கடல் ஏறி வந்த ஈழக்குயில் - பா.சுசி -

.
பேர்த்  தடுப்பு முகாமிலிருந்து இந்த கவிதையை அனுப்பியிருக்கிறார் இந்த இளையன் முழுப்பெயர் போடப்படவில்லைகடலில் உயிரை இரை போட்டு 
கிடைத்த பயணப் பரிசொன்று 
கரையைக் கண்டு மகிழ்வுற்றோம் 
தாய்  நாட்டில் வாழ முடியாமல் 
அச்சம் உறைந்து வாழ்ந்த நாங்கள் 
மிச்சம் இருந்த உயிரை மட்டும் 
துச்சம் என்று மதிக்காது 
கடலே சாவு என்றறிந்தும் 
துணிந்தே கடலில் கால் பதித்தோம் 

வயித்தைக் கட்டி வாயடக்கி 
வாழ்விற்கான நோய் சுமந்து 
நிமிடம் தோறும் சாவோசை 
கேட்டே கடலில் எம்பயணம் 

அன்னை பிள்ளை உறவிளந்தோம் 
அன்பு மனையாள் நினைவிளந்தோம் 
நாங்கள் பெற்ற பிள்ளைகளை 
நடுத் தெருவில் விட்டு வந்தோம் 

உயிர் இருந்தால் போதுமென 
என் மனையாள் விடை கொடுத்தாள் 
உயிரே பிள்ளை போரையோ 
என்றே தாயும் அடம் பிடித்தாள் 


பிரிய முடியா வேதனையில் 
துடித்த வண்ணம் நானிருந்தேன் 
உடலில் உயிர் தேவை எனின் 
பிரிவி சாத்தியம் என்றுணர்ந்தேன் 

உற்றார் தோழர் ஊரினையும் 
பிரியும் நிலையில் நான் துடித்தேன் 
பிரியா விடையை கொடுத்து விட்டு 
கடலில் காலைத் தூக்கிவைத்தேன் 

இயந்திரத்தின் கோளாறால் 
இடையில் படகு  கழுத்தறுக்க 
இறைவன் கொடுத்த வரம்போல 
வேறோர் படகு  எமை நெருங்க
காப்பாற்றுங்கள் கை கொடுங்கள் 
என்றே நாங்கள் கதறியழ 
கண்ணீர் துடைக்க வந்தவர்கள் 
எமையும் மாற்றி ஏற்றிக்கொண்டார் 

வரும் வழியில் அப்படகும் 
பெரும் நோயால் துடிப்புறவும் 
முயற்சி என்னும் முழுமூச்சாய் 
ஓட்டி மாரும்  உழைத்தார்கள் 
புத்திசாலி ஓட்டிகளால் 
கரை ஒதுங்க முடிந்ததன்று 

எத்தனையோ துயர் சுமந்து 
இருபத்திரண்டு நாள் கடந்து 
கொக்கஸ் என்னும் தீவினையே 
முதற் கரையாய்  கண்டோமே 

கரையைக் கண்டு மகிழ்வுற்று 
சுமந்த சுமைகள் தானிறக்கி 
உயிரை மீண்டும் கையெடுத்து 
உடலில் மீண்டும் பாச்சிக்கொண்டோம் 

பல இடங்கள் மாற்றப்பட்டோம் 
கம்பி வேலிக்குள்ளே  அடைக்கப்பட்டோம் 
புதிய சட்ட வரை ஒன்றை 
அரசு எமக்கு அறியத்தர 
வேண்டாம் வாழ்வு என்றெண்ணி 
வேதனையே கடலாச்சு 

சட்ட வரையில் சுவையில்லை 
பட்டோம் துன்பம் பயனில்லை 
உயிர் இருந்தும் பிணமாக 
வாழ்வதற்கே இச்சட்டம் 

பாதுகாப்பு போர்வையிலே 
பல உணர்வை அடக்குகிறார் 
சிறையில் என்னை அடைத்து வைத்து 
மனதை வதைக்க செய்யுகிறார்  

கேள்வி கேட்டால்  பதிலில்லை 
உதவி செய்ய உறவில்லை 
எமக்காய் உரிமைக் குரல் கொடுக்க 
யார் வருவார் என ஏங்குகிறோம் 

மனிதன் போல நான் வாழ 
சட்டம் மாற்ற மாற்றார்களோ 
நீண்ட மாதம் சிறையினிலே 
வாடிக்கொண்டே எழுதுகிறேன் 

எமக்குதவ வாருங்கள் 
மனித நேயம் காட்டுங்கள் 
நானும் மனிதன் தானையா 
எனக்கும் வாழ்கை தாருங்கள் 

No comments: