தமிழ் சினிமா

MailPrint
தேசிங்கு ராஜா

ஒரு கிராமத்தில் நடக்கும் காதல், கொமடி மற்றும் ஊர்ப்பகை ஆகியவற்றை கலந்து கட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் இயக்குனர் எழில்.
புலியூர், கிளியூர் என இரண்டு ஊர்களுக்கிடையே உள்ள பரம்பரை பிரச்சனையில் இருந்து படம் துவங்குகிறது.
கிளியூரை சேர்ந்த இதயக்கனி என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார் விமல். புலியூரை சேர்ந்த தாமரை என்னும் கதாபாத்திரத்தில் பிந்துமாதவி வருகிறார்.
படம் ஆரம்பத்தில் விமலுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் என்று விமலின் மாமாக்கள், சிங்கம் புலி மற்றும் சாம்ஸ் கோவிலில் பிராத்தனை செய்கிறார்கள்.
அங்கு பிந்துமாதவியை சந்திக்கிறார் விமல். பார்த்தவுடனே அவள் மீது காதல் வயப்படுகிறார். முதலில் காதலை மறுக்கும் பிந்துமாதவி பிறகு ஏற்றுக்கொள்கிறார்.
பாட்டன்கள் காலத்தில் இருந்து இந்த இரண்டு ஊர்களுக்கிடையே சண்டை இருந்து வருகிறது. விமல் அப்பாவை பிந்துமாதவி அப்பா கொன்றுவிடுகிறார்.
பதிலுக்கு விமலின் தாத்தா பிந்துமாதவியின் அண்ணனை ஆள் வைத்து வெட்டிக் கொலை செய்கிறார். பதிலுக்கு விமலை தீர்த்துகட்ட பிந்துமாதவியின் அப்பாவும், சித்தப்பாவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் இவர்களின் காதல் வலுவடைகிறது. இதன் உச்சக்கட்டமாக கொஞ்சம் அவசரப்பட்டு உடல் ரீதியாக ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.
இவர்களின் காதல் விடயம் பிந்துமாதவியின் வீட்டுக்கு தெரியவந்து பிரச்சினை பெரியதாக வெடிக்கிறது. பிந்துமாதவி, தன் அப்பாவை சமாதானம் செய்து விமலை ஊர் எல்லையில் உள்ள கோவிலுக்கு தனியாக வரும்படி அழைக்கிறார்.
அங்கு விமலை தீர்த்து கட்டவேண்டும் என அவள் அப்பாவும், சித்தப்பாவும் கங்கணம் கட்டுகிறார்கள்.
ஆனால் அங்கு விமலுக்கும், பிந்துமாதவி அப்பாவுக்கும் இடையே சண்டை ஆகிறது.
கோபத்தில் பிந்துமாதவி கழுத்தில் தாலி கட்டுகிறார் விமல். அந்த இடத்திற்கு விமலின் ஆட்கள் வந்து பிந்துமாதவியின் அப்பாவை கொலை செய்துவிடுகிறார்கள். விமலையும் அழைத்து சென்று விடுகிறார்கள்.
இந்நிலையில் ஊர் பஞ்சாயத்தை கூட்டி பிந்துமாதவியை விமலுடன் அனுப்பி வைக்கிறார்கள். அவள், நான் உன்னிடம் சேர்ந்து குடும்பம் நடத்த வரவில்லை உன்னை கொலை செய்யதான் வருகிறேன் என்கிறாள்.
அதன் பின்பு ஊர் பிரச்சனை என்னவானது? பிந்துமாதவி விமலுடன் சேர்ந்தாரா? என்று மீதிக்கதை தொடர்கிறது.
விமலுக்கு பழகிய வேடம். ரொம்பவே இயல்பாக நடித்திருக்கிறார். மனைவியிடம் பாவமாக கெஞ்சும்போது மவுனகீதங்கள் பாக்யராஜை நினைவுபடுத்துகிறார். சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தாமரை கதாபாத்திரத்தில் வரும் பிந்துமாதவி பாவடை தாவணியில் மிகவும் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
கொமடியன்களாக வரும் சிங்கம் புலி, சாம்ஸ் மற்றும் சூரி கொமடியில் கலக்குகிறார்கள்.
விமலின் தாத்தாவாக வரும் வினுசக்கரவர்த்தி தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். மிகவும் கோபக்காரனாக, பிந்துமாதவியின் சித்தப்பாவாக வரும் ரவிமரியா கிளைமாக்ஸில் நல்ல நகைச்சுவை நடிகராக ஒரு ரவுண்ட் வந்துள்ளார்.
டி.இமான் இசையில் ‘நெலாவட்டம் நெத்தியிலே..’ பாடல் தாளம் போட வைக்கிறது. இந்தப் பாடலுக்கு தாமிரபரணி பானு குத்தாட்டம் ஆடுகிறார்.
கொமடியை மட்டும் தனது அஸ்திரமாக எடுத்துக்கொண்டு களம் இறங்கியிருக்கும் எழிலின் இயக்கத்தில் தேசிங்கு ராஜா ஒரு கொமடி ராஜா!
நன்றி விடுப்பு

No comments: