.
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்களை விற்றுக் கொண்டிருந்தான் அந்த தள்ளு வண்டிக்காரன். அவ்வப்போது வறண்டு வெடித்துக் கிழிந்துவிடும் தொண்டையை அவனது வேட்டியை விடவும் அழுக்காயும் பழுப்பாயும் உள்ள பாட்டிலைத் திறந்து வீட்டிலிருந்து கொண்டு வந்த உப்புத் தண்ணீரால் ஈரப்படுத்தி ஒட்ட வைத்துக் கொள்வான்.
சின்னது, நடுத்தரம், பெரியது என்று காசுக்கு தக்க அளவில் அவனிடம் கடவுள்கள் இருந்தனர். அவனது தள்ளு வண்டியில் எல்லாக் கடவுள்களும் இருந்தனர். ஒரு அடி அளவுள்ள பிள்ளையார் பொம்மை இருபத்தி ஐந்து ரூபாய் எனில் அதே அளவுள்ள ஏசுநாதர் பொம்மையும் அதே விலைதான். அவனுக்கு எந்த சாமியும் உசத்தி இல்லை எந்த சாமியும் தாழ்ச்சி இல்லை.
துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டே அவன் வண்டியைத் தள்ளிய ஏதோ ஒரு புள்ளியில் ஒரு சின்னப் பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறியது. அப்போது ஏற்பட்ட ஒரு சன்னமான குலுக்கலில் ஒரு கடவுள் பொம்மைக்கு உயிர் வந்து விட்டது.
" என்ன சுப்பு, எப்படி போகுது பொழப்பு?”
“ அத ஏன் சாமி கேக்குற? நாய் படாத பொழப்பு. நாலு வவுத்த ஒரு வேல நனைக்கறதுக்குதான் இப்படி நாயா பேயா வெயில்லுன்னு பார்க்காம மழைன்னு பார்க்காம அலைஞ்சு தேய வேண்டியிருக்கு” என்று புலம்பிக் கொண்டே போனவன் கொஞ்சம் சுதாரித்தவனாக ,” "ஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன் ஏம் பொழப்பு எப்படிப் போகுதுன்னுகூடத் தெரியலன்னா அப்புறம் நீயெல்லாம் என்ன சாமி?”
“ நூத்துக்கணக்கான வருஷம் தவம் இருந்த ஆனானப் பட்ட முனிவர்களே நான் முன்னாடிப் போய் நின்னு என்ன வரம் வேணும்னு கேட்டா எப்படிப் பதறிப் போய் குரல் நடுங்க யாசிப்பாங்கத் தெரியுமா? நீ என்னடான்னா கொஞ்சம் கூட பதட்டமே இல்லாம சர்வ அலட்சியமாப் பேசற”
“ அவங்களுக்கெல்லாம் ஓங்கிட்ட ஏதோ ஒரு வரம் தேவப் பட்டுருக்கும். அதனால ஒங்கிட்ட வளஞ்சு குனிஞ்சு கூழக் கும்பிடு போட்டிருப்பாங்க. எனக்கு உன்னிடம் எதுவும் தேவை இல்ல. சூறையோ, புயலோ, மழையோ, வெயிலோ நாயா பேயா ஒழைக்கிறேன். ஒழப்புக்கான கூலியத் தவிர வேற எதையும் நான் எதிர்பார்க்குறது இல்ல. அதனாலதான் இந்த அசால்ட்டும் திமிரும்”
கடவுள் ஒரு கனம் அப்படியே ஆடிப் போனார். ஆக, உழைக்காம எதிர்பார்க்குற செண்ட்டுகாரனிடம்தான் தனது ஜம்பம் பலிக்கும் என்பதும் உழைப்புகான நியாயமான கூலியை மட்டுமே எதிர்பார்க்கும் வேர்வைக்காரனிடம் எதுவும் நடக்காது என்பதும் புரிந்து போக மௌனமானார் கடவுள்
கொஞ்ச நேரம் இப்படியே மௌனமாக கடந்தது. வீடுகளே இல்லாத பகுதியாக இருந்ததால் .அவனுக்கு கூவ வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. கூவிக்கொண்டே இருந்த வாயை எவ்வளவு நேரம்தான் சும்மா வைத்திருப்பான்? மெல்ல ஆரம்பித்தான்.
“ஏஞ்சாமி இப்படி படச்ச?”
வில்லங்கம் புரியாத கடவுள் “எப்படி?” என்று அப்பாவியாய் கேட்டார்.
“ ஒன்னும் தெரியாத அப்பாவியாட்டம் கேளு. அவுங்கள மாடி மேல மாடி வீட்டிலும் எங்கள ப்ளாட் ஃபாரத்திலும் ஏம்பா படச்ச?”
என்ன சொன்னாலும் சிக்கிக் கொள்வோம் என்பது புரியாமல் எதையாவது சொல்லி சிக்கிக் கொள்ள கடவுள் என்ன மன்மோஹன்சிங்கா? " நான் எங்கடா சுப்பு உங்கள படைச்சேன்? நீதானடா எங்களை எல்லாம் படைச்சு இப்படி இந்த தள்ளு வண்டியில போட்டு இந்த மொரட்டு வெயில்ல தள்ளிட்டுப் போற..”
“ ஏம்பொழப்ப பாத்தா ஒனக்குக் கூட நக்கலா இருக்கு. படைக்கிற அளவுக்கு துப்பு இருந்தா நான் ஏஞ்சாமி இந்த மொட்ட வெயில்ல கெடச்ச தேஞ்சுப் போன ரெண்டு சோத்தாங்கால் செருப்பையே ரெண்டு கால்லயும் மாட்டிக்கிட்டு லோலு படறேன்..” என்று சொல்லிக் கொண்டே போனவன் எதிர்த்த திசையில் இருந்து டி.வி. எஸ் சில் வந்த தம்பதியர் இவனை நிற்கச் சொல்லி கைகாட்டிக் கொண்டே அவர்களது வண்டியை ஓரங்கட்டவே “ செத்த பொறு சாமி கிராக்கி ஒன்னு வருது . முடிச்சிட்டு வந்துடறேன்” என்றவாறே அவர்களை எதிர் கொள்ளத் தயாரானான்.
ஏனோ தெரியவில்லை அந்தப் பெண்ணிற்கு இவனோடு பேசிக் கொண்டு வந்த அந்த பொம்மையைப் பிடித்துப் போயிற்று. கையிலெடுத்து புரட்டிப் பார்த்துக் கொண்டே " இது எவ்வளவு?” என்று கேட்டாள்.
எங்கே தன்னை விற்றுவிடுவானோ என்ற பயம் அந்தக் கடவுளை தொற்றிக் கொண்டது.
“ அது வேணாம்மா. டேமேஜ் ஆனது. வேற எதையாவது நல்லதா எடுங்கம்மா” என்றவன் அந்தப் பொம்மையை வாங்கி ஒரு ஓரமாய் வைத்தான்.
தன்னை அவசரமாய் விற்காமல் இருந்தமைக்காக ,அவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் ஒரு புன்னகையால் அவனுக்கு நன்றி சொன்ன அந்தக் கடவுளை நோக்கி “ எதையாச்சும் ஒளறி காரியத்தக் கெடுத்துடாத, இந்த வியாபாரத்த முடிச்சுட்டு வந்துடறேன்” என்று அவர்களுத் தெரியாத வகையிலேயே இவனும் அவரை நோக்கி புன்னகைத்து வைத்தான்.
அதை எடுத்து இதை எடுத்து அப்படியும் இப்படியுமாய் உருட்டிப் பார்த்து இறுதியாய் ஒன்றை எடுத்து ஒரு வழியாய் அறுபது சொன்னவை நாற்பதுக்கு இழுத்து வந்த அவர்களது சாமர்த்தியத்தை தாங்களே ரசித்தவாறு நகரத் தொடங்கினர். போகும் போதும் அந்தப் பெண் அந்த பொம்மையை மீண்டும் கையிலெடுத்துப் பார்த்தால்.
“ அதுதான் நல்ல சரக்கில்லன்னு சொன்னேனேம்மா. அதப் போடு”
“ இல்லப்பா அது என்னமோ தெரியல இருக்கிற சாமியிலேயே இந்த சாமிதான் உயிர்ப்போட இருக்கிற மாதிரித் தெரியுது.” என்றவளிடமிருந்து அந்தப் பொம்மையை நாசுக்காக வாங்கி வண்டியில் போட்டவன், “ உங்களுக்கு நல்லது சொன்னாப் புரியாதும்மா. நாளைய முன்னியும் உங்க கிட்ட நான் தொழில் பாக்குறதா வேண்டாமா?” என்றான்.
“ அதுதான் ஓட்டப் பொம்மங்கிறாப்புல இல்ல. வச்சிட்டு பேசாம வாயேன்” என்று அவளது கணவர் சலிக்கவே அந்தப் பெண் தங்களது வண்டி நோக்கி நகர்ந்தார். வண்டியில் ஏறி அமர்ந்த பின்பும் அந்த பொம்மையின் மீது அவளது கண் இருந்ததை சுப்பு கவனிக்கவே செய்தான்.
அப்பாடா என்றிருந்தது சுப்புவுக்கு. எங்கே தனக்கு வாய்த்த பேச்சுத் துணையை பறித்துக் கொண்டு போய்விடுவாளோ என்று ஒரு கண்ம் ஆடித்தான் போனான்.
” தேங்க்ஸ் எ லாட் சுப்பு”
“ என்ன சாமி கான்வெண்ட்டுல படிச்ச தொர வீட்டுப் புள்ள மாதிரி இங்க்லீசெல்லாம்” பேசற.
” எல்லா பாஷையும் நமக்கு ஒன்னுதானேப்பா”
“ அப்ப ஒனக்கு எல்லா பாஷையும் தெரியுமா?”
“ஆஹா! ஏந்தெரியாம?”
“ இல்ல அப்ப ஒனக்கு தமிழ் தெரியுமா?”
“ லூசாடா சுப்பு நீ. இவ்வளவு நேரம் நாம தமிழ்தான பேசினோம்”
“ஆமாம் ஆமாம் நாந்தான் ஏதோ கிறுக்குத் தனமா பேசிட்டேன். அப்புறம் ஏன் சாமி தமிழ் ல கும்பிடக் கூடாதுங்கறாங்க?”
“ நான் எப்பவாச்சும் அப்படி சொன்னேனாடா? அது மட்டுமல்லடா சுப்பா, அப்பனுக்கே க்ளாஸ் எடுத்த முருகனுக்கே பாடம் நடத்திய அவ்வையோட ஊருடா இது. அப்பேர் பட்ட முருகனையே அசால்ட்டாப் பார்த்து ஒன்னோட தத்துவம் பிழை என்றால் அதை சொல்ல என் தமிழுக்கு உரிமை உண்டு என்று சொன்னாளேடா கிழவி. அவ்வளவு கம்பீரமான மொழிடா தமிழ்”
“ அவ்ளோ கிரேடா சாமி தமிழுக்கு”
“இல்லையாடா பின்ன. இந்த மொழியை ரசிக்கத் தானேடா சிவனே நக்கீரனை சீண்டிப் பார்த்தார்”
“ அப்புறம் ஏன் சாமி பல பள்ளிக் கூடத்துல ‘அம்மா’ன்னு கூப்பிட்டாலே புள்ளைங்கள முட்டிக்கால் போட வைக்கிறாங்க?”
“ அந்தப் பள்ளிக் கூடங்களிக்கு ஏண்டா புள்ளைங்கள அனுப்புறீங்க?”
“ அதுவும் சரிதான் சாமி”
இப்படியான பேச்சுக்கு இடையே இரண்டு மூன்று பொம்மைகளை விற்றிருந்தான். ஒரு லாரி ஓட்டுநரிடம் பேசும் போது 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்'
விலையேற்றம் குறித்து சுப்பு பேசியிருந்தான்.
“அது என்னடா 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்?'
” அது ஒரு வகையான ரசாயனக் களி மண் சாமி”
“ உங்க ஊருல களி மண்ணு தீர்ந்து போச்சாப்பா?”
“பேசாம அதுலேயே செய்யலாமே?”
“ இந்த ஷைனிங் கிடைக்காது சாமி”
“ இல்ல எங்களில் சிலரை தண்ணீல போடறப்ப கறையாம மீனெல்லாம் செத்துப் போகுதாமே? பேசாம களி மண்ணுல செஞ்சா மீனெல்லாம் பிழைக்குமே சுப்பா”
" நான் பிழைக்க வேணாமா சாமி. இந்த நவீன காலத்துல களி மண்ணு சாமியெல்லாம் யாரு வாங்குவா சாமி?. அது மட்டுமல்ல ' ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்ல ' செஞ்சாத் தான் உன்ன செஞ்ச திருப்தியே வருது சாமி”
“பார்த்தாயா சுப்பு, நீயே வசமா வந்து ஒத்துக்கிட்ட பார்த்தாயா. அப்ப நீதான எங்களப் படச்சது?
”அது என்னவோ நெசந்தான் சாமி. ஆனா உன்னப் படைக்கிறதுக்காக என்னப் படச்சது நீதானே சாமி?”
சாமி மீண்டும் பொம்மையாய்ப் போனார்
No comments:
Post a Comment