அருண். மோ
புதிய தமிழ் படங்கள் தொடர்ச்சியாக ஒரு தவறைச் செய்துவருகின்றன. பழைய தமிழ்ப் படங்களின் பெயர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுவருவதுதான் அந்தத் தவறு. இது அத்தனை ஆரோக்கியமானது அல்ல. இதில் உள்ள நுட்பமான அரசியலும், வியாபாரத் தன்மையும் மிக ஆபத்தானவை. எம்.ஜி.ஆரின் படங்களை வெவ்வேறு நடிகர்கள்,ரஜினி தொடங்கி விஜய் வரை தொடர்ச்சியாகத் தங்கள் படங்களுக்குச் சூட்டிக்கொள்கிறார்கள். எப்போதும் போல் இதிலும் கமல் முன்னோடியாகவே இருக்கிறார். மைக்கேல் மதன காமராஜன், உன்னைப் போல் ஒருவன் என்று அவர் பயன்படுத்திய பழைய படங்களின் தலைப்புகளுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. உன்னைப் போல்ஒருவன் என்று ஒருவர் ஜெயகாந்தனின் படத்தைத் தேடினால், அவருக்குக் கமலின் படம்தான் கிடைக்கும். ஜெயகாந்தனின் திரைப்படம் பற்றிய தகவல் கிடைக்காமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன.
ஆய்வு செய்பவர்கள், வெளிநாட்டில் இருந்து தமிழ் திரைப்படங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் வரும் பலநண்பர்களுக்கு, படத்தின் பெயரைத் தாண்டி வேறு எந்தத் தகவலும் தெரியவில்லை என்றால், அவர்கள் தேடும் படங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. உதாரணமாக, கே. ராம்நாத்தின் மனிதன் திரைப்படத்தை அதன் உள்ளடக்கத்திற்காக ஒருவர் தேடினால், ரஜினிகாந்த் நடித்த மனிதன் திரைப்படம்தான் அவருக்குக் கிடைக்கும்.
பல நல்ல பழைய படங்களின் பெயர்களைப் புதிய படங்களுக்குச் சூட்டுவது எத்தகைய வியாபார தந்திரம்!
நல்ல படங்களைத் தேடித் தேடிப் பார்த்துத் திரைப்பட ரசனையை ஒருவர் வளர்த்துக்கொள்ள இந்தப் பெயர் வைக்கும் முறை பெரும் தடையாகவே இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி என்கிற பெயரும் கூட ஒரு பழைய படத்தின் பெயர்தான்.
உலகில் வேறெந்த நாட்டிலும், வேறெந்த மொழியிலும் ஒரு முறை வெளியான படங்களின் பெயரைப் புதிய படங்களுக்குச் சூட்டுவதில்லை. பழைய படங்களின் பெயரை மீண்டும் சூட்டுவதை அவர்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். அனைத்து நாடுகளிலும் வெளியாகும் திரைப்படங்களின் தகவல் களஞ்சியமான ஐ.எம்.டி.பி. (IMDB) இணையதளத்தில் மிக தெளிவாக படங்கள் பற்றிய தகவல் வெளிவர வேண்டுமென்றால், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. உலகின் மற்ற நாடுகளின் படங்கள் எல்லாம் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் ஐ.எம்.டி.பி. இணையத்தில் பதிவு செய்யப்படும்போது, தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமே நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.
இணையம் எல்லாவற்றையும் ஜனநாயகப்படுத்தியிருக்கிறது, எனவே இணையத்தில் தேடினால், நிச்சயம் பழைய படங்களும் கிடைக்கும் என்றெல்லாம் பேச முடியாது. அதிகமாகத் தேடப்படும், அல்லது பார்க்கப்படும் ஒன்றையே இணையம் முன்னிறுத்துகிறது. உன்னைப் போல் ஒருவன் என்று நீங்கள் தேடினால், அதிகப்படியான இணைய வாசகர்கள் கமல்நடித்த உன்னைப் போல் ஒருவனைத்தான் தேடியிருப்பார்கள். எனவே இணையமும், கமல் நடித்த உன்னைப் போல் ஒருவனைத்தான்முதலில் உங்களுக்கு கொடுக்கும். ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் கிடைக்காது. இப்படித்தான் இந்தப் போக்கு பழையபடங்களைச் சுவடு தெரியாமல் அழிக்கும்.
தமிழில் யாராவது நாவல்களுக்கோ மற்ற முக்கியமான புத்தகங்களுக்கோ பழைய பெயரைச் சூட்டுகிறார்களா? மகாபாரதம் என்று புதிய புத்தகம் ஒன்று வெளிவந்திருக்கிறதா? புயலிலே ஒரு தோணி பெயரைப் புதிய நாவல் ஒன்றிற்குச் சூட்டியிருக்கிறார்களா? அம்மா வந்தாள், கடல் புறா, கனவுத் தொழிற்சாலை என்று பழைய சிறுகதை அல்லது நாவலின் பெயரைப் புதிய நாவல் அல்லது சிறுகதைக்கு யாராவது சூட்டுகிறார்களா?
உலகில் வேறெந்த நாட்டிலும், வேறெந்த மொழியிலும் ஒரு முறை வெளியான படங்களின் பெயரைப் புதிய படங்களுக்குச் சூட்டுவதில்லை
(த இந்து)
நன்றி : தேனீ
|
No comments:
Post a Comment