படித்தோம் சொல்கிறோம் -ரஸஞானி

.
கவிஞர் செ. கதிரேசர்பிள்ளையின்  பாரதம் தந்த பரிசு

நடிப்பதற்காகவே   எழுதப்படும்,  படிப்பதற்காக  மாத்திரம்  எழுதப்படும்,  நடிப்பதற்கும்  படிப்பதற்கும்  எழுதப்படும்  நாடகங்கள்  என்று  மூன்றுவகைகள்  இருப்பதாக  ஒரு  சந்தர்ப்பத்தில்  பேராசிரியர்  மு.வரதராசன்  குறிப்பிட்டார்.
நாடகங்களை  எழுதினால்  நடிக்கமாத்திரமே  முடியும்.  படிப்பதற்காக  நாடகங்கள்  எழுதமுடியாது   எனச்சொல்லும்  விமர்சகர்களும்  இருக்கிறார்கள்.  ஒரு  காலத்தில்  தமிழ்  சினிமாப்;படங்களின்   கதை,  வசனங்கள்  கையிலே  சுருட்டக்கூடிய  பருமனில்  சிறு  நூல்களாக  வெளியாகின.  அவற்றைப்படித்துப்பாடமாக்கி  பாடசாலைகளிலும்  மற்றும்  பிரதேச   சனசமூகநிலையங்கள்   ஊர்   மன்றங்களில்   நாடகம்  நடித்திருக்கிறார்கள்.
 குறிப்பாக  வீரபாண்டிய கட்டபொம்மன்   (வசனம்  சக்தி கிருஷ்ணசாமி)  இரத்தக்கண்ணீர்  (வசனம்  திருவாரூர் தங்கராசு)  திரைப்பட  வசனத்தை  வைத்துக்கொண்டு  நடித்திருக்கிறார்கள்.
  வரி, வட்டி, திறை,  வானம் பொழிகிறது…பூமி விளைகிறது… வயலுக்கு  வந்தாயா ஏற்றம்   இறைத்தாயா…அங்கு கொஞ்சி  விளையாடும்  எம்குலப்பெண்களுக்கு  மஞ்சள் அரைத்துக்கொடுத்தாயா?   மாமனா   மச்சானா.... என்று  பாடசாலைக்காலத்தில் கட்டபொம்மன்   வசனம்  பேசிய  பலர்  எம்மத்தியில்  இருக்கிறார்கள்.


கவிஞர் செ. கதிரேசர் பிள்ளையின்  பாரதம் தந்த பரிசு  நூடக நூலை படித்தவுடன்  அந்தக்காலம்தான்  நினைவுக்கு  வந்தது.  இந்நூல்  பலவகையில்  சிறப்புப்பெறுகிறது. 1965 முதல் 1969 வரையில் தொடர்ந்து  ஐந்து  ஆண்டுகள் தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி  மாணவர்களினால்   நடிக்கப்பட்டு  இலங்கைக் கலைக்கழகத்தின் முதற்பரிசுகளை  வென்றிருக்கிறது.
நாடகக்கலைத்துறையுடன்   நீண்டகாலம்  ஈடுபட்டு  கலைப்பணியும்  ஆய்வுப்பணிகளும் மேற்கொண்ட  பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை,  கலையரசு  சொர்ணலிங்கம்,  பேராசிரியர் சு. வித்தியானந்தன்,  க. சொக்கலிங்கம்,  த. சண்முகசுந்தரம்,  பொ. கனகசபாபதி,  பொன். சோமசுந்தரம்,  கோகிலா மகேந்திரன்  ஆகியோர்  கதிரேசர்பிள்ளையைப்பற்றியும்   மகாஜனா  கல்லூரியின்  மகிமைபற்றியும்  இந்நாடக  நூலில்  விதந்து  எழுதியிருக்கிறார்கள்.
பத்துக்கட்டளைகள்  (வுநn ஊழஅஅயனெஅநவெள)  பென்ஹர்  முதலான  பிரம்மாண்டமான  திரைப்படங்களையெடுத்து  சாதனை புரிந்த  இயக்குநர்  சிசில் பீ டீ மெல்லிடம்,  ஒரு  சந்தர்ப்பத்தில்,  தங்கள்  திரைப்படங்களுக்கான  கதைகளை  எங்கிருந்து  எடுக்கிறீர்கள்?  எனக்கேட்டபொழுது,  ' பைபிளில்  ஏராளமான  கதைகள் இருக்கின்றன.  அதிலிருந்துதான் எடுக்கின்றேன்"   எனச்சொன்னார்.
மகாபாரதமும்   அத்தகையதே.  எண்ணிறைந்த  கதைகள்  உப கதைகள்  அங்கே விரவிக்கிடக்கின்றன.  வாழ்க்கை  மீதான  தேடுதல்,  நீதி  தொடர்பான   அறவழிச்சிந்தனைகள்  மகாபாரதத்தில்  இருப்பதனால்  இன்றும்  பேசப்படும்  காவியமாகியிருக்கிறது.
கவிஞர்  கதிரேசர்  பிள்ளை  தாம்  பணியாற்றிய  மகாஜனாக்கல்லூரி  மாணவர்களுக்காக  எழுதி  இயக்கிய   ஐந்து  நாடகங்கள் ( காங்கேயன்  சபதம்,  ஜீவமணி,  அம்பையின்  வஞ்சினம்,  கோமகளும்  குருமகளும்,   குருதட்சிணை) முறையே 1965,  1966,  1967,  1968, 1969  ஆகிய  ஐந்து  ஆண்டுகளில்  தொடர்ச்சியாக  இலங்கைக்  கலைக்கழகம்  நடத்திய  வருடாந்த  நாடகப்போட்டிகளில்  முதல்  பரிசுகளைப்பெற்று  பாராட்டுப்பெற்றுள்ளன.   அவற்றின்  தொகுப்பே  பாரதம்  தந்த  பரிசு.
கவிஞர்  கதிரேசர்பிள்ளையின்  அபிமானத்துக்குரிய  மாணவியும்   தற்பொழுது  சிட்னியில்  நாடக  அரங்காற்றுகையில்  ஈடுபட்டுவருபவருமான  கோகிலா மகேந்திரனும்  இத்தொகுப்பில்  இடம்பெறும்  நாடகங்களில்  அம்பையின்  வஞ்சினம்,   கோமகளும் குருமகளும் ஆகியனவற்றில்   நடித்திருக்கிறார்  என்ற   தகவலும்  தெரியவருகிறது.
இந்நூலின்   முதற்    பதிப்பு   1980   இலும்  அதன்பிறகு   இரண்டாம்  பதிப்பு 33 வருடங்களின்   பின்னர்  இந்த ஆண்டு ( 2013 ஏப்ரில்) வெளியாகியிருக்கிறது.
அதனால்  இந்த  நாடகங்கள்   எழுதப்பட்ட  காலத்திலிருந்து  பார்த்தால்  இவற்றின்   வயது  ஏறக்குறைய  நாற்பத்தி எட்டு  ஆண்டுகள்  எனக்குறிப்பிடலாம்.
குறிப்பிடத்தகுந்த  கலை, இலக்கிய மற்றும் கல்விப்பணிகளை  தொடரும்  மகாஜனா கல்லூரியின்   பழைய  மாணவர்கள்  உலகெங்கும்  ஈழத்தமிழர்  வாழும்  நாடுகளில் வசிக்கின்றார்கள்.
அவர்களின்  பெரு  முயற்சியினாலும்  பாரதம் தந்த பரிசு  இரண்டாம் பதிப்புக்குரிய பெருமையை  பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவில்  பல  வருடங்களாக தமிழ்  எழுத்தாளர் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய  கலைச்சங்கத்தின்  13 ஆவது எழுத்தாளர் விழா சிட்னியில்  நடந்தபொழுதும்  மெல்பனில்  சங்கம்  நடத்திய  கலைää இலக்கியம் 2013 நிகழ்வின்பொழுதும்  இந்நாடக நூல்  அறிமுகப்படுத்தப்பட்டது.
மகாபாரதக்கதைகள்  நீதி, வீரம், மானம், சத்தியம், தருமம், சபதம்,  விதி  பற்றி மாத்திரம்  பேசவில்லை.  வஞ்சகம், சூது, பொய்மை, ஏமாற்று, மானபங்கம்ää பொறாமை, சதி, பழிவாங்கல்  முதலான  தீய  குணங்களையும்  பேசிய  மாபெரும்  காவியம்.
மகாபாரத  மாந்தர்கள்  இந்த  நாகரீக  நூற்றாண்டிலும்  வாழ்கின்றமையாலும்  மகாபாரதம்  எம்மத்தியில்   உயிர்ப்புடன்  வாழ்ந்துகொண்டிருக்கிறது  எனவும்  கருதப்படுகிறது.
கதிரேசர் பிள்ளையின்  இந்நாடகங்கள்  மகாபாரதத்தில்  நாம்  அறியாத  பல  பக்கங்ளையும்  பேசுகிறது.
இந்நூலை  வாசித்தபொழுது  சில  கட்டங்களில்  பிரமித்துவிட்டேன்.  அந்த பிரமிப்பை சிரித்துச்சிரித்தும்   தவிர்த்துக்கொண்டேன்.
தந்தைக்காக  மணமுடிக்காது  வில்லும்  ஏந்தி  துறவறமும்  காத்த காங்கேயன் (பீஷ்மர்) பலதார மணம்  முடித்த அருச்சுனன்.  அவனுடன்  போர்  தொடுத்த  அவன் மைந்தன் பப்பிரவாகன்,   மறுபிறவி   எடுத்தேனும்  பீஷ்மரை  பழிவாங்குவேன்  என சபதமெடுக்கும் அம்பை,   சத்திரியகுலத்தவர்களுக்கு  வில்வித்தை  கற்றுக்கொடுக்கமாட்டேன்  என்று உறுதிபூணும்   பரசுராமர் ....  இப்படி  விந்தையான  பாத்திரங்கள்  இந்நாடகங்களின்  மாந்தர்கள்.
அருச்சுனனுக்குத்தான்  எத்தனை  பெண்டாட்டிமார்?   மகாபாரதம்  பலதார  மணங்களை அனுமதித்திருக்கிறது.  அந்த  வில்வீரன்  எப்படித்தான்  சமாளித்தானோ?
சந்திரகுல  வம்சத்தில்தான்  எத்தனை  விநோதங்கள்  நடந்திருக்கின்றன?  என்ற வியப்பும் பிரமிப்பும்  தோன்றுகிறது.
பண்டவர்  ஐவருக்கும்  திரௌபதி  பத்தினியானதனால்ää  வில்லுக்கு வீரன்  எனப்பெயரெடுத்த  அருச்சுனனுக்கும்  அவள்  மனைவியாகிறாள்.  அருச்சுனன்  அத்துடன்  நில்லாமல்  துவாரகையில்  எடுத்த  பெண்  சுபத்திரை. அவளது மகன் அபிமன்யூ.
அருச்சுனன்   அத்துடன்  நின்றுவிட்டார்  என்றுதான்  நினைத்துக்கொண்டிருந்தோம்.
ஆனால்  அவர்  மேலும்  சில  சாதனைகளை   நிலைநாட்டியிருக்கிறார்  என்பதை இந்நாடக  நூலிலிருந்து - ஜீவமணி   நாடகத்திலிருந்து   தெரிந்துகொள்ள முடிகிறது.
அக்கா  தங்கையான  உலூகியும்  சித்திராங்கதையும் அவரது ஏனைய மனைவிமார்.  அவர்களுக்கு   அரவான்,  பப்பிரவாகன்  ஆகிய மகன்மார்.
கோமகளும் குருமகளும்  நாடகம்  இரண்டுபெண்களுக்கிடையிலான  வெறும்   சாரிச்சண்டைதான்.  சன்மிஷ்டைக்கும்   தேவயாணிக்கும்   இடையே   தோன்றும்  மோதல்.  முடிவு  சுக்கிராச்சாரியாரின்  மகள்  தேவயாணிää அந்தினாபுர வேந்தன் யயாதிக்கு மனைவியாகிறாள்.  மன்னர்  குலத்து  சன்மிஷ்டை தேவயாணிக்கு  தாதியாகிறாள்.  தாதிக்கு  மனமிரங்கி  அவளையும்  தனது துணையாக்கிக்கொள்கிறான்  மன்னன்.  அதனால்  சுக்கிராச்சாரியாரின்  சாபத்துக்கு  ஆளாகின்றான்.
இந்த  நாடகம்   அரசர்  நீதி,  அந்தணர்  நீதி  பற்றி  விவாதிக்கிறது.
கொடுமையான  செயல்களில்  உள்ளம்  நிலைக்கநேருமேல்  அது   நினைப்பவனையே அழிக்கும்  என்ற   கருத்தை  அழுத்தமாகச்சொல்கிறது  இந்நாடகம்.
குருதட்சிணை  நாடகம்  ஏகலைவனைப்பற்றித்தான்  சொல்லவருகிறது  என  நினைத்துக்கொண்டு  பக்கங்களை  புரட்டினேன்.  இது ஏகலைவன்  கதையல்ல.  நம்மில்  பலர்  அறிந்திராத  பயிலவ  முனிவர்,  உதங்கன், பயிலவர் மனைவி, மகள்  பற்றிய  கதை.  தனது  குருபக்தியை  நிரூபித்த  உதங்கன்  சந்திக்கும்  சோதனைகள்  பற்றிக்கூறுகிறது.
இந்த  ஐதீகக்கதைகளை   தமிழில்  நாடகமாக்கியபொழுது -  தூய  செந்தமிழையே கவிஞர் கதிரேசர்  பிள்ளை கையாண்டிருக்கிறார்.
ஆனால்  இந்நாடகத்தொகுப்பை  வெளியிட்டவர்கள்  அச்சுப்பிரதியை ஒப்புநோக்கும்பொழுது அசட்டையாக  இருந்துவிட்டார்களோ  என   எண்ணத்தோன்றுகிறது.  பக்கத்திற்குப்பக்கம்  பல  எழுத்துப்பிழைகள்  கண்களை   உறுத்துகின்றன.
எழுத்துப்பிழைகள்   கருத்துப்பிழையாகிவிடும்  அபாயம்  இருப்பதனால்  நூல்கள்  அச்சிடும்பொழுது  ஒப்புநோக்குதல்   பிரதானமானது  என்பதை  வெளியீட்டாளர்கள்  கவனத்தில்கொள்ளவேண்டும்.
மகாஜனாக்கல்லூரி  பேராசான்  ஜயரத்தினம்  அவர்களுக்குப்படைக்கப்பட்டுள்ள  இந்நாடக நூல்  அமரர்கள் செ. கதிரேசர் பிள்ளைக்கும்  அவர்தம்  பாரியார்  புவனேஸ்வரி அவர்களுக்கும்  சமர்ப்பணம்  செய்யப்பட்டுள்ளது.
கதிரேசர் பிள்ளையின் மற்றுமொரு  நாடகம் வெஞ்சினத்தில்  எழுந்த  வஞ்சினம்.  அவரது  புதல்வி  திருமதி  நிர்மலா பிரபுதேவனின்  நெறியாள்கையில் 1987 இல் கோட்ட  கல்வி மட்டத்தில்  நடைபெற்ற  நாடகப்போட்டியில்  முதல்  பரிசினை  வென்றிருக்கும்   தகவலும்  இந்நூலில்  சொல்லப்பட்டிருக்கிறது.
எனினும்  குறிப்பிட்ட  நாடகத்தின்  மூலப்பிரதி   எங்கோ தவறிவிட்டமையினால்  அந்த  நாடகத்தின்  ஒரு  காட்சியை  மாத்திரம்  இந்நூலில்  பதிவுசெய்துள்ளனர்.
பாரதம் தந்த  பரிசு   தொகுப்பில்  இடம்பெற்றுள்ள  நாடகங்களை  மேடையில்  தரிசிக்கும்   வாய்ப்பிழந்த  என்போன்றவர்களுக்கு   இந்நூல்  வாசிப்பு அனுபவத்தைத்தருகின்றது.
பிரதிகளுக்கு - மகாஜனாக்கல்லூரி  பழைய  மாணவர்  சங்கங்களை  தொடர்புகொள்ளுங்கள்.

No comments: