திரும்பிப்பார்க்கின்றேன்….. சமரசங்களுக்குட்படாத படைப்பாளி - பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் முருகபூபதி




 “புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம், உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை” – என்று  எழுதிய  தொ.மு.சிதம்பரரகுநாதன்  தமது 79 ஆவது வயதில் திருநெல்வேலியில் மறைந்தார் என்ற அதிர்ச்சியும் துயரமும் கலந்த செய்தியை   தாங்கிய  கடிதம்    2001 ஆம்  ஆண்டு  இறுதியில் இலங்கையிலிருந்து நண்பர்   கே.கணேஷிடமிருந்து   எனக்கு   வந்தது.
வாராந்தம்   கொழும்புப்   பத்திரிகைகள்  இங்கு திங்கள் அல்லது செவ்வாய் கிடைத்துவிடும். ஆனால் அவற்றில் இந்த மறைவுச் செய்தியை காணமுடியவில்லை.
திருநெல்வேலி பெருமாள்புரத்தில்தான் இப்பொழுதும் அவர் வசிக்கிறார் என நம்பிக்கொண்டிருந்தேன். இறுதியாக 90 இல் அவரது இல்லத்திற்கு குடும்பத்தோடு விருந்தினராகச்  சென்றேன்.
எனது  அப்பாவின்  வழியில் அவர் எனது நெருங்கிய உறவினர் என்பது எனக்கு எப்பொழுதும் பெருமை தரும் விஷயம்.
அவரது  மருமகள் (மகனின் மனைவி)  மாலதி  ஹரீந்திரன்  எனக்கு  அண்ணி  முறை.


இந்த உறவு முறைகளுக்கெல்லாம் அப்பால் ரகுநாதனை நான் பெரிதும் மதிப்பதற்கு பல காரணங்கள்  இருந்தன. அதனாலேயே  அவரது மறைவின்  பின்னர்  எனது பறவைகள்  நாவலை  அவருக்கே  சமர்ப்பணம்  செய்திருந்தேன்
புதுமைப்பித்தனின்  நெருங்கிய சகாவான ரகுநாதன், அவர் குறித்து கொண்டிருந்த – எமக்குப் புகட்டும் பாடம் என்ன? என்பதையே   இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.
எனவே ரகுநாதன் குறித்து என்னால் சொல்லக்கூடியது இதுதான்:- ‘ரகுநாதனது வாழ்க்கை சமரசங்களுக்குட்படாத ஒருவரின் துணிவு, உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.’
1956 ஆம் ஆண்டில் நான் ஐந்து வயதுச் சிறுவன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடாளாவிய ரீதியில் பாரதி விழாக்களை நடத்தியபோது அதற்குப் பிரதம பேச்சாளராக ரகுநாதனை இலங்கைக்கு அழைத்திருந்தது.
தமது பயணங்களின் நடுவே – நீர்கொழும்பில் எம்மையும் பார்ப்பதற்காக ஒரு இரவுப் பொழுதில் - சிலருடன்   திடுதிப்பென   காரில் வந்து இறங்கினார்.
எனக்கு அந்தச் சம்பவம் கனவாகவே நினைவில் பதிந்துள்ளது. உடன் வந்தவர்கள் யார் என்பதும்  தெரியாது.
அப்பா அச்சமயம் வெளிய+ர் போயிருந்தார். எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நண்பர்களுடன் படகில் புறப்பட்டு புத்தளத்தில் கரையிறங்கிய எனது அப்பா – மீண்டும் அதன்   பின்னர் தமிழகம் செல்லாமலேயே  நீர்கொழும்பில் 1983இல் மறைந்தார்.
சொந்த பந்தங்களை துறந்து புறப்பட்டு வந்தவரை நேரில் பார்ப்பதற்காக வந்த – அப்பாவின் மாமன் முறையான ரகுநாதன், அவரைப்பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
மீண்டும் 1983இல்  இலங்கையில் இ.மு.எ.ச. பாரதி நூற்றாண்டை நாடாளவிய ரீதியில் நடத்திய பொழுது – ரகுநாதன், பேராசிரியர் ராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோருடன்  வந்திருந்தார்.
இச்சமயத்தில்   நானும்   எழுத்தாளனாக அறிமுகமாகயிருந்தேன். ரகுநாதனுடன் எனக்கு கடிதத் தொடர்புகளும் இருந்தன.
முதல் தடவை – ரகுநாதனுக்கு ஏமாற்றமளித்த அப்பா, இந்தத் தடவை – அவரை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 83 மார்ச் 19ம் திகதியன்று சந்தித்தார். ஆனால் அப்பாவுக்கு கண்பார்வை இல்லை. அவரது அருமை மாமனாரை பார்த்துப் பேசுவதற்காக நானே   அப்பாவை   கைத்தாங்கலாக   அழைத்துக் கொண்டு கொழும்புக்குச் சென்றேன்.
இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். மென்மையான இயல்புகொண்ட அப்பா விம்மிவிம்மி அழுதார். அருகில் யார் யார் நிற்கிறார்கள் என்பதையும் பார்த்து அறியமுடியாத துர்ப்பாக்கிய சாலியான அவரது நிலைமையை கண்டு ரகுநாதனும் கலங்கினார்.
“உங்கள் உருவத்தை பார்க்க முடியவில்லை. உங்கள் குரலையாவது கேட்க வந்தேன்”. எனச் சொன்ன அப்பாவிடம் - “எங்கள் அண்ணனைப் பார்த்தீர்கள் தானே…. கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் சொன்னார்.
ரகுநாதன்  அண்ணன், எனக் குறிப்பிட்டது தொ.மு.பாஸ்கரத்  தொண்டமான் அவர்களைத் தான்.
பாஸ்கரத்தொண்டமான்  1963இல் இலங்கை வந்த சமயம்  எமது வீட்டுக்கு வந்த பொழுது அப்பா ஒரு  பெரிய இராப்போசன விருந்தையே அவருக்காக ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த முறை வந்த ரகுநாதனுடன் ஒரு எழுத்தாளன் என்ற உணர்வுக்கும் அப்பால் உறவினன் என்ற   ரீதியில் உரையாடும், உறவாடும் வாய்ப்புக்கிட்டியது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நானும் பிரேம்ஜியும், இளங்கீரனும், மாணிக்கவாசகரும் சென்று ரகுநாதனையும் ராஜம் கிருஷ்ணனையும் ரங்கநாதன் அவர்களின் வாகனத்தில் அழைத்து வந்தோம்.
இவர்கள் வந்தது முதல் தமிழகம் திரும்பிச் செல்லும் வரையில் நான் - வீரகேசரியில் ‘லீவு’ எடுத்துக்கொண்டு இவர்களுடன் பொழுதைக் கழித்தேன்.
அந்த நாட்கள் பசுமையானவை. பஸ்ஸிலும் ரயிலிலும் - வாகனங்களிலும் ரகுநாதனுடன் பயணித்த   சமயங்களில் அவரிடமிருந்து   நிறைய   அறிந்து கொள்ள முயன்றேன்.
மட்டக்களப்பு   மாவட்ட நிகழ்ச்சிகளுக்காக  இரவு ரயிலில் நாம் புறப்பட்டபொழுது எம்முடன் வந்த இளங்கீரன் உறங்கினார். ஆனால் நாம் உறங்காமல் பேசிக்கொண்டே பயணமானோம்.
ரகுநாதனுக்கு சிகரட் புகைக்கும் பழக்கம். தொடர்ச்சியாக புகைக்கும் ஒரு ஊhயin ளஅழமநச அவர்.
வரும்பொழுதே பல பெக்கட்டுகளை, - அவை இந்தியத் தயாரிப்புகள் கொண்டு வந்திருந்தார்.
நான்   கொழும்பில்   இவருக்கு  புழடனடநயக வாங்கிக் கொடுத்தேன்.
“இப்படி புகைக்கிறீர்களே… உடலுக்கு கெடுதியல்லவா..” என்ற பொழுது அவர் எதுவும் சொல்லாமல் சிரிப்பார்.
“பழகிவிட்;டேன்.  விடமுடியவில்லை” என்று மட்டும் சொன்னார்.
1990இல் அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழகம் சென்ற சமயம் அவரைப்பார்க்கச் சென்ற பொழுதும் அவுஸ்திரேலிய  சிகரட் பெக்கட்டுகள் கொண்டு போனேன்.
“அங்கே கொழும்பில் வாங்கித் தந்தீர்… இப்போது அவுஸ்திரேலியாவிலிருந்தா..” எனச் சொல்லி அட்டகாசமாகச் சிரித்தார்.
அவர்  சிரித்தால் அழகாகத்தான் இருக்கும். அந்தச் சிரிப்பு இப்போது அடங்கிவிட்டது. அவரது மறைவுச் செய்தி அறிந்தவுடன் சென்னையில் இருக்கும் நண்பர் கணேசலிங்கனுடன் தொடர்பு கொண்டு திருநெல்வேலியில் ரகுநாதன் வீட்டு தொலைபேசி இலக்கத்தைப் பெற்று அவரது மகள் மஞ்சுளாவுடன் உரையாடி எனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
கனடாவில் வதியும் நண்பர் பிரேம்ஜியுடன் தொடர்புகொண்டு  துக்கத்தை பகிர்ந்தேன்.
கொழும்பில் மல்லிகை ஜீவாவுடன் உரையாடி, ஏன் கொழும்பு பத்திரிகைகள் செய்தி வெளியிடவில்லை என்று  கவலை  தெரிவித்தேன்.
ரகுநாதன் மறைவின் பின்பு ‘நந்தன்’ 2002 பொங்கல் சிறப்பிதழில் சி.மகேந்திரன் எழுதியுள்ள இரண்டு பக்கக் கட்டுரை முக்கியமானது.
புதுமைப்பித்தன்  எதிர்நோக்கிய சவால்களை வேறு உருவத்தில் வேறு வகையில் எதிர் நோக்கியவர்  ரகுநாதன்
வணிகநோக்கில் வெளியாகும்  எந்தவொரு சஞ்சிகையிலும் ரகுநாதன் எழுதவில்லை.
ஜெயகாந்தன்  போன்றவர்களுக்கு  அத்தகைய ஒரு தேவை இருந்தது.
ஆனால் ரகுநாதன் சிறு சஞ்சிகைகளில் கதைகள் எப்பொழுதோ எழுதுவதை நிறுத்திவிட்டு மொழிபெயர்ப்பு – பாரதி ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார். தமிழ் நாடு சோவியத்நாடு -தகவல் பிரிவு – ரகுநாதனின் இலக்கிய வேட்கையை சுரண்டி எடுத்ததோ என்று எண்ணுமளவுக்கு   அவரது   சிருஷ்டி  இலக்கியங்கள் வெளியாகவில்லை.
எனினும் மக்ஸிம் கோர்க்கியின் தாய் உட்பட பல சோவியத் இலக்கியங்களை அவர் தமிழுக்குத்  தந்ததுடன் பாரதி இயல் ஆய்வாளராகவும் பரந்தளவில் அறியப்பட்டார்.
கங்கையும் காவிரியும், பாரதியும் ஷெல்லியும், பாரதி காலமும் கருத்தும், பாரதியும் புரட்சி இயக்கமும், பாரதி சில பார்வைகள், பாஞ்சாலி சபதம் உறை பொருளும் மறை பொருளும் இளங்கோவடிகள் யார்?, இலக்கிய விமர்சனம் முதலானவை ரகுநாதன் எமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய நூல்கள்.
‘புதுமைப்பித்தன் வரலாறு’ எமக்கெல்லாம் ஒரு பாடநூல். மூன்று பதிப்புகளைக் கொண்ட இந்நூலின் மூன்றாவது பதிப்பில் - அனுபந்தமாக – சுந்தரராமசாமியின் கேள்விகளுக்கு ரகுநாதன்  அளித்த பதில் பல பக்கங்களில் வெளியாகியுள்ளது.
25.06.1978 இல் இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில்  திருச்சி வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான இந்த நேர்காணல் புதுமைப்பித்தனைப்பற்றிய மதிப்பீடுகளை அழுத்தமாக பதிவு செய்கிறது.
எழுத்தாளர்கள் - இலக்கிய நேர்காணல்களை எழுத முனையும் பத்திரிகையாளர்கள் அவசியம்   படிக்க வேண்டிய நேர்காணல் இதுவாகும்.
சுந்தரராமசாமி கேட்ட கேள்விகளும் அதற்கு ரகுநாதன் அளிக்கும் ஆணித்தரமான பதில்களும் ஒரு வகையில் அருமையான இலக்கியத் தேடல்.
புதுமைப்பித்தனின்  பாதிப்புக்கு தானும் கு.அழகிரிசாமியும் வல்லிக்கண்ணனும் ஜெயகாந்தனும்  ஆளானவர்கள்தான்  என்பதையும் ரகுநாதன் ஒப்புக் கொள்கிறார்.
புதுமைப்பித்தன் காவிய இலக்கிய மாந்தர்களை புதிய சிந்தனையுடன் புதிய பார்வையுடன் எவருமே நினைத்துப்பார்த்திராத முறையில் - வடிவில் “அகல்யை” “சாபவிமோசனம்” முதலான  கதைகளில் சித்திரித்தது போன்று ரகுநாதனும் சில காவிய – புராண மாந்தர்களை  முற்றிலும் புதிய கோணத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரகுநாதனின் ‘வென்றிலன் என்ற போதும்’ என்ற கம்பராமாயணத் தொடரைத் தலைப்பாகக் கொண்ட கதையை டாக்டர் இரா.தண்டாயுதம் தமது   தமிழ்ச்சிறுகதை முன்னோடிகள் என்ற நூலில் சிலாகித்துக் குறிப்பிட்டுள்ளார்.
அதனை இங்கே அப்படியே தருகின்றேன்
“ஐவருக்கும் நான் பத்தினியானேன்.
எனக்கு வாய்ந்த ஐந்து கணவர்களும் என்னிடம் நடந்து கொண்ட விதம்தான் என்னைக் கர்ணனைப் பற்றிய சிந்தனைக்கு மீண்டும் இழுத்துச் சென்றது. இந்த ஐவருக்கும் மேலாக கர்ணனிடம்தான்  எனக்கு  மனசு ஒட்டக்கூடிய பாசம்  இருந்தது.
தருமபுத்திரன் ஒரு ரிஷிப்பிறவி. அவருக்கு மனைவி என்றால் சதி என்ற தெய்வீகப்பொருள். அவர் பள்ளியறையில் வைத்துக்கொண்டுகூட, திடீரென்று நீதி சாஸ்திரம் போதிக்க ஆரம்பித்துவிடுவார். பீமரோ, காதலுக்கோ சல்லாபத்துக்கோ ஏற்றவரில்லை. இடும்பைதான் அவருக்குச் சரியான மனைவி. வில்லை முறித்து என்னை மணந்த அர்ஜூனனுக்கு நான் பலரில் ஒருத்தி, அவருக்கு சமயத்தில் ஒருத்தி வேண்டும். அது திரௌபதியானாலும் சுபத்திரையானாலும் ஒன்றுதான். நகுல சகாதேவர்கள் என் கண்ணுக்கு கணவர்களாகவே தோன்றவில்லை. மதினியின் அன்பு அரவணைப்பில் ஒதுங்க எண்ணும் மைத்துனக் குஞ்சுகளாகத்தான் தோன்றினர்.
இதனால்தான் இந்த ஐவரில் எவர் மேலும் அன்பு செலுத்த முடியவில்லை. உலகமும் அவர்களும் என் பரிவையும் பச்சாதாபத்தையும் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளட்டும். எனினும் எனக்கு கர்ணன் மேல்தான் நேர்மையான அன்பு படர்ந்திருந்தது. கர்ணன் நினைவுதான் என் இளமையைக் கூடக் கட்டுக்குலைக்காமல் காத்து வந்தது.
இன்று கர்ணன் மடிந்தார். அப்படியானால் ஒட்டிக்கொண்டிருந்த என் வாழ்க்கைக் கனவும் இன்றோடு  உதிர்ந்தது என்று தான் கொள்ள வேண்டுமா..?
கர்ணனுக்கு அர்ஜூனனுக்கும் போர் நடந்து கர்ணன் தோற்று இறந்தும் விட்டான் என்று கேள்விப்படும் பாஞ்சாலி இப்படி நினைப்பதாக உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா? இல்லை “குந்தியின் பாவம், திரௌபதியின் காதல், அர்ஜூனனின் கர்வம், தருமனின் மடமை, சூரியனின் கயமை – எல்லாம் கர்ணனின் மரணத்தோடு மாய வேண்டியவைதான்” என்று எண்ணும் கண்ணனைத்தான் கற்பனை செய்ய முடியுமா? என்றெல்லாம்  இரா.தண்டாயுதம் கேள்விகள் எழுப்பி ரகுநாதனின் இந்த “வென்றிலன் என்ற போதும்” – சிறு கதையை அரியதொரு படைப்பு என்று  புகழாரம் சூட்டுகிறார்.
பாரதிக்கும் பாஞ்சாலியிடத்தில் பரிவு இருந்தது. அதனால் ‘பாஞ்சாலி சபதம்’ எமக்கு கிடைத்தது.
ரகுநாதனுக்கும் இந்த பாஞ்சாலி மீது பச்சாதாபம் இருந்திருக்க வேண்டும். அதனால் வென்றிலன் என்ற போதும் - எழுதியதுடன் நில்லாமல் ‘பாஞ்சாலி சபதம் உறைபொருளும் மறை பொருளும்’ என்ற தலைப்பில் 1987இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவான சொற்பொழிவாற்றினார். பின்னர் இது நூலாக வெளிவந்தது.
ரகுநாதனின் கதைகளை திறனாய்வு செய்துள்ள தண்டாயுதம் இரண்டு வகையில் அவரைப் பிரித்துப் பார்ப்பதற்கு நியாயங்கள் இருந்தன.
ஆரம்பகாலக் கதைகளில் ரகுநாதன் கலைஞராக மிளிர்ந்ததாகவும், பின்னர் கொள்கையாளராக  இருந்தே சிறுகதைகளைப் படைத்திருப்பதாகவும் தண்டாயுதம் சொல்வதில்  உண்மை இருக்கிறது.
மில் தொழிலாளர்களை பாத்திரங்களாக படைத்து ரகுநாதன் எழுதிய “நீயும் நானும்” கதையை படித்துவிட்டு அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அது நான் எழுத ஆரம்பித்த காலப்பகுதி.
ஆனால் ரகுநாதன் எனக்கு பதில் எழுதவில்லை. தமது பிள்ளைகளின் திருமண அழைப்பிதழையே  அனுப்பியிருந்தார்.
எனக்கும்  ஏனையவர்களைப்போன்று அக்கதை குறித்து விமர்சனம் இருந்தது. ஜெயகாந்தனும் இது பற்றி கடுமையாக எழுதினார். முற்போக்கு எழுத்தாளர் மத்தியிலும் இக்கதை கண்டனத்திற்குள்ளானது.
நீண்ட இடைவெளிக்குப்பின்பு ரகுநாதனுடன் முதல் தடவையாக மட்டக்களப்புக்கு இரவு ரயிலில் பயணமானபொழுது நான், “அந்த ‘நீயும் நானும்’ என்ற கதை தொடர்பாக உங்களுக்கு எழுதியிருந்தேனே… ஏன் அது பற்றி மூச்சே காட்டவில்லை.” என்றேன்.
ரகுநாதன் சிரித்தார்.
தனக்கும் அந்தக் கதை குறித்து உடன்பாடு இல்லை. ஒரு வகையில் வரட்டுத்தனமான கொள்கையின் வெளிப்பாடு. அவ்வாறு எழுதியது தவறுதான் என்று ஒப்புக்கொண்டதுடன் சில போர்க்கால கதைகளை எனக்குச் சொன்னார்.
மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் எழுத்தாளர்கள் மருதூர்க்கொத்தன், மருத்தூர்கனி உட்பட பலர் ரகுநாதனுக்கு மாலை அணிவித்து வாழ்த்தி வரவேற்றனர்.
அன்று அட்டாளைச்சேனையிலும் கல்முனையிலும் ரகுநாதன் உரையாற்றினார். இரவு டாக்டர் முருகேசம்பிள்ளை அவர்களின் இல்லத்தில் நடந்த இராப்போசன விருந்தில் கவிஞரும் சட்டத்தரணியுமான அஷ்ரப்பை  ரகுநாதனுக்கு  அறிமுகப்படுத்தி வைத்தேன்.
அஷ்ரப் அப்பொழுது அரசியலுக்குள் தீவிரமாக பிரவேசிக்காத காலம். ஏற்கனவே 1972இல் சட்டக்கல்லூரியில் அவர் விநோதன், சகுந்தலா சிவசுப்பிரமணியம் ஆகியோருடன் பயிலும் காலத்தில் ‘பூரணி’ காலாண்டிதழ் அறிமுக ஆய்வரங்கு நடந்தபொழுது அறிமுகமாகியிருந்தேன்.
கல்முனை பாரதி விழாக் கூட்டத்துக்கு வந்திருந்த அஷ்ரப் இரவு விருந்திலும் கலந்து கொண்டு  ரகுநாதனுடன்  கலந்துரையாடினார்.
அன்று இரவு மருதூர்கனியின் இல்லத்தில் தங்கி,  மறுநாள் காலை மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சி கலாசாலைக்கு வந்து – அங்கும் ரகுநாதன் உரையாற்றினார். மதியம் மட்டக்களப்பு நூல் நிலைய மண்டபத்தில் இலக்கியச் சந்திப்பு நடந்தது.
பிரபல அரசியல் விமர்சகர் தராக்கி சிவராம், எழுத்தாளர் ஞானதரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
ரகுநாதனின் ‘கன்னிகா’ நூலும் புதுக்கவிதை தொடர்பாக ரகுநாதனின் விமர்சனமும் இக்கலந்துரையாடலில் தீவிரமாக விவாதிக்கபட்டது.
மாலை மட்டக்களப்பு நகர மண்டபத்தில் பாரதிக்கு பெருவிழா நடந்தபொழுது அங்கும் ரகுநாதன் உரைநிகழ்த்தினார்.
மறுநாள் காலை நண்பர் அன்புமணி எம் இருவரையும் யாழ்ப்பாணத்திற்கு பஸ் ஏற்றிவிட இளங்கீரன் கொழும்புக்கு பயணமானார்.
மீண்டும் இந்த பஸ்பயணத்தில் எமது உரையாடல் தொடர்ந்தது.
அன்று மாலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மானிப்பாய் எம்.பி.தருமலிங்கம் தலைமையில் பாரதிவிழா.
இரவு 8 மணிக்கு முன்பதாக கூட்டம் முடியவேண்டிய காலகட்டம்.
நாம் புறப்பட்ட மினிபஸ் முறிகண்டியில் பழுதடைந்து பயணம் தாமதித்தது.
நாம் யாழ்ப்பாணத்தில் இறங்கியதும் நேரே – வண்ணார்பண்ணையில் இருக்கும் வரதரின் வீட்டுக்கு ரகுநாதனை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் கொழும்பில் பிரேம்ஜி எனக்குச் சொன்ன ஆலோசனை.
வரதருக்கும் இந்த தகவல் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது.
எமக்காக காத்திருந்த வரதர் ஏமாற்றத்துடன் வீரசிங்கம் மண்டபத்துக்கு புறப்பட்டுவிட்டார்.
மாலை 5மணிக்கு மேல் யாழ் நகர் வந்தடைந்த நாம் வரதரின் வீட்டுக்குச் சென்ற போது வரதரின்  மனைவி  எம்மை வரவேற்று உபசரித்தார்.
அங்கே ரகுநாதனுக்கு எதிர்பாராதவிதமாக இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
வரதரின் வீட்டுச் சுவரில் ஒரு படம். ரகுநாதனே எனக்கு அதனைக் காண்பித்தார். அவர் முகத்தில் பரவசம்.
1956இல் ரகுநாதன் வந்த சமயம் யாழ்ப்பாணத்தில் வரதரின் குழந்தைக்கு ரகுநாதன்தான் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்து வைத்துள்ளார். அந்தப்படம் 1983இல் மீண்டும் ரகுநாதன் வந்த பொழுதுதான் பார்க்கக் கிடைத்திருக்கிறது.
“இலங்கையில் எழுத்தாளர்கள் இலக்கியத்தை மாத்திரம் நேசிக்கவில்லை – எம்மையெல்லாம் இதயத்தில் சுமக்கிறார்கள்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் ரகுநாதன்.
இந்த அரியதொரு சந்தர்ப்பத்தை 1999 இறுதியில் கொழும்பில் மல்லிகை ஜீவா, வரதருக்கு ஒரு மாலை நேர சந்திப்பை என் தலைமையில் நடத்திய பொழுது குறிப்பிட்டேன்.
ரகுநாதன், சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, என்று பல்துறையிலும் மிளிர்ந்தவர். பின்னாளில் விமர்சனம், திறனாய்வு என்று தன்னை வரையறுத்துக் கொண்டார்.
இது குறித்து யாழ்ப்பாணம் கொட்டடியில் ப+பாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் ஸ்ரீதரசிங்கின் ஏற்பாட்டில் அகஸ்தியர் தலைமையில் நடந்த தேநீர் விருந்து கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டபொழுது, “நான் எல்லா மரங்களையும் வெட்டிவிட்டு ஒய்ந்தவன்” என்று இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி தப்பித்துக்கொண்டார்.
பக்கத்திலிருந்த பேராசிரியர் ராமகிருஷ்ணன் “பலே… பலே .. ஜமாய்ச்சிட்டீர்” என்று சொல்லி சிரித்தார்.
நண்பர் டானியல் இல்லத்தில் மதிய விருந்துக்கு செல்ல முடியாமல் ஆனைக்கோட்டைக்கு சென்றிருந்த ரகுநாதன் அந்தக்குறையை நிவர்த்திப்பதற்காக நாம் கொழும்புக்கு புறப்படு முன்பு டானியலின் ஸ்ரார் கராஜூக்கு வந்தார். டானியல் எம்மை அங்கே உபசரித்தார்.
இத்தனைக்கும் - டானியலுக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கும் - ரகுநாதனின் அரசியல் கோட்பாடுகளுக்கும்   இடையே நிறைய முரண்பாடுகள் நிலவியிருந்தன.
கொழும்பில் ரங்கநாதன் இல்லத்தில் தங்கியிருந்த ரகுநாதனை நீர்கொழும்புக்கும் அழைத்து வந்து இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் “வள்ளுவரும் பாரதியும்” என்ற தலைப்பில் உரையாற்ற வைத்தேன்.
அங்கும் புதுக்கவிதை குறித்த சர்ச்சையே எழுந்தது.
ரகுநாதன் தொடர்ச்சியாக புதுக்கவிதை குறித்து தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தே வந்தவர்.
இதற்கான காரணங்களை அவர் விரிவாக தனி நூலாக எழுதாமல் விட்டது பெரியகுறை.
ஜிந்துப்பிட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலின் அறங்காவலர்கள் எமது எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த சிலரது நல்ல நண்பர்கள்.
தமிழ் நாட்டிலிருந்து பாரதி இயல் அறிஞர்கள் வந்திருப்பதை அறிந்து தமது ஆலய மண்டபத்தில் ரகுநாதன், ராமகிருஷ்ணனின் சொற்பொழிவுகளை ஒழுங்கு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
இவர்கள் இருவரும் முதலில் தயங்கினர். கம்ய+னிஸ்ட்டுகள் கோயில் மண்டபத்தில் போய் என்ன பேசுவது என்ற தயக்கம் மட்டுமல்ல, வெளிய+ர் பயணங்கள் மேற்கொண்டு களைத்து திரும்பியிருந்த  அவர்கள் ஓய்வையும் அதே சமயத்தில் பல இடங்களையும் பார்த்து ரசிக்கவும்  விரும்பியிருந்தனர்.
ஆனால் சங்கமோ – அவர்களை முடிந்த வரையில் பயன்படுத்திக் கொண்டது. அவர்களும் பாரதிக்காக தமது களைப்பை ஒருபுறம் வைத்துவிட்டு எம்முடன் உற்சாகமாக இயங்கினர்.
ஆலயத்தின் மண்டபத்தில் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தோம்.
ரகுநாதன்  முதலாவது சொற்பொழிவாளர், அவர் பேசத் தொடங்கிவிட்டார்.
நான்  பேராசிரியர்  இராமகிருஷ்ணனுக்கு அருகில் அமர்ந்திருந்தேன்.
அவர் என்னைப்பார்த்து “கோயிலில் பேசக் கூப்பிட்டிருக்கிறாங்க.. என்னத்தையடா பேசுவது.. சொல்.. என்றார்”.
“விவேகானந்தர், பரமஹம்ஸர்… என்று ஏதாவது பேசி சமாளித்துவிடுங்கள்” என்று பேராசிரியரிடம் சொன்னேன்.
நான் இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்கிடையில் ரகுநாதன் விவேகானந்தரின் சிக்காகோ உரையைப்  பற்றி ஏதோ சொல்லத் தொடங்கிவிட்டார்.
ராமகிருஷ்ணன் என்னை முறைத்தப் பார்த்து மெதுவாக “உன்னை உதைக்கப்போறன்டா…? என்றார்.
“நீ எனக்குக் கொடுத்த ஐடியாவைத் தான் ரகுநாதனுக்கும் சொன்னாயா…?” என்று என் காதில் மெதுவாகச் சொன்னார்.
“ஐயய்யோ… நான் அப்படிச் சொல்லவில்லை… சத்தியமாக இந்த கோயிலில் சொல்கிறேன் நான் அப்படிச் சொல்லவில்லை” என்றேன்.
பிறகு அவர் நிதானமாகச் சொன்னார் “ரகுநாதனை நான்தான் முதலில் பேசச் சொன்னேன். அதனையொட்டி என்ன பேசலாம் என்பதுதான் எனது யோசனை. ஆனால்… இந்த ஆள் என் காலை வாறிவிட்டாரே.. இனி  என்ன பேசுவது  என்று  என்னைப்பார்த்துச் சிரித்தார்.
இந்த சுவாரஸ்யத்தை வெளியில் வந்ததும் ரகுநாதன் உட்பட அனைவரிடமும் சொன்னேன் அனைவரும் சிரித்தனர்.
“என்னால் உதை வாங்கப் பார்த்தாய்.. எப்படியோ தப்பிவிட்டாய்” என்று சொல்லி அட்டகாசமாகச் சிரித்தார் ரகுநாதன்.
இன்று இவர்கள் இருவரும் இல்லையென்பதை கணத்துப்போன இதயத்துடன் நினைத்துப்பார்க்கின்றேன்.
ரகுநாதனின் மகன் ஹரீந்திரனின் மனைவி மாலதியும் எழுத்தாளர்தான்.
மாமனார் புதுக்கவிதைக்கு எதிரியாக இருந்தார். மருமகள் மாலதியோ புதுக்கவிதை எழுதும் படைப்பாளி.
மாலதி,  திருநெல்வேலியில் “சாராள் தக்கர்” கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
“எண்ணக்கோடுகள்” என்ற இவரது புதுக்கவிதை நூலுக்கு அணிந்துரை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். 1978இல் இது வெளியான பொழுது கண்ணதாசன் தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்.
ரகுநாதன், தமது மருமகளின் இக்கவிதை நூல் குறித்து எந்தக்கருத்தும் வெளியிடவில்லை. மாலதியின்  கவிதைகள் கண்ணதாசன்,  தீபம், தாமரை  முதலான இதழ்களில் வெளிவந்தன.
புதுக்கவிதை எதிர்ப்பாளரான ரகுநாதன் மருமகளின் நூல் குறித்து அபிப்பிராயம் எதுவும் தெரிவிக்காதமை  வியப்பன்று.
ஆனால் மாலதி தமது பட்டப்படிப்பிற்காக ரகுநாதனின் எழுத்துக்களையே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்.
ஆனந்தவிகடன்  இதுபற்றி குறிப்பிடும் பொழுது – “வழக்கமாக மாமனார்தான் மருமகளை ஆராய்ந்து தெரிவு செய்வார். ஆனால் இங்கே ஒரு மருமகளே தமது மாமனாரை ஆராய்ச்சி செய்து எழுத முன்வந்துள்ளார்” எனக்  குறிப்பிட்டது.
ரகுநாதன்  சம்பந்தமாக இலங்கைப் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள் ஏதும் இருந்தால் தமக்குத் தருமாறு மாலதி ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் கேட்டிருந்தார்.
அக்காலப் பகுதியில் நண்பர் தெளிவத்தை ஜோசப் பல மூத்ததலைமுறை எழுத்தாளர்களின் கதைகளை தினகரன் வார மஞ்சரியில் அறிமுகப்படுத்தி – எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்களையும் எழுதியிருந்தார்.
ஒரு தடவை ரகுநாதனைப் பற்றியும் எழுதியிருந்தார்.
“தமிழ் நாட்டில் தெருவில் நிர்வாணமாய் வர மட்டும் வெட்கப்படுகிறார்கள், நானும் ஒரு சிறுகதை எழுத்தாளனாக்கும் என்று சொல்லிக் கொள்ள மட்டும் சிலர் வெட்கப்படுவதில்லை” என்று ரகுநாதன் எழுதியதாக தெளிவத்தை ஜோசப் அந்த அறிமுகக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இது பற்றி மாலதியிடம் 1984 இல் நான் திருநெல்வேலிக்குச் சென்ற சமயம் கூறினேன். தனக்கு அந்தப் பத்திரிகை வேண்டும் என்றார்.
ரகுநாதன் இலங்கை வந்த சமயம் இந்தத் தகவலைச் சொன்ன பொழுது – “ஜோசப் தவறுதலாக எழுதியுள்ளார். அப்படி ஒரு கருத்தைச் சொன்னவர் புதுமைப்பித்தன். இலக்கிய விமர்சனம் என்ற எனது நூலில் சிறுகதை என்ற அத்தியாயத்தில் நான் ஒரு பிரபல எழுத்தளார் அவ்வாறு சொன்னார் என்றுதான் எழுதியிருக்கிறேன். அதனை வைத்துக்கொண்டு நான்தான் அப்படிச் சொன்னதாக உமது நண்பர் எழுதியிருக்கிறார் என்றார். இந்தத் திருத்தத்தை அவரிடம் சொல்லும் என்றார் ரகுநாதன்.
நானும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் இத்தகவலை ஜோசப்பிடம் கூறினேன். அவரும் தவறை ஒப்புக் கொண்டார்.
1951இல் புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரகுநாதன் - சுபமங்களாவில் 1992இல் புதுமைப்பித்தன் குறித்து சர்ச்சை எழுந்த போது  வெகுண்டெழுந்தார். புதுமைப்பித்தன் மேலைநாட்டு இலக்கிய கர்த்தாக்களின் படைப்புக்களை என்றைக்குமே தமிழில் எழுதியதில்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க சுபமங்கள செப்டம்பர் அக்டோபர் (1992) இதழ்களை நன்கு பயன்படுத்தினார்.
பின்னர் ‘புதுமைப்பித்தன் சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்’ என்ற நூலை விரிவாக எழுதினார். இதனை சென்னை நியூசெஞ்சரி புக் ஹவுஸ் வெளியிட்டது.
செல்லப்பா, சிட்டி, கண.முத்தையா உட்பட பலரை ரகுநாதன் இந்த நூலில் விமர்சித்திருந்தார்.
ரகுநாதன் - இறுதிக்காலத்திற்கு சற்று முன்பாக சிலப்பதிகார ஆராய்ச்சியிலும் திருக்குறள் ஆராய்ச்சியிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.
இளங்கோவடிகள் யார் - என்ற இவரது விரிவான நூல் வெளியாகுமுன்பே – அது குறித்து என்னிடம் பிரஸ்தாபித்தார்.
1984 இல் ஏப்ரல் மாதம் சென்னையில் இவரைச் சந்தித்த போது அவர் வீட்டிலிருந்து இந்த நூலையே எழுதிக் கொண்டிருந்தார்.
அது வெளியானதன் பின்பு அது குறித்து விரிவான விமர்சனம் எழுதியவர் எங்கள் நுஃமான். அந்த நூலை 1990இல் திருநெல்வேலியில் பெருமாள்புரத்தில் இருந்த பொழுது எனக்கு காண்பித்தார்.
இறுதியாக 1990 ஏப்ரல் மாதம் ரகுநாதனின் துணைவியார் ரஞ்சிதம் அவர்கள் உணவு பரிமாற ஒன்றாக அமர்ந்து மதிய விருந்துண்டேன்.
இதுவே இறுதிச் சந்திப்பு.
ரஞ்சிதம் அவர்களும் இன்றில்லை. அன்புக்கணவரை வரவேற்பதற்காக ஏற்கனவே மேல் உலகம் போய்ச் சேர்ந்துவிட்டார்.
மகள் மஞ்சுளாவிடம் நான் தொலைபேசியில் ஆறுதல் சொன்ன போது, “அப்பா என்னுடன் தான் இறுதிவரையில் இருந்தார்,” என்று நெஞ்சு அடைக்கக் கூறினார்.
இதனைக்  கேட்ட  பொழுது  எனக்கு  ஏக்கமாக  இருந்தது.
புலம்பெயர்ந்து வாழும் எனக்கு இறுதிக்காலத்தில் அப்படி ஒரு பாக்கியம் கிடைக்குமா? என்பதே  அந்த  ஏக்கம்        

                                 
                      --0--




























 




No comments: