போராட்டக் கதிரையா அன்றி கதிரைப் போராட்டமா?

.
வடக்கு மாகாண சபைத் தேர்தலும் கூட்டமைப்பின் ‘முதல்வர்’ தெரிவும்!

-குந்தவிதேவி-

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நீண்ட காலமாக பல தரப்பினராலும் மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒன்றாகும்.  இந்த ஆவலுக்கான காரணங்கள் பலவாகும். ஏனைய ஏழு மாகாண சபைகளதும் அதிகாரம் ஆளுங்கட்சியிடமே உள்ளது. என்னதான் தில்லுமுல்லுப் பண்ணினாலும் வடக்கின் அதிகாரம் ஆளுங்கட்சிக்கு எட்டப் போவதில்லை என்பது முடிந்த முடிவாகும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போதே இதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கின. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உதவியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு நிச்சயமான போதிலும் அது தவற விடப்பட்டது. ஆனால் வடக்கில் கூட்டமைப்பு தனித்தே அதிகாரத்தைக் கைப்பற்றும் என்பதால் தான்  எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

செப்டெம்பரில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தேர்தலின் முடிவினைப் பலரும் பலவேறு காரணங்களுக்காக எதிர்பார்க்கின்றனர். தென்னிலங்கை மட்டுமின்றி, புலம் பெயர் தமிழர்களும் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தத்தமது சொந்தக் காரணங்களுக்காக இந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக வெளிநாட்டுத் தூதரகங்கள் இப்போதே நாடிபிடித்துப் பார்க்கும் பணியை ஆரம்பித்துவிட்டன.

இந்த நிலையில் தான், கூட்டமைப்பு யாரை முதன்மை வேட்பாளராக அதாவது முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும் என்பதில் பல்வேறு ஆரூடங்கள் கூறப்படுகின்றன. இந்த வேட்பாளர் தெரிவு கூட்டமைப்பின் ஒருமித்த செயற்பாட்டுக்கு வேட்டு வைத்துவிடக் கூடாது என்பதில் உண்மையாகவே அக்கறை கொண்டோர் ‘கட்சிக்கு அப்பால் நின்று’ தெரிவு இடம்பெற வேண்டும் என்பதில் கரிசனை கொண்டுள்ளனர். இதன் அவசியத்தைக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் நன்கறிந்துள்ளார் போலவே தெரிகின்றது.

ஆனாலும் இந்த முதலமைச்சர் பதவி என்பது வெறுமனே கதிரையை அலங்கரிப்பதற்காகவும் பல்வேறு சலுகைகைளையும் வசதிகளையும் பெறுவதற்காகவும் பயன்படுத்தப்படும் ஒன்றாகவே ஏனைய எட்டு மாகாணங்களிலும் இருந்து வருகின்றது. அவ்விதமே வடக்கிலும் இருக்கப் போவதானால் அதற்குக் கூட்டமைப்பின் முதல்வர் தேவைப்படாது. எதிர்பார்ப்புக்களுக்கும் நியாயமிருக்காது. மாறாக,  இந்தப் பதவியை ஒரு போராட்ட முன்னெடுப்புக்கான கதிரையாகப் பாவிப்பதற்கு கூட்டமைப்புக்கு அரியதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

கதிரையை அலங்கரிப்பதற்காக அன்றி அப்பதவியைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியத்தின் ஆத்ம வேட்கையை வெளியுலகுக்கு வெளிப்படுத்தவும் மாற்றாந்தாய் மனப்பான்மைச் செயற்பாடுகளை பட்டவர்த்தனமாக்கவும் வல்லமை கொண்டோரையே கூட்டமைப்பு தனது முதன்மை வேட்பாளராகத் தெரிந்தெடுத்து நியமிக்க வேண்டும். இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் தமிழ்த் தேசியத்தை வரித்துக் கொண்டோர் மத்தியில் கிடையாது.

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த மனதுடன் அத்தகைய வேட்பாளரை நியமிக்க வேண்டிய தேவையும் உள்ளதும். ஆயினும் தமிழரசுக் கட்சியின் விருப்பைப் புறந்தள்ளி ஏனைய கட்சிகள் முதன்மை வேட்பாளரை முன்னிறுத்தவும் முடியாது.

இந்த அடிப்படையிலேயே, தற்போது கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக வரக்கூடியவர்களின் அடிப்படைத் தகுதிகள் பற்றி நாம் ஆராய வேண்டியுள்ளது. கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் எல்லாவற்றாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஆனால் அதே நேரத்தில் எந்தக் கட்சியுடனும் அடயாளப்படுத்தப்பட முடியாத ஒருவரையே கூட்டமைப்பு முதன்மை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதில் பொதுவான இணக்கப்பாடொன்றுக்கு கூட்டமைப்பு வந்துள்ளதாகத் தெரிகின்றது.

இந்த முடிவின் ஏமாற்றமே தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளையின் பெயரால் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கக் கோரி வெளியிடப்பட்ட பகிரங்க அறிக்கையாகும். ஆனால் கட்சியின் தலைமை வேறுவிதமாகச் சிந்தித்துள்ளதாகத் தெரிகின்றது. வெறுமனே கதிரை சம்பந்தப்பட்ட விடயமாயின் மாவையை நியமிப்பதில் பிரச்சனையில்லை என்றும் ஆனால் இந்தப் பதவி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சில திருப்புமுனைக் காட்சிகளுக்கான அத்திவாரமாக அமைய வேண்டும் என்பதுடன் அடுத்த சந்ததிக்காக போராட்டத்தை முன்னகர்த்தக் கூடிய ஆய்ந்தறிவுடையோரை இதில் அமர்த்துவதே உசிதம் என்றும் தலைமை சரியாகவே யோசித்துள்ளதாகத் தெரிகின்றது.

ஆனாலும் தமிழரசுக் கட்சியின் சார்பிலும் கூட்டமைப்புக்காகவும் தான் செய்ததாகக் கருதும் தியாகங்களின் அடிப்படையில் முதலமைச்சர் பதவியைத் தான் கோருவது நியாயமானதே என்று அடம்பிடிக்கும் மாவை தற்போது கூட்டுக் கட்சிகளின் தலைவர்களின் உதவியையும் நாடியுள்ளதாகத் தெரிகின்றது. முதலமைச்சர் தெரிவு உள்ளிருந்தே வரவேண்டும் என்ற புதிய பல்லவியை கூட்டுக் கட்சிகளின் தலைமைகள் மாவையின் சார்பில் பாடப் புறப்பட்டுள்ளமை சம்பந்தனுக்குப் புதிய தலையிடியாகத் தெரிகின்றது.

தமிழரசுக் கட்சியின் கையிலுள்ள முடிவுக்கு கட்சியின் பொதுச் செயலாளரே வேட்டுவைக்க முயலும் இந்த முயற்சியைக் கூட்டுக் கட்சிகளின் தலைமைகள் உள்ளாந்த புன்னகையுடன் வரவேற்கும் அதேவேளையில் கட்சிகளுக்கு அப்பால் இருந்து வேட்பாளரைக் கொண்டுவர வேண்டிய அவசியத்தை சம்பந்தன் தொடர்ந்தும் வலியுறுத்துவதற்கான நியாயத்தை தமிழ்த் தேசியவாதிகள் ஏற்றறுக் கொள்ள வேண்டிய நிலையினை மாவையின் நிலைப்பாடே தோற்றுவித்தும் உள்ளது.


அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவைத் திரட்டக் கூடியவர் என்றளவில் அவரது வாக்கு வங்கி திடமானதாக அமையுமாயினும்  அவர் முதலமைச்சராக வந்து இனிப் புதிதாக எதைச் சாதிக்கப் போகின்றார் என்ற வினாவிற்கான விடையையும் தேட வேண்டியுள்ளது. தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட எல்லாத் தரப்பினரும் தொடர்ந்தும் ஒரே பல்லவியை முதலமைச்சர் பதவியினூடாகக் கேட்பதிலும் கவனஞ் செலுத்துவர் என்று நம்புதற்கில்லை.

இதையிட்டே கூட்டமைப்புத் தலைமை கூடுதலாகக் கவலைப்படுவதாகத்  தெரிகின்றது. எனவேதான் புதிய வேட்பாளர் என்று சம்பந்தன் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. சம்பந்தனும் சுமந்திரனும் கூட்டமைப்பைக் கபளீகரம் செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்து மீளவும் பொது வேட்பாளர் நியமனம் உதவும் என்பதும் தலைமையின் கருத்தாக இருக்கலாம். இதன்படியே தலைமை இரண்டு பெயர்களைச் சிலாகித்துள்ளதாகத் தெரிகின்றது.

ஒருவர் ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள். மற்றையவர் கொழும்புப் பல்கலைக்கழகச் சட்டபீட பீடாதிபதி திரு.வி.ரி.தமிழ்மாறன் அவர்கள்.

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை ஆதியோடந்தமாக அறிந்து வைத்திருப்பவராகவும், தமிழ்த் தேசியத்தின்பால்  விடாப்பிடியான பற்றுறுதி கொண்டுள்ளவராகவும், அரசியலமைப்பு நிபுணத்துவம் வாய்ந்தவராகவும், சட்ட நுணுக்கங்களை நன்கறிந்து உரிய இடத்தில் உரியவாறு வாதிட வல்லவராகவும் பொதுமக்கள் மத்தியிலும் சர்வதேச ரீதியிலும் நன்கறியப்பட்டவராகவும் நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவராகவும், மொழிப்புலமை மிக்கவராகவும், தேர்ச்சிமிகு நிருவாக அனுபவமுள்ளவராகவும் இருக்கும் ஒருவரே இன்று தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்  முன்னிறுத்தப்பட வேண்டியவராவார்.

எனவே, தலைமை கையில் வைத்திருக்கும் இரண்டு பெயர்களில் மேலே கூறிய தகமைகளைக் கூடுதலாகக் கொண்டிருக்கும் பெயராளி யார் என்பதையிட்டு பொதுமக்கள் அதிக கவனஞ் செலுத்த வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இருவருமே சட்டத்துறையில் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர்கள். பட்டம், பதவிகளுக்காக யார் பின்னாலுஞ் சென்று கைகட்டிச் சேவகங் செயு;யும் கறை படியாதவர்கள். எவ்வித சலுகைகளுக்கும் வசதிகளுக்குமாக வளைந்து கொடுக்காதவர்கள். சகல மட்டங்களிலும் கௌரவத்துக்கும் நன்மதிப்புக்கும் உரியவர்களென ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள்.

இருப்பினும்,  இந்த இருவரில் ஒருவரே முதன்மை வேட்பாளர் என்று வரும்போது யார் மிகவும் பொருத்தமானவர் என்பதைத் தீர்மானிப்பது சற்றுக்கடினமாகவே இருக்கப் போகின்றது.

நீதியரசரைப் பொறுத்தளவில் முதலில் சாதகமான அம்சங்களைப் பார்ப்போம்:

1.      நீதியரசர் விக்னேஸ்வரனைப் பொறுத்தளவில் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர் என்பது அவரைப் பொறுத்தளவில் முதலாவது சாதகமான நிலைமையாகும்.
2.      உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்தவர் என்ற கௌரவம் புதிய பதவிக்கும் ஓர் அந்தஸ்தைப் பெற்றுத் தரும் என்பது மற்றொரு சாதக நிலையாகும்.
3.      அவரது தமிழ், ஆங்கில, சிங்கள மொழிப் புலமை நன்கறியப்பட்டதும் பாராட்டப்படுவதுமாகும். கொழும்;பில் கம்பன் கழகப் போசகராக இருந்து கொண்டு இலக்கியச் சொற்பொழிவாற்றி பலராலும் நன்கறியப்பட்டவர்.     
4.   போதிய சட்ட அறிவுள்ளவர்.
5.      யாழ்ப்பாண –திருமலை பரம்பரை குடும்ப உறவுகளைக் கொண்டவர்.
6.      ஆழ்ந்த சமயப் பற்றும் நேர்மைத் திறனுங் கொண்டவர்.
7.      தனது பதவிக் காலத்தில் சில கஸ்டங்களை எதிர்கொண்ட போதிலும் சமரசஞ் செய்யாது கடமையாற்றியவர்.
8.      தமிழ்த் தேசியத்தின்பால் நம்பிக்கை கொண்டவர் என்பதுடன் அதற்காக அண்மைக்காலமாகக் குரல்கொடுத்தும் வருபவர்.
9.      பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கிடப்பட்டோர் தொடர்பில் சட்ட வரம்புகளுக்குள் நின்றுகொண்டு தன்னால் இயன்றதைச் செய்ய முயன்றவர்.
10.    சுயநலம் கருதிச் செயற்பட்டதாக ஒருபோதுமே அறியப்படாதவர்.

இவை யாவுமே அவரது சாதகமான புள்ளிகளாயின் மறுபக்கத்தில் அவரது பாதக நிலைப்புள்ளிகளையும் கவனிக்க வேண்டும்.

1.    தமிழ்த் தேசியப் போராட்டத்தில் எவ்வகையிலும் நேர்மறையான பங்களிப்பினை வழங்கியவரல்ல. இதற்கு அவரது பதவியே காரணமாகும் என்பதை ஒப்புக் கொண்டாலும் தமிழ்த் தேசிய அரசியலில் இதற்கு முன்னரான அவரது பங்களிப்பு என்பது வெறுமனே ஏட்டளவிலேயே இருந்து வந்துள்ளது.
2.      நீதியரசர் என்ற பதவிவழியன்றி வேறு எவ்வித நிருவாகத்துறை அனுபவமும் அவருக்குக் கிடையாது.
3.      தமிழ்த் தேசிய அரசியலோடு சம்பந்தப்பட்ட சட்ட விடயங்களில் அவரது நேரடி ஈடுபாடென்று எதுவும் கிடையாது.
4.      சர்வதேச ரீதியில் எம்மவர் அரசியலோடு சம்பந்தப்படுத்தி அறியப்படாதவர்.
5.      நேரடியாகக் களத்திலிறங்கி மக்களின் குறைகளைக் கேட்கவும் கண்டறியவும் ஓடியாடி உழைக்கவும் கூடிய அளவுக்கு அவரது வயதும் உடல் நிலையும் இடம் கொடுக்கும் எனக் கூற முடியாது.

இனி, வாய்ப்புள்ள மற்றைய போட்டியாளர் திரு. வி.ரி.தமிழ்மாறன் அவர்களின் தகைமைகளைப் பார்ப்போம்:

1.      தற்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்ட பீடாதிபதியாக இருக்கும் இவர் கடந்த 30 வருடங்களுக்கு  மேலாகச் சட்டம் கற்பித்து வருபவர். தற்போது நிருவாகத்துறையிலும் ஈடுபட்டுள்hளார். மிகச் சிறந்த மனித உரிமைவாதி என்று சர்வதேச அரங்கில் நன்கறியப்பட்டவர். இராஜதந்திர வட்டாரங்களில் அடிக்கடி அபிப்பிராய பரிமாற்றங்களுக்காக அழைக்கப்படுபவர்.
2.      ஏராளமான சட்டத்தரணிகளையும் நீதிபதிகளையும் உருவாக்குவதில் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளார்.
3.      குறிப்பாக, இன்று வடக்கு கிழக்கில் சட்டத்துறையில் உள்ளவர்களில் நீதிபதிகள் உட்பட 90 வீதமானோர் இவரின் மாணவர்களே என்பது இவருக்குப் பெரியதொரு பலமாக உள்ளது. எந்தவித மத மற்றும் பிரதேச வாதங்களுக்கும் அப்பாற்பட்டவர்.
4.      தமிழ்த் தேசிய அரசியலை இயக்கங்கள் பொறுப்பெடுத்த காலப்பகுதிக்கு முன்னரேயே சுயநிர்ணய உரிமை பற்றியும் தேசிய இனங்களின் போராட்டங்கள் பற்றியும் கட்டுரைகள் எழுதியும் நூல்கள் வெளியிட்டும் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவரென்ற பாராட்டைப் பெற்றவர்.
5.      ஏராளமான சர்வதேச கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தேசிய இனங்களின் போராட்டங்கள் பற்றிய தத்துவார்த்த விளக்கங்களைக் கொடுத்தவர்.
6.      இலங்கையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டந் தொடர்பில் இவர் எழுதிய கட்டுரைகள் சர்வதேசச் சட்ட அறிஞர்கள் கவனத்தை ஈர்த்திருந்தமை பலராலும் சிலாகிக்கப்பட்டது.
7.      வாதத்திறமையில் பெயர் பெற்றதனால் தென்னிலங்கை அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மத்தியிலும் நன்மதிப்புப் பெற்றவர்.
8.      ஒரு காலத்தில் அரசியல் ஆலோசகர் இடத்தை நிரப்புவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டவர். தமிழ் மக்கள் சார்பிலும் பேச்சுவார்தையில் பங்குபற்றவும் அழைக்கப் பட்டவர்.
9.      கணிசமான அளவுக்குப் பொருளாதார ஆதரவைப் பெறக்கூடியவரும் செலவுகளைச் சமாளிக்கக் கூடிய அளவுக்கு ஆதரவாளர்களைக் கொண்டவரும்  என்பது பிரத்தியேகமான ஒரு பலமாகும். 
10.    தமிழ்த் தேசிய அரசியல் என்பது இவரது இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும் என்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வாழ்வதனால் பல்வேறு இடைஞ்சல்களுக்கு முகங்கொடுத்துத் தாக்குப் பிடித்தவர்.

11.    மும்மொழி ஆற்றல் கொண்ட இவரும் சிறந்த பேச்சாற்றல்  கொண்டவர் என்பது தேர்தல் களத்துக்கு இவரையும்  பொருத்தமானவராக்குகின்றது.  


இனி இவரது பலவீனமான பக்கங்களையும் பார்ப்போம்:

1.      நேரடி அரசியலில் இதுவரை ஈடுபட்டதில்லை. ஆதலால், கட்சி அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தேர்தல் செய்வது புதிய அனுபவமாகலாம்.
2.      பரந்துபட்ட நிருவாக அனுபவம் உள்ளவர் என்று கூறமுடியாது.
3.      விடாப்பிடியான இவரது அணுகுமுறை பொதுவில் பலமாகக் கருதப்பட்டாலும்  அரசியலில் அதுவே சில நேரங்;களில் பலவீனமாகவும் அமைந்துவிடலாம்.
4.          

இருவருமே இவ்விதத்தில் பொருத்தமனவர்களாகத் தெரியினும் மேற்சொன்ன ஒப்பீடானது, தமிழரின் அரசியலில் தூரநோக்கோடு சிந்திக்கையில் இவ்விருவரில் எவர் மிகப்பொருத்தமானவர் என்பதைத் தீர்மானிப்பதற்கு  ஓரளவுக்கு உதவிசெய்யும் என்று நம்புகின்றேன்.

No comments: