இலங்கைச் செய்திகள்



வெலிஓயவில் வைத்தியரின் அசமந்தப் போக்கினால் கர்ப்பிணிப் பெண் மரணம்: நீதி கேட்டு மக்கள் போராட்டம்

நவநீதம்பிள்ளையை 50 சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்திப்பர்: ஏற்பாடு பூர்த்தி என்கிறார் விக்கிரமபாகு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 116 பேர் கைது

செப்­டெம்பர் 21 ஆம் திகதி தேர்தல்

பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆரப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்: ஒருவர் பலி, பலர் காயம்

வெலிஓயவில் வைத்தியரின் அசமந்தப் போக்கினால் கர்ப்பிணிப் பெண் மரணம்: நீதி கேட்டு மக்கள் போராட்டம்

30/07/2013      அட்டன் வெலிஓய புதுக்காடு தோட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் வைத்தியர்களின் அசமந்தப் போக்கினால் மரணமானதைக் கண்டித்து தோட்ட மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை சற்றுமுன் நடத்தினர்.

பிரசவத்துக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரஞ்சன் சுமதி (26) என்ற கர்ப்பிணிப் பெண்ணை கடமையில் இருந்த மகப்பேற்று வைத்திய நிபுணர் பார்வையிட மறுத்துள்ளார்.

அத்துடன் கிளங்கன் வைத்தியசாலையில் பிரசவ சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்றும் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் செல்லுமாறும் பணித்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்ணை வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் சகிதம் உறவினர்களுக்குத் தெரியாமல் அம்பியுலன்ஸ் வண்டியில் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டிருந்த வேளை கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலை சிற்றூழியர்கள் செய்வதறியாது தடுமாறியுள்ளனர்.
இந்நிலையில் கர்ப்பிணிப் பெண் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த தோட்ட மக்கள் கிளங்கன் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் உரிய நடவடிக்கை எடுக்கக்; கோரியும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

இதன் ஒரு கட்டமாக மரணமடைந்த சுமதியின் சடலம் கொண்டு செல்லப்படும்போது பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.




நன்றி  வீரகேசரி 

நவநீதம்பிள்ளையை 50 சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்திப்பர்: ஏற்பாடு பூர்த்தி என்கிறார் விக்கிரமபாகு

30/07/2013   இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையை நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன உட்பட 50 சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

இச்சந்திப்புக்கான அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பில் நவசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை- கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவிக்கையில்,
நவநீதம்பிள்ளையை எமது கட்சி உட்பட மனித உரிமை அமைப்புக்கள் ஊடக அமைப்புக்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகளென 50 அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கின்றோம்.
இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பிவைத்தோம். சந்திப்பதற்கான அனுமதி எமக்கு கிடைத்துள்ளது.
இச்சந்திப்பின்போது விசேடமாக எதுவிதமான குற்றச்சாட்டுகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முறைப்பாட்டை முன்வைக்கப்படவுள்ளதோடு வட பகுதி மக்களின் காணிகள் பறிக்கப்படுவது, இராணுவ பிரசன்னம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தெரியப்படுத்தி இப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வலியுறுத்துவதோடு இலங்கை அரசாங்கத்திற்கு இது தொடர்பாக அழுத்தம்கொடக்க வேண்டுமென வலியுறுத்துவோம் என்றார்.நன்றி  வீரகேசரி

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 116 பேர் கைது

01/08/2013   இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 116 பேர் கிழக்கு கடலில் வைத்து கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற் பகுதியில் சென். பிரான்ஸிஸ் சேவியர் என்ற கப்பல் மூலம் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 116 பேரில் 59 ஆண்களும், 26 பெண்களும் 31 சிறுவர்களும் அடங்குவதோடு தற்போது மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வெலிகம மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தமது நாட்டுக்குள் புகலிடம் கோரி கடல் வழியாக நுழையும் இலங்கையர்கள் எல்லையில் வைத்து விசாரணைகள் எதுவுமின்றி திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் கடந்த மாதம் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சென்ற படகு ஒன்று இந்தோனேசிய கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி 

 

 

 

 

 

செப்­டெம்பர் 21 ஆம் திகதி தேர்தல்

01/08/2013    வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகா­ணங்­கான தேர்தல் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ளதாக தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய இன்று தெரிவித்தார்.

வட மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம் கிளி­நொச்சி, வவு­னியா, முல்­லைத்­தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகா­ணத்தின் புத்­தளம் மற்றும் குரு­ணாகல் மாவட்டங்களிலும் மத்­திய மாகா­ணத்தில் நுவ­ரெ­லியா, கண்டி மற்றும் மாத்­தளை மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.

வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்கு மொத்­த­மாக 142 உறுப்­பி­னர்­களை தெரிவுசெய்யும் நோக்கில் 43 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 261 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதிபெற்­றுள்­ளமை குறிப்பிடத்தக்கது.
  நன்றி வீரகேசரி 




பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆரப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்: ஒருவர் பலி, பலர் காயம்
01/08/2013   வெலிவேரிய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும்- பொலிஸார், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

வெலிவேரிய பகுதியிலுள்ள தொழிற்சாலைகளினால் இப் பிரதேசங்களில் உள்ள குடிநீர் கிணறுகளில் இரசாயனம் கலக்கப்படுவதாகவும் உடனடியாக இப்பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளை மூடக்கோரியும் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு தரப்பினர் மீது கல்வீச்சு நடத்தியதாகவும் பதிலுக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்ணீர்புகை வீசியுள்ளதோடு தண்ணீர் பீச்சியடித்துள்ளனர்.

இருதரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகரிக்க பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பலர் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலர் கம்பஹா மற்றும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
   நன்றி வீரகேசரி


No comments: