மெல்பேணில் சிறப்புற நடைபெற்ற கறுப்பு ஜூலை 30வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள்





தமிழர் மீதான சிங்கள பேரினவாதத்தின் இனவழிப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் கறுப்பு ஜூலை படுகொலையின் முப்பதாவது ஆண்டு நினைவு நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேண் நகரில் சிறப்பாகவும், உணர்வுபுர்வமாகவும் நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை 27-07-2013 Hungarian Community Centre மண்டபத்தில் மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில் தமிழரல்லாத வேற்றினத்தவர்களும் பலரும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வின் மண்டப ஒழுங்கமைப்பானது தமிழர் மீதான இனவழிப்பினை கால ஒழுக்கில் நினைவுபடுத்தும் முகமாக ஒழுங்கமைப்பட்டிருந்தது. நினைவு நிகழ்வினை திரு பிரகாஸ் தொகுத்து வழங்கினார்.


நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட பேராசிரியர் ரோஹான் பஸ்டின், சிறிலங்காவின் தேசியக் கொடியை மையமாக வைத்து வரலாற்றுச் சம்பவங்கள் ஊடாக இலங்கையில் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விபரித்தார். சிங்கள பேரிவாதமானது எவ்வாறு தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டது, இரு பெரும் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பேரினவாத அரசியலை எவ்வாறு முன்னெடுத்தன என்பவற்றை சிறப்பாக வெளிப்படுத்தி உரையாற்றினார். முடிவில் அகதிகள் வருகை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அணுகுமுறையைக் கடுமையாகச் சாடி தனதுரையை நிறைவுசெய்தார்.

நிகழ்வின் முத்தாய்ப்பாக, ஜூலைப் படுகொலையை நினைவுகொள்ளும் ஒரு பட்டறிவுப் பகிர்வு இடம்பெற்றது. முப்பதாண்டுகளின் முன்னர் தென்னிலங்கையில் வாழ்ந்து நேரடியாக கறுப்பு ஜூலைக் கொடூரங்களைக் கண்ட மூன்று தமிழர் தமது அனுபவங்களைப் பகிர்ந்தனர். அத்தோடு, ஜூலைப் படுகொலை நடந்த அவ்வேளையில் அவுஸ்திரேலியாவிலிருந்த தமிழ்ச் சமூகத்தின் பிரதிபலிப்பையும் செயற்பாடுகளையும் ஒரு செயற்பாட்டாளர் மக்களோடு பகிர்ந்துகொண்டார். நிகழ்வுக்கு வந்திருந்த வேற்றின மக்களுக்கு இவர்களின் நேரடியான சாட்சியங்கள் கனத்த பாதிப்பைத் தந்ததை பலரும் சுட்டிக்காட்டினர்.

அடுத்ததாக, ”எரியும் நினைவுகள்” என்ற ஆவணப்படமொன்றின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாண நுால் நிலையத்தின் எரிப்பையும் தென்னிலங்கயைில் நிகழ்ந்த ஜூலைப் படுகொலை நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டு இது தொகுக்கப்பட்டிருந்தது.

இத்தோடு இந்நிகழ்விற்காக பதிவுசெய்யப்பட்ட, முக்கிய தமிழ் அமைப்புக்களின் தலைவர்களின் கறுப்பு ஜூலை படுகொலையின் முப்பதாவது ஆண்டு நிகழ்வின் அறிக்கை அகலத்திரையில் வருகைதந்த மக்களிற்கு காண்பிக்கப்பட்டது. இடையிடையே பொருத்தமான தமிழ், ஆங்கிலப் பாடல்களும் பாடப்பட்டன.
மிகவும் உணர்வுபுர்வமாகவும், ஈழத் தமிழரின் பல சகாப்தகால போராட்ட  வாழ்வியலை ஆதாரங்களுடன் நிரூபனமாக்கிய இந்நிகழ்வு, நிகழ்வின் ஓருங்கிணைப்பாளர் திரு சிவா அவர்களின் நன்றி உரையுடன் மாலை 6 மணியளவில் நிறைவுபெற்றது. மிக நேர்த்தியாக ஒழுங்கமைப்பட்ட இந்நிகழ்வை அவுஸ்திரேலியா-தமிழ் ஒற்றுமைக் கழகம் (A-TSவிக்ரோரிய மாநில ஏனைய தமிழ் அமைப்புக்களின் ஒத்தாசையோடும், முழு ஆதரவோடும் சிறப்புற நிர்வகித்திருந்ததோடு மட்டுமல்லாமல், இந்நிகழ்விற்கு வருகைதந்த தமிழரல்லாத வேற்றின நண்பர்கள் பலரது பாராட்டையும் பெற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.





No comments: