கங்காருவும் அதன் குட்டியும் போல (சிறுகதை) - கானா பிரபா

.


 க்க்க்ர்ர்ரீஈஈஈச்ச்

ஒரு சடுதியான ப்ரேக் போட்டதில் கார் கொஞ்சம் நிலை குலைந்து நடுங்கியது போல இருந்தது. 
"என்னப்பா நடந்தது"
பதற்றத்தோடு பின் இருக்கையில் இருந்து வாணியின் குரல்.

நீண்ட பயணத்தின் சீரான காரோட்டத்தின் சுகத்தை ஒரு மொபைல் தொட்டிலாக நினைத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ரிஷி எதிர்பாராத அந்த நிறுத்தத்தால்  வீறிட்டு அழத்தொடங்கினான்.

இருக்கையிலிருந்தபடி அப்படியே பின் இருக்கைப் பக்கம் திரும்பிப் பார்த்தான் முரளி. 

தன் மனைவி வாணி, ரிஷியை அணைத்துக் கொண்டு வானத்தில் பருந்தை எதிர்கொள்ளும் கோழி தன் குஞ்சை இறுக அணைத்து மறைப்பதுபோலப் பதற்ற முகத்தோடு இறுக்கிக் கொண்டிருந்தாள்.

அந்தப் நெடுஞ்சாலையில் இருந்து மெல்ல நிதானமாக, பக்கத்தில் போடப்பட்டிருக்கும் தற்காலிகப் புல்தரை நிறுத்தத்துக்கு காரைச் செலுத்தி நிறுத்தி விட்டு ஸ்டியரிங் இல் அப்படியே கொஞ்ச நேரம் முகம் புதைத்தான்.
சனக்குவியல்,
றோட்டெல்லாம் இரத்தம், ஆட்டிறச்சிக்கடை, உரைப்பை எல்லாம் சுத்திச் சுத்தி வந்துகொண்டிருந்தது மண்டைக்குள். 
அப்படியே ஸ்டியரிங்க்கில் பற்றிய கைகளுக்குள் முகத்தைப் போட்டபடி கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான்.

விட்டு வெளியே வந்து அந்த நெடுஞ்சாலையை நோட்டமிட்டான்.

தனக்கு முன்னால் வந்த இன்னொரு வாகனம் செய்த வேலை அது.
சாலையைக் கடக்க முயன்ற கங்காரு ஒன்று அப்படியே கை, கால்களை இழுத்துப் போட்டுக் கொண்டு செத்துக் கிடந்தது. 
000000000000000000000000000000000000
தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டின் ஒரு மறக்கமுடியாத மாலைப்பொழுது அது.
மாலை ஆறு மணிக்கெல்லாம் யாழ்ப்பாண நகரப்பகுதி மயான அமைதியில் தன்னைப் போர்த்துக்கொண்டிருந்தது. நகரப்பகுதியில் அமைந்த கடைக்காரர் ஐந்து மணிக்கெல்லாம் பூட்டுப் போட்டு விடுவார்கள். 


இந்த இடத்தில் ஆறுமணிக்கும் சுத்துற கூட்டமென்றால் அது கண்டிப்பாக க.பொ.த உயர்தர பல்கலைக்கழகத் தேர்வுக்கு ரியூஷன் படிக்கிற கூட்டம் தான். வெலிங்டன் சந்திக்கு அந்தப் பக்கம், லிங்கம் கூல்பாரை ஒட்டிய கீற்றுக் கொட்டையில் ஶ்ரீ மாஸ்டரின் வர்த்தகத்துறைக்கான ரியூசன் வகுப்புகள் ஒரே நேரத்தில் முடிந்து கும்பல் கும்பலாக சைக்கிள் சகிதம் வெளிக்கிளம்பவும் முரளியும் இணுவில் செற் என்று அழைக்கப்படுகின்ற அவனுடைய சகபாடிகள் பிறேமும், நாதனும் சேர்ந்து கொண்டார்கள். பிறேம் சங்கரப்பிள்ளை வாத்தியார்ர மேன், நாதன் கடைக்காரப் பொன்னுத்துரை அண்ணர்ர பெடியன். இவர்களின் கூட்டணியில் இருக்கும் இளங்கோ இன்று வரவில்லை. 

"பொயிலைப் பாடம் உணத்தோணும் மச்சான் இண்டைக்கு நான் வரேல்லை" என்று காலையிலேயே சொல்லிவிட்டிருந்தான். அந்த நாளில் யாழ்தேவி ட்ரெய்ன் ஓடேக்கை எல்லாம் யாழ்ப்பாணத்தில் இருந்தெல்லாம் பாடம் செய்து உணர்த்தப்பட்ட புகையிலை எல்லாம் சுருட்டாக மாறிப் பெட்டி பெட்டியாக தென்னிலங்கையின் சிங்களப் பகுதிகளுக்கெல்லாம் போனபோது ராசா மாதிரி இருந்த குடும்பங்களில் இளங்கோவினதும் ஒன்று. இப்பவெல்லாம் ஷெல்லடி, ப்ளேன் போடுற குண்டு எல்லாம் தாண்டி இரு நூறு ரூபாவுக்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணை வாங்கி ஊசிலி மிஷினுக்கு அடிச்சுத் தண்ணி இறைச்சு, புகையிலை விளைவித்துப் பாடம் போடம் போட்டால் கையும் கணக்கும் சரி. அந்தக்காலத்தில் கட்டின கல்வீட்டுக்காறர், வெள்ளையடித்த மதிலெல்லாம் கோடா போட்டுப் பாடம்
பண்ணுப்பட்ட புகையிலை எல்லாம் பச்சை நிறம் வெளிறிப்போய் சாணி நிறத்தில் கும்பல் கும்பலாய்த் தொங்கும். 

சனிக்கிழமை காலை மடத்துவாசல் பிள்ளையாரடியில் காலை ஆறரைப் பூசையைப் பார்த்துவிட்டு அப்பிடியே நேரே போய் அம்மா அவித்து வைத்த புட்டுக்கட்டியையும் சம்பலையும் கலந்து அள்ளி வாய்க்குள் போடும் போது மூன்று, நான்கு வாய் போடுவதற்குள் கூட்டாளிமார் வந்துடுவினம். சாப்பிட்டது பாதி, சாப்பிடாதது மீதி என்று கோப்பைக்குள் தண்ணீரை இறைத்துவிட்டு மளமளவென்று தேத்தண்ணியைக் குடித்துச் சைக்கிள் ஏறிவிட்டால் யாழ் நகரத்தில் இருக்கும் ரியூஷன் சென்ரறில் மொத்தமாக அந்த நாளை அர்ப்பணித்து விட்டால் உலகம் தெரியாது, அந்த ஓலைக்கொட்டில் ரியூஷனில் பொருளியல், கணக்கியல், வர்த்தகம், புவியியல் என்று  ஒரு றவுண்டு அடிச்சிட்டு முடிய பின்னேரம் ஏழு மணியாகும் வீடு வந்து சேர. 
"தம்பி இந்தா அம்பது ருவா ஏதும் வாங்கிச் சாப்பிடு" அப்பா ஐம்பது ரூபாத்தாளுடன் வாசலடிக்கு வந்திட்டார்.

முரளியின் அப்பா விஸ்வநாதன் கொழும்பில் கொழுத்த சம்பளத்தில் நல்ல உத்தியோகத்தில் இருந்தவர். யாழ்ப்பாணத்தில் படித்த கையோடு கொழும்பு றெயில் ஏறினவர் எடுபிடியிலிருந்து படிப்படியாக முன்னேறி ஒரு வர்த்தக நிறுவனத்தின் உதவி மேலாளராக ஆகும் அளவுக்கு வளர்ந்திருந்தார்.
எண்பத்து மூன்றாம் ஆண்டு கலவரம் வந்து வாங்கிய அடியோடு அப்பிடியே யாழ்ப்பாணம் வந்து நிரந்தரமாகத் தங்கி விட்ட குடும்பங்களில் ஒன்று. ஸ்ரான்லி றோட்டில் இருக்கிற அம்பாள் சைக்கிள் விற்பனை நிலையத்தில் முகாமையாளராக இருக்கிறார். முரளி ரியூஷனுக்கு வெளிக்கிட்ட கையோடு அவரும் ரவுணுக்கு வெளிக்கிட்டுவிடுவார். முரளியின் அம்மா புனிதவதியோடு துணைக்கு ஒரு பூனைக்குட்டியும், வீடு வெறிச்சோடிக் கிடக்கும். வீட்டில் யாருமில்லாதபோது பூனையோடு தான் அம்மா கதைப்பா முரளி அடிக்கடி நினைத்துச் சிரித்துக் கொள்வான். அப்பாவின் உலகம் சிறியது, கோயிலில் காலை ஆறரைப் பூசை, வீடு, வேலை, உதயன் பேப்பர், பிபிசி தமிழ்ச்சேவையோடு நின்று விடும்.

"கஷ்டப்பட்டுப் படிக்காதை தம்பி" அடிக்கடி சொல்லுவார் அப்பா.

"நல்லாச் சொல்லுங்கோ கேக்கிறான் இல்லை உடம்பை ஆத்தலைக்கிறான்"
அம்மா சாப்பாட்டுக் கோப்பையில் சோற்றுக்கவளத்தைத் திரட்டித் திரட்டி முரளியின் வாய்க்குள் இலாவகமாகத் திணித்தபடியே சொல்லுவாள், அவன் அதையெல்லாம் கேட்காதது மாதிரி ஶ்ரீ மாஸ்டர் கொடுத்த இலாப நட்டக் கணக்கைத் தயாரித்துக் கொண்டிப்பான் மின்சாரம் இல்லாத அந்த இரவுகளில் ஒரே குப்பி விளக்கொளி முரளியின் மேசைக்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்.

"டேய் பரரலா சைக்கிளில போகாதேங்கோ பின்னாலை காவல் துறை வருகுது" 
பின்னால் சைக்கிளில் வந்த ஒரு இளைஞனின் குரல் கேட்டு மூன்று பேரின் சைக்கிளும் தனித்தனியாகப் பிரிந்தன.
விடுதலைப்புலிகளின் காவல்துறை நிர்வாகத்தில் வீதி ஒழுங்கு கடுமையாக நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இரண்டு மூன்று சைக்கிள் ஒரே சமயம் கூட்டாக வீதியைப் பங்கு போட்டால் அபராதம் தான் கிடைக்கும்.

"பொட்டுக் குறியோட வந்திட்டாங்கள் இணுவிலார்" ஶ்ரீ மாஸ்டர் அடிக்கடி கிண்டலடிப்பார் முரளியோடு சேர்ந்த இந்த நண்பர் குழாமைப் பார்த்து.

யாழ் நகரத்தில் இருந்து  கே.கே.எஸ் றோட்டால் நல்ல பாதையில் பயணிக்கலாம் ஆனால் மேலால் வாற ப்ளேனுக்கும் குறி வச்சு அடிக்கிறது ஈசியாப் போயிடும். கொக்குவில் வழியாக அப்படியே பரமேஸ்வராச் சந்தி வழியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பக்கமாக வந்து கொக்குவில் இந்துவுக்குப் பக்கத்து றோட்டால் வளைச்சு கே.கே.எஸ். றோட்டில் மிதப்பதில் ஒரு காரணமும் இருந்தது. அடிக்கடி பல்கலைக்கழக வளாகத்தைப் பார்க்கையில் நானும் ஒரு நாள் இங்கே போவேன் என்ற அடிமனதில் ஒளிந்திருக்கும் வீறாப்பு ஒரு சுட்டி விளக்கு எரிவதைப் போல இருக்கும் முரளிக்கு. அப்பாவுக்கு நல்லூக் கந்தன் என்றால் உயிர். வெள்ளிக்கிழமை வெள்ளணப் பூசைக்கே கந்தனைப் பார்க்கப் போய்விடுவார். முரளி சின்ன வயசாக இருக்கும் போது தன் சைக்கிள் பாரில் அவனை இருத்தி இதே பரமேஸ்வராச் சந்தி வழியாகத்தான் வருவார். நல்லூர் போவதற்கு ஏகப்பட்ட சுத்துப் பாதைகள் இருந்தாலும் இந்தப் பாதையை அப்பா ஏன் எடுக்கிறார் என்ற காரணம் முரளிக்கு நாட்படத் தான் புரிந்தது.

"எங்கட குடும்பத்திலை ஆரும் யூனிவேர்சிற்றி போகேல்லை, அப்பர் ஒரு துண்டுத் தோட்டக் காணியைத் தந்துட்டு மோசம் போட்டார், அஞ்சு பொம்பிளைச் சகோதரங்களைக் கரை சேர்க்கிறதிலையே என்ர படிப்பு ஆசையும் போயிட்டுது, என்ர குஞ்சு வளந்து நீங்கள் இங்க படிக்கப் போகோணும் எண்டது தான் அப்பான்ர ஆசை"
பல்கலைக்கழகத்தைக் கடக்கும் போது பெருமூச்சோடு அப்பா சொல்லுவார்.

அந்தப் பெரிய வெள்ளை மாளிகையைப் பிரமிப்போடு பார்ப்பான்.

"எங்கட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தை மாதிரிப் பத்து மடங்கு என்னப்பா"
"ஓமோம்" சிரித்துக் கொண்டே ஒற்றைக் கையால் அவன் தலையைத் தடவி விடுவார், மறு கை நிதானமிழக்காது சைக்கிள் பிடியில் பற்றிய படி.
யுத்தம் சூடு பிடித்து இந்தியன் ஆர்மி வந்த கையோடு ஏகப்பட்ட பாதுகாப்பு வளையங்கள் ஊர் முழுக்க. ஆனாலும் குச்சுப் பாதைகளுக்குள்ளால் அப்பா நல்லூர்க் கந்தனைப் பார்க்கப் போய்விடுவார். 

"இப்போதெல்லாம் அப்பா யூனிவேர்சிற்றி கதை கதைக்கிறதில்லை ஆனால் அவர் நான் சின்னனா இருக்கேக்கை சொல்லிச் சொல்லியோ என்னமோ எனக்கு இந்தப் பல்கலைக்கழகம் போகோணும் எண்ட வெறி வந்துட்டுது" மனதுக்குள் நினைத்துக் கொள்வான் முரளி.

"சீமா படிக்கிற சாட்டில கொழும்புக்கு அனுப்பி உன்ர மேனை வெளி நாட்டுக்கு அனுப்பினாத் தான் என்ன? நாடு இப்ப இருக்கிற நிலையில் உவன் இங்கை இருந்து படிச்சு என்ன செய்யப் போறான்?"
பெரியம்மா அடிக்கடி முரளி அப்பாவைச் சீண்டுவாள்.

"அவருக்கு எது பிடிக்குதோ அதைச் செய்யட்டும், நாந்தான் உந்த வயசிலை எனக்குப் பிடிச்சதைச் செய்யாமப் போயிட்டன்" 

கொக்குவில் இந்துப் பக்கமாக சைக்கிளை வெட்டித் திருப்பும் போது மேலே விசுக்கொண்டு கொள்ளிக் கட்டை ஒன்று பறந்தது போல இருந்தது கொஞ்ச நேரத்தில் டப் என்று விழுந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. பலாலியில் இருந்து ஆமிக்க்காறன் யாழ்ப்பாணம் கோட்டைப் பக்கம் ஆட்லறி அடிக்கிறான். ஆட்லறி ஷெல் பலாலி ஆமி காம்ப் இல் இருந்து ஏவப்படும் போது நெடுந்தூரம் சென்று வெடிப்பதால் ஷெல்லில் பொருத்தியிருக்கும் மோட்டார் விசை இடை வழியில் உந்தித்தள்ள அந்த உந்து சக்தியோடு போய் விழும். சல்லிக்கல்லைக் குருட்டாம் போக்கில் எறிவது போலத்தான் இந்த ஷெல்லடியும்.

"ஆமிக்காறன் ஷெல் அடிச்சுச் செத்த புலிகள் எண்டு ஆரும் இல்லைப் போல" மேலே பார்த்துக் கொண்டே சிரித்தபடி சொன்னான் நாதன்.

"சனத்தைப் பார் றோட்டில நிண்டு வேடிக்கை பாக்குது ஷெல் அடியையும், சுத்திச் சுத்திப் பிளேன் போடுற குண்டையும் புதினம் பாத்துப் பாத்து ஓடி ஒளிக்கப் பழகீட்டினம் சின்ன வயசிலை பிள்ளையார் விளையாட்டு விளையாடுவம் ஞாபகம் இருக்கேடா, ஒருத்தன் ரென்னிஸ் பந்தால் சுத்திச் சுத்தி எறிவான் பந்து படுகிறவர் அவுட் அது மாதிரி எல்லோ" சிரித்துக் கொண்டே சொன்னான் முரளி.

"மச்சான்! தின்னவேலியில் இருந்து வாற சரக்கு வரேல்லை என்ன?" ஒட்டிக் கொண்டு வந்த பக்கத்துச் சைக்கிள் பிறேமின் கதை திசை திருப்பியது.

"உனக்கு அவளில ஒரு கண் என்னடா" நமுட்டுச் சிரிப்புடன் முரளி 

"இல்லை மச்சான் அவன் கொப்பியை அணைச்சுக் கொண்டு அவள் நடந்து வாற வடிவைப் பாத்தா போன மாசம் பாத்த இதயம் பட கீரோயின் தான் ஞாபகத்துக்கு வாறாள் அடக்கமான அழகியடா"

"பாட்டுக் கேக்கவும் வழியில்லையடா சைக்கிள் தைனமோவை வலிச்சு வலிச்சு அதுக்குள்ளால கறண்ட் எடுத்துப் பாட்டுக் கேக்குறதைப் பாத்துட்டு எங்கட அம்மம்மா 
உவன் ஏன் செக்கிழுக்கிற மாடு மாதிரிச் சுழர்றான் எண்டு கேள்வி வேற" இது நாதன்.

"மச்சி எனக்கு இப்ப ஏ.எல் இல நல்ல றிசல்ட் எடுக்கோணும் கம்பஸ் போகோணும் அதைத் தவிர வேற எந்தச் சிந்தனையும் இல்லையடா" முரளி

"ம்ம்  ராஜ்கிரண் போலை உவன் ஒரு சரியான முசுடு, எப்ப பார் படிப்புப் படிப்பு எண்டு சீவனை விடுகிறான்ரா" நாதன் சொல்லவும்,
"அங்கை பார் ஏன்ரா நடுறோட்டில கூட்டம் நிக்குது" முரளி பதைபதைத்தான். 

நந்தாவிலடி கே.கே.எஸ் றோட்டு முட்டக் கூட்டம். சைக்கிளை றோட்டுக்கு அருகாலை இருக்கிற பற்றைக்குள் எறிந்து விட்டு ஓடிப் போய்ப் பார்த்தார்கள். 

"ஐயோ என்ர அப்பா" முரளியின் உடம்பெல்லாம் மின்சாரம் தாக்கியது போல உலுக்கிக் கொண்டே அந்த இடத்திலேயே பதறிக் கொண்டிருந்தான்.
தலையும் போட்ட கண்ணாடியும் தான் ஆளை அடையாளம் காட்டியிருக்கு. உடம்பெல்லாம் கிழித்துப் போடப்பட்ட துணிக் குவியல் போல இருந்தது.
"பலாலியில் இருந்து அடிச்ச ஆட்லெறி ஷெல் கோட்டைப் பக்கம் போக முதலேயே இடையிலை விழுந்து இவருக்கு மேல தான்..." யாரோ பேசிக் கொள்வது மட்டும் சன்னமாகக் கேட்குது. காதெல்லாம் அடைச்ச மாதிரி இருக்குது முரளிக்கு.
கொஞ்ச நேரத்துக்கு முன்னர் தான் நடந்தது என்பதை மெய்ப்பிக்குமாற்போலப் புகை வெள்ளம்"

நாதன் வாயைப் பொத்திக் கொண்டு உறை பனி போல நின்று கொண்டிருந்தது.
"இப்ப என்னடா செய்யிறது" வினோத் தொண்டை கமற நாதனை உலுப்பினான்.

தார் றோட்டெல்லாம் சிவப்பு பெயின்ற் வாளியை வீசினது போல. முரளியின் அப்பா ஓடிக் கொண்டு வந்த BSA சைக்கிள் நாலாபக்கமும் துண்டம் துண்டமாகக் கிடந்தது.
"அப்பு எனக்குத் தந்த ஒரே முதுசம்" முரளியின் அப்பா அடிக்கடி சொல்லிக் கொள்வார். இந்த BSA சைக்கிள் தான் அவனை நல்லூர் எல்லாம் கூட்டிக் கொண்டு போனது.
மதகுக்கு எதிர்ப்புறம் உள்ள ஆட்டிறச்சிக் கடைக்கு ஓடினார்கள் நாதனும், வினோத்தும்.
முந்தி ஒரு முஸ்லீம் அன்பர் நடத்திய கடை அது. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேறிய பின்பு வெறுங்கடையில் அதே ஆட்டிறச்சிக் கடையை இன்னொருத்தர் இயக்கிக் கொண்டிருந்தார். கடையின் ஒற்றைக் கதவு மட்டும் திறந்திருந்தது.
"அண்ணை உரப்பை ஏதும் இருக்கோ" கிணத்துக்குள் நின்று பேசுமாற்போல எல்லாம் தொண்டைத் தண்ணி எல்லாம் வத்திப் போன குரலில் நாதன்.
"ஏன் தம்பியவை"
நாதன் கே.கே.எஸ் றோட்டை நோக்கிக் கையை மட்டும் காட்டினான், அவருக்குப் புரிந்து விட்டது.
இரண்டு உரப்பையை கொடுத்தார்.
ஓடிக் கொண்டு வந்து அள்ளினார்கள் இரத்தமும் சதையுமான அந்த மனிதக் குவியலை.

உரப்பையில் அள்ளிப்போட்ட அப்பாவின் உடலங்களைச் சுமந்து கொண்டு நாதனின் சைக்கிள் பாரில் முரளி. நல்லூரடியால் அப்பா தன் சைக்கிள் பாரில் அவனை இருத்திக் கொண்டு கதை பேசிக்கொண்டிப்பது போல மனக்கிணறின் ஆழ் நிலைக்குப் போனது போல இருந்தது. அழுகை எல்லாம் உடம்புக்குள்ளேயே இறுகிப் போனது போல.

வீட்டுக்குக் கொண்டு வந்து எல்லாம் முடிந்து விட்டது. தலையில் அடித்துக் கொண்டு அழுதழுது எல்லாம் வற்றி ஒரு மூலையில் சுருண்ட நாய்க்குட்டி போல அம்மா.

000000000000000000000000000000000000000000000000
அந்தச் சம்பவத்தோடு எல்லாமே மாறிப்போச்சு.
"கண் காணாத தேசத்திலையும் என்ர பிள்ளை உயிரோட இருந்தாப் போதும்" என்று  இருந்த கால்துண்டு காணியை  விற்றுக் கடனுடன் பட்டு முரளியின் அம்மா அவனை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி விட்டுவிட்டு ஆச்சி வீட்டை போய்விட்டார். இன்னும் அந்த நிம்மதியில் தான் மனுஷி தனியாச் சீவிக்குது.

நாதன் கொஞ்ச நாளிலேயே இயக்கத்தில சேர்ந்துட்டான். ஓயாத அலைகள் நடவடிக்கையில் அவனும் களத்திலேயே போய் விட்டான். வினோத் அதுக்கு முன்பே சந்திரிக்கா காலத்தில் யாழ்ப்பாண முற்றுகையில் காணாமல் போனவர்கள் பட்டியல் போய் விட்டான் 18 வருஷமா வராதவன் இனித்தானோ வருவான்.
ஊரில் சொல்லிக் கொள்ள ஒரே ஒருத்தன் என்றால் அது இளங்கோ தான். பொயிலை வேலையை குத்தகைக்குக் குடுத்து விட்டுக் கடை நடத்துறான்.

 ஆரும் பேரும் அறியாத அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஒவ்வொருவராக நட்புப் பிடித்து, இரவிரவாகப் பெற்றோல் சைட்டில வேலை செஞ்சு வந்த கடனைக் கட்டினாப் பிறகு படிப்போம் என்று போன வாழ்க்கை தான் திரும்பவில்லை. வேலை செய்து கொண்டே இருந்தால் தான் எல்லாத்தையும் மறக்கலாம் என்பது அவன் அவன் மனசுக்குக் கொடுத்த சமாதானம்.
வாணியைக் கைப்பிடித்தற்கு பந்தமாக விளைந்தவன் ரிஷி.

வெளிநாட்டுக்கு வந்ததில் இருந்து "எங்கட கடவுள்" என்ற எல்லையும் விரிந்து எல்லாக்கடவுளும் எங்கட கடவுள் என்ற மாற்றமும் புலப்பெயர்வோடு வந்து விட்டது. மாதா கோயிலுக்கும் போனால் மன நிம்மதி என்று போகும் யாத்திரீகர்களில் அவனும் ஒருவன். 

சிட்னியில் இருந்து நூற்றுச் சொச்சம் கி.மீ தொலைவில்  இருக்கிறது பெரீமா  தேவாலயம். சிட்னியின் புற நகர் பிராந்தியம் என்பதால் நகரத்தின் சுவடு பெருந்தெருக்களோடு மட்டும் நின்று விட்டது. சிட்னியில் இருந்து இரண்டு மணிநேரப் பயணத்தில் இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள்  தேவனின் கருணையும், மரியன்னையின் கிடைப்பதாகச் சொன்ன நாள் தொட்டு அவனும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வந்து விடுவான்.  அமைதி தவழும் விசாலமான அந்தத் தேவாலயத்துக்குள் போய் முழங்காலில் நின்றால் எல்லாம் ஒடுங்கிப் போய் மனம் வெட்ட வெளியாக இருக்கும்.  சிலுவைப்பாரம் சுமந்த ஏசுவின் முகத்தைக் கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பான்.

முதல் தடவையாக ரிஷி பிறந்த பிறகு இப்போதுதான் பெரீமா ஆலயத்துக்குப் போகவேணும் போல இருக்கு என்று திடீர் முடிவோடு மனைவி, பிள்ளையை அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டான்.

"என்னப்பா ஏன் பேயறஞ்ச மாதிரி இருக்கிறியள்" வாணி காருக்கு வெளியே வந்தாள் கையில் ரிஷி, அழுது முடித்து விசும்பிக் கொண்டிருந்தது அந்த
ஆறு மாத மொட்டு. இத்தனை ஆண்டு தவப்பலனில் கிடைத்த சொத்து அது. பெரீமா மாதா தான் தந்தவ என்று தன் மனதுக்குள்  சொல்லிக்கொள்வான் முரளி.

"எங்கட பிள்ளையை நல்லா வளக்கோணும், அவன் நல்ல யூனிவேர்சிற்றிக்குப் போய் படிச்சுப் பெரியாளா வரவேணும், அப்பா கண்ட கனவை அவன் தான் மெய்ப்பிக்கோணும்" ரிஷியை வாங்கி அணைத்துக் கொண்ட முரளி.
முரளியின் முதுகை வாஞ்சையோடு தடவிவிட்டாள் வாணி. கொஞ்ச நேரம் முகத்தில் அடித்த அந்தக் குளிர் காற்றையே வாங்கிக் கொண்டு பார்த்தார்கள். புதரைத் தாண்டிய மறு பக்கம் புல்லெல்லாம் காய்ந்து போய் நீண்ட மொட்டை வெளி பரந்து விரிந்திருந்தது.

கார் பெரீமா தேவாலயம் நோக்கிப் பயணிக்க மெல்ல உறுமித் தயார்படுத்திக் கொண்டது.
சாலையின் எதிர்ப்புறம் இருந்த பற்றைக்குள்ளால் வெளிக்கிளம்பிய கங்காரு ஒன்று தன் குட்டியை வயிற்றுப் பைக்குள் போட்டபடி இரட்டைப் பாய்ச்சல் போட்டது இன்னொரு பாதுகாப்பான திசை நோக்கி.
மரியன்னையின் உருவம் முழுதாக நிறைந்திருந்தது அவன் மனக்கண்ணில்.No comments: