இருள் - சேரன் கவிதை

.

பாட்டற்றவர்கள் இருளைத் தேடியலைந்தபோது
வழி தவறி நான் இருந்த கடலோரம் வந்த மூன்று நூறு
குழந்தைகளின் உலர்ந்த கண்ணீரில் தாயைத் தேடிக்
களைத்த சுமைதாங்கிப் பாரம் முடிவிலியாய் தொடருமென
எல்லோர்க்கும் தெரிந்தாலும் ஒருவருமே இதனை எதிர்
பார்க்கவில்லை என்ற போலி அறிக்கைகளின் காயாத மையையும்
கயமையின் நிழலையும் நீங்கள் அறியாவிட்டாலும்
கவிஞன் அறிவான் கதை.
நந்திக்கடல்
எல்லாத் திசைகளிலும்
காலாட்படை முன்னேறுகிறபோது
அங்குலம் அங்குலமாக
நிலம் மறைந்தது
நிலக்காட்சி கருகியது
மௌனத் திரைப்படத்தில் ஓலம் எழுப்புகிறது
மக்கள் பெருந்திரள்
செல்லும் இடம் எங்கே?
கடல்மடியும் கடற்கரையும்
துணை நிற்கும் எனச் சென்றோரின்
கண்முன்னே
குறுகித் தெறித்து மறைந்தது


கடல்
தொலைபேசி அழைப்பு
வெள்ளைக்கொடி கைகளில் ஏந்தி விட்டோம்
அழைப்போம் காத்திருங்கள்
என்று சொன்னவரின்
அழைப்பைக் காணவில்லை
சூரியன் மெல்ல மெல்ல எழுகிறபோது
இருள் பரவுகிறது
வலியின்றி இறக்கும் இன்பம் கிடையாமல்
குருதி பெருக மூச்சிழக்கும்
நண்பர்களை இன்னொரு முறை பார்க்கிறோம்
காடுவரையும் கடைசிவரையும்
செய்மதித் தொலைபேசி
தொடர்ந்து வந்தாலும்
இதுதான் உங்களுக்கான எனது
இறுதி அழைப்பாகும்
சென்று வருகிறோம்.
அறம் பாடியது
நெல்லும் உயிரல்ல
நீரும் உயிரல்ல
முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை
கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன்
மன்னாதி மன்னனென
மார்தட்டிக் கொள்கின்றான்
எண்ணிக்கை யாருக்கு வேண்டும்?
மொழியால் அமைந்த நிலம்
எனச்
சங்கத் தமிழோடும்
செம்மொழியின் வனப்போடும்
புதைகுழிக்குள் போனவர்கள்
நாங்களன்றோ?
குழந்தைகளின் மென்கரத்தை
அரிந்து
நெருப்பில்
எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து
தாலாட்டுப் பாடி
கால்கள் வருடி
தலைமயிருக்கு நிறம் தீட்டி
அவன் பேழ் வயிறை வழிபட்ட
அப்பாலும் அடிசார்ந்தார்
இப்பாலும் இருப்போர்கள்
முப்பத்து முக்கோடி படையினர்கள்
எல்லோரும்
பட்டழிவதன்றி
வேறென்ன கேட்கும்
என் கவிதை?
மகன் - மகள்
மகள்,
உன் கோபத்தில் நான் யாரைக் காண்பது?
நடு இரவில்
காரணமில்லாமல் உன் புன்சிரிப்பு
தூக்கத்தில் மலர்கையில்
அது யாருக்காக?
மகன்,
உனது வேகத்தைக் குறைக்க
ஒரு கவிதையை நான்
குறுக்கே வீசலாமா?
பொங்கிப் பெருகும்
உன் வலு
என் நூலகத்தைப் பொடியாக்கும்
மந்திர வித்தைக்கு
நான் என்ன செய்ய?


காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2012 ஜனவரி புத்தகக்காட்சியில் வெளிவரவிருக்கும் சேரனின் காடாற்று என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் இவை.

No comments: