உலகச் செய்திகள்

போருக்குத் தயார்!: அமெரிக்கா மீது வடகொரியா எந்நேரமும் தாக்கலாம்?


சவூதியில் ஸ்கைப் உட்பட இணைய சேவைகளுக்கு தடை


கிளர்ச்சியாளர் வசமிருந்த முக்கிய நகர் சிரிய துருப்புகளிடம் வீழ்ந்தது
மியன்மார் இனக்கலவரத்தால் மேலும் 3 நகரங்களில் ஊரடங்கு

===================================================================

போருக்குத் தயார்!: அமெரிக்கா மீது வடகொரியா எந்நேரமும் தாக்கலாம்?


26/03/2013 வடகொரியா தனது ஆட்டிலறி மற்றும் நீண்ட, குறுந்தூர ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் எனவே எந்நேரத்திலும் அமெரிக்க இலக்குகளை தாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தை உஷார் நிலைக்கு கொண்டுவரும் படி அந்நாட்டின் இராணுவ உயர் பீடத்திலிருந்து கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
http://www.virakesari.lk/image_article/potd-north-korea-2_2519720b.jpg
ஆசியாவில் உள்ள அமெரிக்க இலக்குகள், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் அதன் இராணுவத்தளங்களான குஹாம், ஹவாய் மீது தாக்குதல் நடத்தும் பொருட்டு  வடகொரியா தனது ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாக  உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.http://www.virakesari.lk/image_article/north-korean-missile-attack.jpg
மேலும் நாடு போர்க்கான தயார் நிலையில் உள்ளதாக வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் தென்கொரியா இணைந்து நடத்திவரும் கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளுக்கு வடகொரியா நீண்டநாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நடவடிக்கைகளால் ஆதிரமடைந்த வடகொரியா தென்கொரியா மற்றும் அமெரிக்க மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுமென எச்சரித்திருந்தது.
http://www.virakesari.lk/image_article/article-2296761-18C89662000005DC-941_634x376.jpg
எனினும் வடகொரியா இதுவரை பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதம் ஒன்றினை தயாரிக்கும் வல்லமையினை கொண்டிருக்கவில்லை என புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி வரை சென்றும் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் வடகொரியாவிடம் இல்லையெனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.virakesari.lk/image_article/article-2296761-18D2D208000005DC-421_638x469.jpg
வடகொரியாவின் எச்சரிக்கை தொடர்பில் தாம் பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள தென்கொரியா வழமைக்கு மாறான எந்நடவடிக்கையையும் தான் எல்லைப்பகுதியில் அவதானிக்கவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கண்காணித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
வடகொரியாவின் இந் நடவடிக்கையினால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இதேவேளை  அமெரிக்க B-52 ரக குண்டு வீச்சு விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் வான்பரப்பினூடக பறந்தமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட வடகொரியா அமெரிக்கா போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்ததுடன் அதன் மீது தாக்குதல் நடத்தப்படுமெனவும் எச்சரித்திருந்தது.
http://www.virakesari.lk/image_article/article-2296761-18D32256000005DC-586_634x507.jpg
எனினும் வடகொரியாவின் இராணுவத்தை உஷார் நிலைக்கு கொண்டுவந்துள்ளமையானது வழமை வெறும் நாடகமெனவும் கடந்த காலங்களிலும் இத்தகைய நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டுள்ளதாகவும் ஒரு சாரார் தெரிவித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி

சவூதியில் ஸ்கைப் உட்பட இணைய சேவைகளுக்கு தடை


27/03/2013 சவூதி அரேபியாவின் தொலைத்தொடர்புத் துறையின் சட்டப்பிரிவு, இணையத்தள செய்தி சேவைகளான ஸ்கைப், வைபர்,வாட்ச்அப் போன்ற வலைத்தளங்களை கண்காணிப்பதற்கு மறுப்பு தெரிவித்தால், அவை தடை செய்யப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் இதற்கான காரணத்தை அரசு வெளியிடவில்லை. இந்த நிறுவனங்களுக்கு, சவூதி அரசு ஒரு வாரம், கால அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் சவூதி மக்களோ இந்தத் தலையீட்டால், தங்களின் தகவல் தொடர்பு தடைப்படும் என்று கருதுகின்றனர்.

இதுதொடர்பாக சவூதி சைட் என்ற வலைப்பக்கத்தினை நடத்தி வரும் அஹமத் ஓமரான் கூறுகையில், தொலைத்தொடர்புத் துறை அரசின் உத்தரவுக்கு அடிபணியலாம். ஏனெனில், இது மக்களுக்குத் தொல்லையாக இருந்தாலும், இந்தக் கம்பெனிகளின் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் அதிக வருமானம் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்கிறார்.

தொலைத்தொடர்புத் துறையே இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. சில வருடங்களுக்கு முன்னால், பிளாக்பெர்ரி கம்பெனியின் செய்தி சேவையுடன் ஏற்பட்ட பிரச்சினையைப் போலவே இந்த முறையும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

 கிளர்ச்சியாளர் வசமிருந்த முக்கிய நகர் சிரிய துருப்புகளிடம் வீழ்ந்தது

டமாஸ்கஸ்: சிரியாவின் ஹோம்ஸ் நகர் மீண்டும் சிரிய துருப்பு வசமாகியுள்ளதாக அரசசார்
பற்ற அமைப்பொன்று தெரிவித்துள்ளது. ஹோம்ஸ் நகருக்கருகிலேயுள்ள அபேல் கிராமத்தில் இடம்பெற்ற மோதல்களின்போது 4 சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 13 பேர்  கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பாபா அமர் மற்றும் சில அயல் பகுதிகள் போராளிகளின்  கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தன. இந்நிலையில் பாபா அமர் மாவட்டத்தின் முழுக் கட்டுப்பாடும் சிரிய துருப்புகள் வசமாகியுள்ளதாக  பிரிட்டனைத் தளமாகக் கொண்ட இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டத்திலிருந்து போராளிகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக சிரியாவிலுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக மோதல்களின் போது போர் விமானங்கள்,  ரொக்கெட் குண்டுகள் போன்ற பாரிய ஆயுதங்களை சிரிய துருப்புகள் பயன்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவத்திற்கு போராளிகளுக்கு ஆதரவான அரச படையே காரணமென சிரிய ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஹோம்ஸ் நகரின் கட்டிடங்கள் கொளுந்து விட்டு எரியும் காட்சிகள் அடங்கிய ஒளி நாடாவொன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.

இவையனைத்தும் மொத்தமாக அழிகின்றன. மக்கள் குடியிருப்பு பகுதிகள் அனைத்தும்  அழிக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்கள் அழிக்கப்படுகின்றன. கட்டிடங்களிலுள்ள அனைத்தும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன என தன்னை அடையாளம் காட்ட விரும்பாத ஒருவர் அந்த ஒளிநாடாவில் குரல் கொடுத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை தென் மாகாணமான டாராவிலுள்ள இங்கில , ஜாஸேம், டாய்ல் போன்ற நகரங்களையும் சிரிய துருப்புக்கள் கைப்பற்றியுள்ளன.
திங்கட்கிழமை டமாஸ்கஸிலுள்ள சர்வதேச விமான நிலையம் செல்லும் வீதியில் கார்க் குண்டுத் தாக்குதலொன்றும் இடம்பெற்றுள்ளது.
 நன்றி தினக்குரல்


  மியன்மார் இனக்கலவரத்தால் மேலும் 3 நகரங்களில் ஊரடங்கு
ரங்கூன்:மியன்மாரில் நடந்து வருகின்ற மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட 3 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின்  தலைநகரான ரங்கூனிலும் கலவரம் பரவியுள்ளது.

ரங்கூனிலிருந்து பையேநகருக்குச் செல்லும் வீதியிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களின் ஏனைய கட்டிடங்கள் பெருந்திரளான பௌத்த மத பிரிவினரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வாரமாக இடம்பெற்று வரும் மதக் கலவரங்களால் மியன்மாரிலுள்ள அமெரிக்க பிரஜைகள் பயணம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
வன்முறைகளின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ள அதேவேளை மைய்ரிலா நகரில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அந்நகரின் கட்டிட இடிபாடுகளுக்குள்ளிருந்து 8 இற்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மைய்ரிலா நகரிலுள்ள நகைக்கடையொன்றில் பௌத்த மதத்தினருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதமும் தகராறுமே இந்த கலவரத்திற்கு தீப்பொறியாக அமைந்துள்ளது.

ஒதகோன் டட்கோன் யமெந்தின் போன்ற நகரங்களிலுள்ள பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் கட்டிடங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்த மதத்தினரே என பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்த மதக் கலவரங்களினால் 9 ஆயிரம் பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ரங்கூன் மாகாணத்தில் ரோஹிஞ்சா மத முஸ்லிம் பிரிவுகளுக்கெதிராக இடம்பெற்ற வகுப்புவாத வன்முறையில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.        நன்றி தினக்குரல்

No comments: