்.   


இது அரண்மனையின் அடித்தளம், இதற்கு மேலே உப்பரிகை மற்றும் மாடங்கள் என்று நாங்களாகவே மேஸ்திரி வேலையை செய்தோம். சற்றுநேரத்தில், 'தங்கக்காசுகள் புதைந்திருக்கும்,  தேடுகிறேன்' என்று ஆரம்பித்தாள். கோவில் திறக்கும் நேரமாகிவிட்டதால், பெயர்ந்துகிடந்த சில செங்கற்துண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டோம். பிற்பாடு, அருங்காட்சியகத்தில் வாங்கிய நூலிலிருந்து தெரிந்துக்கொண்டது, மாளிகைமேட்டிலிருந்து வண்டி வண்டியாக செங்கற்களை எடுத்து சென்று வீடுகளை கட்டிக்கொண்டார்களாம் சென்ற நூற்றாண்டில். வண்டிக்கு இரண்டு அணாக்கள்.  ராஜ செங்கற்கள் கொண்ட வீடுகள்!!

கோவில் திறந்திருந்தது. அத்தை சொன்னதன் காரணம் விளங்கியது. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு நான் பொழிப்புரை தரப்போவதில்லை. அது ஒரு அனுபவம். முன்னேறியதற்கான எந்த ஒரு அடையாளத்தையும் அந்த ஊர் கொண்டிருக்கவில்லை.  ஆனாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மன்னனின் கனவுக்கு முன்,  நாங்கள் நின்று கொண்டிருப்பதை உண்ர முடிந்தது. அணைக்கரை என்ற  (பாலத்தை?) கட்ட ஆங்கிலேயர்கள் இந்தகோவிலின் கற்களை உடைத்து எடுத்து சென்றிருக்கிறார்கள். உலகப்போரின்போது, இந்த கோவிலை தங்களது தங்குமிடமாக உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எஞ்சியது போக, கண்முன் நின்றுக்கொண்டிருக்கும் அந்த பிரம்மாண்டமான கோவிலின் உள்ளே சென்றபோது எழுந்த வியப்பை எழுத்தில் கடத்தமுடியுமா என்று தெரியவில்லை.


இன்று ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய 1000மாவது விழாவை கொண்டாடுகிறார்கள். இந்த நினைவுகூரல் வரவேற்கத்தக்கதுதான். அதேசமயம், தொல்லியல்துறை, குழந்தைகளுக்காக சிலவற்றை செய்யலாம்.  அவர்களுக்கு ஏற்ற வகையில் புத்தகங்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் ‍ வரலாற்று நடைகள், மேலும், ஒலிஒளிக்காட்சிகள் என்று முயற்சிகள் எடுத்தால் நல்லது. 

nantri sandanamullai.blogspot

No comments: