மழை நாளும்.. மாடிவீடும்.. (கவிதை) வித்யாசாகர்!

.

ழைஒழுகும் வீடு
மல்லிகை உதிர்ந்த முற்றம்
கைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு
தொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம்
மண்வாசத்தோடு வீசும் காற்று
மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா
வேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா
புயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி
டமடமவென இடிக்கும் வானம்
இருள் அடையும் பொழுது
கறுத்துச்சூழும் மேகம்
ஓரக்கண்ணால் முகம் பார்த்துக் கத்தும் காகம்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் கிரீச்சிடும் சிட்டுக்குருவிகள்
காற்றில் கிளையாட இலைசொட்டும் மழைதேங்கிய நீர்
பசியில் பரபரக்கும் வயிறு
பள்ளிக்கு போகயிருக்குமோ இருக்காதோ எனும் படபடப்பு
மழையொழுகும் வீட்டினுள் நிரம்பிய
பாத்திரத்திலிருந்து எழும் கூரையின் வாசம்
மண் கிளறி மழையோடு நுகர்ந்த மண்வாசமென
எல்லாவற்றோடும் விடாது ஒட்டிக்கொண்டிருந்தது மனசு..
மனதை என்னசெய்வேன்.. ?
அடுக்குமாடி கட்டிடத்தின் மேலமர்ந்துக்கொண்டு
மறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..

No comments: