திரும்பிப் பார்க்கின்றேன் -09 -முருகபூபதி

.

வடமேல்மாகாணத்தில்  தமிழுக்கு  உயிரும்  உணர்வுமூட்டிய   கலைஞர்  உடப்பூர்   சோமஸ்கந்தர்


இலங்கையில்    வடமேல்   மாகாணத்தில்    இந்து  சமுத்திரத்தாயை   அணைத்தவாறு   ஒரு  தமிழ்க்கிராமம்.  யாழ்ப்பாணம்   செல்லும்   சிலாபம் - புத்தளம்   பாதையில்    பத்துலுஓயா    என்ற  இடத்திலிருந்து   இடதுபுறம்   செல்லும்   பாதையில்    பயணித்தால்    கடலை  நோக்கிச்செல்லலாம்.   அந்தக்கடலின்   கரையில்  எழில்கொஞ்சும்   கிராமம்  உடப்பு.
  அங்கு    பூர்வகுடிமக்களாக   வாழ்பவர்கள்    இந்து  தமிழர்கள்.    அவர்களின்   கலாசாரம்  தனித்துவமானது.  1960   களில்     முதல்  முதலாக   நான்  அங்கு  சென்றபொழுதுää  அந்தக்கிராமத்தில்    தமிழர்களைத்தவிர   வேறு   இனத்தவர்கள்   இருக்கவில்லை.       அந்த  மக்கள்   தமிழகத்தில்   இராமேஸ்வரம்   பகுதியிலிருந்து     வந்து    குடியேறி   கடல்   தொழிலையே   சீவனோபாயமாகக்கொண்டு    வாழ்ந்து  வந்தனர்.
திரளபதை   அம்மன்     கருமாரியம்மன்     கந்தசாமி    முத்துமாரியம்மன் ஐயனார்      பிள்ளையார்.   காளி  ஐயப்பன்   முதலான   தெய்வங்களுக்கு   கோயில்களை   நிருமாணித்து   வணங்கியும்  அதேசமயம்   இராக்குருசி   காட்டுமாரியம்மன்    முதலான   சிறுதெய்வ  வழிபாடுகளிலும்    ஈடுபட்டுவந்தனர்.

இஸ்லாமியர்   வழிபடும்   மசூதியும்   கத்தோலிக்கரால்      1848 இல்  நிருமாணிக்கப்பட்ட   கத்தோலிக்க  தேவாலயமும்   இங்கே  இருக்கின்றன.   உற்சவ    காலங்களில்   சிங்கள   வர்த்தகர்கள்   இங்கு   சிறுவர்த்தகங்களுக்கு    வந்தாலும்   உற்சவம்  முடிவுற்றதும்   மூட்டையை   கட்டிக்கொண்டு   தம்மூர்   திரும்பிவிடுவார்கள்.
திரௌபதை   அம்மன்   வருடாந்த   தீமிதிப்பு   உற்சவம்   இலங்கை  பூராவும்  பிரசித்தமானது.  அதனை  உடப்பூர்   மக்கள்  தீமதிப்பு    என்று   சொல்லமாட்டார்கள்.  பூ  மிதிப்பு   உற்சவம்   என்றே  அழைப்பார்கள்.    நாம்  தீமிதிப்பு   எனச்சொன்னாலும்   அம்மக்கள்   உடனே   திருத்தம்   செய்து “  இல்லை….இல்லை   பூ மிதிப்பு   எனச்சொல்லுங்கள்.   தீ   சுடும்   ஆனால்   எங்கள்  திரௌபதை   அம்மன்  முன்றலில்  நெருப்புக்கோளங்களாக   தகதகக்கும்  பூக்கள்   பக்தர்களை   பரவசப்படுத்தும்”   என்பார்கள்.
வெளிநாட்டு   இராஜதந்திரிகள்   உட்பட  அந்நிய   நாட்டவர்களும்    தென்னிலங்கை   சிங்கள  மக்களும்   அரசியல்   தலைவர்களும்  குறிப்பிட்ட  ப10 மிதிப்பு  விழாவை   கண்டுகளிக்க   உடப்பூருக்கு   திரளுவார்கள்.
நீர்கொழும்பில்     நான்   ஆரம்பக்கல்வியை   கற்ற   விவேகானந்தா   வித்தியாலயத்திற்கு    உடப்பூரிலிருந்து    தமிழும்  கணிதமும்   குடியியலும்    கற்பிக்க  வந்த   சோமஸ்கந்தர்  அவர்கள்தான்   எனக்கு  உடப்பூரை   அறிமுகப்படுத்தினார்.
அப்பொழுது    பத்துவயதிருக்கும்.  அவர்   எமக்கு   தமிழ்கற்பிப்பது   பெரும்பாலும்   பாடசாலை  விளையாட்டுத்திடலில்   நிற்கும்   ஏதாவது   ஒரு  மரத்தடி  நிழலில்தான். அவர்   சிறந்த   கதை  சொல்லி.
மகாபாரதம்ää   இராமாயணம்   முதலான   இதிகாசக்கதைகள்    அவர்   சொல்லித்தான்   எமக்குத்தெரியும்.   ஒரு  நாள்   மகாபாரதத்தில்    திரௌபதையின்   சபதக்காட்சியை    அவர்   அபிநயத்துடன்   சொல்லித்தந்தபொழுது   தமது  உடப்பூரின்   மகிமைபற்றியும்   சொன்னார்.   அங்கு  வருடாந்தம்   நடக்கும்   பூமிதிப்பு  விழாவையும்   குறிப்பிட்டார்.
அந்த   ஊரைப்பார்க்கவேண்டும்   என்ற   ஆவல்   மனத்தில்   எழுந்தது.  எங்கள்  விருப்பத்தைச்சொன்னோம்.
அவர்   திங்கள்  முதல்  வெள்ளிவரையில்    பாடசாலை   அமைந்த  கடற்கரை  வீதியில்  இருக்கும்   அவரது  சகோதரி   வீட்டிலிருந்து   கடமைக்கு   வருவார்.   வெள்ளி   மாலை   உடப்பூருக்கு   சென்றுவிடுவார்.   அங்கு  இரண்டுநாள்  விடுமுறையை   செலவிட்டுவிட்டு   மீண்டும்    ஞாயிறு   மாலை  நீர்கொழும்பு  திரும்பி  திங்களன்று   வழமைபோன்று   கடமைக்கு   வருவார்.
வீட்டிலே   சொல்லி   பஸ்   பயணச்செலவுக்கு   இரண்டு  ரூபா   வாங்கிவருமாறும்   அத்துடன்    மாற்று  உடைகள்   எடுத்துக்கொள்ளுமாறும்     சொன்னார்.     ஆறு  மாணவர்கள்   அவருடன்  உடப்பூருக்கு   சுற்றுலா  செல்ல  பெயர்கொடுத்துவிட்டு   ஒரு  வெள்ளிக்கிழமை   அவருடன்   சிலாபம்   செல்வதற்கு   பஸ்நிலையம்   வந்தோம்.
நாம்   எதிர்பாராதவிதமாக     ஒரு   வாகனச்சாரதி    சிலாபம்   செல்வதற்கு பயணிகளை   அழைத்துக்கொண்டிருந்தார்.  சோமஸ்கந்தர்   மாஸ்டர்  அந்தச்சாரதியுடன்  உரையாடி   குறைந்த   கட்டணத்துடன்    அதில்   எம்மை   அழைத்துச்சொன்றார்.
வாகனத்தில்   பாடிக்களித்து   ஆனந்தமாகச்சென்றோம்.  ஊடப்பூரை   நெருங்கும்பொழுது  அவ்வூரின்    மேலதிக   மகிமைகளையும்   சொன்னார்.   அந்த   வெள்ளிக்கிழமை   இரவு   நாம்   அங்கே  சென்றடைந்தபொழுது   ஒரு   வித்;தியாசமான   குடும்ப  வைபவம்   ஒன்றை  கண்டு  களித்தோம்.
அங்கே   ஒரு    குழந்தைக்கு   அன்று   காதுகுத்து   கலியாணம்.  இரவு   நிகழ்ச்சியில்  சோமஸ்கந்தர்   தமது  மதுரக்குரலினால்   பல  பாடல்களை   பாடினார்.     நாம்   தாளம்போட்டோம்.
மறுநாள்  அந்த   அழகிய  கடலோரக்கிராமத்தின்   எழில்கொஞ்சும்   காட்சிகளை  கண்டு  களித்தோம்.
அங்குதான்   முதல்  தடவையாக   ஊற்றுக்கிணறுகளைக்  கண்டேன்.   அயலில்  உப்புக்கரிக்கும்  கடல்.  ஆனால்   அதற்கு  அருகாமையில்  மக்களினால்  தோண்டப்பட்ட  சிறிய  ஊற்றுக்கிணறுகள்.  ஊர்ப்பெண்களின்   ஒரு  இடுப்பிலே  குழந்தை.  மற்ற  இடுப்பிலே  ஒரு  குடம்.   தலையிலே  இரண்டு  குடங்கள்.
குழந்தையை  தரையில்   இறக்கிவைத்துவிட்டுää   நீண்ட  கைப்பிடியுள்ள  அகப்பையினால்  ஊற்றுக்கிணற்றிலிருந்து  தண்ணீரை  அள்ளி   அள்ளி  குடங்களில்  நிரப்புவார்கள்.  பின்னர்   ஒரு   இடுப்பில்  குழந்தை.   மற்ற  இடுப்பில்   ஒரு  குடம்  தலையிலே ஒன்றின்மேல்    ஒன்றாக   இரண்டு  குடங்கள்..
உடன்  வந்த  பெண்கள்   குடங்களை  தலையில்  ஏற்ற  பரஸ்பரம்  உதவிக்கொள்வார்கள்.
தலையிலும்  இடுப்புகளிலும்   மூன்று  குடங்களையும்   குழந்தையையும்   சுமந்தவாறு  கையிலே  அந்த  நீண்ட  அகப்பையையும்  ஏந்திக்கொண்டு   அந்தப்பெண்கள்  ஒயிலாக  நடந்து  வந்த   காட்சிகள்    வாழ்வில்  மறக்க  முடியாதவை.
உடப்பூரிலிருந்து  ஞாயிறன்று   திரும்பி  வரும்  வழியில்   தெதுரு  ஓயாவில்   நீராடினோம்.   சோமஸ்கந்தரின்    சகோதரி   வழிப்பயணத்தில்   உண்பதற்கு   புளிச்சாதமும்     ஒரு    சரையில்    சீனியும்   தந்தனுப்பினார்.
புளிப்பும்    இனிப்பும்   நல்ல   கம்பினேஷன்.   புளியோதரையை   சீனியுடன்   அன்றுதான்   முதல்   தடவை  சுவைத்தேன்.   இதனை  வாசிப்பவர்களுக்கு   அந்த  சுவை  அனுபவம்   இருக்கிறதா?  குளிர்சாதனப்பெட்டி    கண்டுபிடிக்கப்படாத    காலத்தில்    தமிழர்கள்   கண்டுபிடித்த   புளியோதரையை    பல   நாட்களுக்கு   வைத்திருந்து   சாப்பிடலாம்.   அந்த   உணவு  கெட்டுவிடாது   என்று   ஒரு  திரைப்படத்தில்   விவேக்  சொல்லுவார்.
தெதுரு   ஓயாவில்   பாய்ந்து   நாம்  குளித்துக்கொண்டிருந்தபொழுது  சோமஸ்கந்தர்   மாஸ்டர்   நதியின்   கரையில்   நின்றவாறு   எங்களையே   அவதானித்துக்கொண்டிருந்தார்.
அவர்   எம்முடன்  குளிக்கவராமல்   பார்த்துக்கொண்டிருந்தது   எனக்கு  ஆச்சரியமாகவிருந்தது.   நாமெல்லோரும்   கரைக்கு   வந்து  தலைகளை  துவட்டியபோதுதான்   அவர்  நதியில்  இறங்கி  நீந்தினார்.
அவர்   கரைக்கு  வந்ததும் “  ஏன்… மாஸ்டர்   நீங்கள்   எம்முடன்   இணைந்து  குளிக்க    வரவில்லை”   எனக்கேட்டேன்.
“  தெதுரு  ஓயாவில்  சில  சமயங்களில்  முதலைகளின்  நடமாட்டம்   இருக்கும்.   உங்களையும்   அவதானித்துக்கொண்டு   முதலைகள்  வருகின்றனவா…?”   என்றும்   பார்த்துக்கொண்டு    முன்னெச்சரிக்கையாக   கரையில்   நின்றேன்.”   என்றார்.
   ஒரு   தந்தைக்குரிய   பரிவை   அன்று   நான்   அவரி;டத்தில்   கண்டேன்.
எனது   பத்துவயதில்    உடப்பு   தமிழ்க்கிராமத்தை     எனக்கு  அறிமுகப்படுத்திய   உடப்பூர்    சோமஸ்கந்தர்    வடமேல்   மாகாணத்தில்    புத்தளம்   முதல் நீர்கொழும்பு    வரையிலான   பிரதேசங்களில்    தமிழில்   கலை    இலக்கிய   விழிப்புணர்வை    1960களிலேயே    உருவாக்கத்    தொடங்கியவர்.
பின்னாளில்   இவர்   வில்லிசைக்    கலைஞராகப்    புகழ்பெற்ற    போதிலும் கலைத்துறையில்    ஆரம்பத்தில்    நடிப்பு     நாடகம்    எழுதுதல்ää   நாடகக் கலைஞர்களுக்கு    ஒப்பனை   செய்வித்தல் (ஒப்பனையும்  ஒரு கலைதான்) முதலானவற்றிலேயே   ஈடுபட்டார்.
நல்ல குரல்வளமும்    கற்பனையாற்றலும்    மிக்கவரான   சோமஸ்கந்தர்ää ஆசிரிய பயிற்சிக்   கலாசாலையிலிருந்து    பயிற்றப்பட்ட    ஆசிரியராக    வெளியேறியதும் - நீர்கொழும்பு    மண்    அவரை    வரவேற்றது.
வந்தவர்களை   வாழவைத்த   அம்மண்ணில்   விவேகானந்தா    வித்தியாலயம் (இன்றைய விஜயரத்தினம்    இந்து    மத்திய    கல்லூரி)   சோமாஸ்கந்தரையும் ஆசிரியப்    பணிக்கு   அழைத்துக்    கொண்டது.
இப்பாடசாலையின்    அப்போதைய    தலைமை     ஆசிரியர்  பண்டிதர் க.மயில்வாகனன்.    சித்தங்கேணியைச்சேர்ந்தவர்.      இவரும்    பழந்தமிழ்    இலக்கிய     பரிச்சயமிக்க   எழுத்தாளரே.    அதேசமயம்    நீர்கொழும்பு    முன்னக்கரையைச்    சேர்ந்த   நிக்கலஸ் அல்பிரட்   என்ற    ஆசிரியரும்  இங்கே பணிபுரிய   வருகின்றார்.    இவரும்   ஒரு   நாடகக் கலைஞர்.
இந்தக்    கூட்டணியினால் - பாடசாலை வட்டார கலைப்போட்டிகளில் தொடர்ந்தும் பரிசில்களை    தட்டிக்    கொண்டது.
சோமஸ்கந்தரும் - நிக்கலஸ் மாஸ்டரும் நீண்ட நெடுங்கால நண்பர்கள். இவர்கள் இருவரையும்    ஊரில்    இரட்டையர்கள்    எனவும்   அழைப்பர்.
சோமஸ்கந்தர் - கடற்கரைவீதியில்   தங்கியிருந்த  சகோதரி  வீட்டில் எப்பொழுதும்  பாட்டுச் சத்தம் கேட்கும். அது வானொலியிலிருந்து  அல்ல.   சோமாஸ்கந்தரின்   மதுரமான   குரலிலிருந்துதான்.
அக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து – திரைப்படங்கள் வெளியாகும் போது – திரைப்பட பாட்டுப்  புத்தகங்களும்  வந்து விடும். சென்மேரிஸ் தேவாலயத்திற்கு   முன்பாக சந்திரவிலாஸ் என்று ஒரு தேநீர்கடைää இந்திய வர்த்தகரால் நடத்தப்பட்டது. இங்கே சோமஸ்கந்தரும் ஒரு வாடிக்கையாளர். திராவிட இயக்க பிரசுரங்களும் இங்கே கிடைத்ததனால் - சோமஸ்கந்தரை   அக்கடை   கௌரவமான    மனிதராக   வரவேற்று அவர்    கேட்பதை   கொடுக்கும்.
சினிமாப்பாடல் மெட்டுக்களை   வைத்து   சோமஸ்கந்தர்    புதிதாக பாடல்கள் இயற்றுவார். அதனைப் பாடுவதற்கு மாணவர்களையும் பழக்குவார். மாணவர் சங்கக் கூட்டங்களில்    பெற்றோர்    தின   விழாக்களில்    அரங்கேற்றுவார்.
கண்டிப்பானவர்.    கோபம்   வந்தால்   அடிக்கவும்    செய்வார்.   தோளில் கைபோட்டு அணைக்கவும்   செய்வார்.   இதனால் - மாணவர்களிடையே   இவர் ஒரு ‘ஹீரோ’. மாணவர்களின்    பெற்றோர்களின்    அத்தியந்த    நண்பர்.    மாணவர்களின் குடும்பங்களில்    நிகழும்   சுகதுக்க    வைபவங்களில்    கலந்து    கொள்வார்.
1961 – 1962   காலப்பகுதியில்    சோமஸ்கந்தர்   எழுதிய ‘செழியன் துறவு’ என்ற வரலாற்று   நாடகம்   அந்த   வட்டாரத்தில்   ; பிரபல்யம்   பெற்றது.   வட்டார கலைவிழாப் போட்டியில் முதல் பரிசையும்  வென்றது. இதில் என்ன வேடிக்கையென்றால் நாடகத்தில்   நடித்தவர்கள்   அனைவருமே   மாணவிகள்தான்.    பாண்டியன் செழியனாக   எனது  அக்கா  செல்வியும்ää   சேரனாக   சுப்புலஷ்மி   என்ற   மாணவியும்    சேரன்   மகளாக    எங்கள்   பெரியம்மா  மகள்  மனோன்மணியும் நடித்தனர்.   அமைச்சராக    தளபதியாக   அரண்மனைச்   சேவகர்களாக    படைவீரர்களாக   நடித்தவர்கள்     அனைவரும்    மாணவிகள்   தான்.
அரண்மனை    சிம்மாசனம்   சிறைச்சாலை    போர்க்களம்   என்று   அட்டகாசமான செட்டுகளுடன்   கனல்   பறக்கும்   வசனங்களுடன்   சிறந்த    நடிப்பாற்றலுடன் அரங்கு   கண்டது   இந்த   ‘செழியன் துறவு’.
செழியன்   பேசும்   வசனங்களை – நாடகத்தைப்  பார்த்த பல மாணவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.    அந்தளவுக்கு    நாடகம்   மாணவர்களைப்   பெரிதும் ஈர்த்தது.
இதே   நாடகம் மகுடம்காத்த மங்கை   வெற்றித்   திருமகள் முதலான பெயர்களிலும் பல    தடவைகள்   மேடையேறின.
நாடகத்தை   எழுதியவரும் நாடகத்தை  இயக்கியவரும் சோமஸ்கந்தர்தான். இந்த நாடகத்தின்   வெற்றிக்காக   ஊண் உறக்கம் பாராது   இவர் உழைத்தபோது பக்கபலமாக நின்றவர்கள்    பண்டிதர்    மயில்வாகனனும்    நிக்கலஸ்   மாஸ்டரும்தான்.
இந்தக்   கூட்டணியே     முதல்   முதலாக இப்பாடசாலையில் மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய்தது. இலவசமாக டியூசன் வகுப்புக்களை நடத்தி பயிற்சி வழங்கினார்.
குறிப்பிட்ட   புலமைப்பரிசில்   பரீட்சைக்கான   விண்ணப்பபடிவத்தை    பூர்த்தி   செய்துகொண்டு     எனது   பெற்றோரின்   சம்மதம்   பெறுவதற்கு    ஒருநாள்   இரவு   அவர்   வரும்பொழுது   நான்   ஆழ்ந்த   உறக்கத்திலிருந்தேன்.  இத்தகைய   அபூர்வமான   ஆசிரியர்களை   இக்காலத்தில்   காண்பது  அரிது.
பரீட்சையில்   சித்தியடைந்த  மாணவர்கள்  இவர்களின் கால்களைப் பணிந்து ஆசிர்வாதம் பெற்ற    பின்பே    புதிய   கல்லூரிக்குச்   சென்றார்கள்.   அந்தமாணவர்களில்   நானும்    ஒருவன்.
யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி கல்லூரியில் (தற்போதைய கனகரத்தினம் மத்திய கல்லூரி) அனுமதிக்கப்பட்டு  அங்கு  கல்விபயின்ற  காலத்தில்ää  யாழ். நகர மண்டபத்தில் நாடகம் ஒன்றை    மேடையேற்றவந்த   சோமஸ்கந்தர் - எமது கல்லூரிக்கும் ஒரு நாடகம் எழுதிக் கொடுத்துச் சென்றார்.
அக்காலத்தில் பிரபல்யமாக விளங்கிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் “எங்கள் திராவிடப்   பொன்னாடே” என்ற பாடலின் மெட்டை வைத்து “எங்கள் ஈழத்திருநாடே” என்ற பாடலை   இயற்றினார்.
ஈழமாதாவை – ஒரு பெரிய இலங்கை வரைபடத்தின் முன்னே நிறுத்தி வைத்து - இலங்கையின்  தொழில்வளம் இயற்கை வளம் அரசியல் தலைவர்கள் பற்றியெல்லாம் சித்திரித்து மிகச் சிறந்த இசையும் - பாட்டும் நடிப்பும் கலந்த புதுமையான நிகழ்ச்சியை மாணவர்களைக்    கொண்டு    தயாரித்தளித்தார்.
தேயிலைத்   தோட்டத்தில்   கொழுந்து பறிக்கும் பெண்கள் வயல்வெளிகளில்   நாற்றுநடும்   பெண்கள்   மன்னாரில்  முத்துக்குளிக்கும்   தொழிலாளர்கள்    என்று   தேசத்தின்    உழைப்பாளர்களை   மேடையில்   சித்திரித்தார்.
இந்தப்   பாடலும்  நீண்ட காலம் மாணவர்களிடையே ஒலித்துக் கொண்டிருந்தது. விவேகானந்தா வித்தியாலயம் - பெயரும் புகழும் பெறுவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்   சோமஸ்கந்தர்.
பின்னாளில்   மலையகத்தில் ராகலையில் பணிபுரியச் சென்றார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவரை அரசியல்வாதிகளும் விட்டு வைக்கவில்லையென்பது கவலையான செய்தி.   மக்களைக் கவரும் வண்ணம் பேசத் தெரிந்தவரை அந்நாளில் பிரபல்யமாக விளங்கிய ஒரு அமைச்சர் தான் சார்ந்த கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் இவரைப் பயன்படுத்தினார்.
இவரது   வாழ்விலும் - உயர்விலும்    தாழ்விலும்    எப்போதும்   பங்கு  கொண்ட நிக்கலஸ் மாஸ்டர்   மிகவும்    சுவாரஸ்யமான   பேர்;வழி.   நகைச்சுவையுடன்  பேசுவார். சோமாஸ்கந்தர் அரசியல் மேடைகளில் ஏறியதைப் பார்த்துவிட்டுää “தேர்தல் முடியவும் பெட்டியைத்    தூக்கத்    தயாராகுங்கள்” – என்று    சிநேகபூர்வமாக   எச்சரித்தார்.
இறுதியில் அதுவே நடந்தது. சோமஸ்கந்தர் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டு இடமாற்றப்பட்டார்.    புத்தளத்துக்கு    சமீபமாக ஒரு தீவில் உள்ள சாதாரண பாடசாலைக்கு  அவர்   செல்ல நேர்ந்தது.   அத்தீவுக்கு    படகில்தான் செல்லவேண்டும். சோமாஸ்கந்தர்     தமது    ஊரான   உடப்பிலிருந்து   பயணித்தார்.
எனினும்  சோர்ந்து போகாமல் - ஊரில் பல சமூக சமய கலைப்பணிகளில் ஈடுபட்டார். உள்ளார்ந்த ஆற்றல் மிக்க கலைஞன் எங்கே வாழநேர்ந்தாலும் அழிந்து விடமாட்டான் என்பதற்கு    சோமஸ்கந்தரும்    ஒரு    உதாரணம்.
இவரால்    நீர்கொழும்பு    தமிழ்   மக்கள்  மட்டுமல்ல உடப்பூர் மக்களும் பெருமை பெற்றனர்.
கருத்தோவியன் சொல்லிசைச் செல்வன் வில்லிசை வேந்தன் அருட்கலைத்திலகம் கலாபூஷணம்   முதலான பட்டங்கள் இவரை அலங்கரித்தாலும் “உடப்பூரான்” என்றதும் நினைவுக்கு   வரும்   இவரது   பெயர்.
2001 ஏப்ரல் மாத மல்லிகை  சோமஸ்கந்தரின் படத்தை அட்டையில் தாங்கியது. இவரது சீடர்களில் ஒருவரான உடப்பூர் வீரசொக்கன்ää அந்த இதழில் விரிவான கட்டுரையே எழுதியிருக்கிறார்.
23.12.1997 இல் எனக்கு இவர் எழுதிய கடிதம் பின்பு ‘கடிதங்கள்’ நூலிலும் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர்   மலேசியாவிலும்    வில்லிசை நிகழ்;ச்சிகளை நடத்தியவருக்கு அவுஸ்திரேலியாவுக்கும்    வர   விருப்பம் இருந்தது.   மூன்றாம் தர சினிமாப்படங்களை தருவிக்கும் - காலம்    பூராவுமே    காற்றோடு   பேசி ‘தமிழ் முழக்கம்’ செய்து கொண்டிருக்கும்   தமிழக    பேச்சாளர்களை   இறக்குமதி   செய்யும் இந்நாட்டு புலம்பெயர்ந்த     தமிழர்களில்    பெரும்பாலானவர்கள் “ஈழம்” குறித்து உரத்துப் பேசுவார்கள். - ஆனால்   ஈழத்து    கலைஞர்களை    ஈழத்து    படைப்பாளிகளைக் கண்டு   கொள்வதில்லை.
இந்தக்    கசப்பான    அனுபவம்    தொடர்ந்தும்    மனதை    அரிக்கும்   வேளையில்   சோமஸ்கந்தரின் கடிதமும் வேண்டுகோளுடன் வந்தது. இங்குள்ள சூழ்நிலையை    அவருக்கு   விளக்கி எழுதிய பதில் அவருக்கு கிடைத்ததோ தெரியவில்லை.
அவரும்  இருதய நோயாளியாகி - சத்திரசிகிச்சைக்குத் தயாரான வேளையில் எதிர்பாராத விதமாக - நானும்    மாரடைப்பால்    படுக்கையைத்    தஞ்சமடைந்தேன்.
நான்    எழுந்தவேளையில் - அவர்  விடைபெற்றார்.
பல சோதனைகளை - வேதனைகளைக்   கடந்து   வந்த கலைஞன் சோமஸ்கந்தர் என்பது அவருடன்    நெருங்கிப்பழகியவர்களுக்கே  தெரியும். “வடமேல் மாகாணத்தில் ஒளிக்கீற்று” என்று   உடப்பூர்   வீரசொக்கன்   சொல்வது   அர்த்தம்   மிக்க  வரிகள்.
இயற்கையை   நேசித்த   மனிதகுலமே   இயற்கையையும்    அழித்திருக்கிறது.   டியூப்வெல்    என்ற   புதிய   நாகரீகம்    தோன்றியதும்   நன்னீர்   ஊற்றுக்கள்   மடிந்துவிட்டன.   நீண்ட   இடைவெளிக்குப்பின்னர்   உடப்பூருக்குச்சென்றேன்.
வன்னியில்   கடற்றொழில்    நிமித்தம்    இடம்பெயர்ந்து  வாழ்ந்த   உடப்பூர் தமிழ்க்  குடும்பம்   ஒன்றில்    தமது     தாயையும்   தந்தையையும்   போரில்     இழந்துவிட்டு   நிர்க்கதியான   நிலைமையில்   உடப்பூருக்கு    பேத்தியாரிடம்   வந்து   சேர்ந்த    மூன்று   பிள்ளைகளின்   கல்வி   வளர்ச்சிக்கு   உதவுவதற்காக   2010  இல்    அங்கு   சென்றேன்.
அந்தப்பிள்ளைகளை   எமது  கல்வி   நிதிய   பராமரிப்பில்   இணைத்துவிட்டு    ஊற்றுக்கிணறுகளை   தேடிச்சென்றேன்.   ஆனால்   அவை   தென்படவில்லை.
உடப்பூர்   சோமஸ்கந்தர்   போன்று   அந்த   ஊற்றுக்கிணறுகளும்    நினைவில்தான்    தங்கிவிட்டன.

No comments: