ஜெயலலிதா, எம்.எஸ்.வி., அமிதாப், ஸ்ரீதேவிக்கு விருது!!

.

இந்திய சினிமா 100 நிறைவு விழா :

Indian Cinema 100 year Celebration Function : Jayalalitha, MSV, Amithabh, Sridevi receives award
இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று, சினிமாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதா, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

இந்திய சினிமா நூறு ஆண்டு கடந்ததை கொண்டாடும் விதமாக இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. தமிழக அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில், இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டு விழா, சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், கடந்த 21ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. நிகழ்ச்சியின் முதல்நாளை தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். பிறகு தமிழ் சினிமாவின் ரஜினி, கமல், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜாதேவி, காஞ்சனா, செளகார் ஜானகி உள்ளிட்ட 50 கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

4 மாநில நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள்


சினிமா நூற்றாண்டு விழாவில் நான்கு மாநில திரை நட்சத்திரங்களின் க‌லை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல்நாளில் தமிழ் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இரண்டாம் நாளில் கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகினரின் கலைநிகழ்ச்சிகளும், மூன்றாம் நாளில் மலையாள திரையுலகினரின் கலைநிகழ்ச்சிகளும் தொடர்ந்து அன்றைய தினம் மாலையில் நான்கு மாநில திரையுலகினருக்கும் நட்சத்திர ஓட்டலில் சிறப்பான விருந்தும் கொடுக்கப்பட்டது.


ஜனாதிபதி பங்கேற்பு

இந்நிலையில் நிறைவு நாள் விழா இன்று(செப்., 24ம் தேதி) நடந்தது. இந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். முன்னதாக அவருக்கு விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா, கவர்னர் ரோசய்யா, தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இரண்டு மாநில முதல்வர் பங்கேற்பு

நிறைவு நாளில் கவர்னர் ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மற்றும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். தெலுங்கானா பிரச்னை காரணமாக ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பங்கேற்கவில்லை. இதேபோல் கர்நாடக முதல்வரும் பங்கேற்கவில்லை. அவர் சார்பாக கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லால் பங்கேற்றார்.

காணொளி திரையிடல்

இந்திய சினிமா நூறு ஆண்டு கடந்து வந்த பாதை குறித்த சிறப்பு காணொளி காட்சி, விழாவின் அகன்ற திரையில் திரையிடப்பட்டது. தென்னிந்திய இயக்குநர் சங்கம் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவை நடிகர் மாதவன் தொகுத்து வழங்கினார். தாதா சாகேப் பால்கே காலம் தொடங்கி தற்போது உள்ள இந்திய சினிமா வரை இந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட பல்வேறு மாநில படங்களின் காட்சிகளும் திரையிடப்பட்டன.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது பெருமை. இத்தகைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சினிமாவில் அநேக கலைஞர்கள் தென்னிந்திய சினிமாவில் இருந்து தான் சாதித்து வருகிறார்கள். தேசிய அளவு மட்டுமல்லாது உலகதரத்திற்கும் அவர்கள் தங்களது படைப்புகளை கொடுத்து வருகிறார்கள். சமூகத்தில் நல்ல கருத்துக்களை சினிமா மூலம் வெளிப்படுத்த முடியும் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா

விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, இந்தியா சினிமா நூற்றண்டில் அடியெடுத்து வைக்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் சினிமா திகழ்கிறது. இந்தியாவுக்கு முதல் பெண் இயக்குநரை தமிழ் சினிமா கொடுத்துள்ளது. இந்திய திரைப்படத்திற்கு நூற்றாண்டுகள் என்பது மைல்கல்லாகும். சென்னை, மும்பை, கொல்கத்தா சினிமாவின் தலைநகரங்களாக உள்ளது. வலுவான, மக்களை ஈர்க்கும் சக்தியாக சினிமா திகழ்ந்து வருகிறது. தமிழ் திரைப்படத்துறையை ஊக்குவிக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக சினிமாவிலும் இந்திய சினிமா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜா அரிஷ்சந்திராவின் திரைப்பட வெற்றியை தொடர்ந்து பல படங்கள் எடுக்கப்பட்டன. இந்தியா சினிமாவில் சாதனை புரிந்த பலரும் காலம் கடந்தும் நினைவு கூறத்தக்கவர் என கூறினார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி விருது

சினிமாவில் சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கினார் ஜனாதிபதி. தொடர்ந்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகை ஸ்ரீதேவி, ரேகா, தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், வை‌ஜெயந்தி மாலா பாலி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், அஞ்சலி தேவி, கே.விஸ்வநாத், கே.பாப்பு, கே.ராகவேந்திரராவ், தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார், நடிகை பாரதி விஸ்ணுவர்தன், நடிகர் அம்பரிஷ், தயாரிப்பாளர் ராஜேந்திரசிங் பாபு, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பி.எஸ்.துவாரகிஷ், இயக்குநரும், நடிகருமான வி.ரவிச்சந்திரன், வீரண்ணா, நடிகர் மாதவன் நாயர் மது, அடூர் கோபாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் சந்திரன், தயாரிப்பாளர் குஞ்சகோ போபன், மம்மூட்டி, மோகன்லால், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், கிரண் வீ.சாந்தாராம், ரந்தீர் ராஜ்கபூர், இயக்குநர் ரமேஷ் சித்திக், கமல் பஞ்சாத்தியா, விநய் குமார் சும்லே, ஜாவித் அக்தர், நடிகர் ரமேஷ் தியோ, சீமா தியோ, கவுதம் கோஸ், பிரசஜித் சட்டர்ஜி, குஜராத்தி நடிகர் நரேஷ் கணோடியா, பஞ்சாப் நடிகை ப்ரீத்தி சாப்ரூ, ஒரியா நடிகர் உத்தம் மகந்தி, போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரி, அசாமிய நடிகை ஜரீபா வாகித் ஆகியோருக்கும் ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்தார்.

சமூக பிரச்னைகளை சினிமா பிரதிபலிக்க வேண்டும் - ஜனாதிபதி

உலகின் மிகப்பெரிய சினிமாக்களில் இந்திய சினிமாவும் ஒன்று. இந்திய சினிமாவின் முதல் படத்தை தாதா சாகிப் தயாரித்து சாதனை படைத்தார். இன்று தொழில்நுட்ப ரீதியாக இந்திய சினிமா பல முன்னேற்றம் கண்டுள்ளது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகி‌ரெட்டி, ராஜ்குமார், என்.டி.ராமாராவ் உள்ளிட்ட பலர் தென்னிந்திய சினிமாவில் முத்திரை பதித்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சினிமாவில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அவருக்கு விருது வழங்கியது மகிழ்ச்சி. சமூக பிரச்னைகளை பிரதிபலிக்கும் விதமாகவும், சமுதாயத்திற்கு தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் விதமாக சினிமாக்கள் இருக்க வேண்டும். இந்திய சினிமாவுக்கு தேவையான அனைத்து உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது என்றார்.

சிறப்பு மலர் வெளியீடு

இந்திய சினிமாவின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இதனை தமிழக கவர்னர் ரோசய்யா வெளியிட, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெற்றுக் கொண்டார்.

Tags »

No comments: