உலகச் செய்திகள்

துருக்கியில் 6 இலட்சம் சிரிய அகதிகள்

கனடாவில் கத்திக்குத்திற்கு இலக்காகி தமிழ் மாணவர் பலி

 நவாஸ் - ஒபாமா பேச்சு

 ஆசிரியையை அடித்துக்கொன்ற மாணவன்: அமெரிக்காவில் சம்பவம்

-----------------------------------------------------------------------------------------------------
துருக்கியில் 6 இலட்சம் சிரிய அகதிகள்

21/10/2013   துருக்கியில் இதுவரை 6 இலட்சத்துக்கும் அதிகமான சிரிய அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களுக்கு வெளியே வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
இத்தகவலை துருக்கி நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கழகம் வெளியிட்டுள்ளது.


இக்கணக்கெடுப்பானது ஹஜ் விடுமுறைகளுக்கு முன்பதாக மேற்கொள்ளப்பட்டதாக அக் கழகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவுடன் 900 கிலோ மீற்றர் எல்லைப் பகுதியை பகுதியைக் கொண்டுள்ள துருக்கி நாடானது சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்துடன் எதிர்ப்புக் கொள்கையை கடைபிடித்து வருகின்றது.
மேலும் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவும் வழங்கி வருகின்றது துருக்கி.

சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல்களிலிருந்து தப்பித்து வரும் அகதிகளுக்கு துருக்கியானது தொடர்ச்சியாக தஞ்சம் அளித்து வருகின்றது.
அங்கு 21 அகதி முகாம்களில் 2 இலட்சம் பேர் வரை வசித்து வருகின்றனர்.
நன்றி வீரகேசரி 
   

 

 

 

 

கனடாவில் கத்திக்குத்திற்கு இலக்காகி தமிழ் மாணவர் பலி

22/10/2013  கனடாவில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தமிழ் மாணவர் ஒருவர் கத்திக் குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேதலிலேயே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவர் ரொறொன்ரோவிலிருந்து கல்விகற்பதற்காக வந்த கௌதம் (கெவின்) குகதாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த மாணவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகத்தின் அருகே வசித்து வந்ததையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வின்ட்சர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

நன்றி வீரகேசரி

 

 

 

 

 

நவாஸ் - ஒபாமா பேச்சு

24/10/2013   ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள்களை நிறுத்துமாறு பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷரீப் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாட்டு தலைவர்களுக்குமிடையே நேற்று வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது இருநாடுகளுக்குமிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் அதனை பலப்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையால் இடம்பெற்றுள்ளது.
மேலும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இந்திய மற்றும் பாகிஸ்தானிடையான முறுகள் நிலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போதே பாகிஸ்தானில் எல்லைப் பகுதியில் நடத்தப்படும் ஆளில்லா விமான தாக்குதல்கள் மற்றும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பிலும் நவாஸ் ஷரீப் ஒபாமாவிடம் விளக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி

 

 

 

 

 

ஆசிரியையை அடித்துக்கொன்ற மாணவன்: அமெரிக்காவில் சம்பவம்

24/10/2013   அமெரிக்காவில் பள்ளி ஆசிரியையை அடித்துக் கொன்ற 14 வயது மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது, அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலம் எஸ்ஸெக்ஸ் கவுன்ட்டியில் உள்ள டென்வர்ஸில் அமைந்துள்ள உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருந்தவர் கொலீன் ரிட்ஸர்(24).
அவர் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. மேலும் அவரை கையடக்கத்தொலைபேசி ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது. இதையடுத்து அவரை காணவில்லை என டென்வர்ஸ் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அந்த பள்ளியில் கற்கும் பிலிப் சிஸ்ம்(14) என்ற மாணவனை காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்துபொலிஸார் பிலிப்பை காணவில்லை என்று ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டு அவரை யாராவது பார்த்தால் தங்களுக்கு தகவல் கொடுக்குமாறு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டென்வர்ஸ் அருகில் உள்ள வீதியொன்றில் நேற்று இரவு 12.30 மணிக்கு பிலிப் நடந்து செல்வதை பொலிஸார் பார்த்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் ரத்தக் கறை படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பள்ளிக்கு பின்னால் இருக்கும் காட்டுப் பகுதியில் கொலீன் பிணமாகக் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனை விசாரித்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.
பிலிப் கொலீனை அடித்துக் கொலை செய்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி

 

No comments: