வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு – 58 திருவை வைத்துக்கொள்வோம்.

.


ஞானா: அப்பா…..அப்பா…..எங்கடை ஆக்களின்ரை பெயர்களைச் சொல்லேக்கை திரு. திருமதி அடைமொழி வைச்சுச் சொல்லிறது ஏனப்பா?

அப்பா: அதுவந்து ஞானா….ஒரு மரியாதைக்குச் சொல்லிறது. அதாவது ஆக்களைப் பெருமைப் படுத்தச் சொல்லிற வழக்கம் எண்டுதான் நான் நினைகிறன்.

ஞானா: அப்பிடி எண்டால் அப்பா…எங்கடை ஆக்களிலை கனபேருக்கு இந்த அடைமொழி பொருந்தாதெல்லே.

சுந்தரி: அதெப்பிடி நீசொல்லுவாய் ஞானா?

அப்பா: வாரும் சுந்தரி….இன்டைக்கு நீர்தான் இவள் பிள்ளை ஞானாவின்ரை குறும்பக்குப் பதில் சொல்ல வேணும்.

ஞானா: ஆர்சொன்னாலும் எனக்கு பறவாயில்லை. எங்கடை ஆக்கள் மட்டுமில்லை உலகத்திலை உள்ள கனபேருக்கு இந்தத் திரு எண்ட அடைமொழி பொருந்தாது எண்டு திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.அப்பா: பாத்தீரே சுந்தரி இவள் பிள்ளையின்ரை குறும்பு எங்கை வருகுது எண்டு. திரு எண்ட அடை மொழி வைக்கக் கூடாது எண்டு திரு வள்ளுவரையே கொண்டுவாறாள்.

சுந்தரி: நானறியத் திருவள்ளுவர் அப்பிடி ஒரு இடத்திலையும் சொல்லேல்லையே அப்பா.

அப்பா: எனக்குத் தெரியாது சுந்தரி. ஞானாவைத்தான் கேளும்.

ஞானா: அம்மா.. இந்தக் குறளைப் பாருங்கோ:

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்         திருநீக்கப் பட்டார் தொடர்பு.

இது 920 வது குறள். வரைவின் மகளிர் எண்ட 92 வது அதிகாரத்திலை உள்ள குறள். இதிலை விலைமாதருக்குப் பின்னாலை பேகிறவையும், மதுபானம் குடிக்கிறவையும், சூதாடிறவையும், திரு நீக்கப் படவேண்டியவர்கள் எண்டுதானே சொல்லியிருக்கிறார்.

சுந்தரி: ஓமடி பிள்ளை ஞானா,,,,எனக்கும் அப்பிடித்தான் தெரியுது. உதுகள் செய்யாதவை உலகத்திலை மெத்தக் குறைவெல்லோ. அரசாங்கங்களே உதெல்லாம் சட்டரீதியானவை எண்டு விட்டிட்டு இருக்குது.

ஞானா: அம்மா….நாடுகளுக்கு வருமானம் வேணும் எண்டதுக்காக விட்டிட்டு இருக்கினம்.

சுந்தரி: நீசொல்லிற மாதிரி உவையளின்ரை பேருக்கு முன்னாலை வைக்கிற திருவையும் விட்டால் பெரிய குளப்பமா யெல்லே இருக்கும். திருவள்ளுவர் பெரிய குழப்பக்காரன் போலை எல்லோ கிடக்குது ஞானா.

அப்பா: பெம்பிளையளே! கொஞ்சம் கவனமாய்க் கேளுங்கோ. வள்ளுவப் பெருந்தகை ஒரு குழப்பமும் செய்யேல்லை. இவள் பிள்ளை ஞானா குறும்பு விட்டால் அவர் என்ன செய்வார்? ஆக்களின்ரை பேருகளுக்கு முன்னாலை வைக்கிற மரியாதையைக் குறிக்கிற அடைமொழித் திருவை உவையளுக்கு வையாதையுங்கோ எண்டு அவர் குறளிலை சொல்லேல்லை.

ஞானா: அப்பிடித்தானே குறள் சொல்லுதப்பா.

அப்பா: எப்பிடிச் சொல்லுது? இருமனப் பெண்டிரும், கள்ளும், கவறும், திரு நீக்கப்பட்டார் தொடர்பு எண்டுதானே சொல்லுது. அதாவது விலை மாதரும், மதுபானக் குடியும், சூதாட்டமும் திருமகளால்  நீக்கப்பட்டவர்களுடைய உறவுகள் எண்டுதானே சொல்லுது.

சுந்தரி: எனக்கு விளங்கேல்லை அப்பா நீகள் சொல்லிது.

அப்பா: அதாவது வந்து சுந்தரி இரண்டு மனமுள்ள பெண்கள் எண்டால் விலை மாதரைக் குறிக்கிறார். அதாவது பணத்துக்காக ஒத்துக் கொள்வது ஒருமனம், மற்றது, பணம் கொடுத்துத் தம்மை நாடுகிறவன் கிழவனாகவோ, அல்லது நோயாளியாகவோ, இல்லாட்டில குரூபியாகவோ இருந்தால் அவனை அருவருப்போடு பார்க்கிறது இரண்டாவது மனம.; இவர்களும், சூதாட்டத் தில் ஈடுபடுகிறவர்களும், மதுபானம் குடிக்கிறவர்களும் தங்கள் செல்வங்களை இழந்து வறுமை அடைவது திண்ணம். ஆகையினாலே செல்வ மகளாகிய திரு மகளால் விலக்கி வைக்கப்பட்டவர்களுடைய உறவுகள் என்றார்.

ஞானா: அப்பிடி எண்டால் அப்பா எல்லாருக்கும் திரு எண்ட அடை மொழி; வைக்கலாம் எண்டு நீங்கள் சொல்லிறியள்;. அப்பிடித்தானே?

அப்பா: ஞானா….உனக்கு நான் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறன்….திருவள்ளுவர் வந்து உலகத்துக்கு உன்னதமான அறிவுரைகளை எடுத்துச் சொல்லுவார். அவை எக்காலத்தும் உண்மைப் பொருளாக இருக்கும். ஆனால் கால தேச வர்த்மானகளுக்கு ஒவ்வாதவை போல் தோற்றம் அளிக்கும். அவற்றின் உண்மையை உணர்ந்தவர்கள் கடைப்பிடிப்பார்கள். உணராத வரை சங்கடம்தான்.

சுந்தரி: நீங்கள் சொல்லிறது சரிதான் அப்பா. இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு நடைமுறைகள் வித்தியாசப் படுகின்றன. இருமனப் பெண்டிரையும், கள்ளையும், கவறையும், நீக்கினோர் நன்மை அடைவர் என்பது உண்மை. அந்த உண்மையை உணர்ந்தவர்கள் சுகம் பெறுவர். உண்மையை உணராதவர்களை வள்ளுவர் ஒண்டும் செய்ய முடியாது.

ஞானா: அபபிடியெண்டால் திருவை வைத்துக் கொள்வோம் திருவாளர் அப்பா அவர்களே!
(இசை)

No comments: