இலங்கைச் செய்திகள்


விக்னேஸ்வரனை சந்திக்கின்றார் குர்ஷித்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

யாழில் தனிச் சிங்களத்தில் அடையாள அட்டைகள்

உள்ளக விசாரணையின்றேல் சர்வதேச பொறிமுறை நிச்சயம் : அரசாங்கத்துக்கு நவநீதம்பிள்ளை காலக்கெடு


விக்னேஸ்வரனை சந்திக்கின்றார் குர்ஷித்

25/09/2013   இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ள சி.வி. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார்.
அடுத்த மாத ஆரம்பத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு அடுத்த மாத ஆரம்பத்தில் குர்ஷித் விஜயம் செய்யவுள்ளார்.
அவர் ஒக்டோபர் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரியவருகிறது.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திக்கும் குர்ஷித், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் விக்னேஸ்வரனையும்  அவர் சந்திக்க உள்ளார்.   நன்றி வீரகேசரி

 

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

25/09/2013   இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு 26.1 வீதத்தால் அதிகரித்துள்ளதென இலங்கை உல்லாசப் பிரயாணத்துறை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகைதந்த வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை 79,256 ஆக இருந்தது. அத்தொகை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 100,224 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுவரையில் 711,446 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.3 வீத அதிகரிப்பாகும்.

இந்தியா, ஜேர்மனி, சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தரும் உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு ஒவ்வொரு மாதமும் அதிகரித்துள்ளது என்று உல்லாசப்பயணத்துறை அபிவிருத்தி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி

 

 

 

 

யாழில் தனிச் சிங்களத்தில் அடையாள அட்டைகள்

26/09/2013    வட மாகாண சபைத் தேர்தலையொட்டி தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் முகமாக இடம்பெற்ற நடமாடும் சேவையில் விண்ணப்பித்தவர்களில் பலருக்கும் தனிச் சிங்களத்தில் மட்டும் விபரங்கள் எழுதப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு தனிச்சிங்களத்தில் மட்டும் விபரங்களை உள்ளடக்கிய அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றவர்கள் அதில் உள்ள விபரங்களை அறியமுடியாமல் இருப்பதுடன் அதில் உள்ள விபரங்கள் சரியா அல்லது பிழையா என தெரியாத நிலையிலும் திண்டாடுகின்றனர்.

இத்தகைய தேசிய அடையாள அட்டை கிடைக்கப் பெற்றவர்கள் தமது விபரங்கள் அடங்கிய கோரிக்கை கடிதத்தையும் மற்றும் தேசிய அடையாள அட்டைக்கான மூன்று படங்களையும் கிராம அலுவலர்கள் ஊடாக மீள அனுப்பி குறிப்பிட்டதேசிய அடையாள அட்டைக்கு பதிலாக தமிழ், சிங்கள மொழிகள் அடங்கிய விபரங்களுடன் தேசிய அடையாள அட்டையை மீளப் பெற முடியும் என தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நன்றி வீரகேசரி

 

 

 

 

 

 

உள்ளக விசாரணையின்றேல் சர்வதேச பொறிமுறை நிச்சயம் : அரசாங்கத்துக்கு நவநீதம்பிள்ளை காலக்கெடு

26/09/2013 மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சுயாதீன நம்பகத்தன்மையான உள்ளக செயற்பாட்டை முன்னெடுக்காவிடின் சர்வதேச சமூகம் சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதில் தனது கடமையை செய்யும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

தான் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணையில் எவ்விதமான ஆரோக்கியமான விடயங்களையும் காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றவும் ஏனைய கடப்பாடுகளை முன்னெடுக்கவும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க மனித உரிமைப் பேரவை தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 24 கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வின்போது தனது இலங்கை விஜயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட நவநீதம்பிள்ளை அந்த அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

மனித உரிமைப் பேரவையின் பிரதி ஆணையானர் ப்ளாவியா பென்சீரி மனித உரிமைப் பேரவையில் நவநீதம் பிள்ளையின் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கைக்கு தன்னை அழைத்தமை மற்றும் தனது விஜயத்தை திட்டமிடுவதற்கு உதவிகளையும் ஒருங்கிணைப்புகளையும் செய்த இலங்கை அரசாங்கத்திற்கு நன்றிகளை மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது நவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஏனைய துறை சார்ந்தோர் உள்ளீட்டோர் பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக மீள்குடியேற்றம், மீள்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் சர்வதேசத்தின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய முன்னேற்றங்களை மனித உரிமை ஆணையாளர் பார்வையிட்டார்.

பெரும்பகுதியான இடம்பெயர்ந்த மக்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர். எனினும் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீள்குடியேறுவதற்காக எதிர்பார்த்துள்ளனர். அத்துடன், மீள்குடியேற்றப்பட்ட பல மக்கள் இன்னும் தமது ஜீவனோபாயத்தை கட்டியெழுப்புவதற்காக கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மீள்குடியேற்றப்பட்ட மக்களின் மனித உரிமைகள் குறித்து ஆராய விசேட அறிக்கையாளரை இலங்கை அரசாங்கம் அழைத்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம்.

கடந்த 21ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட வட மாகாண தேர்தலை நவநீதம்பிள்ளை வரவேற்றுள்ளார். இதன்மூலம் அதிகாரங்களை பரவலாக்குவதற்கு சிறந்ததொரு ஆரம்பம் கிடைக்குமென அவர் நம்புகிறார்.

யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள கடந்து விட்ட நிலையிலும் வடக்கில் இன்னும் மிகுதியான இராணுவ பிரசன்னம் காணப்படுகிறது. அத்துடன், புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் செயற்பாடும் இடம்பெறுவதாகவும் ஆணையாளருக்கு அறிக்கையிடப்பட்டது.
அத்துடன், பெண்கள் மற்றும் யுவதிகள் பிரச்சினைகள் விதவைகளை தலைமையாகக் கொண்ட குடும்பங்களில் இராணுவம் உள்ளிட்டவர்களின் பாலியல் தொந்தரவுகள் தொடர்பில் அவருக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது. எனவே, பாலியல் வல்லுறவு விடயத்தில் பூஜ்ஜிய ரீதியில் பொறுமைகாக்கும் கொள்கையை கடைப்பிடிக்குமாறு அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறார்.

இது இவ்வாறிருக்க,திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்திவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் கட்டாயமான காணி அபகரிப்பு தொடர்பாகவும் அவர் அறிக்கைகளை பெற்றுக்கொண்டார். சிவில் மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் இராணுவத்தினரின் வகிபாகம் அதிகமாக விருக்கின்றது. எனவே, இராணுவ குறைப்பு தொடர்பிப் காலக்கெடுவை முன்னெடுக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் போது அவர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதன் விபரங்கள் குறித்தும் கலந்துரையாடினார். தேசிய செயற்றிட்டம் ஊடாக மேலதிகமாக 53 பரிந்துரைகளை அமுல்படுத்துவதை அவர் வரவேற்றார். பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சிலிருந்து நீக்கியமை தொடர்பில் நவநீதம்பிள்ளை வரவேற்றுள்ளார். எனினும் புதிய அமைச்சானது பாதுகாப்பு அமைச்சைபோன்றே தொழிற்பாட்டு ரீதியில் முன்னாள் ஜெனரல் ஒருவர் தலைமையில் இயங்கவுள்ளது.

அடுத்ததாக காணாமல்போனோர் தொடர்பில் விசாரிப்பதற்கு ஆணைக்குழுவை நியமித்துள்ளமை ஆணையர் வரவேற்றுள்ளார். இந்த ஆணைக்குழுவானது வட, கிழக்கு மாகாணங்களில் 1990ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காணாமல்போதல் சம்பவங்களையே விசாரிக்கவுள்ளது. ஆனால், அண்மைய ஆண்டுகளில் கொழும்பிலுளம் ஏனைய பகுதிகளிலும் இடமபெற்ற வெள்ளை ேவன் காணாமல்போதல் குறித்து இந்த செயற்பாட்டில் விசாரிக்கப்படமாட்டாது எனது தெரிகிறது. எனவே, இந்த ஆணைக்குழுவின் ஆணையை விரிவுபடுத்துமாறு நவநீதம்பிள்ளை அரசாங்கத்தை கேட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க மனித உரிமை பேரவை கரிசனை கொண்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான அல்லது புதிய சுயாதீன நம்பகரமான விசாரணைகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படாமை கவலைதரும் விடயமாகும். எனவே, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் உள்ளக ரீதியில் நம்பகரமான செற்பாட்டில் ஈடுபட்டு உணரக்கூடிய பெறுபேற்றை அடையுமாறு நவநீதம்பிள்ளை அரசாங்கத்தை ஊக்குவித்துள்ளார். இந்த செயற்பாடு இடம்பெறாவிடின் இந்தி விடயம் தொடர்பில் ஒரு விசாரணை பொறி முறையை உருவாக்குவதற்கு சர்வதேசத்துக்கு கடமையுள்ளதாகவும் அவர் நம்புகிறார்.

இதேவேளை அண்மைக்காலமாக சிறுபான்மை மதத்தினர் மீதான வன்முறைகள் தொடர்பிலும் ஆலயங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளை எதிர்க்கும் வகையில் சட்டம் ஒன்று கொண்டுவரப்படுவதாக தேசிய மொழிகள் அமைச்சர் தெரிவத்துள்ளார். இந்த விடயத்தில் உதவிகளை வழங்குவதற்கு மனித உரிமை அலுவலகம் தயாராக இருக்கின்றது. இந்த விடயத்தின் சிறுபான்மை தொடர்பான சுயாதீன நிபுணர் ஒருவர் இங்கு வருவது உதவியாக இருக்கும். இது விரைவில் இடம்பெறும் என நம்புகின்றோம்.

மனித உரிமை காப்பாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் அசௌகரியங்கள் தொடர்பில் ஆணையாளருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நவநீதம்பிள்ளை விஜயம் செய்த மீள்குடியேற்ற கிராமங்களுக்கு அவர் விஜயம் செய்வதற்கு முன்னரும் பின்னரும் இராணுவத்தினர் அல்லது பொலிஸார் சென்றுள்ளமையும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டத்தின் ஆட்சிப்படுத்தல் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் வீழ்ச்சியடைகின்றமை குறித்தும் அவர் அவதானம் செலுத்தினார். 18ஆவது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு பேரவையை இல்லாமல் செய்துள்ளது. முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை மற்றும் அரசியல் ரீதியான நீதித்துறை நியமனங்கள் நீதித்துறையின் சுயாதீன தன்மையை ஆட்டம் காணவைத் துள்ளது.

மேலும் திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் தன்னிடம் விளக்கமளித்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.

ஏ.சி.எப். நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையையும் தாம் அவதானிப்பதாக நவி பிள்ளை தெரிவித்தார் என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி

 

 

 

 

 

 

 

 

No comments: