இலங்கைச் செய்திகள்


வெலிவேரிய சம்பவத்தில் இறந்த அகிலவின் இறுதி கிரியையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீர் கொடுத்த தேசம்..!

இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும், மக்கள் சேவைக்கு முதலிடம்: பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

ஊடக சுதந்­திரம் குறித்து வெறும் உதட்­ட­ளவில் மட்டும் செயற்­பட வேண்­டா­ம் : பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம் கண்­டனம்

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்

பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றி

வெலிவேரிய சம்பவத்தை கண்டித்து எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 குப்பிளான் வடக்கில் மீளக்குடியேறியோர் ஆர்ப்பாட்டம்

=========================================================================
வெலிவேரிய சம்பவத்தில் இறந்த அகிலவின் இறுதி கிரியையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

5/8/2013    ரதுபஸ்வல இரசாயன கழிவு நீர் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதியன்று வெலிவேரிய நகர மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உயிரிழந்த அகிலவின் இறுதிகிரியைகள் நேற்று இடம்பெற்றன.


சுத்தமான குடிநீர் கேட்டு கடந்த வியாழக்கிழமை முதலாம் திகதி மாலை 5 மணியளவில் போராட்டம் நடத்திய வெலிவேரிய பிரதேச மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 17 வயதுடைய இளைஞன் அகில உட்பட மூன்று பேர் பலியானதுடன் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் ஒருவரான அகிலவின் இறுதிகிரியைகள் நேற்று இடம்பெற்றன. இதன்போது உறவினர்கள், நண்பர்கள், பாடசாலை மாணவர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நன்றி வீரகேசரி





தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீர் கொடுத்த தேசம்..!

6/8/2013


ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று சொல்லப்படுகின்ற இலங்கைத் திருநாட்டில் அதிகார வர்க்கத்தின் ஆணையின் பிரகாரம் வேலியே பயிரை மேய்ந்த கதை இடம்பெற்றுள்ளது.

ஆம்! வெலிவேரிய சம்பவத்தை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

அன்று ஆகஸ்ட் முதலாம் திகதி.

கம்பஹா வெலிவேரிய, ரத்துபஸ்வல பகுதி மக்கள் அரசாங்கத்திடம் தமக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்தது இவர்களது முதலாவது நடவடிக்கை அல்ல.

சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்யுமாறு பிரதேச செயலர், அரசாங்க அதிபர் உள்ளிட்டோருக்கு எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருந்தபோதுதான் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் தீர்மானித்தார்கள்.

சுத்தமான குடிநீருக்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது இராணுவம். இறுதியில் நடந்தது என்ன? மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டன, பலருக்குக் காயம், பலருக்கு உளரீதியான பாதிப்பு, வெறுப்பு என சோகம் நீள்கிறது.




சம்பவம் தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள்.

வெலிவேரிய, கல்மடுவ, ரத்துபஸ்வல, கஹபான ஆகிய பிரதேச மக்கள் நித்திரையின்றித் தவித்தார்கள். அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் இரவு 9 மணிக்குக் கூட ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கேட்டதாக குறிப்பிடுகிறார்கள்.

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அரச சேவை. அது பொறுப்புள்ள அரச அதிகாரிகளால் தட்டிக்கழிக்கப்படும்போது நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் உரிமையோடு கேட்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால் அவ்வாறு தமக்கான உரிமையை கேட்ட பொதுமக்கள் மீது இராணுவம் ஏவிவிடப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் நாய்களை கொல்லக்கூடாது என்ற விடயத்தில் அரசாங்கம் காட்டி வரும் அதீத அக்கறை கூட அப்பாவி மக்கள் விடயத்தில் கவனத்திற்கொள்ளப்படவில்லை.

நீதி கேட்டுப் போராடிய மக்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தால் பொலிஸாரை ஈடுபடுத்தாமல் இராணுவம் அங்கு வரவழைக்கப்பட்டதன் காரணம் என்ன?

இதற்கான உத்தரவை எங்கிருந்து? யார் பிறப்பித்தார்கள்?

சாதாரண பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அது அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையின் உச்ச பதவியில் இருக்கக் கூடிய ஒருவராலேயே பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறாயின் யார் உத்தரவை பிறப்பித்தார்கள் என்பதை இதுவரை வெளியிடப்படாததன் பின்னணி என்ன?

இந்தச் சம்பவத்திலிருந்து அப்பகுதி பொலிஸார் பின்வாங்கியதன் காரணம் என்ன?

குற்றங்கள், வன்முறைகளை கட்டுப்படுத்தி பயம் இன்றியும் மக்கள் நம்பிக்கையுடனும் வாழும் சூழலை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பொலிஸ் திணைக்களம் இவ்விடயத்தில் ஏன் அசமந்தப் போக்கை கடைப்பிடித்தது?

சுமைகளைத் தாங்கி இரத்தம் சிந்தி உழைக்கும் அப்பாவி மக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அதிகார வர்க்கத்தின் எல்லை மீறிய செயற்பாடாகவே இதனைக் கருத முடியும். உரிமைக்கான போராட்டத்தை துப்பாக்கி முனையால் அடக்க முயல்வதுதான் ஆணையிட்டவர்களின் ஜனநாயகமா?

ஆக, ஆயுதம் தரித்தவர்கள் தமது இனத்தையே சுட்டுக்கொல்ல தயங்காதபோது நாட்டில் சிறுபான்மையினத்தவரின் நிலைமை என்ன எனக் கேட்கத் தோன்றுகிறது.

வெலிவேரிய மக்களின் வாழ்க்கை வரலாற்றில் கறுப்பு நாளாக ஆகஸ்ட் 1ஆம் திகதி மாறியமைக்கு முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அத்தோடு பாரபட்சமின்றி முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.




நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவம் இவ்வாறு நடந்துகொண்டமைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொறுப்புக்களை தட்டிக்கழிக்காது பதில் தருவார் என்ற நம்பிக்கையில் வெலிவேரிய மக்கள் காத்திருக்கிறார்கள்.

வெறுமனே விசாரணைக் குழுவை நியமித்து அறிக்கையை பெற்றுக்கொண்டு அதனை பத்தோடு பதினொன்றாக இறாக்கையில் வைத்து அழகுபார்க்காது நல்லாட்சியின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி இங்கு வெளிப்படுத்த வேண்டும்.

இல்லாவிடின் அரசாங்கம் மீதான தப்பபிப்பிராயம் மேலோங்குவதுடன் இது மேலும் பல ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

இறுதியாக கிடைத்த செய்திகளின் பிரகாரம் அந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.

மூன்று உயிர்களை பலிகொடுத்து குடிநீரை பெற்றுக்கொண்ட கசப்பான வரலாறுடையவர்களாக வெலிவேரிய மக்கள் எதிர்காலத்தில் கணிக்கப்படுவார்கள்.

எது எவ்வாறாயினும் தண்ணீர் கேட்ட மக்களுக்கு கண்ணீரைப் பரிசளித்த சம்பவம் இலங்கையில் தான் நடந்திருக்கிறது.

-இராமானுஜம் நிர்ஷன்

நன்றி வீரகேசரி






இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும், மக்கள் சேவைக்கு முதலிடம்: பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

6/8/2013 அழிவுகளையும் துன்பங்களையும் சந்தித்த வட பகுதி மக்களுக்கு வாழ்வதற்கு வீடும் வாழ்வாதாரம் தேவையே தவிர இனவாதமோ மதவாதமோ அவசியமில்லை. எனவே மக்கள் தேவையறிந்து சேவை செய்யும் ஜனசெத பெரமுனவையை மக்கள் நலன்புரி முன்னணியை வெற்றி பெறச் செய்து இனவாதத்தை தோற்கடிக்க வேண்டுமென அதன் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார்.
அரசுடன் தொடர்பிருந்தால் இணைந்து போட்டியிட்டிருப்போம். எமக்கு சிறப்புரிமைகள் தேவையில்லை. மக்கள் சேவையே எமது இலக்காகும் என்றும் தேரர் தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜனசெத பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பத்தரமுல்லே சீலரத்னதேரர் இதனைத் தெரிவித்தார்.நன்றி வீரகேசரி




ஊடக சுதந்­திரம் குறித்து வெறும் உதட்­ட­ளவில் மட்டும் செயற்­பட வேண்­டா­ம் : பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம் கண்­டனம்

6/8/2013 கம்­பஹா மாவட்­டத்தில் உள்ள வெலி­வே­ரியா பிர­தேச மற்றும் அதனைச் சூழ­வுள்ள பிர­தே­சங்­களைச் சேர்ந்த மக்கள் நீர் அசுத்­த­மாக்கல் பிரச்­சி­னை­யொறுக்கு தீர்வு கோரி கடந்த வியா­ழ­னன்று நடத்­தி­யி­ருந்த வீதி ஆர்ப்­பாட்­டங்­களைத் தடுத்து நிறுத்தி அங்கு அமை­தியை நிலை­நாட்­ட­வென அர­சாங்கம் பாது­காப்புப் படை­யி­னரைக் கட­மையில் ஈடு­ப­டுத்­திய விதம் குறித்து இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம் வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது.


இது குறித்து மேற்­படி சங்கம் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;
பொது மக்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த ஆர்ப்­பாட்டம் குறித்து செய்தி சேக­ரிக்­க­வென அனுப்­பப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீதான தங்­களின் கண் மூடித்­த­ன­மான தாக்­கு­தலை புகைப்­ப­டங்கள் அல்­லது காணொ­ளியை எடுப்­ப­தனைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறு அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான வகையில் பாது­காப்புப் படை­யி­னரால் முன்­னெச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அங்கு குழு­மி­யி­ருந்­தோரை தடி­யடி மற்றும் ஆயுதப்பிர­யோகம் செய்து கலைப்­ப­தற்கு அவர்கள் ஆரம்­பித்­ததும், அடி­யுதை­பட்டும் அச்­சு­றுத்­தப்­பட்டும் தூஷிக்­கப்­பட்­டு­மி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது தாக்­கு­தலை மேற்­கொண்­டனர்.

ஊட­க­வி­யலா­ளர்கள் அத்­த­ரு­ணத்தில் தங்­களின் சட்­ட­பூர்வத் தொழிலில் ஈடு­பட்ட வண்­ண­மி­ருந்­தனர். தங்கள் பணியைச் செவ்­வனே செய்­வ­தற்­கென அவர்­க­ளுக்கு அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தால் வழங்­கப்­பட்­டுள்ள ஊடக அங்­கீ­கார அட்­டை­களை அவர்கள் சமர்ப்­பித்­தி­ருந்த போதிலும் அவை பய­னற்­ற­வை­யா­கவே இருந்­தன.

இலங்கை வாழ் மக்­க­ளுக்கு தகவல் வழங்­கு­வ­தி­லான சட்ட சம்­மதம் பெற்ற தங்­களின் கட­மையை நிறை­வேற்­று­வ­தி­லி­ருந்து அங்கு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பாது­காப்புப் படை­யி­னரால் அவர்கள் தடுக்­கப்­பட்­டனர்.

மாகாண செய்­தி­யா­ளர்­களுள் ஒரு­வ­ரான பெண் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் பல­வந்­த­மான முறையில் தள்­ளப்­பட்டு அச்­சு­றுத்­தப்­பட்ட நிலையில் வீடொன்றில் இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேலாக இத்­த­கைய பாது­காப்­புப்­ப­டை­யி­னரால் பல­வந்­த­மாக பூட்டி வைக்­கப்­பட்டார். உருத்­தோட்ட எனு­மி­டத்தில் இன்­னு­மொரு ஊட­க­வி­யலாளர் படை­யி­னரால் தாக்­கப்­பட்­ட­துடன் அவ­ரது கமெ­ராவும் அடித்து நொருக்­கப்­பட்­டது.

தாக்­கு­த­லுக்­குள்­ளான அவர் பலத்த காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு இரண்டு நாட்­களின் பின்­னரே அங்­கி­ருந்து வீடு திரும்­பினார்.

ஊடக சுதந்­திரம் குறித்து வெறும் உதட்­ட­ளவில் மட்டும் செயற்­பட வேண்­டா­மென நாம் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றோம். சர்­வ­தேச ஊடகச் சுதந்­திரம் சம்­பந்­த­மான சுட்­டியில் இலங்கை மிகவும் தாழ்­வுற்ற நிலை­யி­லேயே இருந்து வருவதுடன் ஊடகச் சுதந்திரம் மிகவும் கேவலமாக மதிக்கப்பட்டு வரும் நாடுகளுள் ஒன்றா கவும் கணிக்கப்பட்டுள்ளது. நாம் சாட்சி யம் கூறியுள்ளவாறு அரசாங்கத்தின் பணிப்புரைகளின் கீழ் பாதுகாப்புப் படை யினர் நடந்துகொண்ட விதம் அதன் துக்கம் தோய்ந்த இருண்ட பக்கத்தை வெளி ச்சமாக்கிட உதவப் போவதேயில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி

 

 

 

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்

6/8/2013    இராமாயண காலத்துக்கு முற்பட்டதாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

தீர்த்தம், தலம், விருட்சம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்டு பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் மாமாங்யேஸ்வரர் ஆலயம் தானாக தோன்றியதன் காரணமாக சுயம்பு ஆலயமாகவும் போற்றப்பட்டுவருகின்றது.


இராவணேஸ்வரனால் வழிபட்ட ஆலயமாகவும் இராவணன் அனுமானின் வாலில் கொழுத்திய தீயை அணைத்த இடமாகவும் ஆலயம் சிறப்பு பெற்றது.

இராம பிரானின் தண்டாயுதத்தால் உருவான தீர்த்தக்கேணியே மாமாங்கர் ஆலய தீர்த்தக்கேணியென கர்ண பரம்பரைக்கதைகள் கூறுகின்றன.

இத்தனை சிறப்புகளைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இந்த தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த தீர்த்த உற்சவத்தில் விசேடமாக பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வு சிறப்பு பெறுகின்றது.தாய்,தந்தையர்களை இழந்தவர்கள் அவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிதிர்கடன் செலுத்துதல் இந்த தீர்த்தத்தின் சிறப்பாகும்.

இதேவேளை ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் கீரிமலை தீர்த்தக்கேணியில் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்தவர்கள் பிதிர்கடன் நிறைவேற்றுவதற்கு கீரிமலை திர்த்தக்கரையில் கூடியமை குறிப்பிடத்தக்கது.        நன்றி வீரகேசரி

 

 

 

 

 

 

பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றி
வடக்கிற்கான ரயில்தடம் அமைக்கும் பணிகளில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது.

கிளிநொச்சி, அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த நடவடிக்கையாக ரயில் சேவை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில் அறிவியல் நகர்வரை வந்தடைந்தது.

இது இவ்வாறிருக்க, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்ததுடன் மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஏற்கெனவே இரயில் நிலையங்கள் இருந்த இடங்களில் புதிதாக இரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் இதன் பணிகள் மற்றும் ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளும் துரிதமாக நடை பெற்று வருகின்றது.  
நன்றி வீரகேசரி

 

 

 

 

 

வெலிவேரிய சம்பவத்தை கண்டித்து எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்


7/8/2013   வெலிவேரிய ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற சம்பவத்தைக் கண்டித்து பொது எதிர்க் கட்சிகள் இணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
(pics by : J.Sujeewakumar)







 நன்றி வீரகேசரி

 


 

குப்பிளான் வடக்கில் மீளக்குடியேறியோர் ஆர்ப்பாட்டம்

7/8/2013   உடுவில் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இன்று பகல் குப்பிளான் வடக்கில் மீளக்குடியேறிய மக்கள் சில தேவைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

'கிராம அலுவலர் அலுவலகம் வேண்டாம்" , 'மின்சாரம் வேண்டும்" , 'வீடு வேண்டும்" என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.












நன்றி வீரகேசரி




No comments: