இந்தியாவின் கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி போராட்டம்!
16/07/2013 இந்தியாவின் கூடங்குளத்தில் செயல்படத் தொடங்கியுள்ள அணுமின்
நிலையத்தை உடனே மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நேற்று மாலை ‘பெருந்திரளான
மக்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் 700 நாட்களை
எட்டியுள்ளது. ஆனால் கடந்த 13ஆம் திகதி முதல் அங்கு மின் உற்பத்தி
தொடங்கப்பட்டுவிட்டது.
இதைக் கண்டித்தும் அணு உலையை மூட வலியுறுத்தியும் நேற்று மாலை பெருந்திரள் மரண போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அணுஉலை செயல்படத் தொடங்கிவிட்டதால் நாங்கள் செத்து விழ வேண்டும் என்பதை
உணர்த்தும் விதமாக இடிந்தகரை ஊருக்குள் நுழையும் பகுதியிலிருந்து ஊர் எல்லை
வரையிலும் பெண்களும் ஆண்களும் திடீர் திடீரென இறந்து விழுந்தது போன்று
படுத்திருந்தனர்.
சுமார் 1 மணி நேரம் இப்படி இறந்தது போல் அனைவரும் படுத்திருந்தனர். இந்த
பெருந்திரள் மரண போராட்டத்தில் போராட்டக் குழுவின் தலைவர்களான
எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில்
பெரியதாழை, கூடுதாழை, வீரபாண்டியன்பட்டணம், மணப்பாடு உள்ளிட்ட
கிராமங்களில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை நன்றி வீரகேசரி
பீகாரில் பாடசாலையொன்றில் 11 குழந்தைகள் பலி
17/07/2013 இந்தியாவின் பீகாரில் உள்ள பாடசாலையொன்றில் மதிய உணவு உண்ட 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 48 குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது,
சாப்ரா நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தர்மாசதி கண்டமான் என்ற கிராமத்தில் அரச பாடசாலையொன்று உள்ளது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு நேற்று இலவச மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
உணவை உண்ட அனைவரும் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். உணவு சாப்பிட்ட
சிறிது நேரத்தில், ஏறத்தாழ 80 மாணவர்களுக்கு வாந்தியும், மயக்கமும்
ஏற்பட்டது.
இந்த தகவல் ஊருக்குள் பரவியதும், பெற்றோர்கள் அலறியடித்தபடி பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர்.
மயங்கி விழுந்த மாணவர்கள் அனைவரும், உடனடியாக அருகில் உள்ள சாதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மற்றைய குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மேலும் 9 குழந்தைகள் இறந்துவிட்டனர்.
மேலும் 48 பேருக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. அந்த வைத்தியசாலைக்கு தேவையான கூடுதல் மருந்து - மாத்திரைகள்
அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சிகிச்சைபெற்று வரும் மாணவர்களில் 12 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் மதிய உணவாக அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சோயாபீன்ஸ்
கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த உணவை சாப்பிட்டதும் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
நிதிஷ்குமார் அவசர ஆலோசனை தகவல் அறிந்ததும், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த துயர சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் உதவிப்பணம் வழங்கவும் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
சவூதியில் உள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கென புதிய விதி முறைகள் அறிமுகம்
19/07/2013 வெளிநாட்டுப் பணியாளர்களுக்கென
உரிமைகள் சிலவற்றை வழங்குவதற்கான புதிய விதிமுறைகளைக் கடந்த செவ்வாயன்று
சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்த போதிலும் அவர்கள் இஸ்லாம் மதத்தை மதித்து
நடப்பதுடன் தங்களின் வேலை கொள்வோருக்கு கீழ்ப்படிந்து ஒழுக வேண்டுமெனவும்
அது வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தொழில் அமைச்சர் ஆதில் ஃபாகிஹ் தெரிவிக்கையில்,
வீட்டுப் பணிப் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இஸ்லாத்தையும அதன்
போதனைகளையும் மதித்து நடப்பதுடன் வேலை ஒப்பந்தப்படி அமைந்த பணிகளைச்
செய்விப்பது சம்பந்தமாக வேலை கொள்வோருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும்
கீழ்ப்படிந்து ஒழுகவும் வேண்டுமெனவும் வீட்டுப் பணியாளரொருவர் போதிய
காரணமின்றி பணியொன்றை நிராகரிக்கவோ அல்லது வேலையொன்றை விட்டுச்செல்லவோ
உரிமையற்றவரெனவும் குறிப்பிட்டார். ஆயினும் புதிய விதிமுறைகளின் பிரகாரம்,
தங்களின் ஒப்பந்தங்களின் மூலம் பணியாளர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட
வேதனக் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய உரிமைகளை வேலை கொள்வோர் உரியவாறு வழங்க
வேண்டும். அமைச்சர் ஃபாகிஹ் இது பற்றி மேலும் கூறுகையில்,
வேலை கொள்வோர் ஒத்துக்கொள்ளப்பட்ட மாதாந்த சம்பளத்தை பணியாளர்களுக்குத்
தாமதமின்றி வழங்குவதுடன் அவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விரும்பும்
பொருத்தமான இருப்பிட வசதிகளும் அவர்கள் இளைப்பாறும் பொருட்டு நாளாந்தம்
ஆகக் குறைந்தது ஒன்பது மணித்தியால ஓய்வும் வழங்க வேண்டுமெனவும்
தெரிவித்தார்.
இத்தகைய புதிய வழி முறைகளின் கீழ் பணியாளர்கள் இரண்டு வருட கால சேவையின்
பின்னர் சுகவீன விடுப்பு மற்றும் ஒரு மாத கால சம்பளத்துடனான பருவ விடுமுறை
மற்றும் நான்கு வருட கால சேவையின் பின்னர் ஒருமாத கால சம்பளத் தொகைக்குச்
சமனான சேவையின் முடிவிலான ஈட்டுத் தொகை ஆகியவற்றை பெற்றுக் கொள்ள
உரித்துடையவராவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனது வீட்டு எஜமானின் குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில்
இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண்ணாண ரிஸானா நபீக்கை அமெரிக்க ஆதரவு
பெற்ற சவூதி அரேபிய அரசு சிரச்சேதம் செய்ததை அடுத்து வெளிநாட்டு வீட்டுப்
பணியாளர்களை நடத்தும் விதம் குறித்து இந்த வருட முற்பகுதியில் சவூதி
அரேபியா சர்வதேசத்திடமிருந்து வசைப்பெயரை வாங்கியிருந்தது.
மனித உரிமைகள் காப்பகம் இது குறித்து வெளியிட்டிருந்தஅறிக்கையொன்றில்
சவூதி அதிகாரிகள் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கவென ரிஸானாவை சிறையில்பூட்டி
வைத்தனர்’’ எனக் குற்றம் சுமத்தியிருந்தது. ரிஸானாவுக்கு மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டதையடுத்து இலங்கை அரசாங்கம் தனது தூதுவரைத் திருப்பி
அழைத்திருந்தது.
சவூதி அரேபியாவில் பணியாற்றி வரும் சுமார் எட்டு மில்லியன்
வெளிநாட்டுப் பணியாளர்களில் அதிகமானோர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களென்பது
குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி
மெட்ராஸ் கஃபே படத்தை தடை செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்
18/07/2013 மெட்ராஸ் கபே என்ற இந்திப் படத்தை தமிழகத்தில் தடை செய்யக் கோரி
இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாகவும், தமிழர்
பண்பாட்டு நடுவத்தின் சார்பாகவும் , தமிழீழ விடுதலைக்கான மாணவர்
கூட்டமைப்பு சார்பாகவும் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகள் காவல்துறை ஆணையர்
அலுவலகம் முன்பு பெரும்திரளாக நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெளியாகவிருக்கும் மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி,
தமிழர் பண்பாட்டு நடுவம் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர் முன்னரே பார்க்க
வலியுறுத்தியும் அப்படத்தை தடை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு கீழ்கண்ட மனு கொடுக்கப்பட்டது . அந்த மனுவில், ’’தமிழகம்
உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியாகவிருக்கும் "மெட்ராஸ் கபே" என்ற
திரைப்படம் ஈழ விடுதலையை ஆதரிக்கும் "விடுதலை புலிகள்" அமைப்பை
தீவிரவாதிகளாகவும், அதிலுள்ள தமிழர்களும் தீவிரவாதிகளாகவும் கேடயமாகவும்
சித்தரித்திருப்பதாக அவர்கள் வெளியிட்ட முன்னோட்ட காட்சி மூலம்
சந்தேகிக்கிறோம்.
தமிழர்களை தீவிரவாதிகளாக வெளி உலகிற்கு காட்ட முயலுவதை நாம் தமிழர்
கட்சியோ, தமிழ் மக்களோ, தமிழர்களுக்காக இயங்கும் அமைப்புகளோ ஒரு போதும்
ஏற்று கொள்ளாது.
ஏற்கனவே "டேம் 999" திரைப்படத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை
பரப்பியபோது சர்ச்சை ஏற்பட்டு அப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது
அறிந்ததே. அதே போல் "விஸ்பரூபம்" என்ற படமும் தடை செய்யப்பட்டு
சர்ச்சைகுரிய காட்சிகள் நீக்கப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது.
அதே போல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்று இருக்குமேயாயின்
தமிழர்கள் நலன் சார்ந்து அப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க
வேண்டும். அப்படம் வெளியாவதற்கு முன் தமிழ் அமைப்பு நிர்வாகிகளுக்கு படம்
திரையிட்டு காட்டப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்’’என்று
குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் , இது குறித்து அரசுக்கு
தெரிவிக்கப்படும் என்றும் மேற்கொண்டு படத்தை தடை செய்ய நீதி மன்றத்தை
அணுகலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
தமிழக முதல்வர் இந்த விடயத்தில் உடனே நடவடிக்கை எடுக்குமாறு தமிழர்
அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன. இப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால்
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் திரை அரங்கத்தில் உள்ள திரைகள்
கிழிக்கப் படும் என்றும் மாணவர் அமைப்புகள் தெரிவித்தன. எனவே இப்படம்
தமிழகத்தில் திரையிடா வண்ணம் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என
தமிழ் அமைப்புகள் அறிவுறுத்தின. நன்றி வீரகேசரி
இன்று (18/07/2013) 95 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் மண்டேலா
தென்னாபிரிக்க முன்னாள் நெல்சன் மண்டேலா இன்று தனது 95வது பிறந்தநாளை கொண்டாடினார்.
நெல்சன் மண்டேலா நுரையீரல் கோளாறு காரணமாக கடந்த மாதம் ப்ரிடோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இடையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.
தற்போது மண்டேலாவின் உடல் நிலை தேறி வருகிறது. இந்நிலையில்அவர் இன்று தனது 95வது பிறந்தநாளை மருத்துவமனையில் கொண்டாடினார்.
அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மண்டேலா தனது படுக்கையில் இருந்தவாறு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாக அவரது பேரன் நிதாபா தெரிவித்துள்ளார்.
மண்டேலாவின் பிறந்தநாளை தென்னாப்பிரிக்க மக்கள் உற்சாகமாக கொண்டாடினர் நன்றி வீரகேசரி
பங்களாதேஷில் இஸ்லாமிய கட்சியின் சிரேஷ்ட தலைவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு
பங்களாதேஷில் இஸ்லாமிய கட்சி யொன்றின் சிரேஷ்ட தலைவர்
ஒருவருக்கு 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான சுதந்திரப் போரின் போது
மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பில் தூக்குத்தண்டனை விதித்து
அந்நாட்டு விசேட நீதிமன்றமொன்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ஜமாத்
– ஈ – இஸ்லாமி கட்சியின் செயலாளர் நாயகம் அலி அஷன் மொஜாஹீத்திற்கு
(65 வயது) தலைநகரிலுள்ள நீதிமன்றமொன்று மேற்படி தீர்ப்பை
அளித்துள்ளது.
ஊடகவியலாளர் ஒருவர், இசையமைப்பாளர் ஒருவர்
மற்றும் பலரைக் கடத்திச் சென்று படுகொலை செய்த விவகாரத்தில் மொஜாஹீத்தை
குற்றவாளியாக நீதிமன்றம் இனங்கண்டு மேற்படி தீர்ப்பை
வழங்கியுள்ளது.
அவர் மீது படுகொலை, கடத்தல் உட்பட 7 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அவர்
போர்க் காலத்தில் அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குழுவொன்றுக்கு
தலைமை தாங்கி ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள்
ஆகியோரை கடத்திச் சென்று படுகொலை செய்ததாக
குற்றஞ்சாட்டப்படுகிறது.
சுதந்திரப் போரின் போது
பாகிஸ்தானிய இராணுவத்தினரால் 3 மில்லியன் பேர் கொல்லப்பட்டும்
200,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டும் உள்ளதாக
பங்களாதேஷ் கூறுகிறது.
கடந்த திங்கட்கிழமை ஜமாத் – ஈ –
இஸ்லாமி கட்சியின் ஆன்மீக தலைவரான குலாம் அஸாமிற்கு 90 வருட
சிறைத்தண்டனை விதித்து டாக்காவிலுள்ள சர்வதேச குற்றங்கள்
தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி
தீர்ப்பையடுத்து அந்த கட்சியின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது இடம்பெற்ற வன்முறைகளில்
குறைந்தது 5 பேர் பலியாகியுள்ளனர். நன்றி வீரகேசரி
|
No comments:
Post a Comment