தமிழ் சினிமா
அன்னக்கொடி

இயக்குனர் பாரதிராஜா மண்வாசனை நிறைந்த கதையம்சத்துடன் அன்னக்கொடி திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற பெயரில் படத்தை தொடங்கிய பாரதிராஜா என்ன காரணத்தினாலோ அன்னக்கொடி என்று பெயர் மாற்றிவிட்டார்.
செருப்புத் தைக்கும் தொழிலாளி மகன் கொடிவீரனுக்கும் (லட்சுமணன்) சாராயம் காய்ச்சி விற்பவளின் மகளான அன்னக்கொடிக்கும் (கார்த்திகா) ஆடும் மேய்க்கப் போன இடத்தில் காதல் மலர்கிறது.
அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து ஊரையே வளைத்து போடுவது மட்டுமல்லாமல் அவர்களிடம் பணம் வாங்கியவரின் மனைவியை அபகரிக்கும் கொடூர மனம் படைத்தவரின் மகனாக வருகிறார் சடையன் (மனோஜ்).
அன்னக்கொடியின் தாயார் சடையனிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறார். இதனை வாங்குவதற்காக அன்னக்கொடியின் வீட்டிற்கு சென்ற சடையன் அவளது அழகில் மயங்கி அவளை வாழ்க்கை துணையாக்க நினைக்கிறான்.
இதற்கிடையில் கொடிவீரன் தன் தந்தையுடன் அன்னக்கொடி வீட்டிற்கு அவளை பெண் கேட்டு செல்கிறான்.
ஒரு தாழ்ந்த சாதிக்காரப் பையன் தன் வீட்டிற்கு பெண் கேட்டு வருவதற்கு என்ன தைரியம் என்று அவர்கள் மீது சாணியை கரைத்து ஊற்றி அவமானப்படுத்திவிடுகிறாள் அன்னக்கொடியின் தாயார்.
இதனால் கோபம் கொண்ட கொடிவீரன் அன்னக்கொடியின் தாயாரை எட்டி உதைக்கிறான்.
இதனை அறிந்த சடையன் இச்சந்தர்ப்பத்தினை நயவஞ்சமாக பயன்படுத்திக்கொண்டு தனக்கு அடிமையான பொலிசின் உதவியுடன் கொடிவீரன் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரையும் சிறையில் தள்ளுகிறான்.
சிறையில் தள்ளப்பட்ட கொடிவீரனுக்கு 6 மாதமும் அவரது தந்தைக்கு 2 மாதமும் சிறைத்தண்டனை விதிக்கிறார்கள்.
இதற்கிடையில் அன்னக்கொடியின் தாயார் இறந்துவிடுகிறார். எனவே அவர் வாங்கிய கடனை திருப்பித் தராததால் அன்னக்கொடியை அடைய துடிக்கிறார் சடையன்.
இறுதியில் சிறையிலிருந்து திரும்பும் கொடிவீரன் அன்னக்கொடியை மணப்பானா? அல்லது சடையனுக்கு அன்னக்கொடி உரித்தாவாளா? என்ற விறுவிறுப்புடன் மீதிக்கதை தொடர்கிறது.
இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கும் லட்சுமணன் புதுமுக அறிமுகம். நடிப்பில் கொஞ்சம் தேர்ந்துள்ளார். ஆனால் புதுமுகம் என்பதை அவ்வப்போது தன் முகத்தில் காட்டிக்கொள்கிறார்.
நாயகியாக கார்த்திகா கோ படத்தில் மாடர்னாக நடித்த இவர் இப்படத்தில் அப்படியே கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். கதாபாத்திரத்திற்கு பொறுத்தமாக உள்ளார்.
படத்தின் வில்லனாக வரும் மனோஜ், முதன் முதலான வில்லன் கதாபாத்திரம் என்பதால் கொஞ்சம் வில்லத்தனம் காட்டியிருக்கலாம்.
ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய வழக்கமான இசைவிருந்தை அளிக்கவில்லை போல் தெரிகிறது, பின்னணி இசையும் சுமார் ரகம் தான்.
வழக்கமான தன்னுடைய கிராமத்து விருந்தை மக்களுக்கு அளிக்க முயற்சி செய்துள்ளார் பாரதிராஜா என்று தான் சொல்லவேண்டும்.
நடிப்பு: லட்சுமணன், மனோஜ், கார்த்திகா
இசை: ஜி.வி..பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சாலை சகாதேவன்
தயாரிப்பு: மனோஜ் கிரியேஷன்ஸ்
இயக்கம்: பாரதிராஜா
நன்றி விடுப்பு 

No comments: