இறுதித் தேர்வு -அ.முத்துலிங்கம்

.
 காலை சரியாக ஐந்து மணிக்கு அவளுடைய செல்பேசி அலாரம் ஒலித்து அவளை  எழுப்பியது. அதை அணைத்துவிட்டு படுக்கையில் இருந்தபடியே எட்டி காப்பி மெசின் பட்டனை தட்டினாள். அது கிர் என்று சத்தத்துடன் உயிர் பெற்றது. செல்பேசியில் அன்றைய கால நிலையை பார்த்துவிட்டு முக்கியமான பத்திரிகை செய்திகளையும் படித்தாள். ஓர் இணையதளம் விலைக்கு வந்தது. அதை வாங்கி விற்றதில் 2000 டொலர் லாபம் கிடைத்தது. அதை செல்பேசி மூலம் நேரே தன் வங்கிக்கு அனுப்பினாள். அவளுடைய 19வது பிறந்தநாளுக்கு 367 வாழ்த்துக்கள் வந்திருந்தன. அவற்றிற்கெல்லாம் ’நன்றி’ என்று ஒரு வார்த்தையில் பதில் அனுப்பினாள். காப்பி, கடுதாசி குவளையில் தயாராகி பாலும் சீனியும் அளவாக கலந்து டிங் என்ற ஒலியுடன் இறங்கி நின்றது. அவள் ஒரு மிடறு பருகினாள்.

அவள் கனடியப் பெண். பெயர் அரா யாயுன். பிறந்த தேதி 31 அக்டோபர் 2011, உலக சனத்தொகை 7 பில்லியன் இலக்கத்தை தொட்ட அன்று பிறந்தாள். இன்று, 31 அக்டோபர் 2030 அவளுடைய 19வது வயதில் உலக சனத்தொகை 8.3 பில்லியனை எட்டியிருந்தது. அவளுடைய காதலன் காணொளி வாழ்த்து அனுப்பியிருந்தான். பிறந்தநாள் அன்று ஏதாவது வித்தியாசமாகச்  செய்து மகிழவேண்டும் என நினைத்தாள். 33 வருடம் பழசான டைட்டானிக் திரைப்படத்தை செல்பேசியை அமுக்கி சுவரில் ஓடவிட்டாள். ஒரு சின்ன மாற்றம். கேற்வின்ஸ்லெட் முகத்தை தன் முகமாக மாற்றினாள். லியனார்டோ டிகாப்ரியாவின் முகத்தை தன் காதலன் முகமாக மாற்றினாள். ரோஸின் தாயார் கோர்ஸெட்டை ரோஸின் வயிற்றில் இறுக்கிக் கட்டிய இடம் வந்தபோது இவளும் வயிற்றை எக்கினாள். பின்னர் வாய்விட்டு சிரித்துக்கொண்டாள்.


அலுத்துப்போய் கனடா – ரஸ்யா கிரிக்கெட் போட்டியை பத்து நிமிடம் முப்பரிமாணத்தில் பார்த்தாள். அதையும் அணைத்துவிட்டு அவசரமாக பல்கலைக்கழக பாடங்களை செய்ய ஆரம்பித்தாள். மடிக்கணினி எப்பவோ மறைந்துவிட்டது.  செல்பேசி விரிந்து விசைப்பலகையாக உருவாகியது. மாயத்திரையில் அவள் தட்டச்சு செய்த வசனங்கள் விழுந்தன. பல்கலைக் கழகத்துக்கு அவள் போனதே கிடையாது. இரண்டு பல்கலைக் கழகங்களில் படித்தாள். ஒன்று கனடா, மற்றது அமெரிக்காவின் MIT. டானியல் நோசிராவின் ‘செயற்கை இலை’ ஆராய்ச்சில் அவளுக்கும் ஆர்வம் இருந்தது. வெற்றி கிட்டினால் உலகின் எரிபொருள் பிரச்சினை தீர்ந்தது. அன்றைய ஆராய்ச்சிக் கட்டுரையை முடித்து, அவள் படுக்கையை விட்டு எழுந்து குளியலறைக்கு சென்றபோது காலை பத்து மணி.
*                 *                       *           
கம்புயூட்டர் திறன் ஒவ்வொரு 18 மாதமும் இரண்டு மடங்கு அதிகரிக்கிறது; அதே சமயம் விலை பாதியாக குறைகிறது. கம்புயூட்டரின் அமோக வளர்ச்சிக்கு இதுதான் காரணம். 20ம் நூற்றாண்டு கடைசியில் வாழ்ந்த அதியாற்றல் வாய்ந்த கம்புயூட்டர் 2030ல் கையடக்கமான செல்பேசியாக மாறியிருக்கும். ஒரு கணினி செய்யவேண்டியதை இன்னும் திறமாக செல்பேசி செய்யும். முதல் பெரிய மாற்றம் பணம், காசோலை எல்லாம் ஒழிந்துபோகும். 100 வங்கிகளுக்கு ஒரு வங்கி என சுருங்கிவிடும். ஒரு செல்பேசியிலிருந்து இன்னொரு செல்பேசிக்கு பணம் அனுப்ப முடிவதால் காசுத்தாள் என்பதே இல்லாமல் ஆகிவிடும். கடன் அட்டைகள் செல்பேசிமேல் ஏறிவிடுவதால்  செல்பேசிகள் கடன் அட்டையின் வேலையை செய்யும். ஒருவருக்கு சொந்தமான செல்பேசியை இன்னொருவர் இயக்க முடியாது. அவருடைய கைரேகை, கண் ரேகை, குரல் எல்லாம் பதிவாகியிருக்கும். அதிகமான கட்டளைகள், செய்திகள் செல்பேசியில் குரலாகவே அனுப்பப்படும். விரும்பினால் குரலை செல்பேசி தானாகவே எழுத்தாக மாற்றி அனுப்பவும் முடியும். கூடுதலாக செல்பேசி திறமையான உதவியாளராக செயல்படும். ’புதன்கிழமை மாலை 4 மணிக்கு பிரதானமான விருந்து. ஞாபகமூட்டு’ என்று செல்பேசியிடம் சொன்னால் அது அப்படியே குரலிலோ எழுத்திலோ ஞாபமூட்டும். சாவிகள் உலகத்திலிருந்து மறைந்துபோகும். வீட்டுச் சாவி, கார்ச்சாவி, அலுவலகச் சாவி, வங்கி லொக்கர் சாவி யாவும் கடவுக் குறிப்புகளாக செல்பேசியிலே பதிந்துகிடக்கும்.

2030ல் முகநூல் கிடையாது. எல்லோரிடமும் ’இதயப் பலகை’ இருக்கும். இதிலே படங்கள் கிடையாது. ’உனக்கு இது பிடிக்குமா அது பிடிக்குமா? உன் அபிப்பிராயம் என்ன?’ போன்ற தொந்திரவுகள் இல்லை. இதயப் பலகைகள் ஒன்றுடன் ஒன்று தானாகவே பேசிக்கொள்ளும். உங்களுக்கு தேவையானவற்றை மட்டுமே தெரிவிக்கும். உதாரணமாக ஒரு பெண், ’எனக்கு 5 அடி 8 அங்குலம் உயரமான, 30 வயதுக்கு குறைவான, யப்பான் மொழி பேசும், 19ம் நூற்றாண்டு ஓவியங்களில் ஆர்வமான, விமான ஓட்டி ஆணின் நட்பு தேவை’’ என்று எழுதினால் அது தானாகவே உலகத்து இதயப் பலகைகளுடன் பேசி விடையை தேடிக்கொண்டுவரும். ஒரே சமயத்தில் மூன்று நான்கு பேருடன் முகம் முகமாக முப்பரிமாணத்தில் பேசமுடியும். கவிதை எழுதினால் அதை விமர்சித்து கடிதங்கள் துருக்கியிலும், பிரெஞ்சிலும், சேர்பியனிலும் நிமிடத்தில் வரும்.

ஒரு மொழி தெரிந்தாலே போதும். இன்னொரு மொழி படிக்கவேண்டிய அவசியமே கிடையாது. நீங்கள் பேசுவதை உங்கள் செல்பேசி ஹிந்தியிலோ, சீனத்திலோ, ஆங்கிலத்திலோ, அராபியிலோ உங்கள் விருப்பப்படி மாற்றிப் பேசும். அல்லது அந்த மொழியில் எழுதிக்காட்டும். மற்றவர் என்ன மொழியில் பேசினாலும் அதையும் உங்களுக்கு விருப்பமான மொழியில் மாற்றும். 2030களில் உலகச்சுற்றுலா போவது சுகமான அனுபவமாக இருக்கும். திரைப்படங்கள் என்ன மொழியில் எடுக்கப்பட்டாலும் அதை உங்கள் விருப்ப மொழியில் பேசவைத்து பார்க்கலாம். அல்லது அடியில் எழுத்தாகவும் படிக்கலாம். அச்சுப் புத்தகங்கள் குறைந்துவிடும். மின்புத்தகங்களை மலிவான விலையில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். ஆயிரம் புத்தகங்களை உங்களுடன் எந்த நேரமும் காவிச் செல்லலாம். படித்துச் சோர்வடைந்தால் அதுவே உங்களுக்கு படித்துக் காட்டும். அதுவும் அலுத்துவிட்டால் ஆங்கிலத்திலோ பிரெஞ்சு மொழியிலோ மலையாளத்திலோ அதே புத்தகத்தை மொழிபெயர்ப்பில் கேட்கலாம்.  

ஆகப் பெரிய மாற்றம் போக்குவரத்தில் நிகழப்போகிறது. 60 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வீட்டிலே தங்கி வேலைசெய்வார்கள். அலுவலத்துக்கு போகவேண்டிய அவசியமே இல்லை.  காணொளி கலந்துரையாடல்கள் வேண்டியபோது நடக்கும். கார்கள், ரயில்கள், பஸ்களில் பயணிப்போர் கணிசமாகக் குறைந்து எரிபொருள் மிச்சப்படும். போக்குவரத்து வாகனங்கள் எல்லாமே மின்கலனிலும் எரிபொருளிலும் 50 :50 வேலைசெய்வதால் சுற்றுச்சூழல் மேம்படும். அதிகமான வாகனங்கள் சாரதி இல்லாமல் இயங்குவதால் விபத்துக்கள் வெகுவாகக் குறைந்துவிடும். சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை செயல் படுத்துவதில் உலகின் முதலாம் இடத்தில் இந்தியா இருக்கும். 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு மில்லியன் சூரிய ஒளித்தகடுகள் மூலம் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இந்தியா தட்டையான பிரதேசம். நிறைய சூரிய ஒளிகிடைக்கும். சூரிய ஒளி மின்சாரத் திட்டத்துக்கு இந்தியா இலட்சிய நாடாகத் திகழும். 2030ல் இந்தியாவின் சூரிய ஒளி மின்சாரம் 20,000 மெகாவாட்டை எட்டியிருக்கும். இது உலகம் வியக்கும் மிகப்பெரிய உற்பத்தி. ஆனால் இந்தியாவின் முழுத்தேவையோடு ஒப்பிடும்போது இது பத்து வீதத்திலும் சிறிய விழுக்காடுதான்.

மேல்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் தொகை அதிகரிக்கும். எந்திரன் மூலம் நடத்தும் அறுவை சிகிச்சைகளும் பிரபலமாகும். பிலிப்பைன் நாட்டில் ஒரு குழந்தைக்கு  மருத்துவர் சென்னையில் இருந்தபடியே எந்திரன்மூலம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார். ஒரு காலத்தில் ஒரு மனிதருடைய முழு மரபணு வரைபடத்தை செய்து முடிப்பதற்கு 100,000 டொலர்கள் செலவானது. 2030ல் இந்தச் செலவு வெறும் 100 டொலர்தான். தங்கள் தங்கள் மரபணு வரைபடங்களை செல்பேசியில் மக்கள் பாதுகாத்து வைத்தார்கள். எல்லா நோய்களுக்கும் ஏதோ ஒரு மரபணுக்கூறு இருக்கும். நோய் பரம்பரைக் காரணத்தாலோ வேறு காரணத்தாலோ உண்டாகலாம். வரைபடத்தை பார்க்கும் மருத்துவரால் உங்கள் பலம், பலவீனம் இரண்டையுமே நொடியில் தெரிந்துகொள்ளமுடியும். நோயின் காரணத்தை அறியவும், அது எதிர்காலத்தில் தாக்கும் வாய்ப்பின் சதவிகிதத்தை சரியாக கணிக்கவும், அதைத்தடுப்பதற்கான சிகிச்சையை முன்கூட்டியே மேற்கொள்ளவும் இது பெரிதும் உதவியாக இருக்கும்.

அரா யாயுன் பிறந்த அன்று, தமிழ் நாட்டின் கிராமம் ஒன்றில் பிறந்த பெண் சிறுநகை. அந்த முக்கியமான நாள் பிறந்த எல்லோரும் ஒரு கிளப்பில் அங்கத்தவராக இருந்தார்கள். அந்த ஒரு நாளில் பிறந்தது 450,000 குழந்தைகள். அமெரிக்காவில் பிறந்த பிலால் மொகமட்டும், கனடாவின் அரா யாயுனும், இந்தியாவின்  நர்கிஸ் யாதவ்வும், பிலிப்பைன் நாட்டின் டனிகா கமச்சோவும் நண்பர்கள். இதயப் பலகை தொடர்பில் இருந்தார்கள். 2031ம் ஆண்டு விண்வெளி சுற்றுலாவுக்கு நர்கிஸ் யாதவ் முன்பணம் கட்டிவிட்டு காத்திருந்தாள். 2028ம் ஆண்டு மும்பையில் நடந்த ஒலிம்பிக்கின்போது பிலால் மொகம்மட் ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துகொண்டான். இவர்கள், ரத்தன் டாட்டா பரீட்சார்த்தமாக ஆரம்பித்த செயற்கை இலைத் திட்டம் சின்னச் சின்னக் கிராமங்களில் வெற்றிகரமாக இயங்கியதை நேரிலே பார்த்தார்கள். சூரிய ஒளியில் செயற்கை இலையை தண்ணீரில் அமுக்கி வைத்தபோது கிடைத்த சக்தி ஒரு முழு வீட்டின் தேவைக்கு போதுமானதாக இருந்தது.  

2030ல் சிறுநகை தன் கிராமத்தில் இருந்தபடியே அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் படித்தாள். அபூர்வமான மூளைத்திறன் கொண்டவள். ஆறுவயதிலேயே ’கான் அகாடமி’ இணையத்தளத்தில் தானாக கற்க ஆரம்பித்தவள், விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும், அன்றாடம் சந்திக்கும் தொழில் நுட்ப பாய்ச்சல்களையும் வியப்புடன் கவனித்து வந்தாள். அவளுடைய ஒரே விருப்பம் படிப்பை முடித்துவிட்டு துணைக்கிரகங்களில் தனிமங்களை அறுவடை செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு அமர்வது. உலகத்து மூன்று நிறுவனங்களில் ஒன்று இந்தியாவிலும் இயங்கியது. பூமியின் தனிமங்கள் இறுதி நிலையை எட்டியிருந்தன. பிளாட்டினம், இறிடியம் போன்ற தனிமங்களுக்கு நிறைய வரவேற்பு இருந்ததால் அவற்றை அறுவடை செய்யும் கம்பனிகள் அதிலாபம் ஈட்டின. சிறுநகை விண்ணப்பங்களை இதயப்பலகையில் இட்ட பின்னர் பதிலுக்கு காத்திருந்தாள். 

மூன்றாம் உலகப் போர் வந்துவிடும் என அரா யாயுன் சொன்னது ஞாபகம் வந்தது. அப்படியும் நடக்குமா? மனிதகுலம் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தது. 2011ல் வறுமைக்கோட்டின் கீழ் 41% மக்கள் வாழ்ந்தனர். 2030ல் 25% தான். இன்னும் 10 வருடத்தில் அது 15% ஆகிவிடும் என்று சொல்கிறார்கள். ஒரேயொரு பிரச்சினைதான். தண்ணீர். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு மனிதனுக்கு 200 லிட்டர் தண்ணீர் கிடைத்தது. இப்பொழுது 60 லிட்டர்தான். சில மாநிலங்கள் வறண்டு கிடக்கின்றன. உலக வெப்பம் அதிகரித்துவிட்டது. மழை இல்லை. ஆறுகள் மணல்பாதைகளாக மாறிக்கொண்டு வந்தன. பூமியில் 71% சமுத்திரம், மீதி 29% நிலம். அந்த நிலத்தில் 30 வீதம் பாலைவனம். அதுவும் வருடாவருடம் கூடிக்கொண்டு வருகிறது. சஹாரா பாலைவனம் ஒவ்வொரு வருடமும் தெற்காக 48 கி.மீட்டர் தூரம் வளருகிறது. அதே சமயம் உலக சனத்தொகை வருடத்துக்கு 75 மில்லியன் கூடுகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்படத்தானே செய்யும். அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக மூளும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

உலக அழிவு பலர் நினைப்பதுபோல அணு ஆயுதத்தினாலோ, பயங்கரவாதத்தினாலோ ஏற்படாது. ஆள்கொல்லி நோயால் அல்ல, பிரளயத்தினால் அல்ல, வால்நட்சத்திரம் வந்து பூமியை இடிப்பதால் அல்ல, தண்ணீர் பஞ்சம்தான் உலகை அழிக்கப்போகிறது. மாலைதீவில் அதி உயரமான இடம் எட்டு அடிதான். அது மூழ்கும் அபாயத்தில் இருந்தது. 2030ல் உலக விஞ்ஞானிகள் அங்கே கூடி விவாதித்தார்கள் ஆனால் அவர்களால் ஒரு தீர்வையும் எட்டமுடியவில்லை. போர் மூண்டுவிடும் என்ற அச்சம் தீவிரமாகப் பரவியிருக்கிறது. வற்றாத கடல்நீரும் குறையாத சூரிய வெளிச்சமும் இருக்கும்போது கடல்நீரை நல்ல நீராக மாற்றுவது அத்தனை கடினமானதாகவா இருக்கும்? 20 வருட பயணத்தில் கஸினி விண்கலத்தை சனிக்கிரகத்துக்கு அனுப்பிய மனிதனால் இது முடியாதா?  

சிறுநகை சிந்தித்தாள். அவள் படித்த வரலாறு ஞாபகம் வந்தது. மனிதன் தோற்பதில்லை. 1900ல் நியூயோர்க் நகரில் 100,000 குதிரைகள் இருந்தன. ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் றாத்தல் குதிரைச் சாணத்தை இரவு பகலாக அகற்றியும் முடியவில்லை. ஈக்கள், கொசுக்கள், புழுக்கள், பூச்சிகள் என்று முழு நகரமும் நாறியது. வீதிகளின் இரு பக்கமும் சாணிமலை ஒன்பது அடி உயரத்துக்கு குவிந்திருந்தது. ஆட்சியாளர்கள் கூடி விவாதித்தார்கள். ஒன்றில் குதிரைகள் ஒழியவேண்டும் அல்லது மனிதர்கள் இடம்பெயரவேண்டும். இருவரும் ஒன்றாக வாழவே முடியாது. ஆனால் பிரச்சினை ஓர் இரவில் தீர்ந்துபோனது. மோட்டார் கார் வந்தது.

19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் Thomas Robert Malthus என்பவர் மனிதன் உணவு பற்றாக்குறையில் அழிந்துபோவான் என்றார். அது நடக்கவில்லை. 1901ல் அமெரிக்க காப்புரிமை துறை தலைவராக இருந்த Charles H Duell சொன்னார், ‘உலகத்தில் மனிதன் கண்டுபிடிக்க வேண்டியது எல்லாம் கண்டுபிடித்துவிட்டான்’ என்று. அப்படிச் சொன்ன பின்னர்தான் பாரிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. மைக்ரோசொஃப்ட் அதிபர் பில் கேட்ஸ், ’கம்புயூட்டரின் ஞாபகத்திறன் 640 KB ஆக இருந்தால் அது மனிதனுக்கு போதும்’ என்றார். இப்பொழுது 10 மடங்கு அதிகமான ஞாபகத்திறனும் போதாது என்று ஆகிவிட்டது.

‘மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் புதைந்துபோன மரங்கள் சிறைபிடித்த சூரிய ஒளிதான் இன்றைய எரிபொருள். எதற்காக மில்லியன் வருடம் காத்திருக்கவேண்டும், இன்றே பயன்படுத்தலாமே. ஒரு மணித்தியாலத்தில் பூமியில் விழும் சூரிய சக்தி ஒரு வருடத்துக்கு உலகை இயக்கப் போதுமானது. கடல் நீரை நல்ல நீராக மாற்றுவதே முதல் தேவை. தண்ணீர் இல்லை என்றால் தாவரங்கள் இல்லை. விலங்குகள் இல்லை. மனிதன் இல்லை. உயிர் நெருக்கடியின்போது மனித மூளை பலமடங்கு திறமையுடன் வேலை செய்யும். எதிர்வரும் பேரபாயத்தை கடந்து மனிதன் உயிர் வாழ்வதற்கான சாவி அவனிடமே இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பம் போனால் மீண்டும் வராது. இதுதான் இறுதித் தேர்வு.’ இப்படி தன் இதயப் பலகையில் சிறுநகை தமிழில் எழுதினாள். அது தன்னைத்தானே மொழிபெயர்த்து, பிரதியெடுத்து உலகத்து அத்தனை மொழி இதயப் பலகைகளிலும் வெளியானது.

ஒரு மாபெரும் கண்டுபிடிப்புக்கு மனிதகுலம் காத்திருந்தது.

nantri amuttu .net 

No comments: