தமிழ் சினிமா

பட்டத்து யானை 

காரைக்குடியில் பிரபலமான சமையல்காரர் சந்தானத்திடம், அந்த ஊர் ரவுடி தன்னுடைய திருமணத்திற்கு சமையல் செய்யவேண்டுமென்று கூறுகிறார்.
ரவுடிக்கு பயந்து சந்தானத்தின் வேலையாட்கள் ஒவ்வொருவராக வேலையைவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் சமையல் செய்ய ஆள் இல்லாமல் முழித்துக் கொண்டிருக்கும் சந்தானத்திற்கு, அவனது வேலையாள் ஒருவன் விஷால், ஜெகன் உள்ளிட்ட 5 பேரை சந்தானத்துக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
சந்தானத்தை சந்திக்கும்போதே பொலிஸ்காரரின் மகன் திருமணத்திற்கு சமையல் ஆர்டர் எடுத்து வருகிறார்கள். ரவுடியின் கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்ட அதே திகதியிலேயே இந்த ஆர்டரும் வருகிறது.
ரவுடியை பொலிஸிடம் பிடித்துக் கொடுத்துவிட்டு, பொலிஸ்காரர் மகளின் திருமணத்திற்கு சென்று சமைக்கலாம் என்று விஷால் ஆலோசனை கூறுகிறார்.
அதன்படி, பொலிசில் சென்று ரவுடியை பற்றி புகார் கொடுக்கிறார்கள். பொலிசும் ரவுடியை பிடித்து உள்ளே தள்ளுகிறது.
இதனால் கோபமடைந்த ரவுடி, சந்தானம் மற்றும் விஷால் கூட்டாளிகளை போட்டுத்தள்ள முடிவெடுக்கிறான்.
இதனால், ஊரை காலி செய்து திருச்சிக்கு சென்று ஓட்டல் வைக்கலாம் என்று முடிவெடுத்து கையிலிருக்கும் ரூ.2 லட்சம் பணத்துடன் திருச்சிக்கு வருகிறார்கள்.
திருச்சிக்கு வந்தவுடன் ஐஸ்வர்யாவை பார்க்கும் விஷால், பார்த்தவுடனே அவர் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறார். ஐஸ்வர்யா திருச்சியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த காதல் மயக்கத்துடன் பஸ்ஸில் பயணம் செய்யும்போது நாயகியால் ரூ.2 லட்சம் பணத்தை தொலைக்கின்றனர்.
இதற்கு பொறுப்பேற்ற ஐஸ்வர்யா, விஷால் மற்றும் அவருடைய நண்பர்களை பணம் கிடைக்கும்வரை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார்.
மறுமுனையில், திருச்சியில் கட்டப்படும் காம்ப்ளக்சில் கார் பார்க்கிங் இல்லாததால் அதை கட்டுவதற்கு தடை உத்தரவு வாங்குகிறார் ஐஸ்வர்யாவின் அப்பா, ‘பட்டிமன்றம்’ ராஜா.
இந்த கட்டிடத்தின் உரிமையாளரான மதுரை அண்ணாச்சி இந்த பிரச்சனையை தீர்த்துவைக்கவேண்டும் என்று திருச்சி ரவுடியான மன்னாவிடம் கூறுகிறார்.
இதனால் ராஜா வீட்டுக்கு சென்று தகராறு செய்கின்றார் மன்னா. அப்போது, ஐஸ்வர்யாவைப் பார்க்கும் மன்னா அவளை தனக்கு திருமணம் முடித்து வைக்குமாறு அவரது பெற்றோரை மிரட்டுகிறான்.
என்னசெய்வதென்று புரியாமல் விழிக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவளது பெற்றோர், விஷாலிடம் நடந்ததை விவரிக்கின்றனர். ஐஸ்வர்யா மீதுள்ள காதலால் விஸ்வரூபம் எடுத்து ரவுடி கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார்.
சண்டையின் இறுதியில் சமையல்காரன் நீ என்னை அடிச்சிட்டியாடா? உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தும்போது, நான் சமையல் கத்துக்கிட்டதே மதுரை ஜெயில்லதான்டா...! என்று கர்ஜிக்கிறார் விஷால்.
அதன்பின்பு, விஷால் ஜெயிலுக்கு எப்படி போனார்? என்பதற்கு பிளாஷ் பேக் விரிகிறது. இறுதியில் மன்னா-வின் கும்பல் விஷாலிடமிருந்து ஐஸ்வர்யாவை பிரித்ததா? ஐஸ்வர்யாவிடம் தன் காதலை சொல்லி அவரை விஷால் கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
விஷால் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை முழுவதும் ஸ்கோர் செய்கிறார். காதல், நட்பு, பாசம், நகைச்சுவை என்று ஒவ்வொரு இடத்திலும் தனி முத்திரை பதிக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி, பார்ப்பவர்களை மிரட்டியிருக்கிறார்.
ஐஸ்வர்யா அர்ஜுன் புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஆனால், பார்ப்பதற்குத்தான் கொஞ்சம் முதிர்ச்சியான தோற்றமாக காட்சியளிக்கிறார். மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கும் இவரை, பாவடை தாவணியில் ரசிக்க முடியவில்லை.
சந்தானம் தனது வழக்கமான பாணியில், நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். ஓட்டல் வைப்பதற்காக திருச்சிக்கு சென்று சீரழியும் இவரின் நகைச்சுவை கலாட்டா திரையரங்கில் விசில் பறக்கவைக்கிறது.
விஷாலின் நண்பர்களாக வரும் ஜெகன், சரித்திரன், ஐஸ்வர்யாவின் பெற்றோராக வரும் பட்டிமன்றம் ராஜா- சீதா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
மயில்சாமி சிறிது நேரமே வந்தாலும் கலகலக்க வைக்கிறார். ஜான் விஜய் மற்றும் அவரது கும்பல் செய்யும் கலாட்டா மிரட்டலுடன் சிரிப்பையும் வரவழைத்திருக்கிறது.
தன்னுடைய படங்களில் வழக்கமாக அரைக்கும் மசாலாவையே இந்த படத்திலும் அரைத்திருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன். முதல் பாதியில் கொமெடியும், இரண்டாம் பாதியில் பாசம், காதல், சண்டை என்று கலந்து கொடுத்திருக்கிறார்.
தமன் இசையில் ‘என்ன ஒரு என்ன ஒரு அழகியடா’, ‘ராஜா ராஜா நான்தானே’, ‘பூசணிக்காய்’ ஆகிய பாடல்கள் தாளம் போடவைக்கின்றன.
பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். வைத்தியின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாக்கிய விதம் அருமை.
மொத்தத்தில் ‘பட்டத்து யானை’ - 'பட்டைய கிளப்பும்'.
நன்றி விடுப்பு 

No comments: