இயல்புகளே மனிதர்களின் அடிப்படை அழகு -முருகபூபதி

இயல்புகளே  மனிதர்களின்  அடிப்படை  அழகு
மூத்த  பத்திரிகையாளர்  அமரர் டேவிட் ராஜூ நினைவுகள்



 கொழும்பு பொரளையிலிருக்கும் கனத்தை மயானத்துக்கு இதுவரையில் இரண்டு தடவைகள்தான்  சென்றிருக்கின்றேன். முதல் தடவை  1982  இறுதியில் பேராசிரியர் கைலாசபதியின் இறுதிச்சடங்கு.
 இரண்டாவது  தடவை சுமார் 28 வருடங்களின் பின்னர் 2010 இறுதியில் -- நாம் நடத்திய சர்வதேச மாநாட்டுப்பணிகளுக்காக இலங்கை  வந்தபோது  ஊடகவியலாளர் டேவிட் ராஜூவின்  இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளச்சென்று  கனத்தை மயானத்தினுள் பிரவேசித்தேன்.
 கைலாசபதி இந்துவாக தகனமானார்.  டேவிட் ராஜூ கத்தோலிக்கராக அடக்கமானார்.
அந்தப்புதைகுழிக்கு  முன்பாக  பலரும் திரண்டிருக்க பாதிரியார் தமது உரையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.  அனைவரும் பொங்கிய சோகத்தை அடக்கியவாறு அமைதியாக நிற்கிறார்கள். டேவிட் ராஜூவின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்   கண்ணீர்  சொரிய அந்த நிகழ்வில் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்திக்கொண்டிருந்தார்கள்.
 நான் சற்றுத்தள்ளி  தலைகுனிந்தவாறு  சில மனித எலும்புத்துண்டுகளையும்  எலும்பு எச்சங்களையும்  பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.
 புதைகுழி  தோண்டப்பட்டபோதோ அல்லது அதற்கு முன்னமிருந்தோ அந்த எலும்புத்துண்டங்கள் நிலத்திலிருந்து  வெளிப்பட்டிருக்கலாம். ஒரு பரம ஏழையினதோ பெரும் செல்வந்தரினதோ  படிப்பறிவில்லாத  பாமரனினதோ எவருக்கும் பயனற்ற ஒரு போக்கிரியினதோ அல்லது ஒரு அறிஞனுடையதாகவோ  அந்த எலும்பு எச்சங்கள் இருக்கலாம்.
  ஆடி அடங்கும்  வாழ்க்கையடா… ஆறடி  நிலமே  சொந்தமடா… என்று ஒரு பாடல் நீர்க்குமிழி படத்தில் வரும்.  டேவிட் ராஜூவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது எனக்கு அந்தப்பாடல்தான் நினைவுக்கு  வந்து ‘சுடலை ஞானம்’ உதித்தது.




 நான் சந்தித்த பல மனிதர்களில் டேவிட் ராஜூ மிகவும் வித்தியாசமானவர். அவருக்குள் மட்டுமல்ல அவரைச்சுற்றியும்  சோகங்கள் நிரம்பியிருந்தன.  மனைவியை இழந்தார். மகன் கடலில் நீந்தச்சென்று  மறைந்தான். ஒரு மகள் எதிர்பாரத விதமாக இறந்தார். இப்படியாக வாழ்நாளில்  இழப்புகளை அவருக்குத்  தந்த இறைவன்ää அவரை அவரது மறைவின்போதும் விட்டு வைக்கவில்லை. அவர் இலங்கையில் மரணித்த வேளையில் சிங்கப்பூரில் அவரது மருமகன் (மற்றுமொரு மகளின் கணவர்) திடீரென்று இறந்தார்.
 துயரங்களையும்  இழப்புகளையும்  தாங்கிக்கொள்ளும்  அவரது  மனவலிமையை நாம் முன்னுதாரணமாகக்கொள்ளலாம்.
 1972 ஆம் ஆண்டு வீரகேசரியின் நீர்கொழும்பு நிருபராக நான் பணியாற்றிக்கொண்டிருந்த காலப்பகுதியில் டேவிட் ராஜூ செய்தி ஆசிரியராக பணியிலிருந்தார். 1977 இல் அங்கு ஒப்புநோக்காளராக பிரவேசித்தபோதும் அதே பணியிலிருந்தார்.
 வீரகேசரியின் பிரதம ஆசிரியராக வருவதற்குரிய அனைத்து தகுதிகளும் ஆற்றலும் அவருக்கிருந்தது. ஆனால் 1983 இனச்சங்காரத்தின் பின்பு அக்காலப்பகுதியில் பிரதம ஆசிரியராகவிருந்த க. சிவப்பிரகாசம் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த பின்னர்ää அந்தப்பதவிக்கு வந்திருக்கவேண்டியவர்  டேவிட் ராஜூ.
 ஆசிரிய பீடத்தில் சிவப்பிரகாசம் அவர்களுக்கு அனைத்து ஊழியர்கள் சார்பிலான பிரிவுபசாரம் டேவிட் ராஜூ தலைமையில் நடந்தது. அந்நிகழ்வில் ஒப்புநோக்காளர் தரப்பில் பேசியதுடன் அங்கு பணியிலிருந்த சிங்கள ஊழியர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சிங்களத்திலும் சில வார்த்தைகள் பேசினேன்.
 1983 அமளி வீரகேசரியையும் சற்று பாதித்தது. பிரதம ஆசிரியரின் வெள்ளவத்தை வீடும் காரும் சேதமடைந்தது. ஊழியர்கள் சிலரும் அகதிகளாக பம்பலப்பிட்டியில் தஞ்சமடைந்தனர். நிலைமை சீரடைந்து பிரதம ஆசிரியர் விடைபெறும்போது படிப்படியாக பலரும் நாட்டின் நிலை கருதி வெளியேறக்கூடும் என்ற அச்சத்தில் குறிப்பிட்ட பிரிவுபசார நிகழ்வில் பேசிய ஒரு ஊழியர் வீரகேசரியின் எதிர்காலம் குறித்து தனது கவலையை வெளியிட்டார்.
 உடனே அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த டேவிட் ராஜூää அங்கிருந்த நிருவாக இயக்குநர் வென்ஸஸ் லாஸ் அவர்களின் மனதை குளிர்விக்கும்வகையில்  “வீரகேசரி என்ற கப்பல் சூறாவளியினால் தத்தளித்தாலும் எம்மிடமிருக்கும் மாலுமி அதனை சாதுரியமாக செலுத்துவார்.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 ஆனால் சில மாதங்களில் நம்பிக்கை வழங்கிய டேவிட் ராஜூää நிருவாகத்தில் நம்பிக்கையற்று வேலையை விட்டு விலகி மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தொழிலைத்தேடிச்சென்றார்.
 அவருக்குக்கிட்டவிருந்த பிரதம ஆசிரியர் பதவிக்காக நிருவாகம்  விளம்பரம் வெளியிட்டு ஆ. சிவநேசச்செல்வனை  தெரிவுசெய்து  நியமித்தது.
 அக்காலப்பகுதியில்  பட்டதாரிகளை ஆசிரியபீடத்தில் நியமிக்கும்  புதிய கலாசாரம் ஒன்றை நிருவாகம்  அறிமுகப்படுத்தியது. டேவிட் ராஜூவை அவரது சேவைக்காலத்தை கவனத்தில் எடுத்து இணை ஆசிரியராக அல்லது பதில் ஆசிரியராக  வைத்திருக்க நிருவாகம் விரும்பியிருந்தது. ஆனால்  பிரதம ஆசிரியராக்க  விரும்பாதமைக்கு அவர் பட்டதாரி அல்ல என்பது மட்டும் காரணம் இல்லை.
 தினமும் வீரகேசரிக்கும் மித்திரனுக்கும் எளியநடையில் வாசகர்கள் புரிந்துகொள்ளத்தக்கவாறு   ஆசிரியத்தலையங்கம் எழுதுவார். அத்துடன் ‘உள்ளதைச்சொல்வேன்’ என்ற சிறிய பத்தியையும் எழுதிவந்தார். அன்றாடச்சம்பவங்களை இரத்தினச்சுருக்கமாக சுவாரஸ்யம் குன்றாமல் எழுதுவார். அந்தப்பத்தி எழுத்துக்கு அவ்வப்போது  தகவல் சொல்வேன். ஆர்வத்துடன் குறித்துவைத்து இரண்டொருநாளில் எழுதிவிடுவார்.  இப்படி  பலரிடமிருந்தும் தகவல்சேகரித்துக்கொள்ளும் அவரது இயல்பு என்னைப்பெரிதும் கவர்ந்தது.
இவ்வாறு   தகவல்சேகரித்தே   விரிவான ஆய்வுக்கட்டுரைகள்   எழுதுபவர்கள் எம்மத்தியிலிருக்கிறார்கள். டேவிட்ராஜூ  ஆய்வுகள் எழுதியவர் அல்ல. ஒரு செய்தியை எவ்வாறு  எழுதவேண்டும் அதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று நிருபர்களுக்குச்   சொல்லிக்கொடுப்பார்.
அவ்வாறு  சொல்லிக்கொடுக்கும்போதும்  சுவாரஸ்யமாகப்  பேசுவார்.
ரயில்கடவை   இல்லாத   இடத்தில் விபத்து  நடந்திருந்தால்ää அந்த இடத்தில் ரயில்கடவை இல்லை என்பதையே வலியுறுத்துமாறு சொல்வார். போக்குவரத்து அமைச்சின் கவனத்தை ஈர்ப்பதற்கும்  விபத்துக்களை   தடுப்பதற்கும்   அந்தச்செய்தி உதவவேண்டும் என்பதுதான் அவரின் விளக்கம். இப்படி எத்தனையோ ஆலோசனைகளை அலுவலகத்திற்கு வரும் பிரதேச  நிருபர்களுக்கு சொல்வார்.
கண்டியில் அமைந்திருந்த வீரகேசரி கிளைக்காரியாலயத்தில்தான் இவரது பத்திரிகை உலகப்பணி ஆரம்பமானது. படிப்படியாக சிரேஷ்ட செய்தி ஆசிரியர் தரத்திற்கு உயர்ந்தார்.
மல்லிகை 2002   நவம்பர் இதழ் முகப்பை அலங்கரித்தவர் டேவிட்ராஜூ. இவரைப்பற்றி நண்பர்  தெளிவத்தை ஜோசப் அந்த இதழில் குறிப்பிடுகையில்ää “ ஏறத்தாழ முப்பது வருடங்கள்   அவரது   அயராத   உழைப்பால்   செழுமையடைந்திருக்கிறது  வீரகேசரி. (1956-1984) முப்பது வருடம் என்பது ஒரு மனிதனின் சராசரி வயதில் அரைவாசியாகும். தன்னுடைய   வாழ்வின்  சத்தான   இளமைக்காலங்களை   வீரகேசரியின்   வளர்ச்சிக்காக   அர்ப்பணித்துள்ள   டேவிட் ராஜூ அவர்களைப்பற்றி  நாமும்   நமது   இளையதலைமுறையினரும்   அறிந்திருக்கவேண்டியது  அவசியமாகும்.” என்று குறிப்பிடுகிறார்.
டேவிட் ராஜூவுடன் நாம் பணியாற்றிய காலங்களில் ஊடகத்துறைக்கான பயில் அரங்குகள் அபூர்வம். ஊடகக்கல்லூரிகளும் இல்லாத காலம். கொழும்பு – 7 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக்கல்லூரியில்   எப்போதாவது   பயிற்சிப்பட்டறைகள் நடக்கும்.
ஆனால்   இன்று  நிலைமை முற்றாக மாறிவிட்டது. ஊடகவியலாளர்களுக்கான அமைப்புகள் அதிகரித்துள்ளன.  ஊடகக்கல்லூரிகள்  இயங்குகின்றன.  ஊடக சுதந்திரத்திற்காக போராட்டங்கள்   தொடருகின்றன.   ஊடகத்துறையில்  விசேட சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள்   வழங்கப்படுகின்றன.
தினமும்   கொட்டாஞ்சேனையில்  செல்லமஹால்  தியேட்டருக்கு சமீபமாக  இருந்த தனது வீட்டிலிருந்து  காலையில் கடமைக்கு நடந்தே வருவார். மதியம் உணவுவேளைக்கும் நடந்தே செல்வார்.   மாலையில்  வெளியூர் பதிப்பு அச்சுக்குத்தயாரானதும்  இறுதிப்புரூஃப் பார்த்து முதலாவது  பிரதியில்  சிலகணங்கள் கண்ணோட்டம் விட்டு விட்டு மீண்டும் கால்நடையாகவே   வீட்டுக்குத்திரும்புவார்.
அவ்வாறு   நடக்கும்போதே   அடுத்தநாள்  ஆசிரியத்தலையங்கம்   மற்றும் உள்ளதைச்சொல்வேன்   பத்திக்கான   விடயதானத்தை மனதுக்குள் அசைபோட்டவாறே கைகளை வீசிக்கொண்டு  நேர்கொண்ட   பார்வையில் நடப்பார்.
முதல்நாள்  வெளியான  முக்கிய செய்தியின்  பின்னணியில் மறுநாளுக்கான ஆசிரியத்தலையங்கம்   அவரது சிந்தனையில் மலர்ந்துவிடும். அவரது ஆசிரியத்தலையங்கங்களை   ஒப்புநோக்கிய   பாக்கியம்   எனக்கும்   இருந்திருக்கிறது என்பதை அவரது மறைவின்   பின்பு   பெருமையாக   நான்   நினைப்பதும்  மனித இயல்புதான்.
இலங்கையில்  2004 இறுதியில் சுனாமி கடற்கோள் வந்தபோது அவுஸ்திரேலியாவில் அன்பர்கள் வழங்கிய   உடைகள்ää உலர் உணவுகள்ää படுக்கை விரிப்புகள் கோரைப்பாய்கள் உட்பட   பெருந்தொகையான பொருட்களுடன்   இரண்டு கொல்கலன்களை கப்பலில் அனுப்பிவிட்டுää   அதனை சுங்க இலாகாவிடமிருந்து மீட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேர்ப்பிப்பதற்காக   நான்  பலநாட்கள் அலைந்தபோதுää  ஒருநாள் தினக்குரல் பணிமனையில் அவரைச்சந்தித்தேன்.
கொல்கலன்களுக்கும்  அதனை அனுப்புவதற்குமாகச்செலவிட்ட  சுமார் ஐந்தாயிரம் அவுஸ்திரேலியன் டொலர்களில் இலங்கையில் கொழும்பிலேயே பொருட்களை வாங்கி லொறிகளில் ஏற்றி திட்டமிட்டவாறு சீராக பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்திருக்கலாம். உமது அலைச்சலைப்பார்த்தால் கவலையாக இருக்கிறது. என்று சொல்லிவிட்டு சில ஆலோசனைகளையும்  தந்தார். அவரது ஆலோசனைப்பிரகாரம் சில அமைச்சர்களுடனும் தொலைபேசியில்   உரையாடினேன். எப்படியோ   விநியோகத்தை  முடித்துவிட்டு நண்பர் ராஜஸ்ரீகாந்தன்   நினைவாக நான் எழுதியிருந்த நினைவு நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வருமாறு  அவருக்கு அழைப்பிதழ் கொடுத்தேன்.
என்னை ஆச்சரியத்துடன் மேலும் கீழும் பார்த்தார்.
“ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். ஒரே பயணத்தில் இரண்டு நல்லபணிகளை செய்கிறீர். நீர் நன்றாக இருக்கவேண்டும்” என்று தலையில் கைவைத்து வாழ்த்தினார். ராஜஸ்ரீகாந்தனும்  ஊடகவியலாளராக   தினகரனில் பிரதம ஆசிரியராக பணியாற்றியவர்.
“ நீர்… அழைக்கவேண்டிய அவசியம் இல்லை. இதில் கலந்துகொள்வதன் மூலம் ஒரு மறைந்த பத்திரிகையாளனுக்கு   நாம்  மரியாதை செலுத்தவேண்டும்.” என்று சொன்னதுடன் நில்லாமல்  தமிழ்ச்சங்கத்திற்கு வந்து நிகழ்வில் கலந்துகொண்டார்.   இத்தனைக்கு அவர் அந்நிகழ்வில் பேசவில்லை.   பார்வையாளராகவே   வந்து   ராஜஸ்ரீகாந்தனுக்கு மரியாதை தந்தார்.
  அந்நிகழ்வில் நான் நிகழ்த்திய உரையை செவிமடுத்து இரண்டு நாட்களில் தினக்குரலில் (01-03-2005)  தனது ‘ஒளிவு மறைவின்றி’   என்னும் பத்தியில்ää இவ்வாறு எழுதியிருந்தார்.
மறைந்த   எழுத்தாளரும்   பத்திரிகையாளருமான   ராஜ ஸ்ரீகாந்தனின் நினைவுகளைப்பதிவு   செய்து   எழுத்தாளர்   முருகபூபதி ஆக்கிய நூலின் வெளியீட்டுவிழாவுக்குச்   சென்றிருந்தேன்.   அவுஸ்திரேலியாவில்   வாழும்  முருகபூபதி இங்கு வந்திருக்கும்   வேளையில் இலக்கிய நட்பின் நிமித்தம்ää ‘ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் நூலை   வெளியிட்டிருப்பது   பாராட்டத்தக்கது.
முருகபூபதி   அங்கு பேசுகையில்   இக்காலத்தில் கடிதங்கள் எழுதித் தபாலில் சேர்க்கும் பழக்கம் மிக அருகிவருகிறது. தகவல்களை இணையத்தின் மூலம் பரிமாறிக்கொள்ளுகிறார்கள்.   ஒரு   காலத்தில்   தபால்   முத்திரைகள் நூதனசாலையில்   இடம்பெற்றுவிடும்.  ஆனால் நண்பர் ராஜஸ்ரீகாந்தன் எனக்கு கடிதம் கடிதமாக   எழுதிக்கொண்டிருந்தார்   என்று   குறிப்பிட்டார்.
 ஒவ்வொரு   காலகட்டத்தினதும்   நிகழ்வுகளை   திரையிடும்   அவரின் கடிதங்கள் இந்நூலில  ; இடம்பெற்றிருப்பது   குறிப்பிடத்தக்கது.
 அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிய பின்னர் இந்தப்பத்தியை படித்து பத்திரமாக வைத்திருக்கின்றேன்.
 அவரது மறைவின் பின்னர் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நண்பர்கள் பாரதிää நிக்சன் அனந்த பாலகிட்ணர் ஆகியோர் ஒழுங்கு செய்திருந்த  இரங்கல் கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினேன். எனினும் அவருடன் பணியாற்றிய அவரை நன்கு தெரிந்த பலர் அந்த நிகழ்வில் கணிசமாக கலந்துகொள்ளவில்லை   என்பது மிகுந்த ஏமாற்றத்தையும்  கவலையையும்   தந்தது.
சமீபத்தில் சகோதரி அன்னலட்சுமி   இராஜதுரை எழுதியிருந்த  நினைவுப்பெருவெளி நூல் எனது பார்வைக்குக்கிடைத்தது.  அதில் 16 ஆவது அத்தியாயத்தில் டேவிட் ராஜூ பற்றி நாம் அறிந்திராத சில பக்கங்களையும் பதிவுசெய்துள்ளார். தற்காலத்தில் தமிழ் ஊடகத்துறையில் பயிலவரும் இளம்தலைமுறையினரும் புதிதாக இந்தத்துறையில் காலடி வைக்கவிரும்புபவர்களும்   இந்நூலை   படிப்பது  நன்று. அத்துடன் டேவிட்ராஜூவின் நினைவாக   தமிழ் ஊடகத்துறையினர் நிகழ்வுகளை நடத்தி பயிற்;சிப்பத்திரிகையாளர்களுக்கு   பயிலரங்குகளை   ஒழுங்குசெய்யலாம்.
2009 ஜனவரியில் நான் கனடாவில் நின்றபோது அவரது மகள் ஒருவர் காலமான செய்தி அறிந்து அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு துயரத்தில் பங்குகொண்டபோது அவர் தனது துயரத்தை வெளிப்படுத்தாமல் எனது சுகநலன் விசாரித்த விந்தையான மனிதர். ‘அவரது நிதானம் முன்மாதிரியானது’ என்று அவருடன் நன்கு பழகிய நண்பர் தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் சொல்வார்.
வாழ்வு   என்பது  மரணம்  தாமதித்தால் நெடிய பயணம்தான். அதில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம்  பெற்றுக்கொள்ளவேண்டிய  நட்பு அன்பு  உறவு  என்பவற்றுக்கெல்லாம் அப்பால்  அவர்களின்   இயல்புகள்தான்  எமக்கு பாடமாகவும்  முன்மாதிரியாகவும் இருக்கும் என நம்புகின்றேன்.
இயல்புகள்தானே  ஒருவரின்  அடிப்படை  அழகு.

No comments: