இந்து சமயத்தின் மூன்று முக்கிய தூண்களாக கருவூலங்களாக விளங்குவன உபநிடந்தங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரங்கள் என்பவையாகும். ரிஷிகளுக்கு பரப்பிரம்மம் தோற்றுவித்தவையே வேதங்கள், உபநிடதங்களாகும். ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய திருவாய்மொழிகளே ஸ்ரீமத் பகவத்கீதையாகும். இரண்டு மகாகாவியங்களையும் பதினெண்புராணங்களையும் ஆக்கியும் வேதங்களைத் தொகுத்தும் தந்த வேதவியாசரால் ஆக்கப்பட்டது பிரம்ம சூத்திரங்கள், இவையாவும் ஆன்மீகத் தத்துவங்கள் பொதிந்தவை. இவை குரு மூலம் உய்த்துணரப் படவேண்டியவை. ஞான வேதாந்த அமைப்பு யூன் 29ம் 30ம் திகதிகளில் போக்கம் ஹில்ஸில் (Baulkham Hills) ஆச்சாரயார் ஸ்ரீ சச்சிதானந்த சாயி அவர்களை பகவத்கீதையின் தியான யோகம் பற்றி விளக்கியருள ஒழுங்கு செய்திருந்தனர். இஃது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.
மகாபாரதப் போரில் பாண்டவாகட்கும் கௌரவர்கட்குமிடையே யுத்தம் - தர்மத்திற்கும் அதர்மத்திற்குமிடையேயான யுத்தம். பகவான் ஸ்ரீ கிருண்ணன் சிறந்த வில்வித்தை வீரனான அருச்சுனனுக்கு அவன் கேட்டுக்கொண்டபடி தேரோட்டியாக வந்தார். துரியோதனன் விரும்பிய வண்ணம் அவருடைய சேனை முழுவதும் கௌரவர் பக்கம் சேர்ந்தன. யுத்தகளத்தில் போரைத் தொடக்க கௌரவர் சார்பில் பிதாமகர் பீஷ்மரால் சங்கூதப்பட்டது. அதைத்தொடர்ந்து பாண்டவர்களும் சங்கூதி விட்டனர். திடவீரனும் மனஉறுதிமிக்கவனும், இப்போருக்காக நீண்ட காலம் ஆயத்தப்படுத்தியவனுமாகிய அருச்சுனன் தான் போரிடப் போகும் பகைவர்களைப் பார்த்து நிலைமையை நிர்ணயிக்க இரண்டு படைகளுக்கு மிடையே தன் ரதத்தை விடச் சொல்லி பகவானுக்கு உத்தரவிட்டான். பகவானும் வேறெங்கும் விடாது நேரே பிதாமகர் பீஷ்மர், வில்வித்தை வேறெவர்க்கும் இல்லாதவாறு சிறப்பு மாணவனாகத் திகழ்ந்த அருச்சுனனுக்கு மிக நுணுக்கமாகக் கற்றுத்தந்த குரு துரோணாசச்சாரியார், மாமன் முதலியோர் முன்னிலையில் தேரை நிறுத்தினார். பிதாமகரால் மிக அன்போடு சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட்டவன் அருச்சுனன். மிகவும் சிறப்பான ஸ்தானத்தில் மதித்திருந்தவன். மாமன் முதலியவர்களைப் பார்த்தபின் மனம் தளர்ச்சி யடைந்தான். பகைவர்கள் தனது உறவினர்கள், இதனால் நான், எனது என்ற எண்ணம் மேலோங்கியது. போரிடமுடியாத தளர்ச்சி நிலை மனத்திற்கும் உடலுக்கும் ஏற்பட்டு காண்டீபமே தோளைவிட்டு தளர்ந்து விழுவதாகக் கூறி போரிடமாட்டேன் என்று தேரில் இருந்து விட்டான். தனக்குச் சாதகமாகப் அறிவுரைகள் போல பல கூறி இறுதியில் தன்னால் ஒன்றும் தீர்மானஞ் செய்ய முடியாதுள்ளது என்று “தயைகூர்ந்து என்னை வழிப்படுத்து எனக்கு வேறு புகலிடம் இல்லை கிருஷ்ணா” என்று அருச்தனன் சரணாகதி யடைந்தான். இந்த நிலையில் தான் பகவான் அருச்சனனுக்கு, மனிதகுலம் முழுமைக்குமே, உபதேசித்துப் பாடிய பாடல்களே ஸ்ரீமத் பகவத்கீதையாகும்.
அருச்சுனனின் தளர்ந்த நிலை, “எனது” என்ற பாசம் பற்றிய நிலை, பகவத் கீதையில் முதலாவது அத்தியாயமாக, விஷாத யோக அத்தியாயமாகக் காணப்படுகின்றது. பகவானோடு தொடர்புறுத்தப்பட்டதால் அதுவும் ஒரு யோகமாயிற்று. இரண்டாவது அத்தியாயத்தில் பகவான் ஒரு புன்சிரிப்புடன்தான் அருச்சுனனுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கின்றார். ஆத்மா ஒரு பொழுதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதுமில்லை, நெருப்பு எரிப்பதும் இல்லை, தண்ணீர் நனைப்பதுமில்லை, காற்று உலரவைப்பதுமில்லை. ஆத்மா நித்தியமானது, புலன்களுக்குப் புலப்படாதது மனதால் சிந்திக்க முடியாது. மனிதன் பழைய துணிகளை நீக்கிவிட்டு புதுத்துணிகளை அணிவது போலத்தான் ஜீவாத்மா எடுக்கும் உடல்களை நீக்குவதும் புது உடல்களை எடுத்துப் பிறப்பதுமாகும். எனவே உடம்பை மாற்றுவதற்கு கவலைப்படுதல் நன்றல்ல வென்றும் தேடி வந்த தர்ம யுத்தத்தை ஷத்திரிய தர்மத்தின்படி செய்யுமாறு ஊக்குவிக்கின்றார் பகவான் கர்மமாற்றும் பொழுது பயனின் பற்று வைக்காது இறைவனுக்கே எல்லாம் அர்ப்பணித்து செயலாற்றும் படியும் கூறினார். இஃது கர்மயோகம் ஆகும். சாங்கிய யோகமாகிய ஞானயோகத்தையும் அதாவது ஆத்ம தத்துவத்தையும் இங்கு விளக்கிக் கூறுகிறார். இந்த ஆத்ம தத்துவத்தையும் கர்ம யோகத்தையும் முதலில் இங்கு விளக்கி கூறி பின்வரும் 16 அத்தியாயங்களில் இவற்றை எவ்வாறு நடைமுறையில் கைக்கொள்வது என்பது பற்றிக் மிக விரிவாகக் குறிப்பிடுகின்றார்.
ஆத்ம தத்துவம் பற்றிக் கேட்பதும், சிந்திப்பதும், தியானஞ் செய்வதும் முக்யமானவை. ஆத்ம தத்துவம் என்பது பல பேர்களுக்குக் கேட்கக் கூடக் கிடைக்காது. கேட்ட பலர் கூடப் புரிந்து கொள்வதில்லை. யாரோ ஒரு மகாபுருஷன் இந்த ஆத்மாவை ஆச்சர்யமாகப் பார்க்கின்றான். யாரோ ஒரு மகாஞானி இந்த ஆத்மாவை வர்ணிக்கின்றான், யாரோ ஒரு சிறந்த அதிகாரி கேட்கின்றான். இதைப் பார்ப்பவர் உலகில் மிகவும் அரிது. சாதாரணமாக உலகியல் பொருளை மனம், புத்தி, புலன்களு}டாகக் கண்டறிகின்றர் மனிதன். ஆத்மாவை அவ்விதமாகப் பார்ப்பது இயலாத காரியம். ஆத்ம தத்துவம் அற்புதமானது. இஃது குருமகத்தால் அறியப்பட வேண்டியது. சாதாரண மனிதன் கரும மாற்றும் பொழுது ஏதோ பலன் கருதித்தான் செய்கின்றான். மனைவி, மக்கள,; செல்வம், மானம், பெருமை, சுகம், சுவர்க்கம் என்கின்ற இகலோக பரலோக போகங்கள் எல்லாம் கர்மபயன் என்பதில் அடங்கும். இவை திரும்பத்திரும்ப பல பிறவிகளை எடுக்க வழிவகுக்கின்றன. எனவே இவ்வுலக பரலோக சுகங்கள் அனைத்தும் அநித்தியமானதும் கண நேரமானவையென்றும் துக்கத்துக்குக் காரணமானவை என்றறிந்து தான் கர்த்தா என்ற ஆணவம், பற்று என்பவற்றையும் சேர்த்து தியாஞ் செய்வதே கர்மபலத்தியாகமாகும். போகம், பொருள், சுற்றம் எல்லாம் விட்டு மனதில் அகங்காரம், பற்று, விருப்பு, வெறுப்பு முதலியன அற்று மனம் சுத்தமாக பிரம்மத்தை அடைதலே சிந்தையாக இருப்பவன் சந்நியாசியும் யோகியும் ஆவான் என்கின்றார் பகவான்.
ஆறாவது அத்தியாயத்தில் தியான யோகத்தை விரிவாக விளக்கிக் கூறுகிறார். எவ்வாறு தியானமூலம் பரப்பிரம்மத்தோடு ஐக்கியப் படலாம் என்பதற்குரிய நடைமுறைகளைக் கூறுகின்றார். ஆயுள் வேத சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் பல விதிமுறைகளைக் கடைப்பிடித்து மருந்தையுண்டால் தேக ஆரோக்கியம் பெறுவான். உலக வாழ்க்கை புறவியலானது. பிரம்மம் (சத், சித், ஆனந்தமான பரமாத்மாவை), உணரநாடும் பாதை அகமுகமானது. மனித வாழ்க்கையின் குறிக்கோள் பிரம்மத்தை உணர்தலேயாகும். எல்லோரும் தமக்கு அத்தியாவசிய தேகைகள் எவையெனச் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் மனிதனைத் தன்னைத்தானே சம்சாரக் கடலிருந்து உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைதானே வீழ்த்திக் கொள்ளக் கூடாது. தனக்குத்தானே நண்பன் அல்லது தனக்குத்தானே பகைவன். ஏனெனில் ஒரு மனிதன் அஞ்ஞானததின் வசப்பட்டு துன்பமயமான சம்சாரக் கடலில் சிக்கித் தவிக்கின்றான். நல்லதும் தீயவுமாகிய பலவிதப் பிறவிகளில் உழன்று பயங்கரமான துன்பங்களை அனுபவிக்கின்றான். அருள் மிக்கவரான பகவான் தேவர்களுக்கும் கிட்டாததும் சாதனைகள் செய்யப் பயன்படுவதுமாக மனிதப் பிறவியை அளித்து ஒரு ஜீவன் கடைத்தேற ஒரு அரிய வாய்ப்பைத் தருகின்றார். இதற்க மாறாக காமகுரோதம், விருப்பு வெறுப்பு, ஆசை முதலிய மாசுகளில் சிக்கி இழி பிறவிகளை எடுத்து தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கின்றான். மணிவாசகரும் “எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான” என்கின்றார்.
பரமாத்மாவை கண்டறியும் தீரா ஆர்வமுடைய சாதகனுக்கு சமபுத்தி அவசியம். பொருட்களில் சமபுத்திபெறல் ஓரளவு எளிது. மக்களோ பலவிதம். சிநேகிதர், பகைவர், சமத்துவமானவர்கள், பொறாமையுடையோர், சாதுக்கள், பக்தர்கள், இவர்களை நாம் மாற்றமுடியாது. நாம்தான் எல்லோரையும் பார்க்கும் விதம் மாறவேண்டும். எவரிடமும் எதனையும் விரும்பிப் பெறும் எண்ணம் இருக்கக்கூடாது. அன்பு, நல்லுறவு காட்டுவோருக்கு நாம் நன்றியுடையோராயிருக்க வேண்டும். அவர்களது புற உடலுக்கல்ல, அவர்களை இயங்கவைக்கும் பரமாத்மாவுக்கு. உலக பந்தங்களைத் துறக்க வேண்டும். ரமண பகவான் ‘அருணாசலா’ என்று கேட்டவுடனேயே பதினாறு வயதிலேயே அன்னை, தமையன், வீடு எல்லாவற்றையும் துறந்து ஒரு கடிதம் எழுதிவைத்து விட்டு திருவண்ணாமலை சென்று தியானத்திலமர்ந்து விட்டார். அவர் அன்னைக்கு அவரது இருப்பிடம் சில வருடங்களாகத் தெரியவில்லை. பின்னர் அவர் இருப்பிடம் தெரியவந்ததும் அங்கு சென்று அவரைத் தன்னுடன் அழைத்துப் போகப் பலவாறாக அழுது புலம்பினார். ஆனால் ரமணபகவான் மௌனியாக வைராக்கியத்துடன் திரும்ப மறுத்துவிட்டார். இளவரசனான சித்தார்த்தனை துன்பம், கஷ்டம் தெரியாத வகையில் அரண்மனையில் சுகபோகங்களுடன் வளர்த்தார் அவரது தந்தையாகிய அரசன். அவருக்கு சிறப்பான மணவாழ்க்கையும் அமைந்தது. அவருக்கு ஒரு குழந்தை பிறந்த பொழுதுதான் மூப்பு, நோய் மரணம் முதலியவற்றால் மக்கள் படும் துன்ப நிலைகளைக் கண்டார். அன்றிரவே மனைவியையும் குழந்தையும் அவர்கள் தூங்கிகிக் கொண்டிருந்த பொழுது எட்டிப் பார்த்துவிட்டு குடும்பம், அரண்மனை வாழ்க்கை, சுகபோகம் அனைத்தையும் துறந்து ஆத்மா சாஷாத்காரத்தையடையச் சென்று புத்த பகவான் ஆனார். ஐந்து வயதுச் சிறுவனான பிரகலாதனுக்கோ அரண்மனை ஒரு குருட்டுக் கிணறு போல் ஆயிற்று. கர்ப்பத்திலிருக்கும் போதே ஆன்மீக அறிவு நாரத மகரிஷியால் ஊட்டப்பட்டவன். தந்தை மகாசக்கரவர்த்தி ஹிரண்யகசிப்பு மனநிம்மதியற்று அலைந்தான். சிறுவன் பிரகலாதனோ பிரம்மத்தில் லயித்து எத்தனை சோதனைகள் வந்தபோதும் மனநிறைவோடு ஆனந்தமாயிருந்தான்.
முதலில் சீதையை காணாது தவித்தழுத இராமர் முடிசூடிய பின்னர் யாரோ ஒருவர் அயோத்தியில் சீதா பிராட்டியாரைக் குறை கூறியதைக் கேட்டதும் வைராக்கியத்துடன் அவரைக் காட்டுக்கனுப்பி விட்டார். பகவான் பாபாவும் சிறு வயதிலேயே “மாயை என்னை விட்டகன்றது பக்தர்கள் என்னை அழைக்கின்றனர். அவர்களிடம் போகின்றேன்” என்று கூறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார். செய்தி தாய் தந்தையர்க்கு அனுப்பப்பட்டு தாயார் வருவதைப் பார்த்து மாயை வந்துவிட்டது என்று கூறிவிட்டார். பின்னர் புட்டபர்த்தியிலிந்தே பக்தர்களை ரட்சிக்கும்படி கேட்ட பொழுது அதற்குச் சம்மதித்துவிட்டார். சுவாமி ஆரம்ப பாடசாலைப் பிள்ளைகளையே இதயக் குகையில் இறைவனைப் பார்க்கச் சொல்லி வழிப்படுத்துவார். அந்தக் கர்ப்பக்கிருகத்தில் ஒருவர் இருக்கும் ஆசனந்தான் இருக்க வேண்டும். சங்கீதக் கதிரையாக அது மாறக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சாதகன் ஒருவன் கடைத்தேற உலக பற்றுக்கள், ஆசைகளை முற்றாகத் துறக்கவேண்டும் என்கின்றார். சுவாமி பிள்ளைகளுக்கு ஆசைகளை உதறிவிட வேண்டுமென்பதற்கு கையில் ஒரு பொருள் அகப்பட்டது என்று பார்த்தால் அது ஒரு விஷப்பாம்பு என்று தெரிந்தபின் இதை எறிவோமா அல்லது வைத்திருப்போமா என்று யோசிப்போமா? உடனே எறிந்து விடுவோமல்லவா என்றார். அதேமாதிரி உலக ஆசைகளனைத்தையும் துறந்து விடவேண்டும். எப்பொழுதும் இறைசிந்தனையில் நாமஜெபம் செய்து, இறைவன் லீலைகளில் சிந்தனையைத் திருப்பி அதிலேயே மூழ்கி விடவேண்டும். இப்படி பழகப் பழக பக்தியோடு ஆத்மாவில் லயிப்போம். குழந்தைகளுக்கும் எப்பொழுதும் என்னுடையது என்னுடையது என்று கூறும் பழக்கத்திலிருந்து எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை வளர்த்தால் நான், எனது என்ற ஆணவம் மௌ;ள, மௌ;ளக் குறையும். மனிதன் தனது தேவைக்கதிமாக ஒன்றுஞ் சேர்க்கக் கூடாது. குரங்கு சிறுவாயுள்ள பானையுள் கையை விட்டு கை நிறைய விதைகளை எடுத்துக் கொண்டு கையை வெளியே எடுக்க முடியாமலும் ஆசையால் விடவும் முடியாத நிலையில் குரங்கு பிடிப்போரிடம் அகப்பட்ட நிலைதான் ஆசையால் மாயை வலைப்பட்டு மக்கள் மீண்டும் பிறப்பிறப்புச் சூழியில் சிக்கித் தவித்தலாகும்.
மனிதனை நிலை குலையச் செய்வன பொருட்கள், நிகழ்வுகள், மனிதர்களாகும். பணம், நகை, கார், வீடு போன்ற பொருட்களும் இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, போன்ற மன எழுச்சிகளும் நண்பர்கள், பகைவர்கள், உறவினர், அல்லாதோர் போன்ற மக்களும் மனிதனைக் குழப்பத்திலாழ்த்திக் கொண்டேயிருப்பார்கள். பணம் கூட ஒரு கடதாசி என்ற நிலை வரவேண்டும். எனவே மன அமைதி பெற்று பிரம்மத்தோடு ஒன்றி ஆரா ஆனந்தம் பெற் இவை யெல்லாவற்றையும் நீக்கிவிட வேண்டும் என்று கூறி தியானத்தில் எவ்வாறு அமர்வது என்பது பற்றிக் குறிப்பிடுகின்றார் ஸ்ரீகிருஷ்ண பகவான். உடல் தூய்மை உள்ளும் புறமும் மிக அவசியம். தூய்மையான ஆடை அணிந்து, புலன்கள் கர்மங்கள் அடங்கி, அசைவின்றி, மனம் சலனமின்றி (மிகுந்த சந்தோஷம், மிகுந்த துன்பம் இன்றி) அதிக உயரத்திலோ அல்லது மிகப்பதிவாகவோ அன்றி நடுத்தரமான உயரத்தில் ஸ்திரமான ஆசனத்தில் அமரவேண்டும். இதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் இடமும் தூய்மையாக இருக்க வேண்டும். தர்ப்பை, மான்தோல், துணி இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக விரித்த ஆசனத்தில் அமரவேண்டும். எமது ஆச்சாரியார் இவற்றைத் தேடி ஓடத்தேவையில்லை, எல்லா நாடுகளிலும் இவை கிடைப்பது மிக அரிது. ஏமது தேகத்திலேயே எல்லாம் உண்டு. ஸ்ரீகிருஷ்ணன் கூறும் தர்ப்பை எமது ரோமம், மான்தோல் எமது உடலில் தோல், நாம் அணியும் உடையே இங்கு கூறப்படும் துணி. மேலும் தியானத்திலிருக்கும் பொழுது உடல், கழுத்து தலை இவற்றை நேராகவும் அசைவற்றதாயும் வைத்துக் கொள்ளல் வேண்டும். மூக்கு நுனியைப் பார்த்தபடி அசையாதிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார். அதாவது எம்முள்ளே உள்ள வெளி (space)ஐ நோக்கி பயமின்றியும் சலனமின்றியும் இருதயக்குகையை நோக்கி மனதைச் செலுத்த வேண்டும். பிரம்மச்சரிய விரதத்தில் நின்று பயமின்றி மன அமைதியோடு ஒருமுகப்பட்டு பகவானையே நினைத்தவனாக பகவானையடைதலே குறியாக இருதயக் குகையுள் புகவேண்டும். இதுவே யோகம் ஆகும். இப்படி இருப்பவன் இந்தப் பிறவியிலேயே முக்தி நிலையடைந்தவனாவான்.
இதைவிடுத்து தனக்குப் பெருமை, முதலிடம் பெறவிரும்புவோர் உண்மையில் அசுரராவர். தியான யோகம் கைவரப்பெற எப்பொழுதும் பணிவாக இருக்கவேண்டும். எப்பொழுதும் பகவான் பாபாவைப் பார்த்து அவரோடு தொடர்புறுவோம். எப்பொழுதும் அன்Nபுhடு சாதனை புரிய அவரையடைந்திடலாம். ஆகாரம் எப்பொழுதும் மிதமாயிருக்க வேண்டும். அரைவயிற்றிற்கு சாத்வீகச் சாப்பாடு, கால் வயிற்றிற்கு தண்ணீர், மிகுதி வெறுமையாயிருக்க வேண்டும். ஆகாரம் என்பது புலன்களால் நுகரும் யாவும் தான். எல்லாம் அளவோடிருத்தல் அவசியம். மிதமாகவே நித்திரையும் இருக்கவேண்டும். தூங்கும் நேரம் கூடினாலும், குறைந்தாலும் தாமச குணத்தை ஏற்படுத்தும். வேலையும் அவ்வாறே. இவ்வாறிருக்க மனமும் அமைதி பெறும். இறை சிந்தையோடு இருக்கும் பொழுது மனம் அலைய ஆரம்பித்தால் மீண்டும் மனதை இறைவனை, பரமாத்மாவை நோக்கித் திருப்ப வேண்டும். மனம் என்பது சிந்தனைகளில் குவியல். பூந்தோட்டத்தில் பூக்கள் பலவற்றை ஒன்று சேர்த்துக் கட்டி அதை பகவானுக்கு சமர்ப்பிப்பது போல் எமது மனதையும் பகவானுக்கே கொடுத்துவிடவேண்டும். நான், நான் என்று உணர்த்திக் கொண்டிருக்கும் ஆத்மாவில் லயிக்க வேண்டும். என்னையே சிந்தி - இதிலும் பார்க்க மேலான தொன்றும் இல்லை என்று பகவான் கிருஷ்ணன் கூறுகிறார். பகவானில் சிந்தை எப்பொழுதும் ஆனந்தமாயிருக்கும். ‘ஆரா அமுதே’ என்றழைக்கின்றனர் பக்தர்கள்.
பகவான் ரமணரும்
1 ஊர்சுற் றுளம்விடா துனைக்கண்ட டங்கிட
வுன்னழ கைக்காட் டருணாசலா என்றும்
2. ஐம்புலக் கள்வ ரகத்தினிற் புகும்போ
தகத்தினீ யிலையோ அருணாசலா என்றும்
3. ஒருவனா முன்னை யொளித்தெவர் வருவா
ருன்சூ தேயிது வருணாசலா என்றும் கூறுவது சிந்திக்கப்பாலது.
மனதை ஒருமகப் படுத்தி பரமாத்மாவுடன் ஒன்று படுதலே தியானம் ஆகும். மனதில் எண்ணங்கள் வந்து கொண்டேயிருக்கும். அதைத் தவிர்த்துவிடவேண்டும். அதில் கொஞ்சம் ஈடுபாடு வந்தாலே ஆசை மலரும். இதிலிருந்து உலகம் பிறக்கும். எனவே எல்லாவற்றையும் நீக்கவேண்டும். எண்ணங்கள் சங்கல்பம், விகல்பம் என இருவகைப்படும். எண்ண அளவில் உள்ளது சங்கல்பம், விகல்பம் எதிரிடையானது. சாதகனுக்கு தீங்கு விளைவிக்கும். ஈசன் கருணையால் உண்மையான சாதகன் வழிப்படுத்தப்படுவான். சுக மகரிஷி பரீஷித் மகாராஜாவை வழிப்படுத்த கங்கைக் கரைக்கு ஏதேச்சையாக வந்ததே அதனாற்றான். ரமண மகரிஷியும் “அழகு சுந்தரம் போல் அகமும் நீயும் உற்ற பின்னாமாயிருப்போம்” அழகும், சுந்தரமும், இருவேறு சொற்களாயினும் ஒரே கருத்துடையவை. இறைவனும் தானும் ஒன்றித்திருக்க வேண்டுமென்றார். அருணாசலமலையைப் பார்த்துக் கொண்டு நீண்ட நேரம் ரமண மகரிஷி தியானத்திலிருப்பாரென பகவான் பாபாவும் குறிப்பிடுகின்றார். தியானத்தில் மனம் லயிக்க சமதிருஷ்டியும் அவசியம். எம்மிலிருக்கும் பரமாத்வே எல்லோரிலும் எல்லா ஜீவசாகிகளிலுமுள்ளான் என்ற சமதிருஷ்டி பெறவேண்டும்.
ஒருமுறை பாடசாலைப் பிள்ளைகள் முன்னிலையில் பகவான் பாபா ஒருவருக்கு விபூதியும் இன்னொருவருக்கு வைரமோதிரமும் சிருஷ்டித்துக் கொடுத்தார். ஒரு சிறு பையனைப் பார்த்து இதில் எது சிறந்தது என கேட்க சுவாமி கொடுத்தால் அதில் ஏற்றத்தாழ்வு ஏது என்று சொன்னானாம்.; பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுவதுபோல் யோகிகள் மண், கல், பொன், எல்லாவற்றையும் ஒன்றாகததான் பார்ப்பார்கள். எது வந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு வேண்டும். உலகத்தில் மக்கள் துக்கத்தை அப்படியே அணைத்துக் கொள்வார்கள். செய்திகளை வெளிப்படுத்தும் சாதனங்களும் துன்பத்தை அனுபவிக்கத்தானே; வழிகோலும், இந்த துன்பத்தை இறுக அணைத்துக் கொள்வதால் நிலைமையில் ஏதாவது மாற்றமேற்படுமா என்று சிந்திக்க வேண்டும். இதை மாற்றியமைப்பதற்குத்தான் பகவான் தியான யோகப் பயிற்சிக்கு ஆத்மாவை நோக்கி சித்தத்தைத் திருப்பு - ஆத்ம சிந்தனை நித்திய சுகத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும் என்கின்றார்.
ஒரு குரங்கைப் பிடிக்க முனையும் ஒருவன் அது எங்கோ அடர்ந்த மரங்கள் செடி கொடிகளிடம் நிற்கும் போது சலசலப் பின்றி மெதுவாகப் போய் லபக் கென்று பிடித்துக் கொள்ள வேண்டும். அதேவிதத்தில்தான் எமது மனதையும் ஆசைகளைக் களைந்து திடவைராக்கியத்துடன் மௌ;ள மௌ;ள மனதை பிடித்து புத்திடம் ஒப்படைக்க வேண்டும். புத்தி தான் எது உண்மையானது, நிரந்தரமானது எனப் பகுத்தறியும் ஆற்றல் உள்ளது. அங்குமிங்கும் அலையும் மனது புத்தியின் வசப்பட்டால் அது பரப்பிரம்மத்திடம் கையளிக்க ஆன்மீகப்பாதை சுலபமாகும். பகவான் ரமணர் ஆன்மீகப்பாதை ‘ஐயே அதிசுலபம்’ என்கின்றார் ஆனால் அர்ச்சுனனும் பகவானிடம் மனம் அதிசஞ்சலமானது. காற்றை அடக்கினாலும் இதனை அடக்க முடியாதே கிருஷ்ணா என்று கூறினான். பகவான் அப்பியாசத்தாலும் திடவைராக்கியத்தாலும் சாதிக்கலாம் என வழிப்படுத்தினார். மனம் இலக்கை விட்டு உலக விவகாரங்களில் திரும்பும் போதெல்லாம் இறைவன்பால் திருப்பவேண்டும். மீண்டும் மீண்டும் இப்படிச் செய்து கொண்டுவர அப்பியாசத்தால் நிலைக்க ஆரம்பிக்கும். பெருஞ்சூறாவளிக் காற்றும் கடும் மழையும் பெய்ய, மக்கள், பசுக்கள் சீரடி பாபாவின் துவாரகமாயி சென்று தஞ்சம் புகுந்தனர். அவர் உடனே கையை உயர்த்தி “இது போதும், இனி நிறுத்து” என்று உரத்த சத்தத்தில் ஆணையிட உடனே புயற்காற்றும், மழையும் அடங்கிவிட்டனவாம் என்ற உதாரணத்துடன் விளக்கினார் எமது ஆச்சாரியார்.” “என்னையே நினைந்து என்னையடைதலே இலக்காக கொண்டு தியானஞ் செய்ய விரைவில் முக்தியடையலாம்”, என்றார் பகவான் கிருஷ்ணர். உலக வாழ்க்கையில் உள்ள பந்தங்கள், வாழ்நாள் முழுவதும் ஈட்டிய செல்வங்கள் அனைத்தும் ஒருவர் உடலை நீக்கியதும் அகன்றுவிடும். ஆனால் ஆன்மீகப் பாதையில் முயன்று முன்னேறுபவர்கள் இடையில் உடலை நீக்கினாலும் ஆன்மீகப் பாதையில் சிறந்த குடும்பங்களில் (சாயி குடும்;பங்களில்) பிறந்து பரப்பிரம்மத்தையடைய வழிப்படுத்தப் படுவர் என்றும் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார்.
ஒரேயொரு உண்மைதான் உலகத்திலுள்ளது. சினிமா காட்சிகள் பார்த்தால் ஒளி வந்து திரையில் விழ காட்சிகள் மாறிக் கொண்டே உண்மைபோலப் போகும். ஆனால் திரை என்றும் மாறாது. புகையிரத நிலையத்தில் நின்று புகையிரதம் ஓடும் பொழுத பார்த்தால் நாம்தான் ஓடுவதுபோல் இருக்கும். ஆனால் ஒரு நிலையான தூணில் பார்வையைச் செலுத்தினால் உண்மை நிலையை அறியலாம். அதே மாதிரித்தான் உலகம் மாறிக் கொண்டேயுள்ளது. ஆதாரமான பிரம்மம் நிலையாயுள்ளது. பிரம்மத்தில் நிலைக்க வேண்டும். எல்லாம் பிரம்மமயம் என்றுணர வேண்டும்.
யேசு கிறீஸ்துவின் மெசையா (Messiah) என்பவர் நீண்டகாலச் சேவையின்பின் தான் இனி ஓய்வெடுக்கப்போவதாகக் கூறினார். மக்களோ தமக்கு இறுதியாக ஒரு போதனை கூறவேண்டுமென வற்புறுத்திக் கொண்டேயிருந்தனர். சரி என்று மலை உச்சிக்குச் சென்று நீண்ட நேரந்தியானஞ் செய்து விட்டுத் திரும்பி வந்து நீங்கள் செய்தி கேட்க ஆயத்தமா என்று திரும்பத்திரும்பக் கேட்டார். தாங்கள் எதுவும் செய்யத் தயார் என்று கூறி ஆவலோடு எதிர்பார்த்து நின்றனர். அவா ஆறுதலாக “இறைவன் உங்கள் எல்லோரையும் சந்தோஷமாயிருக்கும் படி கூறுகின்றார்?” என்றார்! ஒரு காற்று வீசாத அறையினுள் ஒளிகாலும் தீபம் எவ்வாறு நிலையாக நின்று ஒளிகாலுமோ அவ்வாறே ஒரு யோகியினுடைய மனதும் எனக் கூறுகின்றார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவும் ஆத்மதர்சனத்திற்க வழிப்படுத்த மக்களைத் தன்பால் இழுத்துக் கொண்டார். ஜகத்குருவாகிய அவரது சங்கல்பத்தினால் புவியின் எல்லாப் பாகங்களிலுமிருந்தும் புட்டபர்த்தி நோக்கி சென்று நேரடித் தொடர்பு கொண்டனர் அடியார்கள். சுவாமியும் ஓரு பக்தைக்கு ஒன்றும் முன்கூட்டியே திட்டம் போடாதே. எல்லாம் இறைவன் சங்கல்பம் என்று ஒப்படைக்கப் பழகிக் கொண்டால் வருவதெதையும் தாங்கிக் கொள்ளலாம். “எண்ணம் எதுவோ அது செய்வாய்” என பக்தியுடன் சரணாகதியடைய வேண்டும். இந்த தியான யோகத்தைப் பற்றிய பல உதாரணங்களுடன் ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் கூற்றை ஸ்ரீ சாயி அவதாரத்தின் அற்புத மாணவர் விளக்கியருளினார். ஆச்சாரியார் அவர்கட்கும் ஞான வேதாந்த அமைப்பினர்க்கும் எம் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றிகளும் வாழ்க ! வாழ்க !! என்று எல்லோரும் வாழ்த்துவோமாக.
No comments:
Post a Comment