எனக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பை தமிழர்களுக்காக முழு மூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் : சி.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவானமையால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் - முபாறக்
வீடமைப்பு கடன் வசதி : அம்பாறை கரையோர தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி
'பறக்கும் மீன்கள்" திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஷிராணி தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது 25ஆம் திகதி விசாரணை
யாழ் தேவி செப்டெம்பர் முதல் கிளிநொச்சி வரை பயணம்
=====================================================================
எனக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பை தமிழர்களுக்காக முழு மூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் : சி.வி.விக்னேஸ்வரன்
15/07/2013 காதலித்த
பெண்ணை கைவிட்டு பெற்றோர்கள் பார்த்த பெண்ணை மணப்பது போல் ஒரு ஏக்கம்
நிறைந்த உணர்வு வட மாகாண சபை முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டவுடன் நான்
உணர்கிறேன். எவ்வாறாயினும் எனக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பை தமிழர்களுக்காக
முழு மூச்சுடன் நேர்மையாக செய்து முடிப்பேன் என்று தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் வட மாகாண சபை முதன்மை வேட்பாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் உயர்
நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வட
மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
மற்றும் தயா மாஸ்டர் உள்ளிட்ட யார் போட்டியிட்டாலும் தமிழர் என்ற வகையில்
தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை முதன்மையாக கொண்டு செயற்பட வேண்டும்.
அவ்வாறு இல்லையென்றால் எதிர்காலத்தில் தமிழர்களின் நிலைமை
கேள்விக்குறியாகி விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வீரகேசரி நாளிதழுக்கு நேற்று திங்கட்கிழமை வழங்கிய விஷேட செவ்வியிலேயே
முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார். இவர்
வழங்கிய செவ்வி பின்வருமாறு,
அரசியல் பிரவேசம்
இயற்கை நிறைந்த அமைதியான வாழ்வை நேசிப்பவன் நான். அவ் வாழ்க்கையே எனது
காதலியாகவும் கொள்கின்றேன். தற்போது திடீரென வட மாகாண சபை தேர்தலில் தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு
கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து
ஏகமனதாக என்னை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனைக் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உள்ளிட்ட அனைத்து
பிரச்சினைகளையும் மாகாண சபை ஊடாக தீர்த்து வைக்கும் பாரிய பொறுப்பு எனக்கு
கையளிக்கப்பட்டுள்ளது. அதனை முழு மூச்சுடன் ஏற்றுக் கொண்ட போதிலும் உள்
மனதில் காதலித்த பெண்ணை கைவிட்டது போல் ஒரு ஏக்க உணர்வு காணப்படுகின்றது.
எவ்வாறாயினும் எனது பொறுப்பை முழு அளவில் ஏற்றுக்கொண்டு அதனை இறுதி வரையில்
நேர்மையாக போராடி வெற்றி கொள்வேன்.
மாகாண சபை முறைமை
மாகாண சபையில் உள்ள அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தி மக்களுக்கு உரிய
சேவையினை வழங்க கூடிய அதிகாரம் சட்டத்தில் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை.
மாறாக ஆளுநருக்கே கூடுதலாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாரிய
நெருக்கடியினையே எமக்கு சந்திக்க நேரிடும்.
அதே போன்று அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அனைத்தையும்
மட்டுப்படுத்தும் நோக்கிலான அதிகாரக் குறைப்பு நாடகத்தை ஆடுகின்றது என்று
எண்ண தோன்றுகின்றது. ஆகவே பல சவால்கள் மாகாண சபையில் இருக்கின்றது என்பதை
நான் அறிவேன். இது வட மாகாணத்தில் வலுவான நிலையில் காணப்படும் என்றும்
எனக்கு தெரியும்.
எவ்வாறாயினும் அரசியல் என்பதை விட மக்கள் பணி தமிழர்களுக்கு சேவை
செய்யும் சந்தர்ப்பமாக நினைக்கும் போது அதனை சட்ட ரீதியாக கையாண்டு
நெறிப்படுத்த முயற்சிப்பேன்.
வட மாகாண சபை
கொடிய யுத்தம் ஆட்கொண்டு மக்கள் பாரிய அழிவுகளிலிருந்து தற்போது
விடுபட்டு ஜனநாயக காற்றை சுவாசிக்க விரும்புகின்றனர். இதனை உறுதிப்படுத்த
வேண்டும். ஆனால் வட மாகாணத்தில் தற்போது காணப்படுகின்ற இராணுவச் சூழல்
அதற்கு ஏற்புடையதல்ல. குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் இராணு
அதிகாரியொருவர் ஆளுநராக பதவியில் இருப்பதை அனுமதிக்க முடியாது.
எனது முதல் கோரிக்கையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதனை முன் வைக்க
விரும்புகின்றேன். வட மாகாண சபை ஆளுநராக உள்ள ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியை
உடனடியாக மாற்றுங்கள். ஏனெனில் அவரின் செயற்பாடுகள் சிவில்
நிர்வாகத்திற்கு ஒத்துவராது. அதேபோன்று மனித உரிமைகள் தொடர்பிலோ சிவில்
நிர்வாகம் தொடர்பிலோ சிறந்த வெளிப்பாடுகளை இராணுவ அதிகாரியிடமிருந்து எதிர்
பார்க்க முடியாது.
தொடர்ந்தும் மக்கள் இராணுவக் கட்டளைகளின் பிரகாரம் வாழ்வதை
விரும்புவதில்லை. ஆகவே வட மாகாண சபைக்கு சிவில் அதிகாரியை ஆளுநராக நியமிக்க
வேண்டும்.
13 ஆவது திருத்தச் சட்டம்
அரசியலமைப்பில் காணப்படுகின்ற மாகாண சபைகளுக்கான 13 ஆவது திருத்தச்
சட்டத்தின் பிரகாரம் கிடைக்கப்பெற்றுள்ள அதிகாரங்களை வலுவான நிலையில்
பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இதில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக குமாரதுங்க மேல் மாகாண சபை
முதலமைச்சராக இருக்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கையாளாக தம்மை
வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையே தற்போதும் காணப்படுகின்றது. 13 ஆவது திருத்தச் சட்டம்
முழுமையாக செயற்படுத்த பாரிய நெருக்கடிகள் சட்டப்பொறி முறையில் முறையில்
காணப்படுகின்றது. இவற்றை சீர் செய்ய வேண்டும். இதனை மட்டுமே தற்போது நான்
கூற விரும்புகின்றேன். ஆனால் அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தில்
குறிப்பிட்ட இரு அதிகாரங்களை மாத்திரம் குறைக்க நினைப்பது எதற்கு என்று
புரியவில்லை.
ஆளும் கட்சி வேட்பாளர்கள்
வட மாகாண சபை தேர்தல் அரசாங்கத்தின் சார்பில் தயா மாஸ்டர் அல்லது
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட யார் போட்டியிட்டாலும் அவர்கள் தமிழர்கள்
என்பதை மறந்து விடக் கூடாது. கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக வட
மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள்
எதிர்கொண்ட பிரச்சினைகளை கருத்தில்கொண்டு அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே
செயற்பட வேண்டும்.
தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை விட தமிழ் மக்களின்
பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அவசியமானதாகும். நாம்
தமிழர்களின் உரிமையை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யாவிட்டால் யார் பெற்றுக்
கொடுக்கப்போகின்றார்கள். பிளவுபட்டு போனால் நாளை இலங்கையில் தமிழர்களின்
வாழ்வுரிமைகளும் தடயங்களும் அழிந்து போய் விடும். எனவே தேர்தலின் பின்னரும்
தமிழர்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும் என அச்செவ்வியில்
குறிப்பிட்டார்.நன்றி வீரகேசரி
|
முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவானமையால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் - முபாறக்
16/07/2013 வட மாகாண சபையின் முதலமைச்சர்
வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு
செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதும் அரசியலில் மிகச்சிறந்த
எடுத்துக்காட்டுமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்
தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு முஸ்லிம் மக்கள்
கட்சித்தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீதினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள
கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்
பேசும் மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்களைக் கொண்ட வட மாகாணத்துக்குரிய
முதலமைச்சர் வேட்பாளருக்கான அனைத்து தகுதிகளும் த. தே. கூட்டமைப்பின்
செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு இருந்தும் அரசியலில் ஈடுபடாத முன்னாள்
நீதியரசரை தெரிவு செய்துள்ளமை தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில்
மிகப்பெரிய திருப்புமுனையாகும்.
அத்துடன் நீதித்துறையில் புகழ்பெற்ற
விக்னேஸ்வரன் அரசியல் ஒரு சாக்கடை என கூறிக்கொண்டு தனது சமூகத்தை மறந்து
மக்களுக்கான சேவையிலிருந்து ஒதுங்கும் முடிவை மேற்கொள்ளாது தேர்தல்
வேட்பாளராவதை அவர் ஏற்றுக்கொண்டமை மிகச்சிறந்த எடுக்காட்டாகும்.
இதன்
மூலம் புத்திஜீவிகளின் அரசியல் பிரவேசம் மூலம் மக்களுக்கான அரசியல்
முன்னெடுக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. இத்தகைய ஒருவர் வட மாகாண சபை
முதலமைச்சராக வருவதன் மூலம் அங்கு வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு
நியாயம் கிடைக்கும் என்பது முஸ்லிம் மக்கள் கட்சியின் எதிர்பார்ப்பாகும்.நன்றி வீரகேசரி
வீடமைப்பு கடன் வசதி : அம்பாறை கரையோர தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி
16/07/2013 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக வழங்கப்படும்
வீடமைப்புக்கான கடனுதவி அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில்
வாழும் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு முறையாக வழங்கப்படாமல் உள்ளமை பெரும்
அநீதியாகும் என இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் பிரதித்
தலைவர் ஏ.புஹாது, பொதுச் செயலாளர் கே.நடராசா ஆகியோர் ஒப்பமிட்டு
ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
தேசிய
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிகளை பரவலாக்கும் வகையில்
கல்முனையில் மாவட்ட அலுவலகம் ஒன்று இயங்கி வருகின்றது. இவ் அலுவலகத்தில்
வீடமைப்புக்கான கடனுதவியைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள பொதுமக்கள்
மற்றும் அரச ஊழியர்கள் கடனுதவியைப் பெற பல மாதங்களாக
எதிர்பார்த்திருக்கின்றனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் பெரும்
பான்மையின சகோதரர்கள் வாழும் தமண, உகண, அம்பாறை பாணம, லவுகல மற்றும் மகோயா
போன்ற பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்கள் இத்தகைய
வீடமைப்பு கடனுதவியை இலகுவாகவும் விரைவாகவும் பெறும் நிலை உள்ளது.
கல்முனையில்
சகல அதிகாரங்களையும் கொண்ட மாவட்ட அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ள
போதிலும் இவ் அலுவலகம் வினைத்திறனுடன் சேவையாற்றக் கூடிய அளவுக்கு கடனுதவி
அளிக்க கூடியதான நிதியை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்காமை
தமிழ் பேசும் மக்களுக்குச் செய்யும் அநீதியாகும்.
வீடமைப்பு
கடனுதவியை பெறும் நோக்கில் சாதாரண பொது மகனொருவர் ஒரு இலட்சத்து ஐம்பது
ஆயிரம் ரூபாவை பெறுவதற்கும், அரச ஊழியர் ஒருவர் மூன்று இலட்சத்து
ஐம்பதாயிரம் ரூபாவை பெறுவதற்கும் முறையாக விண்ணப்பித்த கோவைகள் கல்முனை
அலுவலகத்தில் தேங்கி கிடக்கின்றது. ஆனால் அம்பாறை அலுவலகத்தில் இந்நிலை
எதிர்மறையாகவுள்ளது.
ஆகவே யுத்தத்தினாலும் சுனாமி மற்றும்
வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட கல்முனை கரையோர பிரதேச தமிழ்-முஸ்லிம்
மக்கள் விரைவாக வீடமைப்பு கடனுதவியை பெற ஆவன செய்ய வேண்டுமென கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
'பறக்கும் மீன்கள்" திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
17/07/2013 இலங்கை இனப்பிரச்சினையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட 'பியம்பனா
மாலுவோ' (பறக்கும் மீன்கள்) என்ற திரைப்படத்திற்கு எதிராக கொழும்பில் இன்று
புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை
அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு அவதூறை ஏற்படுத்தும் வகையில்
இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதால் அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக
தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே
இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, திரைப்படத்தை தயாரித்த
சஞ்ஜீவ புஷ்பகுமாரவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(pics by : J.Sujeewakumar)









நன்றி வீரகேசரி
ஷிராணி தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது 25ஆம் திகதி விசாரணை
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி
பண்டாரநாயக்க தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நான்கையும் ஜூலை 25
ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை
தீர்மானித்தது.
இந்த மனுக்கள் நீதியரசர்களான சலீம் மர்சூக், சந்திரா ஏக்கநாயக்க,
சந்தியா ஹெட்டிகே, ஈவா வணசுந்தர மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய ஐவர் கொண்ட
நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று முன்தினம் ஆராயப்பட்டபோதே
மனுக்களை விசாரிப்பதற்கு திகதி குறிக்கப்பட்டது.
முன்னாள் நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான
குற்றப்பிரேரணையை விசாரணைக்கு உட்படுத்திய பாராளுமன்றத் தெரிவுக்குழு
சட்டவிரோதமானது எனக் கோரியும் அந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்த
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 78 (அ) சட்டத்துக்கு விரோதமானது என்பதனால்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கும் அதிகாரத்தை சூன்னியப்படுத்துமாறு
கோரியே உரிமைமீறல் மனுக்கள் நான்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
யாழ் தேவி செப்டெம்பர் முதல் கிளிநொச்சி வரை பயணம்
18/07/2013 யாழ்
தேவி’ ரயில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் கிளிநொச்சி வரை சேவையில்
ஈடுபடுத்தப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது. வவுனியாவில் இருந்து
காங்கேசன்துறை வரையுள்ள 29 ரயில் நிலையங்கள் அரச மற்றும் தனியார்
நிறுவனங்களின் உதவியுடன் நிர்மாணிக் கப்பட்டு வருவதாகவும்
அறிவிக்கப்படுகிறது. யுத்தத்தினால் அழிவடைந்த வடபகுதி ரயில் பாதைகள் இந்திய
இர்கொன் கம்பனியினூடாக மீளமைக்கப்பட்டு வருகிறது. கொழும்பில் இருந்து
வவுனியா வரையே இடம்பெற்ற யாழ் தேவி ரயில் சேவை தற்பொழுது ஓமந்தை வரையே
இடம்பெறுகிறது. நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதோடு
அடுத்த வருட முடிவுக்குள் யாழ்ப்பாணம் வரை யாழ் தேவி ரயில் பயணம் செய்ய
உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது. மதவாச்சியில் இருந்து தலைமன்னார்
வரையான ரயில் பாதையும் துரிதமாக அமைக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது
புளியங்குளம், மாங்குளம், முறிகண்டி, முறிகண்டி கோயில், நாவற்குளி,
பரந்தன், ஆனையிறவு, பளை, எழுதுமட்டுவாள், மிருசுவில், கொடிகாமம், மீசாலை,
சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொக்காவில், கோண்டாவில், சுன்னாகம்,
மல்லாகம், தெல்லிப்பழை, காங்கேசன்துறை அடங்கலான ரயில் பாதைகள் நிர்மா
ணிக்கப்பட்டு வருகின்றன. நன்றி தேனீ
|
No comments:
Post a Comment