பர்மாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் - தம் அடையாளத்தை தக்கவைக்கும் முயற்சிகளும்

.
மியான்மாரின் [பர்மா] 55 மில்லியன் மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதத்தினர் இந்திய வம்சாவளி மக்களாவர். இவர்களில் பெரும்பான்மையினராக விளங்கும், கடந்த 200 ஆண்டுகளாக மியான்மாரில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர்.

1948ல் மியான்மார் சுதந்திரமடைந்ததன் பின்னர், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தங்கள், பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டமை, பெரும்பான்மை பர்மிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டமை போன்றன சமூகக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்படக் காரணமாகின. மியான்மாரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது மொழி மற்றும் கலாசாரத்தை புத்துயிர் பெறவைப்பதற்காக புதிய பாடசாலைகளைத் திறந்துள்ளனர். தென்னிந்திய தமிழர்கள் 19ம் நூற்றாண்டில் பர்மா என அறியப்படும் மியான்மாருக்கு புலம்பெயர்ந்தனர்.

தென்னிந்தியாவிலிருந்து சிறிலங்கா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்த மக்களைப் போலல்லாது பர்மாவில் குடியேறிய இந்தியத் தமிழர்கள் கொலனித்துவ ஆட்சியில் சரியான முறையில் நடாத்தப்படவில்லை. இவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்ப்பதற்குப் பதிலாக வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.


"1836ல் கட்டப்பட்ட ஆலயம் ஒன்றை நாம் கொண்டுள்ளோம். பர்மாவுக்கு முதன்முதலாக 1824ல் தமிழர்கள் குடியேறியதாகக் கூறப்படுகிறது" என்கிறார் மாவ்லம்யினே என்கின்ற துறைமுக நகரில் வாழும் வர்த்தகரான தனபால். இதன்பின்னர் 20ம் நூற்றாண்டில் பர்மாவில் குடியேறிய தமிழ் மக்கள் விவசாயம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கினர். பர்மா மீது யப்பானியர்கள் ஆக்கிரமிப்பை மேற்கொண்டதன் பின்னர், பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் கீழ் நகரங்களில் பணிபுரிந்த பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மீண்டும் பர்மாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினர். இதனைத் தொடர்ந்து பர்மா சுதந்திரமடைந்ததன் பின்னர், பர்மா அரசாங்கம் நிலச்சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியதுடன், தேசியமயமாக்கல் என்ற பெயரில் விவசாய நிலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

பர்மாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து இங்கு பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டதால் தமிழ் மக்கள் 1960களில் தமது பாடசாலைகளை மூடவேண்டிய நிலையேற்பட்டது. ஆனால் பர்மாவில் இந்திய வம்சாவளியினர் மிக ஆழமாக நிலைத்துள்ளனர். இவர்கள் அரசியலிலிருந்து விலகி, பெரும்பான்மை பர்மிய சமூகத்தவருடன் நட்புறவைப் பூண்டு இன்றும் வாழ்கின்றனர்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பாடசாலைகளை பர்மிய அரசாங்கம் மூடியதால் தமிழ் சமூகத்தின் மத்தியில் நிரந்தர அழிவொன்று ஏற்பட்டதாக நைனார் முகமட் கூறுகிறார். "நான் தொடருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தமிழ்ப் பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்த பெண்கள் சிலரைக் கண்டேன். அவர்கள் நீண்ட தலைமுடியைக் கொண்டிருந்தனர். பூக்கள் சூடியிருந்தனர். அவர்களிடம் நான் தமிழில் பேச முயற்சித்த போது அவர்கள் ஒரு தமிழ் வார்த்தையைக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கு வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழில் எழுதவோ, வாசிக்கவோ கதைக்கக் கூடத் தெரியாதவர்களாக உள்ளனர்" என நைனார் முகமட் குறிப்பிட்டார்.

20 வயதையுடைய சுமதி பர்மாவில் வாழும் இந்தியத் தமிழ் வம்சாவளியின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் தமிழ் குடும்பங்கள் அதிகம் வாழும் மௌலம்யினே என்கின்ற இடத்தில் வசிக்கிறார். பாரம்பரிய பர்மிய ஆடை அணிவதென்பது இவருக்கு நல்ல விருப்பமாகும். "நான் உள்ளுர் கடையொன்றில் பணிபுரிகிறேன். நான் வீட்டில் பர்மிய மொழியில் கதைக்கிறேன். எனது தமிழ் நண்பர்கள் கூட பர்மிய மொழியில் பேசவே விரும்புகின்றனர். தமிழ் மொழியை என்னால் மிகச் சிறிதளவில் விளங்க முடிகிறது. ஆனால் என்னால் தமிழ் மொழியைப் பேச முடியவில்லை" என்கிறார் சுமதி. இவர் தமிழ் வகுப்புகளுக்குச் செல்வதிலும் ஆர்வம் காட்டவில்லை.

சுமதியின் அயலில் உள்ள தமிழர்கள் வெளியில் பார்ப்பதற்கு தமிழ் கலாசாரத்தைப் பேணுபவர்கள் போல் தென்பட்டாலும் கூட, இவர்கள் தமிழ் மொழியில் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். பர்மாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் பர்மிய உணவுகளையே உண்கின்றனர். இவர்கள் வீடுகளிலும் பர்மிய மொழியையே பேசுகின்றனர். இவர்கள் அதிகம் பர்மிய பாரம்பரிய ஆடைகளை அணியவே விரும்புகின்றனர்.

பர்மாவில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மூத்த தலைமுறையினர் போலல்லாது, தற்போது உள்ள இளம் தலைமுறையினர் தமக்கான காணி உரிமைகள் மறுக்கப்பட்டமை தொடர்பில் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை.

"எங்களுடைய இளையோர்களுக்கு தமிழ் மொழி தெரியாது. இவர்களுக்கு எமது வரலாறு, கலாசார பாரம்பரியங்கள் போன்றன தெரியாது. சிலர் தற்போது வேறு மதங்களுக்கு மாற விரும்புகின்றனர்" என 'றங்கூன் ஆலயத்தின்' தர்மகர்த்தாவான தேவராஜ் கூறினார்.

இவ்வாறான போக்கைக் கட்டுப்படுத்துவதற்காக தேவராஜ் தற்போது இந்து மாணவர்களுக்காக சமய வகுப்புக்களை நடாத்தி வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களுள் மிகச் சிறிய எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இந்துக்களாவர்.

இங்கு பௌத்தமதத்திற்கும் இந்துமதத்திற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. தற்போது மியான்மாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உள்ளன. எல்லா இந்து ஆலயங்களிலும் புத்தரின் சிலை அல்லது உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. விஸ்ணு கடவுளின் அவதாரம் தான் புத்தர் என சில இந்துக்கள் நம்புகின்றனர். இந்தியாவிலுள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கவில்லை. இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் மத்தியில் பாரபட்சம் நிலவாததால் இங்கு மத வன்முறைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதாகவும் இரு தரப்பினரும் புரிந்துணர்வுடன் வாழ்வதாகவும் பர்மிய தமிழ் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

மியான்மார் இராணுவ ஆட்சியாளர்கள் மத நிர்வாகங்களில் தலையிடாவிட்டாலும் கூட, ஆலயங்களில் மட்டுமே தமிழ் மொழி கற்பிக்கப்பட முடிகிறது. அதாவது அறநெறிக் கற்கை மற்றும் சங்கீதம், நடனம் போன்றவற்றைப் பரப்பும் நோக்குடன் இவை ஆலயங்களில் வைத்துக் கற்பிக்கப்படுகின்றன.

பர்மிய தமிழ் சமூகம் பல ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பர்மிய தமிழ் சமூகம் தமிழ்நாட்டுடன் அல்லது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வாழும் தமிழ் சமூகங்களுடன் மிகக் குறைந்த தொடர்பையே கொண்டுள்ளன. பர்மாவில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் இளையோர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு ஒருதடவை கூடப் பயணித்ததில்லை.

ஆனால் அறநெறிக் கற்கைகளுக்கு அப்பால் மியான்மாரில் பல புதிய தமிழ்ப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. "நாங்கள் பாடத்திட்டங்களைத் தயாரித்து, பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்குகிறோம். நாங்கள் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்குறோம். மாணவர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என பர்மாவிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளைக் கண்காணித்து வரும் பி.சண்முகநாதன் ஆசிரியர் விளக்கினார்.

பர்மாவின் சில கிராமங்களைத் தவிர ஏனைய இடங்களில் தமிழர்கள் மிகக் குறைந்தளவில் வசிக்கின்றனர். சில இடங்களில் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கேற்ற மாணவர்களை பாடசாலையில் இணைப்பது கூடக் கடினமாகக் காணப்படுகிறது. தமிழ் வர்த்தகர்களிடமிருந்து பெறுகின்ற நன்கொடைகளைக் கொண்டே ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

"தொழில் வாய்ப்புக்களை வழங்காத மொழியை நாங்கள் ஏன் கற்றுக் கொள்ள வேண்டும் என சிலர் என்னிடம் வினவுகின்றனர். இது எமது சொந்த வரலாறு மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது என நான் பதிலளிப்பேன். நாங்கள் எமது மொழியை இழந்தால் எங்களை நாங்களே தமிழர்கள் என அழைக்க முடியாது" என திரு.சண்முகநாதன் சுட்டிக்காட்டினார்.

தற்போது முன்னெடுக்கப்படும் முயற்சிகள் நிலைபெற்று வெற்றியளித்தால், பர்மாவில் வாழும் தமிழ் சமூகம் தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியை பல ஆண்டுகள் வரைக் கடைப்பிடிக்க முடியும் என தமிழ் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

கட்டுரை வழிமூலம் - BBC By Swaminathan Natarajan.

மொழியாக்கம் : நித்தியபாரதி.

No comments: