இரக்கமுள்ள அன்பர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்


.

இலங்கையில்  நீடித்த  போரினால்  பெற்றவர்களை  இழந்து,  ஏழ்மை  நிலையினால்   கல்வியை  தொடரமுடியாமல்  சிரமப்படும்  தமிழ்  மாணவர்களுக்கு  அவுஸ்திரேலியா உட்பட  பல  நாடுகளிலிருந்தும்  அன்பர்களின்  ஆதரவுடன்  உதவிவரும்  இலங்கை மாணவர்  கல்விநிதியம்   இரக்கமுள்ள  அன்பர்களுக்கு  இந்த  அறிக்கையின்  ஊடாக உருக்கமான   வேண்டுகோளை   முன்வைக்கின்றது.
அவுஸ்திரேலியா   மெல்பனை  தலைமையகமாகக்   கொண்டியங்கும்  இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம்  கடந்த  1989 ஆம்  ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அவுஸ்திரேலியாவில்  விக்ரோரியா  மாநிலத்தில்  பதிவு செய்யப்பட்ட  அமைப்பாக  இயங்கும்  இந்தத்  தொண்டு   நிறுவனம்,   இலங்கையில்  வடக்கு, கிழக்கு, மாகாணங்களில்   யாழ்ப்பாணம்,   கிளிநொச்சி,   முல்லைத்தீவு,   திருகோணமலை, மட்டக்களப்பு,   அம்பாறை   ஆகிய   மாவட்டங்களில்   போரினால்  தாய்,   தந்தை  மற்றும்  குடும்பத்தின்  மூல  உழைப்பாளிகளை  இழந்த   ஏழைத்தமிழ்  மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கு   தொடர்ச்சியாக    உதவி   வருகிறது.
முதலாம்  வகுப்பிலிருந்து  பல்கலைக்கழக  புகுமுக  வகுப்பு  ( க.பொ.த.  உயர் தரம்)  வரையில்   கல்வி  பயிலும்   மாணவர்கள்  பலர்   இந்த   உதவித்திட்டத்தினால்  நல்ல  பலனையும்  பயனையும்  அடைந்துள்ளனர்.
கடந்த   ஆண்டுகளில்  இலங்கை  மாணவர்  கல்வி  நிதியத்தின்  உதவியினைப்பெற்ற  நூற்றுக்கணக்கான   மாணவர்கள்   பல்கலைக்கழகங்களுக்கு  பிரவேசித்துள்ளனர்.  மேலும்  பல  மாணவர்கள்  தமது  பல்கலைக்கழக   கல்வியை  நிறைவு செய்து, பட்டமும்   பெற்று   தொழில்  வாய்ப்புகளும்  பெற்றுள்ளனர்.
போரில்  தமது  கால்  இழந்த  சில  மாணவர்களும்  இந்நிதியத்தின்  ஆதரவுடன்  தமது  கல்வியை  தொடருகின்றனர்.
ஒரு  மாணவருக்கு  உதவ விரும்பும்  அன்பர்  மாதாந்தம்  கூ 21 அவுஸ்திரேலியன்  வெள்ளிகளை   வழங்குவதன்   மூலம்  ஒரு  மாணவர்,   தனது கல்வியை  நிறைவு செய்யும்   வரையில்    உதவமுடியும்.
உதவி   பெறும்  மாணவரின்  பூரணவிபரங்கள்  உதவும்  அன்பருக்கு  தரப்படுவதுடன்,  மாணவரின்  கல்வி   முன்னேற்றச்சான்றிதழ்   மற்றும்  உதவி  பெற்றதை  அத்தாட்சிப்படுத்தும்  கடிதங்கள்  முதலானவற்றையும்  நிதியம்  அன்பர்களுக்கு  அனுப்பிவைக்கும்.


மாணவருக்கு  உதவும்  அன்பர்கள்  விடுமுறை  காலங்களில் இலங்கை செல்லும்  சந்தர்ப்பங்களில்,  தாம்  உதவும்  குறிப்பிட்ட  மாணவர்களை  நேரில்  சந்தித்து  உரையாடுவதற்கும்   ஒழுங்குகள்   மேற்கொள்ளப்படுகிறது.
இந்த  நடைமுறையினால்   பல  உதவும்  அன்பர்கள்  இலங்கை  சென்று  தாம்  உதவிய  மாணவர்களை  நேரில்  சந்தித்து   அவர்களின்   மேலதிக தேவைகளையும்  கவனித்துள்ளனர்   என்பதும்  குறிப்பிடத்தகுந்தது.
இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம், 2004  ஆம்  ஆண்டின் இறுதியில்  ஏற்பட்ட  சுனாமி  கடற்கோளினால்  பெரிதும்  பாதிக்கப்பட்ட  மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கும்,   2009  ஆம்  ஆண்டு  காலப்பகுதியில்  வன்னியில்  நடந்த  போரினால்  பாதிப்புற்று  அகதி  முகாம்களில்  தஞ்சமடைந்த  மாணவர்களுக்கும்  உதவி  வழங்கியிருப்பதுடன்,  முகாம்களில்  தடுத்து   வைக்கப்பட்ட  நூற்றுக்கணக்கான  மாணவர்களின்  கல்வி  நலன்களை  கவனித்து,  அவர்களை  விடுவித்து  க.பொ.த சாதாரண தரம்  மற்றும்  உயர்தர  வகுப்பு  பரீட்சைகளில்  அவர்கள்  தோற்றுவதற்கும்   பெற்றோர்களிடம்  இணைந்துகொள்வதற்கும்   ஆக்கபூர்வமான  நடவடிக்கைகளை  மேற்கொண்டது  என்பதும்  குறிப்பிடத்தகுந்தது.
நிதியத்தின்  24  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டமும்   தகவல்  அமர்வும் மெல்பனில்,
வேர்மன்ட்  சவுத்  சமூக  இல்லத்தில்   எதிர்வரும்  19-10-2013  சனிக்கிழமை மாலை  6  மணிக்கு  நடைபெறும்
          

Vermont South Community House – Karobran Drive,
                                  Vermont South, Victoria 3133, Australia

மாணவர்களுக்கு  உதவ விரும்பும்  அன்பர்கள்  கல்வி  நிதியத்தின்  மின்னஞ்சலிலும்  தொடர்பு  கொள்ளலாம்.  நிதியத்தின்  பணிகளை  இணையத்தளத்திலும்  பார்வையிடலாம்.


E.Mail: kalvi.nithiyam@yahoo.com                       Web: www.csefund.org








No comments: