திரும்பிப்பார்க்கின்றேன் - 02 முருகபூபதி

.
வாழ்வில்  எது எஞ்சும்? எது மிஞ்சும்? பயணத்தை    திசை  திருப்பிய ‘மாணிக்ஸ்’ மாணிக்கவாசகர் -

 “ இவர்  ஓர்  எழுத்தாளர்  அல்லர்.  ஆனால்,  எப்பொழுதுமே  எழுத்தாளர்களுக்கு மத்தியிலே  காணப்படுபவர்.   எழுத்தாளர்களுக்காக  எதையும்  செய்யத்துணிபவரும் கூட. குறிப்பாக  முற்போக்கு  எழுத்தாளர்களால்  நன்கு  அறியப்பட்டவர்.  மாணிக்கவாசகர்தான் அவரது  பெயர்.” - இவ்வாறு  மல்லிகை 2010 அக்டோபர் இதழில், தமது வாழும் நினைவுகள்  தொடரில்  பதிவு  செய்கிறார்  நண்பர்  திக்குவல்லை கமால்.
 கமாலின்  வார்த்தைகளை  நான்  மட்டுமல்ல மாணிக்கவாசகரை நன்கு தெரிந்த அனைவருமே  அங்கீகரிப்பார்கள்.
 எனது  வாழ்வை  ஒருகட்டத்தில்  திசை  திருப்பியவர்தான்  இந்த மாணிக்கவாசகர். 1973-1976  காலப்பகுதியில்  நிரந்தரமான  வேலை  எதுவும்  இல்லாமல் அலைந்துகொண்டிருந்தேன்.
காலிமுகத்திடலில்  வீதி  அகலமாக்கும்  நிர்மாணப்பணியில்  ஒப்பந்த  அடிப்படையில் அங்கு  வேலை  செய்த  தொழிலாளர்களை ‘மேய்க்கும்’ ஓவர்ஸீயர்  வேலையையும் ஒப்பந்தம்  முடிந்ததும்   இழக்கநேர்ந்தது. எனது  நிலைமையைப்பார்த்து  பரிதாபப்பட்ட  பிரேம்ஜியும்  சோமகாந்தனும்  எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பக  வேலைகளுக்காக  என்னை உள்வாங்கி  மாதம் 150 ரூபா அலவன்ஸ்  தந்தார்கள். நானும்  நீர்கொழும்பு – கொழும்பு என  தினசரி  பஸ்ஸ_க்கு  செலவழித்து  பயணித்துக்கொண்டிருந்தேன். முற்போக்கு எழுத்தாளர்  சங்கம்  மற்றும்  கூட்டுறவுப்பதிப்பகத்தின்  பணிகளின்போதுதான்  மாணிக்ஸ் அறிமுகமானார்.  அவருடன்  அறிமுகமான  மற்றுமொருவர்  சிவராசா  மாஸ்டர். இருவருமே கம்யூனிஸ்ட்  கட்சியின் (மாஸ்கோ)  ஆதரவாளர்கள்.  அத்துடன்  இருவரும் ஆசிரியர்களாக  கொழும்பில்  பணியிலிருந்தவர்கள். எங்களுடன்  இணைந்து அலைந்துகொண்டிருக்கையில்  ஒருநாள்  திடீரென்று  மாணிக்ஸ்  சொன்னார்:
 “பூபதி… கொழும்பில்  கல்வி  அமைச்சு அமைந்திருக்கும் மலே வீதியில் எங்களது தொழிற்சங்கமான  இலங்கை ஆசிரியர்  சங்கம்  இயங்குகிறது.  மாலையில்  அங்கே வாரும்  உமக்கு  ஒரு  வேலை காத்திருக்கிறது.”
 அவர்  சொன்னவாறு  அங்கே  சென்றேன்.  ஆசிரியர்  சங்கத்தின்  அப்போதைய தலைவர் எச். என். பெர்னாண்டோ,  செயலாளர்  சித்ரால் ஆகியோரை மாணிக்ஸ் எனக்கு அறிமுகப்படுத்தினார்.  எனக்கு மொழிபெயர்ப்பு  வேலைகளும் ஆசிரியர் சங்கத்தின் உத்தியோகபூர்வ  வெளியீடான  ஆசிரியர் குரல் இதழை  Pசழழக   பார்த்து  நுனவை   செய்யும் வேலையும்  தரப்பட்டது.  மாதாந்தம் 150 ரூபா அலவன்ஸ் தருவதாகச்சொன்னார்கள். வேலையை  ஏற்றுக்கொண்டேன்.  தினமும் கொழும்பு சென்று ஆசிரியர் சங்கத்தினதும் முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தினதும்  வேலைகளைச்செய்தேன்.
 கொழும்புக்கு  தனது  மகன் வேலைக்குப்போகிறான்  என்ற  மகிழ்ச்சியில் அம்மா தினமும்  எனக்கு  சோற்றுப்பார்சல்  தந்து  அனுப்பினார்கள்.
 மாணிக்கவாசகரின்  அண்ணன்  குமாரசாமி  கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்திய  குழுவில் இருந்தவர்.  இன்னுமொரு  குமாரசாமியும்  இருந்தார்.  அவர் பொன். குமாரசாமி. மாணிக்ஸின்  அண்ணன்  ஸி.குமாரசாமி.  அதனால் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முற்போக்கு முகாமில் அவர்கள்  ஸி.கும்,  என்றும்  பி.கும்  எனவும் அழைக்கப்பட்டார்கள்.



 1970 இல்  பதவிக்கு வந்த  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின்  தலைமையில் அமைந்த  ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சி,  சமசமாஜக்கட்சி,  கம்யூனிஸ்ட் கட்சி  கூட்டரசாங்கத்தின் தேன்னிலவுகாலம்  1976  இல் அஸ்தமித்துக்கொண்டிருந்தது. அதற்குப்பல  காரணங்கள் இருந்தன.  தொழிற்  சங்கங்களின்  வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஆசிரியர் சங்கமும் குதித்தது.  அத்துடன் 1971 இல்  நடந்த  ஏப்ரில் கிளர்ச்சியில்  பங்கேற்று  குற்றவியல் நீதி ஆணைக்குழுவின்  தீர்ப்பின்பிரகாரம்  சிறைகளில்  தண்டனை  அனுபவித்துக்கொண்டிருந்த ரோகண  விஜேவீரா  உட்பட நூற்றுக்கணக்கான  இளைஞர்களை  விடுதலை  செய்யக்கோரும்  ஆர்ப்பாட்டங்களும்  கையொப்பங்கள்  திரட்டும்  இயக்கமும்  தீவிரமடைந்தது.  இலங்கை  ஆசிரியர் சங்கம் இந்தப்போராட்டத்தில் தீவிரமாக   இறங்கியதனால்  நானும்  அதில் உள்வாங்கப்பட்டேன்.
 ஆசிரியர்  சங்கத்தின்  தலைமைக்குழு  பகிரங்கமாக இடதுசாரிகளை விமர்சிக்கத்தொடங்கும்போது  அதன் ஏடான ஆசிரியர்  குரலிலும்  சிங்கள ஏடான குருஹண்ட விலும்  ஆங்கில ஏடான வுநயஉhநசள ஏழiஉந     இலும் அந்த விமர்சனங்கள் பிரதிபலிக்கத்தொடங்கின.  பி. ஏ. காதர்  (இவர் தற்போது ஐரோப்பிய  நாடொன்றில்  வாழ்கிறார்) என்ற அதிதீவிர  இடதுசாரித்தோழர்  எழுதிய  ஒரு கட்டுரையில் அமெரிக்க ஏகாதிபத்திய வாதமும்  சோவியத்  திரிபுவாதமும் என்று எழுதிவிட்டார்.  அதனைப்பார்த்துவிட்டு  மாணிக்ஸ் என்னிடம் கடிந்துகொண்டதோடு  எச். என். பெர்ணான்டோ, சித்ரால் ஆகியோரிடமும்  கோபத்துடன்  முறையிட்டார்.   அதுவரைகாலமும் ஆசிரியர் சங்க வேலைகளுக்காக  தினமும் வந்து சென்றுகொண்டிருந்த  நண்பரும் எழுத்தாளருமான ஷம்ஸ் அந்தப்பக்கம்  வருவதை  முற்றாக  தவிர்த்துக்கொண்டார்.   எனது நிலை மிகவும் சங்கடமாக   இருந்தது.  சமசமாஜக்கட்சியிலிருந்து  வாசுதேவ நாணயக்காரவும்  விக்கிரமபாகு கருணாரத்தினவும்  வெளியேறி  நவ சமமாஜக்கட்சியை தொடங்கிவிட்டனர்.  அரசியல்  கைதிகளை  விடுவிக்கவேண்டும்  என்ற  போராட்டம்  நாடு  தழுவிய  ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.  அதனை முன்னிட்டு  வெளியான  அறிக்கையில் பல  முன்னணி இடதுசாரிகளின்  பெயர்களுடன்  எனது  பெயரும்  இடம்பெற்றது.
 “சீவியத்துக்கு  தொழில்தேடி  வந்த  எனது  வாழ்வை அரசியல் பக்கம் இழுத்துவிட்டீர்களே…” என்று ஒருநாள் மாணிக்ஸ்ஸிடம்  சொன்னேன்.
 “ எல்லாம் அனுபவம்தான்.” என்று மாத்திரம் அவர் பதில் சொன்னார்.
 கூட்டரசாங்கத்திலிருந்த  இடதுசாரிகளில்  முதலில் சமசமாஜக்கட்சியினரும் பின்னர் கம்யூனிஸ்ட்  கட்சியினரும்  வெளியேறினர்.  அதனால்  பயனும்  பலனும் அடையப்போவது முதலாளித்துவ  ஐக்கிய  தேசியக்கட்சிதான்  என்பது  எனக்குத்தெளிவாகியது. பாராளுமன்றத்தில்  பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவை  ‘சாத்தான்’  என்று விமர்சிக்கும் அளவுக்கு  முரண்பாடுகள்  முற்றியதன்  எதிரொலியே  கூட்டரசாங்கத்தின் வீழ்ச்சி.  1977 பொதுத்தேர்தலில்  இடதுசாரிகள்  ஐக்கிய  முன்னணி  அமைத்து தேர்தல் களத்தில் இறங்கினார்கள்.  நான்   நீர்கொழும்பில் பிரசாரங்களில்   ஈடுபட்டேன்.  கொல்வின் ஆர் டி. சில்வா, என்.எம். பெரேரா,  பீட்டர்  கெனமன்  ஆகியோருடன் மேடைகளில்  தோன்றி தமிழில்  முழங்கினேன்.
 மாணிக்ஸ்  ஒரு  அரசாங்க  ஆசிரியராக  கடமையாற்றியமையால்  கொழும்பில் பீட்டர்கெனமனுக்காக   மேடைகளில்  ஏறாமல்  பிரசாரங்களில்  ஈடுபட்டார். ஐக்கியதேசியக்கட்சி  பதவிக்கு  வந்தால்  நிச்சயம் அரசியல் பழிவாங்கல் நடக்கும் என்பது அவருக்குத்தெரியும்.  அக்காலப்பகுதியில்  கொழும்பு  விவேகானந்தா மகா  வித்தியாலயத்தில் அதிபராக இருந்த மகேசன், உப அதிபராக இருந்த எஸ்.பி. நடராஜா,  மதியம்  ஆரம்பிக்கும்  பாடசாலையின்  தலைமை ஆசிரியராகவிருந்த  சிவராசா மாஸ்டர்  ஆகியோரும்  கம்யூனிஸ்ட் கட்சி சார்புள்ளவர்கள்.   அவர்கள் பீட்டர் கெனமனுக்காக வேலை  செய்தார்கள்.
 தொண்டமானின்  இலங்கைத்தொழிலாளர்  காங்கிரஸ் கொழும்பு  மத்தியிலிருந்த தமிழ் வாக்காளர்களை  கவனத்தில்  எடுத்து  செல்லச்சாமியை  களமிறக்கியது.  பீட்டர் கெனமனுக்கு  கிடைக்கவிருந்த தமிழ் வாக்குகள்  சிதறடிக்கப்பட்டன.  தேர்தலில் இருவருமே தோல்வி  கண்டனர்.   கொழும்பு மத்தி மூன்று அங்கத்தவர் தொகுதி என்பதனால்  பிரேமதாஸவும்  ஜபீர் ஏ. காதரும்  ஐக்கியதேசியக்கட்சியின்  சார்பிலும்  ஹலீம் இஷாக் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்  சார்பிலும்  வெற்றிபெற்றனர்.
 மாணிக்கவாசகரிடம்  பாராளுமன்றப்பாதையின்  போலித்தனங்கள்  பற்றி விவாதிக்க நேர்ந்தது.  அந்த  இளம்பருவத்திலேயே  இலங்கையின்  எதிர்காலம்  குறித்த  கவலைகள் மனதில்  எழுந்தபோதிலெல்லாம்  மாணிக்ஸ_டன்  விவாதிப்பேன்.  அவர்  என்னை பிரேம்ஜியிடம்  அனுப்புவார்.  எனினும்  ஒரு  தெளிவும் கிடைக்கவில்லை. ஆசிரியர் சங்கத்தினதும்  முற்போக்கு எழுத்தாளர்  சங்கத்தினதும்  வேலைகளில் தொடர்ந்தேன்.
 ஜே. ஆர். ஜயவர்தனா  தலைமையில் அறுதிப்பெரும்பான்மை  பெற்ற  ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைத்தது.  இடதுசாரிகள்  தோற்றனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவர் ஆனார்.
 1977 இல் பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக குற்றவியல் ஆணைக்குழுவை களைத்த   ஜே. ஆர். சிறையிலிருந்த  அனைத்து  அரசியல்  கைதிகளையும்  விடுதலை  செய்தார். இலங்கை  அரசியல்  மட்டுமன்றி எனது  வாழ்வும்  வேறு  ஒரு திசையில் திரும்பியது. வீரகேசரியில் ஒப்பு நோக்காளர்  வேலை  கிடைத்தது.  எனினும் எச்.என்., சித்ரால், மாணிக்ஸ் ஆகியோரின்  வேண்டுகோளுக்கிணங்க  தொடர்ந்தும் ஆசிரியர் சங்கப்பணிமனைக்கு  சென்றுவந்துகொண்டிருந்தேன்.  ஒருநாள் அங்கே ரோகண விஜேவீராவினதும்  லயனல் போப்பகேயினதும்  அறிமுகம் கிடைத்தது. சில மாதங்களில் விஜேவீரா,  எச்.என்.னின்  சகோதரியை  மணம்  முடித்தார். மக்கள் விடுதலை  முன்னணி தீவிரமாக  வளர்ந்தது.  அவர்களுடன்  எனக்கிருந்த  உறவை  மாணிக்ஸினால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை.
லயனல்போப்பகேயின்  சில  விடுதலைக்கீத   பாடல்களை  நான்  தமிழில்  மொழிபெயர்த்திருந்தேன்.   அந்தப்பாடல்கள்   யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி, வவுனியா மற்றும்  மலையகத்திலும்  மக்கள்  விடுதலை முன்னணியின்  மேடைகளில்  பாடப்பட்டன.  பின்னர்   கஸட்டிலும்  பதிவாகி   வெளியானது.
வேலுப்பிள்ளை  அண்ணா….   மனம்பேரி  தோழியே… முதலான  பாடல்கள்   அக்காலப்பகுதியில்   பிரபலமடைந்தன.
  இந்த  வேடிக்கைகளை   அவதானித்துக்கொண்டிருந்த  மாணிக்கவாசகர்,      ஒருநாள், “ உம்மை   ஆசிரியர்   சங்கத்திற்கு   அறிமுகப்படுத்தியது  தான்   செய்த பெரும் தவறு”  என்றார்.
 அதற்கு  நான், “ என்றும்  இடதுசாரிகளுடன்தான்  நிற்பேன்.   இடதுசாரிகள்  அனைவரையும்   ஒன்றாக   இணைக்க   முயற்சிப்போம்.” என்றேன்.
 “ அது  உம்மாலோ என்னாலோ  வேறு   எவராலுமோ முடியாத காரியம். அதனைவிட்டுவிட்டு   இலக்கியத்தில்   கவனம்   செலுத்தும்.   உமக்கு  இலக்கிய அடையாளம்தான்   எஞ்சும்,  மிஞ்சும்”  என்று  சொன்னார்.
 அன்று  அவரது   புத்திமதியை நான் கேட்டிருக்கவேண்டும். ஆனால் இளம்கன்று பயம் அறியாது  என்பதுபோல்   இளமைத்துடிப்பில்  அரசியல்  திசை திரும்பி பல இடர்ப்பாடுகளை   சந்தித்து,  முடியாத  கட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்கு  புலம்பெயர்ந்தேன்.
 அதற்கு  முன்னர்  சோவியத்  அழைப்பில் 1985 இல் மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர். மாணவர் மாநாட்டு  விழா நிகழ்ச்சிகளுக்குச்சென்று திரும்பியதும் வீரகேசரி வார வெளியீட்டில்  சமதர்மப்பூங்காவில்  தொடரை எழுதிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அதனைப்படித்துவிட்டு  மாணிக்ஸ் எனக்கு தொலைபேசியில் கருத்துச்சொல்வார்.  அச்சமயம்   அவர்   கொழும்பு விவேகானந்தாவில் அதிபராக கடமையாற்றிக்கொண்டிருந்தார்.
 03-11-1985 ஆம் திகதிய வீரகேசரி வாரவெளியீட்டில் எனது தொடரின் 12 ஆவது அத்தியாயம் ‘ஏகாதிபத்திய   எதிர்ப்பு   நீதிமன்றில்   தோன்றிய  வியட்நாம்  தேவதை’ என்ற தலைப்பில்   எழுதப்பட்டது.  வியட்நாம்   போரின்போது   ட்ராங்பேங்க்   என்ற கிராமத்தில் அமெரிக்க   விமானங்கள்   பொழிந்த  நேபாம்  குண்டுகளின்  தாக்கத்தால்  ஒரு   சிறுமி   எரியுண்டு  கதறிக்கொண்டு ஓடும்காட்சி   பதிவான   ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதையும்  அந்தச்சிறுமி  மேடையில்  தோன்றியதும்  ஓடிச்சென்று அணைத்து உரையாடியதையும்   எழுதியிருந்தேன்.   குறிப்பிட்ட   படம்   சர்வதேசத்தினதும் கவனத்தை   ஈர்த்தது. அதனைப்பார்த்த   அமெரிக்க   மக்கள்   வெளிப்படுத்திய எதிர்ப்பையடுத்தே   அமெரிக்கா   அந்தப்போரிலிருந்து   பின்வாங்கியது.  இன்றும் அந்தத்திரைப்படத்தின்   குறிப்பிட்ட  காட்சியை   இணையத்தளங்களில்  பார்க்கலாம்.
( இலங்கையில்   விடுதலை   கோரிய   புலிகளை   தனது   நாட்டில்   தடை செய்துவிட்டு,    இன்று   இலங்கையின்   போர்க்குற்றங்களுக்கு   குரல்  கொடுக்கிறது  அமெரிக்கா  என்பது   நகைமுரண்)
 அந்த  அத்தியாயம்  வெளியான  அன்று  மாலை  கொழும்பு  புறக்கோட்டை  முஸ்லிம் வாலிபர்  முன்னணி   மண்டபத்தில்  நடந்த  இலக்கிய  கூட்டத்திற்கு வந்திருந்த மாணிக்ஸ்,  என்னைக்கண்டுவிட்டு  வேகமாகவந்து, “ ஐஸே இன்றைக்கு உம்முடைய தொடரைப்படித்துவிட்டு  அழுதுவிட்டேன்” என்றார்.  அப்பொழுதும்  அவரது கண்கள் பனித்திருந்தன.  “இந்தத் தொடரை  நீர் புத்தகமாக்கவேண்டும்.” என்ற அவரது வேண்டுகோளை    காலம்   தாழ்த்தியே  பின்னர் நிறைவேற்றினேன்.  காரணம்  இலங்கையில்  வாழ்ந்த  காலப்பகுதியில்   அந்த  நூலை  வெளியிடும்  அளவுக்கு  என்னிடம்   பொருளாதார  வசதி  இருக்கவில்லை.
 மாஸ்கோவில்  அன்று  சந்தித்த  அந்த   வியட்நாம்   தேவதையை  மனதிலிருத்தி அவுஸ்திரேலியா   வந்தபின்னர்   ‘புதர்க்காடுகளில்…’ என்ற  கதையை  வீரகேசரியில் எழுதியிருந்தேன். குறிப்பிட்ட   கதையை   டீரளா றுழசம   என்ற  தலைப்பில் சகோதரி ரேணுகா தனஸ்கந்தா  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  நண்பர் கே.எஸ். சிவகுமாரன்   அதனை வுhந ஐளடயனெ    இதழில்  வெளியிட்டார்.   இரண்டையும்   மாணிக்ஸ்  படித்திருக்கிறார்.
 கங்காரு  நாட்டுக்குள்   வந்தபின்னரும்   மாணிக்ஸ_டன் கடிதத்தொடர்பில் இருந்தேன். எனது  புலப்பெயர்வு  காலம்  அறிந்து  எடுக்கப்பட்ட  சரியான  முடிவு  என்றும் இலங்கையிலிருந்திருந்தால் எனது எதிர்காலம் வீதியோரத்தில்  ரயர்களுடன்   எரிந்து சாம்பராகியிருக்கும்   என்று   ஒரு   தந்தையின்   பரிவோடு  எழுதினார்.
ஒரு  வாசகராக   அவர்  விரும்பிப்படித்த   சமதர்மப்பூங்காவில்  தொடர்  நண்பர்  ராஜஸ்ரீகாந்தனின்    முயற்சியினால்   1990  ஜனவரியில்   நூலக  வெளியானது.   அதன்  வெளியீட்டு  நிகழ்வு   எனது  சமுகம்  இன்றியே  கொழும்பில்  பம்பலப்பிட்டி  சரஸ்வதி   மண்டபத்தில்,  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தினதும்  தமிழ்த்தூது  தணிநாயகம்  பண்பாட்டு  நிறுவனத்தினதும்   அனுசரணையுடன்  நடந்தபோது  சோவியத் கவிஞர்கள்   அனதோலி   பர்பராவும்,   குப்ரியானோவும்  கலந்துகொண்டனர்.
இந்த  நிகழ்வில்   கலந்துகொண்ட  எனது  அம்மா  மற்றும்  குடும்பத்தினர்  உட்பட  சோவியத்கவிஞர்கள்   மற்றும்   எழுத்தாளர்   இளங்கீரனுடன்  மாணிக்ஸ_ம்   இணைந்து  எடுத்துக்கொண்ட    ஒளிப்படத்தை   ராஜஸ்ரீகாந்தன்   எனக்கு  அனுப்பிவைத்தார்.
“பூபதியின்   நூல்   வெளியீட்டில்   பூபதி   இல்லை.   ஆனால்  நாமெல்லோரும்  இருக்கிறோம்  என்பதை  அத்தாட்சிப்படுத்துவதற்காக  அந்தப்படத்தை  பூபதிக்கு  அனுப்பிவைக்குமாறு    கேட்டுக்கொண்டாராம்  மாணிக்ஸ்”    என்ற   தகவலை  ராஜஸ்ரீகாந்தன்   ஒரு  சந்தர்ப்பத்தில்   தொலைபேசியில்  சொன்னார்.
 பதினோரு  ஆண்டுகளின்  பின்னர்  இலங்கை சென்றபோது அவர் ஒரு சர்வதேச பாடசாலையில்  பணியிலிருந்தார்.  அவர் அப்பொழுதும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளில்  பிரேம்ஜிக்கும்  சோமகாந்தனுக்கும்  ராஜஸ்ரீகாந்தனுக்கும் பக்கத்துணையாக  வாழ்ந்தார்.
 பல  இடதுசாரித்தலைவர்கள்  இறந்துவிட்டனர்.  மக்கள் விடுதலை முன்னணி தோழர்கள் பலர்  காணாமல் போய்விட்டனர்.  இலங்கையின்  வரலாறு  வேறு ஒரு திசையில் சென்றுகொண்டிருந்தபோது  ஒரு தசாப்த காலத்தின்  பின்னர் மாணிக்ஸை சந்திக்கின்றேன்.
 அவர்  நீண்ட  இடைவெளிக்குப்பின்னர்  என்னை  சந்தித்ததும்  தான்  படித்த  எனது குறிப்பிட்டசில  கதைகள்   பற்றிய  தனது  வாசிப்பு  அனுபவத்தைச்சொன்னார்.  அத்துடன்  நில்லாமல் “ ஐஸே… பார்த்தீரா  நான்  அன்று சொன்னதுதான்   உமது வாழ்வில்  பலித்திருக்கிறது.  நான்  உமக்கு  எது  மிஞ்சும்?  எது எஞ்சும்?  என்று சொன்னேனோ  அதுதான்  நடந்திருக்கிறது.   நீர்  எழுதுவதற்கு  இன்னும்  நிறைய  இருக்கிறது.  வியட்நாம்  கொலைக்களம்   மட்டுமல்ல   இன்னும்  எத்தனையோ களங்கள் எதிர்காலத்தில்  வரலாம்.  அதற்கான  முன்னுரைகள்  இந்த  நாட்டில்  மட்டுமல்ல  பல நாடுகளில்  பதிவாகத்தொடங்கிவிட்டன.   பலரை   நாம்   இழந்துவிட்டோம்.  இன்னும்  எத்தனைபேரை  இழக்கப்போகின்றோமோ  தெரியாது”  என்றார்.
நீர்கொழும்பில்  மல்லிகை ஜீவாவை  பாராட்டி கௌரவிக்கும்  ஒரு நிகழ்வை அந்தப்பயணத்தில்  ஏற்பாடு செய்திருந்தேன்.
கொழும்பிலிருந்து  பிரேம்ஜி,  தெளிவத்தை ஜோசப், மேமன்கவி,  துரைவிஸ்வநாதன், தங்கவடிவேல் மாஸ்டர்,  திக்குவல்லைக்கமால், த. மணி  மற்றும்      மினுவாங்கொடையிலிருந்து  மு. பஷீர்,  நிலாம்   ஆகியோரும்   நவமணியிலிருந்து  முத்தையா  சிவலிங்கம்,  தினக்குரலிலிருந்து  வி. தனபாலசிங்கம், ஆ. சிவநேசச்செல்வன்,  தினகரனிலிருந்து  ராஜஸ்ரீகாந்தன்,  வீரகேசரியிலிருந்து   சூரியகுமாரி,   ரூபவாஹினியிலிருந்து  வன்னியகுலம், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலிருந்து   இளையதம்பி   தயானந்தா  ஆகியோர் வந்திருந்தனர்.   நிகழ்ச்சி  நடப்பதை  அறிந்து மாணிக்ஸ் ஒரு  காரில்  விரைந்துவந்தார்.  அவரது  வரவை  நான்  எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
“ சந்திக்கவேண்டும்  என்று  உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. கொழும்பு பேச்சாளர்கள் வரும்  வாகனத்தில்  எனக்கு ஆசனம்  கேட்டு  அவர்களை  சிரமப்படுத்தவிரும்பவில்லை.  அதனால்  தெரிந்த ஒருவரின்  காரில்  வந்துவிட்டேன். இனி எப்பொழுது   சந்திப்போமோ  தெரியாது  பூபதி.   தொடர்ந்து  எழுதும்.”  என்று சொல்லி என்னை   அணைத்துத்தழுவிவிட்டு   விடைபெற்றார்.  இங்கே… இந்தப்பத்தியின்   தொடக்கத்தில்   திக்குவல்லை    கமால்   குறிப்பிட்ட   வாசகங்களை  மீண்டும்  பார்க்கலாம்.
“ இவர்  ஓர்  எழுத்தாளர்  அல்லர்.  ஆனால்,  எப்பொழுதுமே  எழுத்தாளர்களுக்கு மத்தியிலே  காணப்படுபவர்.   எழுத்தாளர்களுக்காக  எதையும்  செய்யத்துணிபவரும்  கூட. குறிப்பாக  முற்போக்கு  எழுத்தாளர்களால்  நன்கு  அறியப்பட்டவர்.  மாணிக்கவாசகர்தான் அவரது  பெயர்.”
 “  இனி   எப்பொழுது   சந்திப்போமோ   தெரியாது?”  என்றவரை  அதன் பின்னர் சந்திக்கவே   இல்லை.  அந்த  நிகழ்ச்சி   நடந்து   சில  நாட்களில்  நான் அவுஸ்திரேலியா  வந்துவிட்டேன்.   சில  மாதங்களில்  அவர்  மறைந்தார்  என்ற  தகவல்  வந்தது.
அவர்  பேசும்பொழுது  கண்களும்  பேசும்.  அந்தக்கண்களில்  புன்னகை  தவழும்.
 எனது  நண்பர்கள்  வட்டத்திலிருந்த  மாணிக்ஸ்  குணத்திலும்  மாணிக்கம்தான்.
                               ---0---

No comments: