உலகச் செய்திகள்வெள்ளை மாளிகையில் இப்தார்: முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்த ஒபாமா

எகிப்தில் மீண்டும் கலவரம் : மோர்ஸி ஆதரவாளர்கள் 100 பேர் பலி

இத்தாலியில் பஸ் விபத்து: 30 பேர் பலி

போப் கலந்துகொண்ட சிறப்பு பிரார்த்தனை: 3 மில்லியன் பேர் பங்கேற்பு

நோர்வேயில் வெளிநாட்டு சிறுவர்களுக்கு 18 வருடகால தண்டனை :ஐ.நா.மௌனம் காப்பது ஏன்

அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா, ஜெர்மனி, சீனா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா======================================================================
வெள்ளை மாளிகையில் இப்தார்: முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்த ஒபாமா

26/07/2013   அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டை தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளராகவும், மருத்துவத்தில் முன்னோடியாகவும், வியாபார முயற்சியாளராகவும் உருவாக்க பங்களிப்பு செய்த முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஒபாமா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ரம்லான் என்பது கடவுள் மீதான ஒருவரின் பக்தியை வழிபாடு மற்றும் நோன்பின் மூலமாக காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பம் என ஒபாமா இதன் போது தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி  


எகிப்தில் மீண்டும் கலவரம் : மோர்ஸி ஆதரவாளர்கள் 100 பேர் பலி

28/07/2013   எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் மோர்ஸியின் ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோவில் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின்போது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 1000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் 65 பேர் வரையே கொல்லப்பட்டுள்ளதாக எகிப்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதேவேளை மோர்ஸியின் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி உயிரிழந்தோரின் தொகையை அதிகரித்துக் கூறுவதாக அந்நாட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.
தலைநகரின் வீதிகளில் மோர்ஸின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் நேற்றிரவு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.
இந்த மாதத்தின் முற்பகுதியில் மோர்ஸியை பதவி கவிழ்த்த இராணுவத்துக்கு ஆதரவானவர்கள் தாஹ்ரிர் சதுக்கத்தில் கூடியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு இராணுவத்துக்கு ஆணை வழங்குவதற்காக மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு இராணுவத் தளபதி ஜெனலர் அப்தல் ஃபாட்டா அல் சிஸி கோரியிருந்தார்.
இதேவேளை, பல்லாயிரக்கணக்கான மோர்ஸி ஆதரவாளர்கள் ரபா அல் அதாவியா பள்ளிவாசலை அண்டிய பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இவர்கள் பள்ளிவாசல் வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் சூளுரைத்திருந்தார்.
மக்கள் மீது வேண்டுமென்றே இராணுவத்தினர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மோர்ஸி பதவி விலக்கப்பட்ட கடந்த 3 ஆம் திகதியிலிருந்து இன்றுவரை சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி  
இத்தாலியில் பஸ் விபத்து: 30 பேர் பலி

29/07/2013  இத்தாலியில் பஸ்ஸொன்று மேம்பாலத்தில் இருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் தெற்கில் அவிலீனோ மாகாணத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது 48 பேர் வரை பஸ்ஸில் இருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு அவர்களில் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸில் இருந்த அனைவரும் யாத்ரீகர்கள் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டபோதிலும் அவர்கள் சுற்றுலாப் பயணிகள் என பின்னர் தெரியவந்துள்ளது.
எவ்வாறு விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பில் முரண்பாடான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பஸ்ஸின்  பிரேக் தொழிற்படாமையே விபத்துக்கு காரணமென ஒரு தகவலும், பஸ்ஸின் டயரொன்று வெடித்தமையினால் சாரதியால் பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாக வேறொரு தகவலும் தெரிவிக்கின்றன.
மேம்பாலத்திலிருந்து பஸ் கீழே வீழ்வதற்கு முன்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வேறு வாகனங்களுடன் மோதியுள்ளது.
பஸ்ஸின் சாரதியும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மீட்புப் பணிகள் தொடந்தும் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நன்றி வீரகேசரி  


போப் கலந்துகொண்ட சிறப்பு பிரார்த்தனை: 3 மில்லியன் பேர் பங்கேற்பு

29/07/2013  சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று  போப் கலந்துகொண்ட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ், தனது சொந்த நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவின் கோபாகபானா கடற்கரையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டார்.

போப் கலந்துகொண்டதால், இந்த பிரார்த்தனைக்கு இலட்சக் கணக்கில் மக்கள் கலந்துகொண்டனர். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.
பிரார்த்தனையின்போது, போப் கூறுகையில், "ஆர்வம், புத்தாக்கம் மற்றும் சந்தோஷம் உள்ளிட்ட இளைஞர்களின் குணநலன்கள் தேவாலயங்களுக்கு தேவைப்படுகிறது." என்றார்.

நன்றி வீரகேசரி 

நோர்வேயில் வெளிநாட்டு சிறுவர்களுக்கு 18 வருடகால தண்டனை :ஐ.நா.மௌனம் காப்பது ஏன்

01/08/2013   பிறந்து பால் மனம் மாறாத அல்லது பருவமே அறியாத சிசுக்களையும் குழந்தைகளையும் சிறுவர்களையும் பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பிரித்து தனித்திருக்கச் செய்து 18 வயதின் பின்னரே  அதுவும் பிள்ளை விரும்பினால் மாத்திரமே பெற்றோரிடம் ஒப்படைக்கபப்டும் என்ற நோர்வே அரசாங்கத்தின் வாதத்தினூடாக அந்நாடு எந்த நோக்கத்தை அடைய முயற்சிக்கின்றது என்று கேள்வியெழுப்பியுள்ள நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உலகநாடுகளும் ஐ.நா.வும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையும் ஏன் நோர்வேயின் அப்பட்டமான மனித உரிமைமீறல் விடயத்தில் தாமதப் போக்கினைக் கடைப்பிடித்து வருகின்றன என்றும் கேட்டுள்ளனர்.
எந்த அடிப்படையிலான சட்டம்
நோர்வே சிறுவர் காப்பக விவகாரம் தொடர்பில் உலக நாடுகளின் மத்தியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கொலைக்குற்றவாளிக்கும் சில சந்தர்ப்பங்களில் மன்னிப்பு வழங்கப்படுகின்ற இன்றைய உலகில் பருவம் அறியாத சிறவர்களை பெற்றோரிடமிருந்து பிரித்து 18 வருடங்களுக்கு பெற்றோர் பிள்ளைகளது உறவுகளையும் கலாசார ஒழுக்க முறைகளையும் அழித்து தனித்திருக்கச் செய்து தண்டனை அனுபவிக்கச் செய்வது நோர்வேயின் எந்த அடிப்படையிலான சட்டடத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது என்பது தெரியாதுள்ளது.
நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகளை மாத்திரமே குறிவைத்திருப்பதன் மூலம் நோர்வேயில் ஓர் திட்டமிடப்பட்ட இனச்சுத்திகரிப்பு இடம்பெறுகின்றதாகவும் தஞ்சம் புகுந்த தம்மை இவ்வாறுதான் பழிவாங்க வேண்டுமா என்றும் தமது குழந்தைகளை நோர்வே சிறவர் காப்பகங்களிடம் பறிகொடுத்து தவித்து நிற்கும் வெளிநாட்டுப் பெற்றோர் தமது ஆதங்கங்களை வெளியிடுகின்றனர்.
தண்டனை வழங்கப்பட்டவர்களாக
இவ்வாறு இலங்கையிலிருந்து நோர்வேயில் தஞ்சம் புகுந்துள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாமோதரம் பிள்ளை ஆனந்தாசா - ரஜிந்தா ஆனந்தராசா ஆகியோரின் நான்கு பிள்ளைகள், எரிக்ஜோசப் - டிலாந்துதினி ஜோசப் ஆகியோரின் மூன்று பிள்ளைகள், மகாத்மா ஜோதி செல்லத்துரை - சித்திராதேவி செல்லத்துரை ஆகியோரின் மூன்று குழந்தைகள் மற்றும் வசந்தகுமாரன் - சியாமலா வசந்தகுமாரன் ஆகியோரின் இரு குழந்தைகள் என நான்கு குடும்பங்களின் 12 குழந்தைகள் இதுவரையில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தண்டனை வழங்கப்பட்டவர்களாக பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா , போலந்து ரஷ்யா நேரடி தலையீடு
இந்நிலைமைகளைக் கருத்திற்கொண்டே இந்தியா , போலந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நோர்வே சிறுவர் விவகாரத்தில் நேரடி தலையீடுகளை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்ததுடன் தமது நாட்டுப் பிரஜைகளின் பிள்ளைகள் அவர்களிடத்தில் சென்றடைவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தது. இதேபோன்று ரஷ்ய நாட்டு ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து மூன்று குழந்தைகளைப் பெற்றோரிடம் மீட்டுக் கொடுத்தமையும் மேலும் போலந்து நாட்டு பாதுகாப்புத் துறை நோர்வேக்குள் நுழைந்து காப்பகத்தின் பாராமரிப்பில் இருந்து அந்நாட்டுக் குழந்தையை மீட்டுச் சென்றமை நோர்வேயின் ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூடிமறைப்பு
இவ்வாறான நிலையில்தான் நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு பிள்ளைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து அவர்களை பெற்றோரிடத்தில் திருப்பிக் கொடுப்பதற்கு ஏற்ற வழிவகைகளை மூடிமறைத்தும் செயற்பட்டு வருகின்றது. இது குறித்து ஐ.நா. முதல் அனைத்து உலக நாடுகளும் அறிந்தே வைத்துள்ளன.
மன்னிக்க முடியாத தண்டனை
தமது நாட்டு சட்டத்தில் தலையீடு செய்ய முடியாது என நோர்வெ கூறுமானால் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அந்நாட்டில் மன்னிக்க முடியாத தண்டனை வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நோர்வேயின் இத்தகைய தான்தோன்றித்தனமான போக்கினை சர்வதேச நாடுகள் கண்டித்து தமது பிள்ளைகளை தம்மிடத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு வழி செய்ய வேண்டும் என்றும் கேட்கின்றனர்.
இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் கோரிக்கை
இந்தியா, ரஷ்யா, போலந்து உள்ளிட்ட நாடுகள் தமது பிரஜைகளுக்காக நோர்வே சிறுவர் காப்பக விடயத்தில் தலையிட்டது போன்று இலங்கைப் பிரஜைகளான தமது நிலைமையையும் அறிந்து ஆராய்ந்து உதவ முன்வருமாறு நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பாதிக்கப்பட்ட பெற்றோர் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
மனித உரிமைகள் குறித்து பேசும் நோர்வேயில் 16, 000 சிறுவர்கள் குற்றம் அறியாதவர்களாக இருந்து பயங்கரமான தண்டனையை அனுபவித்து வருவதை உலக நாடுகள் ஏன் கண்டு கொள்ளாதிருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மையம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேரவை இவ்விடயத்தில் தாமதப்போக்கினை கடைப்பிடித்து வருவதற்கான காரணம் என்ன?
இவ்விடயத்தில் இலங்கை அரசு கரிசனை காட்டுமா ? தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் வழங்கப்பட்டு அனுபவித்து வருகின்ற கொடூர தண்டனையிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கப்படுமா ?
நோர்வேயில் மனிதாபிமான, மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படுமா என்றும் பரவலாக கேள்வி எழுப்பப்படுகின்றது. நன்றி வீரகேசரி அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா, ஜெர்மனி, சீனா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

obama2அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அமெரிக்காவின் சட்டனூகா நகரில் செவ்வாய்க்கிழமை மக்களிடையே ஆற்றிய உரை வருமாறு: நாம் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், முதலீடுகளையும் மேற்கொள்ளா விட்டால், இந்தியா, ஜெர்மனி, சீனா உள்பட உலக நாடுகளுக்கு நாம் வெள்ளைக் கொடியை காட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் அவை முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அந்த நாடுகள் பின்தங்கப் போவதில்லை.

இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றன. எனவே அமெரிக்காவும் சும்மா இருக்க முடியாது. நாம் எதையும் செய்யாமல் இருப்பது, மத்திய நடுத்தர வகுப்பினருக்கு உதவாது. நல்ல சம்பளத்துடன் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நாடு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம் எதிர்கால வளர்ச்சிக்கு வழி அமைக்க முடியும்.

அமெரிக்காவில் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்து பார்த்தால், இப்போதுதான் முதல் முறையாக உற்பத்தி சார்ந்த வேலைகள் குறையவில்லை. அவை அதிகரித்து வருகின்றன. வர்த்தகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு அரசு அமைப்புகளை இணைக்கக் கூடிய 45 உற்பத்தி மற்றும் புத்தாக்க நிறுவனங்களை நாடாளுமன்றம் சட்டமியற்றி உருவாக்க வேண்டும்.

அதேபோல், காற்றாலை, சூரியசக்தி, இயற்கை எரிவாயு உள்பட எரிசக்தித் துறையிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். புதுமையான எரிசக்தி ஆதாரங்கள், எரிசக்தி விலைகளைக் குறைப்பதோடு, அபாயகரமான கரி மாசு மற்றும் வெளிநாட்டு எண்ணெயை நாம் சார்ந்திருப்பது ஆகியவற்றையும் குறைக்கும். எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், இயற்கையான எரிபொருள்கள், மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்கள் ஆகியவற்றை இரட்டிப்பாக்கவும், எண்ணெய் இல்லாமல் வாகனங்களை இயங்கச் செய்வதற்கான ஆராய்ச்சிக்கு பணம் செலவழிக்கவும் வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாம் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும். அமெரிக்கப் பொருள்களை உலகெங்கும் அனுப்பவே நாம் விரும்புகிறோம். ஓராண்டுக்கு முன் கொரியாவுடன் நான் புதிய வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டேன். ஏனெனில், அவர்கள் ஏராளமான ஹுண்டாய் கார்களை இங்கு விற்பனை செய்கின்றனர்.

ஆனால், நாம் அவர்களது நாட்டில் நிறைய ஜி.எம். கார்களை விற்பதில்லை. அந்த உடன்பாட்டில் நாம் கையெழுத்திட்ட காரணத்தால் இனி நம் நாட்டின் 3 பெரிய வாகன உற்பத்தியாளர்களும் கொரியாவில் முன்பை விடக் கூடுதலாக 18 சதவீதம் அதிகமான கார்களை விற்க முடியும் என்றார் ஒபாமா.நன்றி தேனீ 

No comments: