இலங்கைச் செய்திகள்

.
6500 ஏக்கர் காணி அரசாங்கத்துக்குரியது: இராணுவம்

சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. முன்றலில் ஆர்ப்பாட்டம்

ரணிலை சந்தித்தார் சந்திரிகா

6500 ஏக்கர் காணி அரசாங்கத்துக்குரியது: இராணுவம்


12/03/2014    வலி.வடக்கில் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட  6 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அனைத்தும்  அரசாங்கத்திற்குரிய காணிகள் என்று இராணுவத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
அதேவேளை இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறாது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
நலன்புரி நிலையத்தின் தலைவர்கள் மற்றும் மீள்குடியேற்ற குழுவின் பிரதிநிதிகளுடன் வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கிவாழ்ந்துவரும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ்.காங்கேசன்துறை படைமுகாமில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே 515 ஆவது பிரிகே டியர் ஈஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரியின் மேற்படி கருத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த நலன்புரி நிலையங்களின் தலைவர்களும் மீள்குடியேற்றக் குழுவின் பிரதிநிதிகளும் இராணுவத்தினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

வலி. வடக்கிலிருந்து  இடம் பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இதுவரைகாலமும் கூறிய இராணுவத்தினர் ஏன் இப்பொழுது இவ்வாறு கூறுகின்றனர் என்பது எமக்குத்தெரியும். 
ஜெனிவாவில் தற்போது நடந்துவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் வலுவிழந்தால் மக்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவிக்கத்தயாரில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்று இராணுவத்தினருடன் முரண்பட்டுவிட்டு பிரதிநிதிகள் முணுமுணுத்தபடி அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.    நன்றி வீரகேசரி 







சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. முன்றலில் ஆர்ப்பாட்டம்

11/03/2014   இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனகோரி ஐ.நா. முன்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 






ரணிலை சந்தித்தார் சந்திரிகா

11/03/2014    முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் 10 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது மதங்களுக்கு இடையில் நல்லுறவை கட்டியெழுப்பும் முயற்சிகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. 
சமயங்களுக்கு இடையில் நல்லுறவை கட்டியெழுப்பும் முயற்சிகளில் சந்திரிகா ஈடுபட்டுள்ளார். தென்னாசிய பிராந்திய வலய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவகம் என்ற பிராந்திய அமைப்பு ஒன்றின் முக்கிய பொறுப்பில் சந்திரிகா உள்ளார்.
தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கண்காணிப்பு திட்டம் தொடர்பான அறிக்கையை இச் சந்திப்பின் போது கையளித்தார்.
இலங்கையில் பிரதான மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கண்காணிப்பு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தமது கண்காணிப்பு திட்டம் அறிக்கை தொடர்பில் அரசாங்க தரப்புடனும் கலந்துரையாடவுள்ளதாக சந்திரிகா தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தலைமைத்துவ பேரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
(ஜே.சுஜீவகுமார்)
 நன்றி வீரகேசரி 







No comments: