தமிழ் சினிமா

6 மெழுகுவர்த்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எப்படியாவது தமிழ் சினிமாவில் வெற்றி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் '6 மெழுகுவர்த்தி' படத்தை தயாரித்து, நடித்துள்ளார் ஷாம்.
ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள்.
தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள்.
காவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர்.
அங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல் கடத்தியிருப்பது தெரிய வருகிறது.
இதற்கு பொலிஸ் எந்த உதவியும் செய்ய முடியாத சூழலில் தன் மகனைத் தேடி ஷாமே அலைகிறார்.
குழந்தையை மாநிலம் மாநிலமாக மாற்றி மாற்றி கொண்டு செல்கிறது கடத்தல் கும்பல். அந்த கும்பலில் உள்ள ஒவ்வொருவரையும் பிடித்து பின்தொடர்கிறார் ஷாம்.
கடைசியில் தன் மகனை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தாரா? என்பது மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ஷாம்.
இந்த படத்திற்காக பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறார். இதற்காக இவர் கடினமாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. மகனை இழந்த தந்தை படும் வேதனைகளை தன் நடிப்பால் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஷாம்.
மகனை இழந்து தாய் படும் வேதனையையும், வலியையும் தன் நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார் பூனம்.
குறிப்பாக தன் மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒரு பிச்சைக்காரன் காலைப் பிடித்து கெஞ்சும் காட்சி திரையரங்குகளில் உள்ளவர்களின் கண்களை கலங்க வைக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமல்ல, இப்படிபட்ட படங்களுக்கும் இசையமைக்க தெரியும் என நிரூபித்திருக்கிறார்.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் ஒரு பலம்.
கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் வி.இசட். துரை. வித்தியாசமான கதைக் களத்தோடு ஷாமோடு இணைந்திருக்கிறார்.
இந்த படத்திற்காக நீண்ட நாட்கள் உழைத்திருப்பது தெரிகிறது. தன் மகனுக்காக தன் வாழ்கையையே தொலைக்கும் தந்தை, நல்ல மனிதனுக்கு தவறு செய்துவிட்டோமே என்று வருந்தி கடைசி வரை கூடவே இருந்து உயிரை விடும் டிரைவர் என படம் முழுக்க அழுத்தமான கதாபாத்திரங்களை அருமையாக கையாண்டிருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.
ஆக மொத்தத்தில் ‘6 மெழுகுவர்த்திகள்’ உருகவில்‌லையே! நம்மை உருக்கிவிடுகின்றது!
நடிகர் : ஷாம்
நடிகை : பூனம்
இயக்குனர் : வி.இசட்.துரை
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஓளிப்பதிவு : கிருஷ்ணசாமி
நன்றி விடுப்பு


ராஜா ராணி

ஒரு திருமணம், இரண்டு காதல் கதைகள் என்ற கவித்துவமான பின்னணியில் அழகாக அரங்கேறியுள்ளது ராஜா ராணி.
ஜான், ரெஜினா இருவருக்கும் சர்ச்சில் திருமணம் நடக்கிறது. அவர்களின் முகபாவனையிலிருந்தே தெரிகிறது இந்த திருமணத்தில் இருவருக்குமே விருப்பமில்லையென்பது.
இஷ்டமில்லாமலே எலியும், பூனையுமாக புது அப்பார்ட்மெண்ட்டில் குடிபுகுந்து நொடிக்கொரு சண்டை, நிமிஷத்துகொரு முறைப்பு என்று ஆளுக்கொரு திசையில் போகிறார்கள்.
திடீரென்று ஒருநாள் ரெஜினாவிற்கு வலிப்பு வந்து சரிய ஜான் பதறிப்போய் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.
அங்கிருந்து தொடங்குகிறது ரெஜினாவின் முந்தைய வாழ்க்கைக் கதை.
காதலன் சூர்யா இறந்து போன துக்கத்தில் இருந்த ரெஜினவை சமாதனப்படுத்தித் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார் அப்பா என்பதை தெரிந்து கொள்கிறான் ஜான்.
ரெஜினாவின் கதை கேட்டு உருகிப்போன ஜான் அவளிடம் அன்பு காட்ட முயல, மீண்டும் முட்டல் மோதல் தொடங்குகிறது.
ஜானின் நண்பன் சாரதி ரெஜினாவை சமாதானப் படுத்தி ஜானின் காதல் பற்றியும், அவனின் காதலியின் நிலை பற்றியும் சொல்ல, ரெஜினா இளகிப்போகிறாள்.
இதற்கிடையில் இறந்து போனதாக நினைத்த சூர்யா உயிரோடு இருப்பது தெரியவருகிறது.
இதனைத் தொடர்ந்து ஜானும், ரெஜினாவும் இணைந்து வாழ்ந்தார்களா என்ற  மீதிக்கதையுடன் படம் நகர்கிறது.
அடர்த்தியான கதையுடன், ப்ரேம் பை ப்ரேம் உணர்ச்சிக் குவியலுடன் இப்படி ஒரு படம் வந்து நீண்ட நாட்களாகி விட்டது.
ஜான் கேரக்டரில் ஜாலி பையனாக வரும் ஆர்யா சின்னச்சின்ன அசைவுகள் மூலம் அனாயசமாக நடித்து அசத்துகிறார்.
ஒரே வீட்டில் நயன்தாராவிடம் அவர் செய்யும் குறும்புகளாகட்டும், இரண்டாம் பாதியில் நஸ்ரியாவை காதலித்து கண் கலங்குவதாகட்டும் எல்லாமே ‘ஏ’ க்ளாஸ்.
ரெஜினாவாக நயன்தாரா அட்டகாசமாய் தன் 3வது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.
அதுவும் இதுவரை வந்த படங்களிலேயே அவரது பெஸ்ட் பெர்பார்மென்ஸ் இதில்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜெய் போன்ற இளம் நடிகருடனும் இயல்பாய் ஜோடியாய் தெரியும் அவரது குறையாத இளமை அழகு இன்னொரு ப்ளஸ்.
கோபத்தில் காதைப் பொத்திக்கொண்டு இருந்தவர் திடீரென கண்கள் சொறுக, கீழே விழுந்து துடிக்கும் இடம். நடிகையாய் முத்திரை பதிக்கிறார்.
காருக்குள் அப்பா சத்யராஜோடு அமர்ந்து கொண்டு தன்னை விட்டுவிட்டு அமெரிக்கா போன காதலனை நினைத்து வாய் பிளந்து அழும் இடம் அசத்தல் நடிப்பு.
ஜெய் எங்கேயும் எப்போதும் கதாபாத்திரத்தை இங்கேயும் தொடர்கிறார்.
கால் சென்டரில் வேலை பார்ப்பவராய் அவர் நயன்தாராவிடம் படும் பாடு இருக்கே கலகலப்பின் உச்சம்.
நான் எங்கப்பாவுக்கு மட்டும்தாங்க பயப்படுவேன் மத்தபடி ஜ லவ் யூ என சொல்லும் டயலாக் அவரது மொத்த கதாபாத்திரத்தையும் காட்டுகிறது.
நஸ்ரியா நஸீம் நேரம் படத்தையடுத்து அவருக்கு வந்திருக்கும் பெரிய படம். ஆர்யாவை ப்ரெதர் என்று அழைத்து சுத்தல்ல விட்டு காதலிக்கிறார்.
நைட்டியை பின்புறமாக தூக்கிக் கொண்டு குத்தாட்டத்தோடு அறிமுகமாவது இயல்பான நடிப்பு.
சந்தானம் பல அழகான டைமிங் டயலாக்குகளால் படத்தை நிரப்பியிருக்கிறார். வலிய திணிக்காமல் இயல்பாய் இருந்திருப்பது பிளஸ்.
ஜி.வி.பிரகாஷின் இசை டைட்டான கதைக்குள் ரிலாக்ஸ் பண்ண வைக்கிறது.
படத்தின் இன்னொரு பெரிய பலம் என்று சொல்லலாம். ஒரு ரொமான்டிக் படத்தை படம் முழுவதும் ஒரு விதமான கலகலப்பை ரொமான்டிக் மியூசிக்கலாக்கியிருக்கிறார்.
சத்யராஜ் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அளவெடுத்து தைத்தது போல் கம்பீரமாக வருகிறார்.
அட்லி குமார், ஷங்கரால் பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட அவரது உதவி இயக்குனர், இதில் இயக்குனராய் அறிமுகம்.
ஒரு காதல் கதையில் இத்தனை ரிச்னெஸை கொண்டு வந்திருப்பதிலேயே நான் ஷங்கரின் அஸிஸ்டென்டாக்கும் என காட்டுகிறார்.
கணவன் மனைவியாய் ஆர்யா நயன்தாரா இருவருக்கும் இடையேயான மோதல்களை கண்ணாடியில் காட்சிப்படுத்தியிருப்பது அருமை.
ஆனால் அதைத்தவிர இயல்பான இறுக்கத்தையும், தவிப்பையும் தர வேண்டிய அழுத்தமான காட்சிகளை அமைக்கத்தவறி விட்டார்.
மேட் பார் ஈச் அதர்னு யாருமே கிடையாது வாழ்ந்து காட்டனும். காதலிக்கிறப்ப தண்ணியடிச்சா லவ் பெயிலியர் அவனே கல்யாணத்துக்கு அப்புறம் அடிச்சா லைபே பெயிலியர் இப்படி பல இடங்களில் வசனகர்த்தா கதாபாத்திரத்தையும், கதையையும் இன்னும் பலப்படுத்தி ஸ்கோர் பண்ணுகிறார்.
கண்டதுமே காதலா என தோன்றினாலும் இரண்டு ப்ளாஸ்பேக்குகளை அழகாய் சொல்லி நிறைவினை தந்துள்ளார் இயக்குனர்.
ஒரு கலகலப்பான, அழகான காதல் கதையாய் எடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் அரசவையை திருவிழாக் கோலமாக மாற்றியுள்ளனர் ராஜா ராணி.
நடிகர்: ஆர்யா, ஜெய்
நடிகை: நயன்தாரா, நஸ்ரியா நசீம்
இசை: ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு: ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ்
தயாரிப்பாளர்: ஏ,ஆர்,முருகதாஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்
இயக்குனர்: அட்லி
நன்றி விடுப்பு

No comments: